ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

கவாஸாகியின் பவர் க்ரூஸர்!

கவாஸாகியின் பவர் க்ரூஸர்!
பிரீமியம் ஸ்டோரி
News
கவாஸாகியின் பவர் க்ரூஸர்!

ஃபர்ஸ்ட் ரைடு / கவாஸாகி வல்கன் Sதொகுப்பு: ராகுல் சிவகுரு

டந்த 2015-ம் ஆண்டு முதலாக சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் தனது க்ரூஸர் பைக்கை, 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியது கவாஸாகி. ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750-க்குப் போட்டியாகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் வல்கன் S பைக்கில் இருப்பது, 650சிசி பேரலல் ட்வின் இன்ஜின். வழக்கமான க்ரூஸர் பைக்குகளுக்கு மாற்றாக, இந்த மாடர்ன் க்ரூஸர் பைக் இருக்குமா?

டிசைன் மற்றும் வசதிகள்

மாடர்ன் க்ரூஸர் பைக் என்பதைப் பறைசாற்றும் விதமாக, வல்கன் S பைக்கில் க்ரோம் சுத்தமாக இல்லை. அதற்குப் பதிலாக Gloss கறுப்பு அல்லது மேட் கறுப்பு நிறமே பைக் முழுக்க வியாபித்திருக்கிறது. முக்கோண வடிவ ஹெட்லைட் மற்றும் 14 லிட்டர் பெட்ரோல் டேங்க் ஆகியவை, வல்கன் S பைக்குக்கு கட்டுமஸ்தான தோற்றத்தை அளிக்கின்றன. ஆனால், பைக்கின் பின்பகுதி, சிறிய சீட் மற்றும் டெயில் லைட் உடன் கொஞ்சம் மெலிதாக இருப்பது ஏனோ? இதனை வல்கன் S-ன் வலதுபுறத்தில் இருக்கும் மோனோஷாக் சஸ்பென்ஷன் மற்றும் இன்ஜினுக்கு அடியில் இருக்கும் எக்ஸாஸ்ட் பைப், இந்த குறையை சரிகட்டிவிடுகிறது. மேலும் பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது, பைக்கின் நீளம் மற்றும் தாழ்வான சீட் ஆகியவை பார்க்க அழகாக இருக்கின்றன. இன்ஜின் கேஸ் மற்றும் வால்வ் கவரில் செய்யப்பட்டிருக்கும் மெஷின் பாலிஷ், ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. ஆனால், மேட் கறுப்பு நிறத்தை கீறல்கள் இல்லாமல் வைத்துக்கொள்வது மிகவும் கடினம். தவிர வல்கன் S, ஒரே கலரில்தான் கிடைக்கிறது.

கவாஸாகியின் பவர் க்ரூஸர்!

மற்ற கவாஸாகி பைக்குகளைப் போலவே, வல்கன் S பைக்கின் ஃபிட் அண்டு ஃப்னிஷ் மற்றும் கட்டுமானத் தரம் அசத்தலாக இருக்கிறது. ER-6n பைக்கில் இருப்பதுபோன்ற அனலாக் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பழைய டிசைனில் இருந்தாலும் தெளிவாக இருக்கிறது. கவாஸாகியின் தனித்துவமான Ergo-Fit வசதி இருப்பதால், ஓட்டுநருக்கு வசதியான ரைடிங் பொசிஷனை செட் செய்துகொள்ளலாம். அதற்கேற்ப மூன்று வகைகளில் ஃபுட் பெக் அசெம்பிளியை அட்ஜஸ்ட் செய்யலாம். என்றாலும், அதற்குத் தேவையான Tie-Rod-களை நாம் தனியாகத்தான் வாங்க வேண்டும். மேலும், இரண்டு விதமான Extended Reach சீட் கிடைக்கிறது என்றாலும், அவற்றின் விலை முறையே 15,000 (Reduced Reach) மற்றும் 30,000 ரூபாய் (Gel Filled Extended Reach) என்பது மிகவும் அதிகம்! கூடவே தேவைபட்டால், Extended Reach ஹேண்டில்பாரை 4,740 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம். ஏனெனில், வல்கன் S பைக்கில் வழங்கப்பட்டிருக்கும் ஹேண்டில்பார், மிகவும் குறுகலாக இருப்பதுடன், ரைடருக்கு மிகவும் அருகாமையில் உள்ளது. இதனால், பைக்கை விரட்டி ஓட்டுவதும், யூ-டர்ன் போடுவதும் கடினமாக இருக்கிறது.

இன்ஜின் பர்ஃபாமென்ஸ்

ஸ்பீடோ மீட்டரைத் தொடர்ந்து, இன்ஜினையும் ER-6n பைக்கில் இருந்து எடுத்திருக்கிறது கவாஸாகி. வல்கன் S பைக்கில் இருப்பது அதே 8 வால்வ், லிக்விட் கூல்டு, 649சிசி, பேரலல் ட்வின் இன்ஜின். ஆனால், வித்தியாசமான கேம் ப்ரொஃபைல், மாற்றியமைக்கப்பட்ட இன்டேக் – ECU  - எக்ஸாஸ்ட் அமைப்பு, எடை அதிகரிக்கப்பட்ட Flywheel என கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால், 2,000 ஆர்பிஎம்மில் இருந்தே பைக் வேகமெடுப்பதுடன், பவர் டெலிவரியும் சீராக இருக்கிறது. கச்சிதமான கியரிங் காரணமாக, ஸ்பீடு பிரேக்கர்களை 2-வது கியரிலேயே கடக்க முடிவதுடன், 4 கியரிலேயே நகரத்தில் பைக்கை ஓட்ட முடிகிறது. சற்று கனமாக இருப்பதால், 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் கியர்களை மாற்றுவது அவ்வளவு துல்லியமாக இல்லை. ஆனால், சில சந்தர்ப்பங்களில் இதனாலேயே கிளட்ச்சைப் பிடிக்காமல் கியர்களை மாற்ற முடிகிறது.

கவாஸாகியின் பவர் க்ரூஸர்!

150 கி.மீ வேகத்தை அசால்ட்டாக எட்டிப்பிடிக்கும் வல்கன் S பைக்கில், எதிர்காற்று முகத்தில் அறைவது மைனஸ். மேலும், க்ரூஸர் பைக்குகளில் அடையாளமான எக்ஸாஸ்ட் சத்தம், இந்த பைக்கில் மிஸ்ஸிங். அதிக ஆர்பிஎம்மிலும் பர்ஃபாமென்ஸ் நன்றாக இருந்தாலும், ஹேண்டில்பார் மற்றும் ஃபுட் பெக்கில் லேசாக அதிர்வுகள் எட்டிப்பார்க்கின்றன. டேக்கோ மீட்டரில் 9,500 ஆர்பிஎம்மில்தான் ரெட்லைன் ஆரம்பமாவது, இந்த இன்ஜினின் டியூனிங்கைப் பறைசாற்றிவிடுகிறது. ஆம் ER-6n, Z650, நின்ஜா 650R போன்ற ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் இருந்த அதே இன்ஜின் என்பதால், வல்கன் S பைக்கிலும் அதிகபட்ச டார்க் (6.3kgm) 6,600 ஆர்பிஎம்மில்தான் கிடைக்கிறது. இதுவே ஸ்ட்ரீட் 750 பைக்கின் 5.9kgm டார்க், குறைவான 3,750 ஆர்பிஎம்மிலேயே கிடைத்துவிடுகிறது! இதனால் நெடுஞ்சாலைகளில் 6,000 ஆர்பிஎம்முக்கு மேலே செல்லும்போதுதான், நிலையான வேகத்தில் க்ரூஸ் செய்ய முடிகிறது. நெரிசல்மிக்க இடங்களில் பைக்கை ஓட்டும்போது, த்ராட்டில் ரெஸ்பான்ஸ் சீராக இல்லாதது நெருடல். மேலும் கியரைக் குறைக்கும்போது, Engine Braking அதிகமாக இருப்பதால், பின்பக்க வீல் அவ்வப்போது லாக் ஆகிறது. விலை குறைவான நின்ஜா 300 மற்றும் நின்ஜா 400 பைக்குகளில் இருக்கும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதியை இதில் வழங்கியிருக்கலாமே கவாஸாகி?

கவாஸாகியின் பவர் க்ரூஸர்!

ஓட்டுதல் அனுபவம்

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கைவிட, 2 கிலோ அதிக எடையைக் கொண்டிருக்கிறது கவாஸாகி வல்கன் S (235 கிலோ). ஆனால், உயரம் குறைவான சீட் (705மிமீ) மற்றும் ஹேண்டில்பாரின் வடிவமைப்பு காரணமாக, குறைவான வேகங்களில் பைக்கைச் செலுத்துவது சுலபமாகவே இருக்கிறது. சீட் நன்றாக இருந்தாலும், நீண்ட நேரப் பயணங்களில் இதன் இறுக்கமான குஷனிங் அசெளகரியத்தைத் தரலாம். அதிக வேகங்களில் நிலைத்தன்மை அசத்தலாக இருக்கிறது. திருப்பங்களில் பைக்கைச் செலுத்துவதும் நல்ல அனுபவம். இருபுறமும் இருக்கும் ஒற்றை டிஸ்க் பிரேக், ஏபிஎஸ் உதவியுடன் தமது பணியைத் திறம்பட செய்கின்றன. கரடுமுரடான சாலைகளில் செல்லும்போதும், அது தரும் அதிர்வுகளை சஸ்பென்ஷன் உள்வாங்கிக் கொள்கிறது. வல்கன் S பைக்கில் இருக்கும் டன்லப் ஸ்போர்ட்மேக்ஸ் டயர்கள், Z650, நின்ஜா 650, Z900 ஆகிய பைக்குகளில் இருப்பதுதான்; இதன் ரோடு கிரிப் அற்புதம்.

கவாஸாகி வல்கன் S பைக்கின் சென்னை ஆன் ரோடு விலை 6.39 லட்ச ரூபாய். இது ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கைவிடச் சுமார் 29,000 ரூபாய் அதிகம். இதற்கு பாகங்களின் தரம், கட்டுமானத் தரம், டன்லப் டயர்கள் ஆகியவை கிடைப்பது நிச்சயம் போனஸ்தான். ஆனால், க்ரூஸர் வகை பைக்குகளில் அனைவரும் எதிர்பார்க்கும் க்ரோம் ஃபினிஷ் மற்றும் எக்ஸாஸ்ட் சத்தம் ஆகியவை, இந்த பைக்கில் இல்லாதது சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால், இந்த குறைகள், பைக்கை நெடுஞ்சாலைகளில் ஓட்டும்போது மறந்துவிடுகின்றன. அதற்காகவே கவாஸாகிக்கு ஒரு ஷொட்டு!