Published:Updated:

அழகில் மயங்குவது எப்படி?

அழகில் மயங்குவது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
அழகில் மயங்குவது எப்படி?

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 5க.சத்தியசீலன்

அழகில் மயங்குவது எப்படி?

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 5க.சத்தியசீலன்

Published:Updated:
அழகில் மயங்குவது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
அழகில் மயங்குவது எப்படி?

றைவன் என ஒருவன் உண்டென்றால், அவன் கணிதவியல் பேராசிரியராகத்தான் இருக்க வேண்டும். அவனிடமிருந்து மனித சமூகம் கற்றுக்கொண்டவை மிக மிகக் குறைவு என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. மானுடம் பயனுற வாழ்வதற்கு, இவற்றை முயன்று ஆய்ந்து பார்ப்பது அவசியம்.

மனித சமூகத்துக்கு அடுத்து, இயற்கையை எதிர்கொண்டு நீண்ட காலங்கள் வாழக்கூடிய பறவையினமான கிளியின் மூக்கு, தங்க விகிதத்தில் அமைந்திருப்பதை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் அதிசயிக்கின்றனர். அதனால்தான் என்னவோ, கிளி அதன் கழுத்தை அதிகபட்சமாக சுழற்றிப் பார்க்க முடிகிறது. உலகில் 300-க்கும் மேற்பட்ட கிளி வகைகள் உள்ளன. 30-க்கும் மேற்பட்ட ஒலியை கிளிகளால் எழுப்ப முடியும்.

தங்க விகிதம் எனும் மந்திரச் சாவியை மனித சமூகம் கையிலெடுத்து சுமார் 2,400 ஆண்டுகளாகின்றன. இதற்கு வலுவான வரலாற்று ஆவணம் இல்லையென்றாலும், எகிப்திய பிரமிடுகள்தான் இதற்கு பழமையான சாட்சி. இயற்கை சீற்றங்களால் சிதையாமல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கம்பீரமாக நிற்கின்றன இந்த பிரமிடுகள்.

அப்படியானால், அதன் அடிப்படையில் ஒரு மிகத் துல்லியமான கம்போசிஷன் (composition) இல்லாமல், திட்டமிடல் இல்லாமல், இப்படி ஒரு கட்டுமானம் சாத்தியமில்லை. அந்தச் சூட்சுமத்தின் சூத்திரம் இயற்கையோடு இயைந்ததாக, இயற்கையை அப்படியே பிரதிபலிப்பதாக இருந்த தங்க விகிதம்தான் (Golden proportion).

அழகில் மயங்குவது எப்படி?

பிரமிடுகளின் அடிப்பாகத்தின் மையத்தை அதன் உச்சிப் புள்ளியோடு இணைத்தால், அடுத்த பக்கத்தில் இருக்கும் படத்தைப்போல இரண்டு செங்கோண முக்கோணங்கள் கிடைக்கும். அவற்றின் அளவுகள் தங்க விகிதக் குறியீடான ‘phi’-ன் மடங்குகளாக இருப்பது ஆச்சர்யமான உண்மை. உதாரணமாக, தி கிரேட் பிரமிடை எடுத்துக்கொள்வோம். அதன் ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால், அதன் கீழ்ப்பகுதி அகலம் 755.9 அடி; உயரம் 480.6 அடி; அதாவது, இது ஏறக்குறைய 1:1.6 என்ற தங்க விகிதத்தின் படியே அமைந்திருக்கிறது.  இயற்கையோடு இயைந்துகொள்ள தங்கவிகிதம் எனும் உத்தி பயன்படுத்தப் பட்டதால்தானோ என்னவோ, இந்த அதிசயங்கள் ‘நேற்று, இன்று, நாளை’ என காலம் கடந்து நிற்கின்றன.

கிறிஸ்து பிறப்புக்கு 480 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட ஏதென்ஸின் பார்த்தீனன் வழிப்பாடுத்தலம், பழமைவாய்ந்த கிரேக்க கட்டடக் கலையின் உன்னத எடுத்துக் காட்டாக இன்றும் திகழ்கிறது. பல படையெடுப்புகளை எதிர்கொண்டு சிதைந்த இந்தக் கட்டடம், கட்டடக் கலை வல்லுனர்களால் பெரும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அழகியலின் அரிச்சுவடியாக போற்றப்படுகிறது. இந்தக் வழிப்பாட்டுத்தலத்தின் ஒவ்வொரு சிறு பகுதியிலும், நுட்பங்களிலும் தங்க விகிதமே தங்கியிருக்கிறது.

கலை வடிவங்களின் தலைநகரமான பாரீஸில் உயர்ந்து நிற்கும் கண்கவர் ஈபிள் கோபுரம், இந்திய அழகியல் சின்னம் தாஜ்மஹாலும் தங்க விகிதத்தின் சாட்சிகள். சில வீடுகளைப் பார்க்கும்போது, நம்மையறியாலே அதன் அழகில் மயங்குவோம். சில அறைகளின் நீள அகலம் புழங்குவதற்கு வசதியாக, வாட்டமாக இருப்பதாகப்படும். இந்த தோது, வாகு, வாட்டம், வாட்டசாட்டம், பக்குவம், பதம் உள்ளிட்ட விஷயங்களுக்குப் பின்னணியிலும் இருப்பது தங்க விகிதம்தான். இன்றும் நவீன கட்டட வடிவமைப்பாளர்களுக்கு கைக்கொடுப்பது இந்த தங்க விகிதம்தான். இந்த 1:1.618 எனும் கணக்கை இலகுவாகப் பல இடங்களில் பயன்படுத்தலாம்.

அழகில் மயங்குவது எப்படி?
அழகில் மயங்குவது எப்படி?

எளிமையும் எழில்மையும் கைகோர்க்கும் ஆடை வடிவமைப்பிலும், தங்க விகிதம்தான் தலையாய சூத்திரம். இங்கு எண் சாண் உடம்பே பிரதானம். 8 ஒரு பிபோனாச்சி எண் என்பதை மனதில் கொள்க. நீங்கள் ஒரு சூப்பர் மாடல் இல்லை; உலகின் தலைசிறந்த பிராண்டுகளின் விலை உயர்ந்த உடைகளை வாங்கும் பணவலிமை இல்லை; ஆனால், அவரவர் பண, குண, மன, கண நிலைமைக்கு ஏற்ப 10 மடங்கு அதிக பொலிவாகவோ, 10 வயது இளமையாகவோ, 10 கிலோ எடை குறைவாக காட்ட ஒரு ரகசியம் இருக்கிறது.

அது Harmony என்கிற ஒத்தமைதி. Balance என்கிற சமன்பாடு, Emphasize என்கிற முக்கியத்துவம் - இந்த மூன்றையும் உள்ளடக்கிய ‘டிவைன் ப்ரொபோர்ஷன் (DP). பால், சர்க்கரை, டிகா‌ஷனாகக் கொண்டு சுவையான காபி போடுவது மாதிரிதான். ஆனால், ஒவ்வொரு வீட்டிலும் தனி கைப்பக்குவம் இருக்கிறதே? அது DP என்னும் ‘டிவைன் ப்ரொபோஷன்’-ஐ நீங்கள் எப்படிக் கையாளுகிறீர்கள் என்பதைப் பொருத்தது.

தலையை ஒரு வட்டமாக எடுத்துக்கொண்டு, ஒருவரின் உடல் நீளத்தை சமமான  எட்டு வட்ட அளவுகளாகப் பிரித்தால், 2-க்கு 3, 3-க்கு 5 என்ற பிபோனாச்சி எண் விகிதங்களில் நாமே நம் உடலுக்குத் தகுத்த உடை வடிவை தைக்க முடியும்.

அன்றியும் உலகின் மிக மிக விலையுயர்ந்த பிராண்டுகள்  (Luxury fashon brands), தங்களின் தனித்துவமான ஆடை வடிவமைப்புக்கு தங்க விகிதத்தைத் தான் பயன்படுத்துகின்றன.

கிராஃபிக் டிசைன் (Graphic design) என்கிற வண்ணமயமான உலகம், முழுக்க முழுக்க இந்தப் தங்க விகிதத்திலேயே புரண்டு எழுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் லோகோ துவங்கி அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய கார் நிறுவனங்களின் லோகோ என்கிற இலச்சினை அனைத்துமே தங்க விகிதத்தின்படி உருவாக்கப்பட்டவையே!

இந்தத் தங்க விகிதத்திலிருந்து, இதைத் தழுவி பல வடிவமைப்பின் விதிகள், உத்திகள் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக போஸ்டர் டிசைன், புத்தக அட்டை வடிவமைப்பு, புகைப்படக்கலை போன்றவை Rule of Thirds, Rule of Diagonals ஆகிய விதிமுறைகளைக் கையாளுகிறார்கள். இவ்விதி முறைகள் ஒரு கலைப் படைப்பில் பயன்படுத்தும்போது, அந்த வடிவமைப்பாளருக்கும், சம்பந்தப்பட் நிறுவனத்துக்கும், பயனாளருக்கும் நம்பிக்கை தருகிறது.

அழகில் மயங்குவது எப்படி?

உதாரணமாக, ஒரு சிறந்த புகைப்படம் தன் சப்ஜெக்டின் குவியம் Rule of Thirds என்கிற உத்தியில் இருந்தால், அது பாமர ரசிகனையும் தன்னையறியாமல்  சென்றடைகிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன.செயற்கையாக மனிதன் வடிவமைக்கிற எதுவுமே இயற்கையின் வளர்ச்சிக் கூறுகளை எடுத்தாள்கிறபோது, இயல்பாகவே வெற்றிபெறும்.

எந்த ஒரு சிறந்த கலைப் படைப்பும் கம்போசிஷன் என்கிற ஒரு திட்ட வரைவு இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. பிரமிடாக இருந்தாலும், பிரமிக்கவைக்கும் தஞ்சை பெரியகோயிலாக இருந்தாலும், கையடக்க ஐபோன் ஆனாலும், வியக்கவைக்கும் மயக்கமூட்டும் எல்லா புரொடெக்ட் டிசைனிலும் இந்த எளிய கட்டுப்பாடான கட்டமைப்பு இருப்பது ஆச்சர்யமூட்டும் உண்மை. ஆனால், இந்திய கலைப்படைப்புகளில் பெரும்பாலும் தங்க விகிதம் அனுசரிக்கப்படவில்லை என்பது என் நீண்ட நாள் வருத்தம்.

ஆஸ்டன் மார்டினும் ஆடியும் எப்படி Golden Proportionஐயும் Rule of one third ஐயும் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதை, பின்னால் வரும் பகுதிகளில் பார்க்கவிருக்கிறோம். இந்தியாவில் உள்ள எல்லா வகை டிசைனர்களும் இதை எடுத்துக் கையாள வேண்டும் என்பது ஒரு கோரிக்கையாகவே நீள்கிறது. அப்படி ஒரு புரிதலோடு வடிக்கப்படும் படைப்புகளால், படைப்பாளி - பயனாளி ஆகிய இருவருக்குமே பெருமை. அதே நேரத்தில், மகாபலிபுர சிற்பங்கள் பெருஞ்சித்தாந்த நம்பிக்கைகள் சார்ந்த கம்போசிஷனில் இருந்திருக்கின்றன.

அழகில் மயங்குவது எப்படி?

நம் இந்திய படைப்புகளான ஓவியங்கள், சிற்பங்கள் பெரும்பாலும் மத தத்துவ அடிப்படையிலான கட்டமைப்புகளை முன்வைத்த கம்போசிஷன்களாகவே இருந்தன. அஜந்தா, எல்லோரா, பௌத்த சமண, சைவ, வைணவ படைப்புகளில் 20 படைப்புகளைத் தேர்ந்தெடுத்து, 20 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, ‘இதுதான் இந்திய கம்போசிஷன்’ என்று  நமக்கு இத்தாலியைச் சேர்ந்த அலைஸ் போனர் (Alice Boner) என்ற பெண்மணி சொல்லித்தந்தார். அவருக்கு ஒரு பத்ம விருது கொடுத்துவிட்டு கம்போசிஷனைக் கவனிக்கத் தவறிவிட்டோம். மாமல்லையின் மகிஷாசுரமர்த்தினி தனக்குள் அடக்கிவைத்திருந்த நூற்றாண்டு படைப்பியல் ரகசியத்தை, அடுத்துவரும் தலைமுறைக்குக் கொண்டுசெல்வது நம் கடமை அல்லவா!

- வடிவமைப்போம்