ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

அண்ணா பல்கலைக்கழக மாணவியை “சச்சின் பாராட்டினார்!”

அண்ணா பல்கலைக்கழக மாணவியை “சச்சின் பாராட்டினார்!”
பிரீமியம் ஸ்டோரி
News
அண்ணா பல்கலைக்கழக மாணவியை “சச்சின் பாராட்டினார்!”

கல்வி / பிஎம்டபிள்யூதமிழ், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மூன்றாம் ஆண்டு இன்ஜினீயரிங் மாணவர்களுக்கிடையே, திடீரென அந்த இன்டர்வியூ நடந்தது. MOCK இன்டர்வியூவும் இல்லை; கேம்பஸ் இன்டர்வியூவும் இல்லை. ஆனாலும் பரபரப்பாக இருந்தனர் மாணவர்கள். பகுதி பகுதியாக நடந்த அந்தத் தேர்வில், ஃபைனல் ஷெட்யூலில் நான்கு பேர் வெற்றிபெற்றிருந்தனர்.அதன்பிறகும் இன்டர்வியூ நிற்கவில்லை. திடீரென ஒருநாள் பிஎம்டபிள்யூ நிறுவனத்தைச் சேர்ந்த சில டெக்னீஷியன்கள், பல டெக்னிக்கல் கேள்விகளுடன் அந்த நால்வரையும் துளைத்தெடுத்தனர். அதிலும் தம்ஸ்அப் காட்டியது அந்த நால்வர் குழு. அவர்கள் - செல்வா, விக்னேஷ், சிவப்பிரகாஷ், கோயல் மித்ரா. இதில் கோயல் மித்ரா மட்டும்தான் இந்த டெக்னிக்கல் குழுவில் இடம்பெற்ற ஒரே ஒரு மாணவி.

அண்ணா பல்கலைக்கழக மாணவியை “சச்சின் பாராட்டினார்!”

சும்மாவா பின்னே? கிரிக்கெட் லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கருடன் சேர்ந்து பிஎம்டபிள்யூ-வின் இன்ஜின் அசெம்பிளியை ஃபிட் செய்வது என்றால் சாதாரணமான விஷயமா? ‘‘நாங்க நினைச்சுக்கூடப் பார்க்கவே இல்லை. ஒரு மிகப் பெரிய கார் தொழிற்சாலையில், அதுவும் சச்சினுடன் இணைந்து இன்ஜின் அசெம்பிள் செய்தது, இப்போ நினைச்சாலும் வியப்பா இருக்கு!’’ என்று கோரஸாகச் சொன்னார்கள்.

பிஎம்டபிள்யூ கார் இன்ஜின்களையும் டிரான்ஸ்மிஷன்களையும் இன்ஜீனியரிங் மாணவர்களுக்குத் தானம் செய்துள்ளது அந்த நிறுவனம். எவ்வளவுதான் அறிவாளியாக இருந்தாலும், களத்தில் இறங்கினால்தான் அதைப் பற்றிய முழுமையான அனுபவமும் தெளிவும் கிடைக்கும். இது ஆட்டோ மொபைலுக்கும் பொருந்தும். அதனால்தான் தனது இன்ஜின்களை இலவசமாகக் கொடுத்து, மாணவர்கள் நேரடி பயிற்சி பெற உதவி செய்திருக்கிறது பிஎம்டபிள்யூ.

அண்ணா பல்கலைக்கழக மாணவியை “சச்சின் பாராட்டினார்!”

மொத்தம் 365 இன்ஜின்கள். எல்லாமே பிஎம்டபிள்யூவின் ஃபேவரைட்டான இன்லைன் ட்வின் டர்போ டீசல் இன்ஜின்கள் மற்றும் 8 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ். X3, X1, 3 சீரிஸ், 5 சீரிஸ், 7 சீரிஸ் போன்ற கார்களில் இருப்பது இந்த யூனிட்தான். இந்த இன்ஜின்களைத்தான் மொத்தம் 365 இன்ஜீனியரிங் கல்லூரிகளுக்குத் தானமாக அளித்து, மாணவர்களின் கல்விப் பயன்பாட்டுக்குக் கைகொடுத்திருக்கிறது பிஎம்டபிள்யூ.

இதில் முதல் இன்ஜினைப் பெற்று, தங்கள் கல்லூரி மாணவர்கள் மூலம் இன்ஜினை அசெம்பிள் செய்து, ‘Skill Next’ எனும் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் அண்ணா பல்கலைக் கழக டீன் கீதா. அந்த இன்ஜின் யூனிட்டை பிஎம்டபிள்யூ X1 காரோடு ஆன் தி ஸ்பாட்டில் சச்சினுடன் சேர்ந்து அசெம்பிள் செய்தனர் மாணவர்கள் நால்வரும். ‘‘இந்த டூல் கிட்டை, என் கிரிக்கெட் பேட்டாக நினைத்துக்கொண்டு இந்த வேலையைச் செய்கிறேன்!’’ என்று நடுநடுவே ஜாலியாகக் கலாய்த்தபடி இன்ஜின் அசெம்பிள் செய்தார் சச்சின். அங்கேயும் மாணவர்களை விடவில்லை. தனக்குத் தெரிந்த ஆட்டோமொபைல் அறிவைக் கொண்டு சின்ன இன்டர்வியூவே செய்துவிட்டார் சச்சின்.

அண்ணா பல்கலைக்கழக மாணவியை “சச்சின் பாராட்டினார்!”

‘‘நான்கு சிலிண்டர்களும் ஒரே லைனில் இருப்பது இன்லைன். V இன்ஜின்கள் வேறு டைப்பில் இருக்கும்’’ என்று மாணவர்கள், இன்லைன் சிலிண்டருக்கும் V இன்ஜினுக்கும் உள்ள வேறுபாடுகளைப் பற்றி விலாவரியாகச் சொன்னார்கள்.

நிகழ்ச்சியில் சச்சினை மட்டுமல்ல; ஒட்டுமொத்த பிஎம்டபிள்யூ டெக்னீஷியன்களையும் கவர்ந்தது, மாணவி கோயல் மித்ரா. ‘‘உங்களுக்கு இந்தத் துறையில் எப்படி ஆர்வம்?’’ என்று சச்சின் அவரைக் கேட்டார். ‘‘எனக்குச் சின்ன வயசிலிருந்தே இன்ஜினீயரிங் துறையில் ஈர்ப்பு உண்டு. அதுக்கு நான் என் அப்பா-அம்மாவுக்குத்தான் நன்றி சொல்லணும். நான் எது செய்தாலும் வீட்டில் தடை இல்லை. முதல்ல மெக்கானிக்கல் ஃபீல்டில்தான் நுழையணும்னு நினைச்சேன். அதுல பல சிக்கல்கள் சொன்னாங்க. அதான் இப்போ எலெக்ட்ரிக்கல் ஃபீல்டைத் தேர்ந்தெடுத்தேன். இருந்தாலும் எலெக்ட்ரிக்கல் இல்லாமல் மெக்கானிக்கல் ஏது? இந்த நிகழ்ச்சிக்கு நாங்க சும்மா செலெக்ட் ஆகிடலை. எக்கச்சக்க இன்டர்வியூக்களைத் தாண்டித்தான் இப்படி ஓர் அபூர்வ வாய்ப்பு கிடைச்சிருக்கு. ஆனா, சச்சினுக்காக மட்டும் நாங்க இவ்வளவு மெனக்கெடலை. எங்களுக்குள்ள இருக்கிறது ஆட்டோமொபைல் ஆர்வம்தான்!’’ என்றார் கோயல் மித்ரா.

அண்ணா பல்கலைக்கழக மாணவியை “சச்சின் பாராட்டினார்!”

எலெக்ட்ரிக்கல் துறையாக இருந்தாலும், இன்ஜின் பற்றிய முயற்சியில் அடுத்த லெவலில் சிந்தித்துக்கொண்டிருக்கிறார் கோயல். இன்ஜின் அசெம்பிளி பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டதும், ஏதோ ஒரு வேலை வாங்கி செட்டில் ஆகிவிட வேண்டும் என்கிற குறிக்கோளில் இல்லை இவர். ‘‘இன்ஜின்ல இருக்கிற இப்போதைய பெரிய பிரச்னையே அப்சைஸிங்தான். எல்லா இன்ஜின்களையும் டவுன்சைஸிங் பண்றதுக்கான புரொஜெக்ட்டில் இப்போ இருக்கேன். பிஎம்டபிள்யூ, ஃபெராரி போன்ற ஸ்போர்ட்ஸ் கார்கள்ல இருக்கிற இன்ஜினின்களில் முக்கியமான சிக்கல் மெயின்டனன்ஸும் காஸ்ட்டும்தான். மெட்டல் வேஸ்ட்டும் எக்கச்சக்கம். இதனால் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுக்கும் செலவு; கஸ்டமர்களுக்கும் கஷ்டம். இதைத் தீர்க்கணும். இதுதான் என்னோட குறிக்கோள்!’’ என்கிறார் கோயல்.

அண்ணா பல்கலைக்கழக மாணவியை “சச்சின் பாராட்டினார்!”

‘‘நீங்கள் பெண்களுக்கு ஒரு ரோல்மாடலாக இருக்கப் போகிறீர்கள்!’’ என்று கோயலை, சச்சின் பாராட்டியதில் பொய்யொன்றுமில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைப் பாதித்த வெள்ளத்தில், ஏராளமான கார்கள் பாதிப்புக்குள்ளாகின. அந்த வெள்ளத்தில் பாதிப்படைந்த பல பிஎம்டபிள்யூ இன்ஜின்களை  ரெடி செய்து, மாணவர்களுக்கு பிஎம்டபிள்யூ அளித்தது குறிப்பிடத்தக்கது.