ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

எக்ஸைட் செய்கிறதா எக்ஸ் பிளேடு!

எக்ஸைட் செய்கிறதா எக்ஸ் பிளேடு!
பிரீமியம் ஸ்டோரி
News
எக்ஸைட் செய்கிறதா எக்ஸ் பிளேடு!

ஃபர்ஸ்ட் ரைடு / ஹோண்டா எக்ஸ் பிளேடுதொகுப்பு: ராகுல் சிவகுரு

X பிளேடு… இங்கே படங்களில் இருக்கும் புதிய 160சிசி ஹோண்டா பைக்கின் பெயரே அதிரடியாக இருக்கிறது. CB யூனிகார்ன் 160 மற்றும் CB ஹார்னெட் 160R ஆகிய பைக்குகளுக்கிடையே இதை ஹோண்டா பொசிஷன் செய்திருக்கிறது. பார்க்க ஷார்ப்பாக இருக்கும் எக்ஸ் ப்ளேடு, ஓட்டுவதற்கு எப்படி இருக்கிறது?

டிசைன் மற்றும் வசதிகள்

சுருங்கச் சொல்வதென்றால், எக்ஸ் பிளேடு பைக்கின் டிசைனுக்காக, மாற்றி யோசித்திருக்கிறது ஹோண்டா. எனவே, LED ஹெட்லைட் மற்றும் LED டெயில் லைட் உடன் பைக் படு ஸ்டைலாகக் காட்சியளித்தாலும், டிசைன் கொஞ்சம் ஓவர்டோஸ் ஆகிவிட்டதோ எனத் தோன்றுகிறது. பெரிய விண்ட் ஸ்கிரீன், உயரமான இடத்தில் இண்டிகேட்டர்கள், 12 லிட்டர் பெட்ரோல் டேங்க்கைச் சுற்றியிருக்கும் பாடி பேனல்கள், அகலமான கிராப் ரெயில்கள் ஆகியவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம்.

எக்ஸைட் செய்கிறதா எக்ஸ் பிளேடு!

ஹார்னெட் போலவே எக்ஸ் பிளேடு பைக்கிலும் ஃபுட் பெக்குகள் சற்று பின்னால் தள்ளி வைக்கப்பட்டிருந்தாலும், ஹார்னெட் உடன் ஒப்பிடும்போது, தட்டையான ஹேண்டில்பார் கொஞ்சம் தாழ்வாக வைக்கப்பட்டிருக்கிறது. புதிய சிங்கிள் பீஸ் சீட்டில் நல்ல இடவசதி இருந்தாலும், குஷனிங் இறுக்கமாக இருப்பது மைனஸ்.

மேலும், ஒரே வேரியன்ட்டில் கிடைக்கும் எக்ஸ் பிளேடு பைக்கில், சிபிஎஸ் – ஏபிஎஸ் போன்ற அம்சங்கள் ஆப்ஷனலாகக்கூட இல்லாதது நெருடல். கியர் மற்றும் சர்வீஸ் இண்டிகேட்டர் உடன்கூடிய ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஸ்டைலாக இருக்கிறது. இந்த 4G யுகத்திலும், பைக்குகளில் இன்ஜின் கில் சுவிட்ச்சை வழங்காதது ஏன் ஹோண்டா? அதற்குப் பதிலாக, Hazard இண்டிகேட்டர் வசதி வழங்கப்பட்டிருப்பது ஆறுதல்.

எக்ஸைட் செய்கிறதா எக்ஸ் பிளேடு!

இன்ஜின் பர்ஃபாமென்ஸ்

புதிய பைக் என்றாலும், இன்ஜின் விஷயத்தில் ஹோண்டா மெனக்கெடவில்லை. எனவே, யூனிகார்ன் மற்றும் ஹார்னெட்டில் இருக்கும் அதே 162.7 சிசி HET இன்ஜின் – 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான் இங்கேயும்! ஹார்னெட்டைவிடக் குறைவான 0.9bhp பவர் மற்றும் 0.06kgm டார்க்கையே எக்ஸ் பிளேடு வெளிப்படுத்துகிறது. என்றாலும், ஆரம்ப கட்ட மற்றும் மிட் ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் அசத்தல் ரகம். இதனால், நெரிசல்மிக்க நகரச் சாலைகளில் இந்த பைக்கை ஓட்டுவது நல்ல அனுபவமாக இருக்கிறது. ஆனால், 6,000 ஆர்பிஎம்-க்கு மேலே செல்லும்போது, ஹேண்டில்பார் மற்றும் ஃபுட் பெக்ஸ் ஆகியவற்றில் இன்ஜின் அதிர்வுகளை உணர முடிகிறது.

எக்ஸைட் செய்கிறதா எக்ஸ் பிளேடு!

ஓட்டுதல் அனுபவம்  

வித்தியாசமான சைஸில் டயர்களைக் கொண்டிருந்தாலும் (முன்: 80/100, பின்: 130/70), MRF டியூப்லெஸ் டயர்களின் ரோடு க்ரிப் விளைவாக, சிறப்பான கையாளுமையைக் கொண்டிருக்கிறது எக்ஸ் ப்ளேடு. ஆனால், பைக்கின் அதிக எடை (140 கிலோ), சில நேரங்களில் நெருக்கடியைத் தரலாம். சஸ்பென்ஷன் அமைப்பு இறுக்கமாக செட் செய்யப்பட்டிருந்தாலும் (முன்: டெலிஸ்கோபிக், பின்: மோனோஷாக்),

எக்ஸைட் செய்கிறதா எக்ஸ் பிளேடு!

கரடுமுரடான சாலைகளை எக்ஸ் பிளேடு எளிதாகவே சமாளிக்கிறது. முன்பக்க 276மிமீ டிஸ்க் பிரேக்கின் ஃபீட்பேக் கொஞ்சம் சுமார் ரகம்தான்; ஆனால், பின்பக்க 130மிமீ டிரம் பிரேக் ஷார்ப்பாக இயங்குகிறது.

க்ஸ் பிளேடு பைக்கின் சென்னை ஆன் ரோடு விலை 87,442 ரூபாய். இது ஆரம்ப மாடல் CB யூனிகார்ன் 160 பைக்கைவிட 2,000 ரூபாய் அதிகமாக இருந்தாலும், CB ஹார்னெட் பைக்கைவிடத் தோராயமாக 6,000 ரூபாய் குறைவாக இருக்கிறது. முன்னே சொன்ன பைக்குகளுடன் ஒப்பிடும்போது, தோற்றம் மற்றும் வசதிகளில் இந்த பைக்கைக் கச்சிதமாகப் பொசிஷன் செய்திருக்கிறது ஹோண்டா. ஆனால், இதை அட்வென்ச்சர் பைக்காக வடிவமைத்திருக்கலாமோ எனவும் தோன்றுகிறது.