ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

க்ரூஸர்... இந்தியா Vs ஜப்பான்!

க்ரூஸர்... இந்தியா Vs ஜப்பான்!
பிரீமியம் ஸ்டோரி
News
க்ரூஸர்... இந்தியா Vs ஜப்பான்!

ஒப்பீடு / பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 180 VS சுஸூகி இன்ட்ரூடர் 150 ஏபிஎஸ்தொகுப்பு: ராகுல் சிவகுரு

ட்ஜெட் க்ரூஸர் பிரிவில் இருக்கும் பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 180 மற்றும் சுஸூகி இன்ட்ரூடர் 150 ஏபிஎஸ் ஆகியவற்றில் எது பெஸ்ட்?

டிசைன் மற்றும் வசதிகள்

பார்த்துப் பழகிய டிசைனாக இருந்தாலும், கிளாஸிக் தோற்றத்தில் அவென்ஜர் ஸ்ட்ரீட் 180 கண்களைக் கவர்கிறது. புதிய ஹெட்லைட், கறுப்பு நிற பாகங்கள், கட்டுமஸ்தான வடிவமைப்பு எனப் பழமையும் புதுமையும் கலந்த கலவையாக இந்த பைக் இருக்கிறது. ஆனால், இதன் விற்பனை எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால், முன்பைப் போல சாலையில் தனித்துவமாக அவென்ஜர் ஸ்ட்ரீட் 180 தெரியவில்லை.

ஜிக்ஸர் பைக்கை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், இன்ட்ரூடர் 1800 பைக்கைப் போலவே இன்ட்ரூடர் 150 ஏபிஎஸ் பைக்கை வடிவமைத்துள்ளது சுஸூகி. கொஞ்சம் ஓவர் டோஸ் டிசைனாக இருந்தாலும், சாலையில் செல்லும்போது பலரது கவனத்தை இந்த பைக் ஈர்த்தது. இன்ட்ரூடர் 150 ஏபிஎஸ் அனைத்து வயதினருக்குமான பைக்காக இல்லாவிட்டாலும், நிச்சயம் மில்லினியல்களைத் தன்வசப்படுத்தும்.

க்ரூஸர்... இந்தியா Vs ஜப்பான்!

இங்கிருக்கும் பைக்குகளில், ஃபிட் அண்டு ஃப்னிஷில் ஸ்கோர் செய்வது இன்ட்ரூடர் 150 ஏபிஎஸ் பைக்தான். ஆம், எக்கச்சக்கமான பாடி பேனல்கள் இருந்தாலும், அவை அனைத்தையும் ஒன்றுசேர்த்த விதத்தில் சுஸூகி டிஸ்டிங்ஷன் வாங்குகிறது. பைக்கில் இடம்பெற்றிருக்கும் வெல்டிங், மவுன்ட்கள், பிராக்கெட்கள், ஜாயின்ட்கள் ஆகியவை உயர் ரகம். 17 ஆண்டுகால ஃப்ளாட்ஃபார்ம் (கவாஸாகி எலிமினேட்டர் உட்பட) என்பதால், பஜாஜ் அவென்ஜர் இந்த ஏரியாவில் பின்தங்கிவிடுகிறது.

அனலாக் ஸ்பீடோ மீட்டர் மற்றும் ஃப்யூல்கேஜ், சிங்கிள் பீஸ் சீட், இன்ஜின் கில் சுவிட்ச், LED DRL உடன் கூடிய ஹெட்லைட், முன்பக்க டிஸ்க் பிரேக் என அடிப்படை வசதிகளைக் கொண்டிருக்கிறது அவென்ஜர் ஸ்ட்ரீட்180. ஆனால் , கியர் இண்டிகேட்டருடன் கூடிய ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஸ்பிளிட் சீட், மோனோஷாக் சஸ்பென்ஷன், இருபுறமும் டிஸ்க் பிரேக், இன்ஜின் கில் சுவிட்ச், ஆப்ஷனல் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் என வசதிகளில் இன்ட்ரூடர் 150 எகிறியடிக்கிறது.

க்ரூஸர்... இந்தியா Vs ஜப்பான்!

எர்கனாமிக்ஸ்

பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 180 பைக்கில் உட்காரும்போது, கெத்தான சீட்டிங் பொசிஷன் காரணமாக சாலை தெளிவாகத் தெரிகிறது. க்ரூஸ் 220 மாடலுடன் ஒப்பிடும்போது இங்கே குட்டையான ஹேண்டில்பார் இருப்பதால், நகரச் சாலைகளில் பைக்கைச் செலுத்துவது ஸ்போர்ட்டியாகவே இருக்கிறது. ஆனால், சீட்டின் குஷனிங் மற்றும் ஃபுட் பெக் பொசிஷன் காரணமாக, உயரமானவர்களுக்கு இந்த பைக் நீண்ட நேரப் பயணங்களில் அசெளகரியத்தைத் தரும் எனத் தோன்றுகிறது.

சுஸூகி இன்ட்ரூடர் 150 ஏபிஎஸ் பைக்கின் ஸ்ப்ளிட் சீட், நீண்ட நேரப் பயணங்களுக்கு ஏற்ற குஷனிங்கைக் கொண்டிருக்கிறது. மேலும், இதன் வடிவமைப்பு காரணமாக, பைக்குக்கு ரைடருடன் நெருக்கத்தைத் தருவதில் நன்றாக ஸ்கோர் செய்கிறது. ஹேண்டில்பார் பின்னோக்கி இருப்பதால், சொகுசான ரைடிங் பொசிஷன் தானாகவே கிடைத்துவிடுகிறது. இதற்கு கச்சிதமான இடத்தில் இருக்கும் ஃபுட் பெக்குகள் துணைநிற்கின்றன. அவென்ஜர் பைக்குடன் ஒப்பிடும்போது, இன்ட்ரூடரில் குறைவான வேகத்தில் யூ-டர்ன் செய்வது சுலபமாக இருக்கிறது. ஏனெனில், சில சந்தர்ப்பங்களில், யூ-டர்ன் செய்யும்போது அவென்ஜரின் ஹேண்டில்பார் கால்களை இடிக்கிறது.

க்ரூஸர்... இந்தியா Vs ஜப்பான்!

இன்ஜின் பர்ஃபாமென்ஸ்

பல்ஸர் 180 DTS-I பைக்கில் இருக்கும் அதே 2 வால்வ், 178.6சிசி, சிங்கிள் சிலிண்டர், கார்புரேட்டட் இன்ஜின் – 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணிதான், அவென்ஜர் ஸ்ட்ரீட் 180 பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த பைக்கின் க்ரூஸர் பொசிஷனிங்கை மனதில்வைத்து, இன்ஜினை ரீ-டியூன் செய்துள்ளது பஜாஜ். இது 8,500 ஆர்பிஎம்-ல் 15.5bhp பவர் மற்றும் 6,500 ஆர்பிஎம்-ல் 1.37kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. பவர் டெலிவரி ஒரே சீராக இருப்பதால், நகரத்தில் இந்த பைக்கை ஓட்டுவது சுலபம். மேலும், அதிக இன்ஜின் திறன் மற்றும் பவர் காரணமாக, வேகப் போட்டியில் இன்ட்ரூடரை அவென்ஜர் எளிதாக வென்றுவிடுகிறது. மேலும், அதிக வேகங்களில் நெடுஞ்சாலைகளில் க்ரூஸ் செய்வது நல்ல அனுபவம். பெரும்பாலான நேரத்தில் இன்ஜின் ஸ்மூத்தாகவே இயங்குகிறது என்றாலும், அதிக ஆர்பிஎம்மில் செல்லும்போது பைக்கில் அதிர்வுகளை உணர முடிகிறது.

அவென்ஜரைவிடப் பவர் குறைவாக இருந்தாலும் (14.8bhp@8,000rpm), டார்க்கில் (1.4kgm@6,000rpm) முன்னணி வகிப்பது இன்ட்ரூடர்தான். இந்த பைக்கில் இருக்கும் 2 வால்வ், 154.9சிசி, சிங்கிள் சிலிண்டர் - கார்புரேட்டட் இன்ஜின் – 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் அமைப்பு, செம ஸ்மூத்தாக இயங்குகிறது. இன்னும் சொல்லப்போனால், கியர்களுடன் கூடிய ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரை ஓட்டுவது போலவே இதன் பவர் டெலிவரி அமைந்திருக்கிறது. மேலும், எந்த வேகத்திலும் கியர்களை மாற்றுவது சுலபமாகவும், துல்லியமாகவும் இருக்கிறது. இதனாலேயே க்ரூஸர் பைக்குக்கு ஏற்ற இன்ஜின் தன்மை, இன்ட்ரூடரில் குறைவாகிவிடுகிறது.

க்ரூஸர்... இந்தியா Vs ஜப்பான்!

ஓட்டுதல் அனுபவம்

நெடுஞ்சாலையில் சொகுசான பயணத்தைத் தருவதே, ஒரு க்ரூஸரின் அடிப்படை குணம். கரடுமுரடான சாலைகள் தரும் அதிர்வுகளைச் சமாளிக்கும் அதே வேளையில், திருப்பங்களிலும் நிலையாகச் செல்லும் விதத்தில், அவென்ஜர் ஸ்ட்ரீட் 180 பைக்கின் டெலிஸ்கோபிக் ஃபோர்க் கச்சிதமாக இருக்கிறது. இதனால் ஃபுட் பெக்ஸ் சாலையை உரசும் அளவுக்குத் திருப்பங்களில் பைக்கைச் செலுத்த முடிகிறது. ஆனால், பின்பக்க டூயல் ஷாக் அப்சார்பர்கள் தமது பணியைத் திறம்படச் செய்தாலும், கொஞ்சம் சொகுசுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். முன்பக்க 260மிமீ டிஸ்க் பிரேக் செம ஷார்ப்பாக இருப்பதால், அதிக வேகத்தில் பிரேக்கைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. இன்ட்ரூடர் 150 பைக்கைவிட இரண்டு கிலோ எடை அதிகம் (150 கிலோ), 75மிமீ கூடுதல் வீல்பேஸ் காரணமாக, அந்த பைக் போல அவென்ஜரை வளைத்து நெளித்து ஓட்ட முடியவில்லை.

க்ரூஸர்... இந்தியா Vs ஜப்பான்!
க்ரூஸர்... இந்தியா Vs ஜப்பான்!

இன்ட்ரூடர் 150 பைக்கின் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன், மோசமான நகரச் சாலைகளைச் சமாளிக்கக்கூடிய மென்மையான செட்-அப்பைக் கொண்டிருக்கிறது. அதேவேளை, நினைத்த நேரத்தில் திசை மாற்றவும், திருப்பங்களில் அதிக வேகத்தில் செல்லவும் இந்த பைக் செம ஃபன். இதன் இருபுறமும் இருக்கும் டிஸ்க் பிரேக்கின் செயல்பாடு, கொஞ்சம் சுமார் ரகம்தான். என்றாலும் எடை சமவிகிதத்தில் பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதால், திடீரென பிரேக் பிடித்தாலும் இன்ட்ரூடர் 150 அலைபாயாமல் நின்றுவிடுகிறது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெரிய ப்ளஸ். எனவே, நகரத்தில் இன்ட்ரூடர் 150 அசத்தினால், நெடுஞ்சாலைகளில் அவென்ஜர் ஸ்ட்ரீட் 180 அற்புதமாக இருக்கிறது.

ரே வேரியன்ட்டில் கிடைக்கும் பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 180 பைக்கின் சென்னை ஆன் ரோடு விலை

க்ரூஸர்... இந்தியா Vs ஜப்பான்!

96,946 ரூபாய். கார்புரேட்டர் மற்றும் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் என இரு வேரியன்ட்களில் கிடைக்கும் சுஸூகி இன்ட்ரூடர் 150 ஏபிஎஸ் பைக்கின் சென்னை ஆன் ரோடு விலைகள், முறையே 1.19 லட்ச ரூபாய் மற்றும் 1.26 லட்ச ரூபாய் என்றளவில் இருக்கிறது. பர்ஃபாமென்ஸில் பின்னினாலும், வசதிகளில் அவென்ஜர் பின்தங்கிவிடுகிறது. ஆனால், இதைவிடச் சுமார் 22,000 மற்றும் 29,000 ரூபாய் விலை அதிகமாக இருக்கும் இன்ட்ரூடர், அதனைச் சரிகட்டும்விதமாக அதிக வசதிகளைக் கொண்டிருக்கிறது.

க்ரூஸர் பொசிஷனிங்படி பார்த்தால், மெக்கானிக்கல் உணர்வைத் தரும் அவென்ஜர் ஸ்ட்ரீட் 180 பைக்தான் முதலில் ஃப்னிஷ் லைனைத் தொடுகிறது. இதிலிருந்து ராயல் என்ஃபீல்டு, ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு அப்கிரேட் ஆவதும் நல்ல முடிவாக இருக்கும். இந்த பைக்கில் சில குறைகள் இருந்தாலும், விலை மற்றும் ஓட்டுதல் அனுபவத்தில் அது மறந்துவிடுகிறது. ஆனால், அதிரடியான டிசைன் – அதிக வசதிகள் - அதிர்வுகளற்ற இன்ஜின் – அசத்தல் கையாளுமை – அற்புதமான ஃபிட் அண்டு ஃப்னிஷ் என அனைத்து ஏரியாக்களிலும் அவென்ஜரைவிடக் கொஞ்சம் பெட்டராக இருக்கிறது. எனவே, அவரவர் தேவையைப் பொறுத்து சாய்ஸ் மாறலாம்.