ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

கேரளாவில் ஒரு ஹாலிவுட் தீவு!

கேரளாவில் ஒரு ஹாலிவுட் தீவு!
பிரீமியம் ஸ்டோரி
News
கேரளாவில் ஒரு ஹாலிவுட் தீவு!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் / மாருதி எஸ்-க்ராஸ் டீசல்தமிழ், படங்கள்: வீ.சக்தி அருணகிரி

‘‘வெயில் செமையா அடிக்குது. ஜில்லுனு கேரளா பக்கம் போகலாம்’’ என்று  யோசனை சொன்னார், திருச்சி திருவரங்கத்தைச் சேர்ந்த காமினி, ஓராண்டுக்கு முன்பு வேகன்-R வைத்திருந்தபோது கிரேட் எஸ்கேப்புக்காக வாய்ஸ்-ஸ்நாப் செய்தார். ‘‘இப்போS-க்ராஸ் வாங்கிட்டேன். நிச்சயம் வர்றீங்க’’ என்று இந்த முறை அழைப்பை கண்டிப்பான உத்தரவு மாதிரியே விடுத்தார். ‘‘நமக்குப் பெரிய குடும்பம்லாம் இல்லை. அதான் 5 சீட்டர் வாங்கினோம். கொத்தமல்லிக் கொழுந்துபோல் இரண்டே இரண்டு குழந்தைங்க! என் கணவர். அவ்வளவுதான்’’ என்றார். இந்த வெயிலுக்கு கேரள மலைப் பிரதேசங்கள்தான் பெஸ்ட். ‘‘அங்கிள், போட்டிங் போகலேனா ஸ்கூல் போமாட்டேன்!’’ என்று காமினியின் மகள் சரிகா அடம்பிடித்ததால், கோட்டயம் பகுதியைத் தேர்ந்தெடுத்தோம். கோட்டயம் போய் குமரகத்திலிருந்து படகிலேயே போனால், பாதிராமணல் என்றொரு தீவு இருப்பதாகச் சொன்னார்கள். ஆங்கிலத்தில் ‘Sands of Night’ என்கிறார்கள். இரவு நேரத்தில் மணல் மினுமினுக்கும் தீவாக இருந்ததால், இப்படி ஒரு பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள். காமினி, கணவர் பாலாஜி, குழந்தைகளுடன் திருச்சியில் இருந்து பாதிராமணல் தீவுக்கு S-க்ராஸில் ஒரு ஜாலி ட்ரிப்.

* திருச்சியில் இருந்து கோட்டயம் கிட்டத்தட்ட 380 கி.மீ. அங்கிருந்து குமரகம். தேனிதான் இதற்கு சென்டர் பாயின்ட். தேனியில் நமது புகைப்பட நிபுணர் இணைந்து கொள்ள, மதிய உணவுக்குப் பிறகு குமுளி, தேக்கடி போய் இருட்டுவதற்குள் கோட்டயம் போய்விட வேண்டும் என்று திட்டம். குமுளிக்கு முன்பிருந்தே மலைச் சாலை ஆரம்பித்துவிட்டதால், ஜாலியாக இருந்தது. திரும்பி வரும்போது இரவெல்லாம் வாகனங்கள் மலைப்பாதையில் வளைந்து நெளிந்து சென்றுகொண்டிருந்தன.

கேரளாவில் ஒரு ஹாலிவுட் தீவு!

* நேராகப் போனால் தேக்கடி. வலதுபுறம் திரும்பினால் வண்டிப்பெரியார், பீர்மேடு, முண்டக்காயம் வழியாக கோட்டயம். குழந்தைகளோடு டூர் செல்பவர்கள், நிச்சயம் தேக்கடியில் தங்கிவிட்டுச் செல்வதுதான் சரி. யானைச் சவாரி, படகுச் சவாரி, ட்ரெக்கிங் என்று அன்லிமிட்டட் என்ஜாய்மென்ட்கள் உண்டு. ‘‘தெகிடி போணும்.. எலிஃபென்ட் ஏறணும்’’ என்று அடிக்கடி மழலையில் ஆர்டர் போட்டபடி வந்தாள் சரிகா. தேக்கடியில் படகுச் சவாரி செல்பவர்களுக்கு ஒரு டிப்ஸ்: காலை 9 மணிக்கே படகுக் குழாமுக்குச் சென்றால், ஓவர்நைட்டில் ஓபிஎஸ் - இபிஎஸ் முதல்வர்கள் ஆனதுபோல் ஈஸியாக படகுச் சவாரியைச் சட்டென அனுபவிக்கலாம். இல்லையென்றால், செயல் தலைவர்போல் எக்கச்சக்க காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.

*  செங்குத்தான பாதை பாதி, சமவெளி மீதி என்று இருக்கிறது சாலை. S-க்ராஸின் ரெயின் சென்ஸார் வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் அடிக்கடி விழித்துக்கொண்டன. அதாவது, கோட்டயம் செல்லும் வழியில் திடீர் தூறல், திடீர் மழை, திடீர் பனி, திடீர் வெயில் என்று கலந்து கட்டி விருந்து வைத்தது க்ளைமேட். ‘‘S-க்ராஸில் சன் ரூஃப் இருந்தா செமையா இருக்கும்ல’’ என்றார் பாலாஜி. ‘‘S-க்ராஸில் ஏ.சி.தான் எனக்குப் பிடிக்கலை’’ என்று வெயில் நேரத்தின்போது ஏ.சி.யைக் குறை கூடியபடி வந்தார் காமினி.

* கேரளாவில் பத்தினம்திட்டா எனும் ஊர் பெரிய டூரிஸ்ட் அட்ராக்ஷன். அதாவது, பல டூரிஸ்ட் ஸ்பாட்டுகள் பத்தினம்திட்டாவில் இருந்து பக்கம். சபரிமலை, கவி அருவி, கோணி யானைகள் முகாம், மணலார் அருவி, பெருந்தேனருவி, பெரியார் நேஷனல் பார்க், கவியூர் பாறைக் கோயில், அடவி எக்கோ டூரிஸம் என்று கேரளாவின் எக்கச்சக்க டூரிஸ்ட் ஸ்பாட்டுகளுக்கு பத்தினம் திட்டாதான் சென்டர் பாயின்ட்.

* பயணம் ஆரம்பித்து ஜிபிஎஸ் செட் செய்ததில் இருந்து சரிகா கேட்ட ஒரே கேள்வி: ‘‘கோட்டயம் எப்போ வரும்?’’ ஒருவழியாக இருட்டுவதற்குள் கோட்டயம் வந்திருந்தோம். இந்த மலைப்பாதை கார் ஓட்டுவதற்கு அற்புதமான ஸ்பாட். போக்குவரத்து நெரிச்சலால் நேரம் விரயமாகலாம். நாம் சென்ற நேரம், கடுமையான மழையில் மரம் ஒன்று சரிந்து விழுந்து, சில மணி நேரங்களைக் காலி செய்திருந்தது.

* கோட்டயத்தில் தங்கும் விடுதிகள் எக்கச்சக்கம். எல்லாமே செம காஸ்ட்லியாக இருந்தது. குறைந்தபட்ச வாடகையே 1,600 ரூபாய். பக்கத்தில் உள்ள குமரகம் அதுக்கும் மேல! கொஞ்சம் பட்ஜெட் பார்ட்டிகள், மலிவான லாட்ஜ்களை தேடித் தேடித்தான்... கண்டடைய வேண்டும்.

கேரளாவில் ஒரு ஹாலிவுட் தீவு!

* கோட்டயத்தில் தங்கிவிட்டு, மறுநாள் காலை கட்டஞ்சாயா, பழம் பூரி சாப்பிட்டுவிட்டு ஜூட். கோட்டயத்தில் இருந்து குமரகம் 12 கி.மீ. பார்க்கிங் வழக்கம்போல் 50 ரூபாய் வசூலித்தார்கள்.

* நம் ஊர் பஸ் ஸ்டாண்ட்போல் இங்கே படகு டைமிங் அட்டவணை போட்டிருந்தார்கள். 9.45-க்கு குமரகத்தில் இருந்து படகு கிளம்புகிறது என்றால், 9.40-க்கு கரைக்குப் பக்கத்தில் வந்து நிற்கிறது படகு. இது அரசாங்கப் படகுச் சவாரி. காயலின் அந்தக் கரையில் இருக்கும் முஹம்மா, ஆலப்புழைக்குப் படகிலேயே சவாரி செய்யலாம். அதிகபட்சம் 40 ரூபாய் கட்டணம். பள்ளி மாணவர்கள் பஸ்பாஸ் எடுப்பதுபோல், படகு பாஸெல்லாம் எடுத்துப் பயணிக்கிறார்கள்.

* தனியார் படகுகள்தான் சுற்றுலாவாசிகளை மிகவும் கவர்ந்திழுக்கின்றன. தீம் பார்க்கில் இருக்கும் ‘கொலம்பஸ்’ கப்பல்போல் இருந்த ஒரு படகைப் பார்த்ததும் உற்சாகமாகி விட்டாள் சரிகா. ‘‘இதுலதான் போணும்’’ என்று ஆர்டரும் போட்டிருந்தாள். தனியார் படகுச் சவாரி ஒரு மணிநேரத்துக்கு 800 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கின்றன. ஆலப்புழா அல்லது குறிப்பிட்ட தீவுகளுக்குச் சென்று வர 2,000 கட்டணம்.

கேரளாவில் ஒரு ஹாலிவுட் தீவு!

* வீட்டு வாசலில் ஓடும் கால்வாய் போல் ஸ்லிம் அண்டு ஸ்லீக் ஆக சைஸ் ஜீரோபோல ஓடும் காயல் நீர், போகப் போகப் பரந்து விரிகிறது. இதுதான் வேம்பநாடு ஏரி என்றார்கள். கொஞ்ச தூரம் தள்ளியதும் தரைப் பகுதியே தெரியவில்லை. இந்த உலகில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீரால் சூழ்ந்திருக்கிறது.ஆனால், கேரளாவில் மொத்தமுமே தண்ணீர் தேசமாய் விரிந்திருந்தது. ‘‘இவ்விட ஆழம் குறைவானு... 8 அடிதான். பக்‌ஷே, போகப் போக 40-ல் இருந்து 60 அடி  வரை ஆழமாயிட்டுண்டு’’ என்று எச்சரித்தார் படகோட்டி.

* வேம்பநாடு ஏரியில் கறி மீன்கள்தான் ஸ்பெஷல். கறி மீனுக்கு அப்புறம் குஞ்சு மீன்தான் வேம்பநாட்டு ஏரியின் ஸ்பெஷல். இங்கே வீட்டுக்கு வீடு கார்/பைக் வைத்திருக்கிறார்களோ இல்லையோ, சொந்தப் படகு வைத்திருப்பதை கெளரவமாகப் பார்க்கிறார்கள். நடு ஏரியில் படகில் வந்து ஷாப்பிங் பண்ணிய சில சேட்டன்களைப் பார்க்க முடிந்தது.

கேரளாவில் ஒரு ஹாலிவுட் தீவு!

* ‘‘ஐ.. பேர்டு... க்ரோ மாதிரி இருக்கு’’ என்று சரிகா கத்தினாள். நீர்க்காகங்கள்தான் வேம்பநாடு ஏரியின் முக்கிய குடி பறவைகள். அவற்றுக்கு பறக்கவும் தெரியும்; ஆழத்தில் நீந்தவும் தெரியும். தடாலென நீரில் மூழ்கி, முத்தெடுப்பதுபோல் ஒரு குஞ்சு மீனைக் கவ்வி ஒரு நீர்க்காகம் வெளிவந்தது

* ‘‘அவ்விட காணுந்தில்லே... அதானு ஐலாண்ட்’’ என்று தூரத்தில் ஒரு தீவைக் காட்டினார் படகோட்டி. கிட்டத்தட்ட ஒரு மணி நேரப் படகுப் பயணத்துக்குப் பிறகு, ஸ்டாப்பில் படகு நின்றது. தூரத்தில் இருந்து பார்க்கும்போதே முதுகைச் சில்லிட வைத்தது தீவின் வியூ.

* படகிலிருந்து இறங்கியதுமே ‘பாதிராமணல் தீவு’ என்கிற போர்டு வரவேற்றது. 19-ம் நூற்றாண்டுவாக்கில் இங்கே மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களைச் சொல்கிறார்கள். இங்கே ஒரு காலத்தில் புதைமணலும் சேறும்தான் இருந்ததாம். சில தீவுகளை சதுப்பு நிலக் காடுகள் காப்பதுபோல், ‘ரிஸோபோரோ அபிகுலேட்’ என்கிற மாங்குரோவ் வகை மரங்கள் இந்தத் தீவைக் காப்பதாகச் சொல்கிறார்கள். மீனவர்களின் புகலிடமாக இது இருந்ததாம்.

* இப்போது குமரகம் பறவைகள் சரணாலயத்துக்குப்  அடுத்தபடியாக இருக்கும் பறவைகள் சரணாலையங்களில் பாதிராமணல் தீவுக்கு முக்கிய இடம் உண்டு. ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை கிட்டத்தட்ட லட்சக்கணக்கில் பறவைகள் இங்கு வந்து தங்குமாம். நாம் சென்றபோது... நம்மை வரவேற்பதைப் போல, கொக்குகள், காகங்கள், சில பெயர் தெரியா பறவைகள் சிறகுகளை படபடத்து  நமக்கு வரவேற்பு கொடுத்தன.

கேரளாவில் ஒரு ஹாலிவுட் தீவு!

* உள்ளே போகப் போக, செம த்ரில்லிங். எல்லாப் பக்கமும் ஏகாந்த வனம்போல் இருந்தது. நடுநடுவே திடும்மென கிளை பரப்பி நின்ற மரங்கள், கிளைகளை விலக்கி பாதைபோல் இருந்த பாதையில் நடந்தால், செம ட்ரெக்கிங் அனுபவம் கிடைத்தது. ஆனால், குழந்தைகளால் கொஞ்ச தூரத்துக்கு மேல் நடக்க முடியாமல் போரடித்து விடும் என்பது பின்குறிப்பு. ‘‘சீக்கிரம் போலாம்மா.. பயமா இருக்கு’’ என்று அடம்பிடித்தாள் சரிகா. ஆம்! நிசப்தமே காதுக்குள் பேரிரைச்சலை உண்டு பண்ணியது. அந்தளவு பேரமைதியால் அட்ராசிட்டி பண்ணுவதுதான் பாதிராமணல் தீவின் ஹைலைட்.

மாருதி எஸ்-க்ராஸ் எப்படி?

மாருதியின் காஸ்ட்லியான நெக்ஸா ஷோரூமில் லாஞ்ச் ஆன முதல் கார்... மாருதியின் பிரீமியம் க்ராஸ்-ஓவர் கார்... எஸ்-க்ராஸ். ஆனால் க்ரெட்டா, எக்கோஸ்போர்ட், டஸ்ட்டர் போன்ற கார்களைவிட ரொம்வும் விலை மலிவானது எஸ்-க்ராஸ். ‘‘பிரெஸ்ஸாதான் பார்த்தேன். ஆனா எஸ்-க்ராஸ்லதான் பின் பக்க இடவசதி அருமை.’’ என்றார் பாலாஜி. ஆரம்பத்தில் 1.6 மற்றும் 1.3 இன்ஜின்களில் வந்த எஸ்-க்ராஸுக்கு ஒரு லட்சமெல்லாம் டிஸ்கவுன்ட் கொடுத்தார்கள். இப்போது ஃபேஸ்லிஃப்ட் ஆன எஸ்-க்ராஸில் 1.3லி மல்ட்டிஜெட் ஃபியட் இன்ஜின் மட்டும்தான். நான்கு பக்கமும் டிஸ்க், 7 இன்ச் டச் ஸ்கிரீன், ரெயின் சென்ஸிங் வைப்பர், புரொஜெக்டர் ஹெட்லைட், க்ரூஸ் கன்ட்ரோல், LED DRL என்று அருமை. ஆனால், ரியர் ஏ.சி வென்ட் இல்லாதது பெரிய மைனஸ். அந்த ஃபியட் இன்ஜின் டர்போலேக்... மலையேற்றங்களில் படுத்தி எடுக்கிறது. ஓவர்டேக்கிங்கில் கவனம். ஆனால், நெடுஞ்சாலையில் எஸ்-க்ராஸில் பூந்து பறக்கலாம். 120 கி.மீ-ல்கூட அத்தனை ஸ்டெபிலிட்டி. டெட் பெடல் இருப்பதால், ஹைவே ரைடிங்தான் எஸ்-க்ராஸில் செம ஜாலி!

நோட் பண்ணுங்க!

ஆலப்புழா, குமரகம். இவை இரண்டும்தான் கேரளாவில் படகு வீடுகளின் சொர்க்கம். அரசாங்கப் படகில் ஏறி வெறும் 40 ரூபாய்க்கும் ஆலப்புழா, குமரகத்தைச் சுற்றி வரலாம். தனியார் படகுகளை சில ஆயிரங்களில் புக் செய்து மணிக்கணக்கில் ஜாலியாகவும் பயணிக்கலாம். படகு வீடுகளில் தங்க நினைப்பவர்கள், குமரகத்தைவிட ஆலப்புழாவைத் தேர்ந்தெடுப்பது பெஸ்ட். குறைந்தபட்சம் 8,000 ரூபாயில் இருந்து 12,000 வரை வாடகை. நடுக்காயலில் ‘நச்’சென்று நங்கூரம் போட்டு படகை நிறுத்தி விடுவார்கள். நான்கு பக்கமும் தண்ணீர் புடை சூழ, மீன் பிடிக்கலாம்; சமைத்துச் சாப்பிடலாம்; கேம்ப் ஃபயர் இல்லாமல் DJ போட்டு என்ஜாய் பண்ணலாம். இதற்காகத்தான் இத்தனை கட்டணம். ஹனிமூன், கெட்-டு-கெதர் பார்ட்டி, அலுவலக மீட்டிங், நண்பர்கள் சந்திப்பு என்று எல்லாவற்றுக்கும் படகு வீடுகள்... செம ஆப்ஷன்.

என்ன பார்க்கலாம்?

கோட்டயத்தில் இருந்து

ஆலப்புழா (47 கி.மீ)

கேரளாவின் தண்ணீர் தேசம் இது. படகு வீடுகள், படகுச் சவாரிகளுக்கு அற்புதமான இடம்.

இலவீழ பூஞ்சிரா (61 கி.மீ)

இங்கு கார்கள் செல்ல முடியாது. வாடகை ஜீப்பில் மலை முகடுகளில் ரைடிங் போகலாம்.

மர்மலா அருவி (53.7 கி.மீ)

குழந்தைகள், பெண்களுக்கு இது ரிஸ்க்கியான இடம். 8 கி.மீ ட்ரெக்கிங் போய்த்தான் இந்த அருவியில் குளிக்க முடியும்.

வாகமன் (65.5 கி.மீ)

மனிதர்களின் கால் படாத இடங்கள் வாகமனில் நிறைய உண்டு. பள்ளத்தாக்கா... மலைத் தொடரா என்று குழம்ப வைக்கும். அருவி, ட்ரெக்கிங், ஜீப் ரைடிங் என்று எல்லாம் உண்டு.

வைக்கம் (34 கி.மீ)

ஆன்மிக அன்பர்களுக்கு அற்புதமான ஸ்பாட். மஹாதேவர், எட்டுமன்னூர் சிவன், காடுதுருத்தி மஹாதேவர் கோயில் என்று மூன்று கோயில்கள் ஸ்பெஷல். ஆற்றுமணலைச் சுற்றியிருக்கும் வைக்கம் கோயில் கேரளாவின் பெரிய கோயில்களில் ஒன்று.

கோட்டத்தவலம் (70 கி.மீ)

மலைச் சாலை ரைடிங் பிரியர்களுக்கு அருமையான சாய்ஸ்.

குமரகம் பறவைகள் சரணாலயம் (16 கி.மீ)

பறவைப் பிரியர்களுக்கு சூப்பர் இடம். வேம்பநாடு ஏரிக்கரையில் அமைந்திருக்கும் இந்த இடத்தில், ஜூன் முதல் ஆகஸ்ட் வரை சீஸன். 1,500 வகையான பறவைகளை லட்சக்கணக்கில் பார்க்கலாம்.

வேம்பநாடு ஏரி (14 கி.மீ)


ஆசியாவின் மிகப் பெரிய காயல்களில் ஒன்று. மீன் பிடித்தல், போட்டிங் என்று ஜாலியாக ஜமாய்க்கலாம்.

வாசகர்களே! நீங்களும் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி 044-66802926 தொலைபேசி எண்ணில் உங்கள்  குரலில் பதிவு செய்யுங்கள்!