Published:Updated:

விசாகப்பட்டினம் ராசியான மைதானம்தான் ஆனால்.. டாஸும் முக்கியம் பாஸ்! #INDvsWI

விசாகப்பட்டினம் ராசியான மைதானம்தான் ஆனால்.. டாஸும் முக்கியம் பாஸ்! #INDvsWI
விசாகப்பட்டினம் ராசியான மைதானம்தான் ஆனால்.. டாஸும் முக்கியம் பாஸ்! #INDvsWI

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது.


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டிகள், 3 டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற நிலையில் கைப்பற்றியது. தற்போது, இரு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் போட்டித் தொடர் நடைபெற்றுவருகிறது. கௌஹாத்தியில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில், ரோஹித் ஷர்மா - விராட் கோலியின் அசத்தலான ஆட்டத்தால், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டெஸ்ட் தொடரில் தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஒருநாள் போட்டியில், குறிப்பாக பேட்டிங்கில் சிறப்பாகவே செயல்பட்டது. ஹெட்மயர், கீரன்பெவல் ஆகியோரின் அதிரடியால் அந்த 320 ரன்களை எடுத்தது. பந்துவீச்சுதான் சற்று பலவீனமாக உள்ளது.

இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது. இந்திய அணி இங்கு ஆடிய 7 ஒரு நாள் போட்டிகளில் 6-ல் வெற்றியும் ஒரு போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2013-ல் நடந்த போட்டியில் இந்தியா தோற்றது. இந்த மைதானத்தில் டாஸில் தோற்ற அணி போட்டியை வென்றதாகச் சரித்திரம் இல்லை. டாஸ் வெல்வதும் இந்த மைதானத்தில் முக்கியமான ஒன்றாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. டெஸ்டில் சொதப்பிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள், முதல் போட்டியில் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டனர். பந்துவீச்சாளர்களும் பொறுப்புடன் செயல்பட்டால், இந்திய அணிக்கு கடும் சவால் அளிக்கலாம். 2006-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியாவுக்கு எதிரான எந்த ஒருநாள் தொடரையும் வெஸ்ட் இண்டீஸ் வென்றதில்லை. எனவே, டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடிகொடுக்கும் வகையில் அந்த அணி வீரர்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

.விசாகப்பட்டினம் ஆடுகளத்தில் புற்கள் இல்லை. சமீப காலமாக இங்குள்ள ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் கூட்டணி சிறப்பாகவே செயல்பட்டுவருகிறது. ஆசியக்கோப்பை போட்டிக்கு அழைக்கப்பட்ட ஜடேஜா, தனது பணியை சிறப்பாகச் செய்தார். கம்பேக்கில் ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்திவருகிறார். ஆடும் லெவனைத் தேர்ந்தெடுப்பதில் கோலிக்கு தலைவலியாக இருக்கும். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி, விசாகப்பட்டினம் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.