ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

வாடிக்கையாளர்களை நாங்கள் ஏமாற்றுவதில்லை!

வாடிக்கையாளர்களை நாங்கள் ஏமாற்றுவதில்லை!
பிரீமியம் ஸ்டோரி
News
வாடிக்கையாளர்களை நாங்கள் ஏமாற்றுவதில்லை!

பேட்டி / டீலர்ஷிப்தமிழ், படம்: தி.விஜய்

1997-ல் கடனை உடனை வாங்கி, கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் கமர்ஷியல் வாகனங்களுக்கான டாடா டீலர்ஷிப் ஒன்றை ஆரம்பித்தார் நவீன் ஃபிலிப். வாகனம் நிறுத்தும் இடத்தைத் தவிர்த்து கிட்டத்தட்ட 400 சதுர அடிதான் அந்த ஷோரூமே இருந்தது. மொத்தம் ஏழு பேர் அந்த டீலர்ஷிப்பில் வேலை பார்த்தார்கள். மாதம் இரண்டு வாகனங்கள் விற்பதே பெரிய சாதனையாக இருந்தது. சில மாதங்கள் தாக்குப் பிடிக்கலாம் என்று நினைத்தார். லட்சங்களில் நஷ்டம் ஆனது; அப்புறம் கோடிகளில். ஆனாலும் விடவில்லை நவீன்.

டீலர்ஷிப்பில் புதுப் புது யுக்திகளைக் கையாண்டார். சர்வீஸிலும் சில யோசனைகள் கிடைத்தன. இதற்கு டாடாவிடமே ஐடியா கேட்டார். இப்போது அவருடைய டீலர்ஷிப்பில் சுமார் 1,500 பேர் பணிபுரிகிறார்கள். ஆண்டுக்கு 8,500 முதல் 9,000 கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. கேரள மாநிலத்தில் மொத்தம் 14 மாவட்டங்கள்; அதில் 10 மாவட்டங்களில் நவீன் ஷோரூம் வைத்திருக்கிறார். பெயர்: பாப்புலர் மெகா மோட்டார்ஸ். டீலர்ஷிப்பின் பில்கேட்ஸ் என்று சொல்லலாம் நவீன் ஃபிலிப்பை.

கேரளா மற்றும் சென்னையில் மாருதி ஷோரூம்; கர்நாடகாவில் ஜாகுவார்-லேண்ட்ரோவர் டீலர்ஷிப் என்று தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் பாப்புலர் மெகா மோட்டார்ஸ் கலக்குகிறது. இது தவிர, ஹோண்டா கார்களுக்கான டீலர்ஷிப்பையும் தொடங்கிவிட்டார். ‘பாப்புலர் மெகா மோட்டார்ஸ்’ என்று இன்டர்நெட்டில் தேடினால், கூகுளே குழம்பும் அளவுக்கு மெகா சைஸில் பரந்து விரிகின்றன இதன் கிளைகள். ‘‘ஆனால், நான் பாப்புலர் ஆனதற்குக் காரணம் டாடாதான்!’’ என்று டாடா புராணம் பாடும் நவீன், இந்த அத்தனை டீலர்ஷிப்பையும் தனி ஒருவனாகச் சமாளித்தபடி பரபரப்போடு இருக்கிறார்.

வாடிக்கையாளர்களை நாங்கள் ஏமாற்றுவதில்லை!

கொச்சியில் உள்ள அவரது ஷோரூமில் நவீன் ஃபிலிப்பைச் சந்தித்தேன்.

‘‘இது எப்படிச் சாத்தியமானது?’’

‘‘இந்தத் தொழிலில் நான் இருவரை நம்பி இருக்கிறேன். ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள், வாடிக்கையாளர்கள் - இந்த இருவரையும் தராசுத் தட்டில் ஒரே மாதிரி வைத்து பேலன்ஸ் செய்து பயணிப்பதில்தான் டீலர்ஷிப்களின் வெற்றி இருக்கிறது! அதை நான் சரியாகக் கடைப்பிடித்தேன்.’’

‘‘டாடா மோட்டார்ஸை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?’’

‘‘கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ் பிரிவில் டாடாவுக்கு இருக்கும் தனித்துவம் உலகம் அறிந்ததே! எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எல்லோருக்கும் வாழ்க்கை பூஜ்யத்தில் இருந்து தொடங்கும். எனக்கும் அதுபோல் வாழ்க்கை தொடங்கிய காலமெல்லாம் உண்டு. இது தவிர, நான் கஷ்டத்தில் இருந்தபோது எனக்கு ஐடியாக்களையும், ஆஃபர்களையும் தந்து என்னை ஊக்குவித்தது டாடா!’’

‘‘தீர்க்க முடியாத பெரிய சிக்கல்?’’

‘‘டிஸ்கவுன்ட். இந்த டிஸ்கவுன்ட் கலாசாரம் எல்லா தொழிலிலும் உண்டு. சாதாரண விற்பனைக் கூடங்களிலேயே டிஸ்கவுன்ட் எதிர்பார்க்கிறவர்கள், லட்சம் லட்சமாகச் செலவழித்து வாகனங்கள் வாங்கும்போது தள்ளுபடி எதிர்பார்ப்பது நியாயம்தான். வாகன விற்பனை என்பது இன்னும் பிராண்டட் ஆக்கப்பட வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு பேட்டா ஷோரூமிலேயோ அல்லது ஆரோ ஷர்ட் ஷோரூமிலோ, அதில் இருக்கும் விலையைத் தாண்டி நம்மால் டிஸ்கவுன்ட் பேச முடியாதல்லவா? அந்த நிலை டீலர்ஷிப்களில் வர வேண்டும்.’’ ‘‘அப்படியென்றால், வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்?’’

‘‘சர்வீஸ் என்றொரு ஆப்ஷன் இருக்கிறது. முடிந்தவரை வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த வேண்டும். குறை இல்லாமல் பார்த்துக்கொள்கிறோம். எங்களிடம் அனுபவம்மிக்க சர்வீஸ் மேன்கள், தொழில்நுட்பங்கள் எல்லாமே உண்டு. அந்த வகையில் வாடிக்கையாளர்களை நாங்கள் ஏமாற்றுவதில்லை. அதைத் தாண்டி சர்வீஸ் நெட்வொர்க்கும் அதிகம் இருந்தால் மட்டுமே வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க முடியும்!’’