Published:Updated:

கைகோத்த டிஃபன்ஸிவ் யுனிட்... தமிழ்த் தலைவாஸ் மாஸ் கம்பேக்..!

கைகோத்த டிஃபன்ஸிவ் யுனிட்... தமிழ்த் தலைவாஸ் மாஸ் கம்பேக்..!
கைகோத்த டிஃபன்ஸிவ் யுனிட்... தமிழ்த் தலைவாஸ் மாஸ் கம்பேக்..!

நேற்றைய ஆட்டத்தில் அவசரம் இல்லை, குழப்பம் இல்லை. தமிழ்த் தலைவாஸ் ஐடியாலஜி அப்படியே மாறியிருந்தது. முதல் ரெய்டு எப்போதும் செல்லும் அஜய் தாகூருக்கு பதிலாக ஜஸ்வீர் செல்கிறார். எப்போதும் ஆடும் எம்டி ரெய்டு இல்லை. லெஃப்ட் கார்னரிலிருந்து ரன்னிங் ஹேண்ட் டச்சில் ஒரு புள்ளி. 20 செகண்ட் கூட முடியவில்லை. அந்த அளவுக்கு ஸ்பீட் அண்டு அக்யூரஸி.

ப்ரோ கபடி தொடரில் எப்போதும் பரபரப்பான ஆட்டமென்றால் அது நம்ம தலைவாஸ் ஆட்டமாகத்தான் இருக்கும். நொடிக்குநொடி ரசிகர்களின் பிரஷரை கூட்டிக் குறைத்து இறுதியில் தோல்வியிலேயே வந்து நிற்பார்கள். ஆட்டத்தில் சாதுர்யம், பொறுமை, சரியான திட்டமிடல் எதுவுமே இருக்காது. முதல் 6 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வியடைந்து கடைசி இடத்தில் இருந்தது. வடிவேலு பாணியில் சொன்னால், `பிளான் பண்ணாம ஆடுனா இப்படித்தான்'. நேற்று நடந்ததோ நேர் எதிர். பின்வாங்கிச் சீறுவது, தடுமாறுவது, தாறுமாறாகப் பிடிப்பது எனத் தமிழ்த் தலைவாஸ் வேற லெவலில் ஆடி, புனேரி பால்டன் அணியை வீழ்த்தியது.

காரணம், நேற்றைய ஆட்டத்தில் அவசரம் இல்லை, குழப்பம் இல்லை. தமிழ்த் தலைவாஸின் ஐடியாலஜி அப்படியே மாறியிருந்தது. எப்போதும் முதல் ரெய்டு செல்லும் அஜய் தாகூருக்கு பதிலாக ஜஸ்வீர் செல்கிறார். எப்போதும் ஆடும் எம்டி ரெய்டு இல்லை. லெஃப்ட் கார்னரிலிருந்து ரன்னிங் ஹேண்ட் டச்சில் ஒரு புள்ளி. 20 செகண்ட் கூட முடியவில்லை. அந்த அளவுக்கு ஸ்பீட் அண்டு அக்யூரஸி. புனே அணியிலிருந்து முதல் ரெய்டு நிதின் தோமர் வந்தார். கபடியில் எப்போதும் முதலில் சற்றுப் பொறுமையாக போனஸ் லைனைத் தாண்டி ஏறி நின்றுதான் டிஃபன்ஸ் செய்வார்கள். டேக்கிலும் அப்படித்தான் இருக்கும். ஆனால், தமிழ்த் தலைவாஸ் யுக்தி சற்று வித்தியாசமாக இருந்தது. பல்க் லைனில் 7 டிபண்டர்களும் நின்று தோமரை மடக்கி, `இது வேற தலைவாஸ்' என்று கெத்தாக நின்றது. 

5-வது நிமிடத்தில் கேப்டன் அஜய் தாகூர் பேக் கிக்கில் எடுத்த பாய்ன்ட் ப்ரோ கபடி வரலாற்றில் அவரது 600-வது புள்ளியாக அமைந்தது. 11-வது நிமிடத்தில் ஜஸ்வீர் ஒரு சோலோ டேக்கில், 12-வது நிமிடத்தில் கீ ரெய்டர் சுகேஷ் இரு டிபண்டரை தொட்டு பாய்ன்ட், அடுத்த நிமிடமே மஞ்சீத் ஒரு டேக்கில் என எஃபெக்ட் எகிறியது. இதான், இதைத்தான், இத்தனை நாளாக எதிர்பார்த்தோம். இருந்தும் தமிழ்த் தலைவாஸ் பற்ற வைத்த நெருப்பில் அவ்வப்போது அவர்களே சுட்டுக்கொல்வார்கள். சூப்பர் டேக்கிலுக்கும் அஜய் தாகூருக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். அஜய் அதிகமாக டேக்கில் செய்யப்படுவதும் இந்த நிலையில்தான். இரண்டு டிபண்டர்களிடம் தானாகவே லாபியை மிதித்து அவுட். முதல் பாதி முடிய இன்னும் 6 நிமிடங்களே இருக்கின்றன. வீணாக இரண்டு பாய்ன்ட்டோடு ஆல் அவுட் வாய்ப்பும் மிஸ்ஸிங். இதற்கிடையில் இன்னொரு சலசலப்பு வேறு. 

உசுப்பேத்தாம உம்முணும், கடுப்பேத்தாம கம்முணும் இருந்திருந்தா மேட்ச் ஜம்முனு போகும். ஆனால், எதிரணி வீரர்கள் ரெய்டு வரும்போது தொடர்ந்து கோரஸாகக் கத்திக்கொண்டே இருந்ததால் ஒரு டெக்னிக்கல் பாய்ன்ட்டை இழந்தது தமிழ்த் தலைவாஸ். திடீரென 4 பாயின்ட் எடுத்து தமிழ்த் தலைவாஸை நெருங்கியது புனேரி பால்டன். முதல் பாதி முடிய கடைசி 3 நிமிடம் இருக்கையில் மீண்டும் ஒரு ஆல் அவுட் வாய்ப்பு. இந்தமுறை ரெய்டு சென்ற ஜஸ்வீர் சிங் ஸ்பீடாக டச் செய்து பாயன்ட் எடுக்க, ஆல் அவுட் ஆனது புனேரி பால்டன். முதல் பாதியின் முடிவில் 16-15 எனத் தமிழ்த் தலைவாஸ் முன்னிலை பெற்றது.

எப்போதும் முதல் பாதியில் பின்தங்கும் தலைவாஸ் இந்த முறை பதுங்கவே இல்லை. அந்த அளவுக்கு அணியின் டிஃபண்டிங் ஸ்ட்ராங்காக இருந்தது. இரண்டாவது பாதியில் அஜய் ரெய்டில் பாய்ன்ட்களை அள்ளிவர, டிபண்டிங் யூனிட் சொதப்பியது. புனேரி டிபண்டர்களை முட்டி மோதி தொடர்ந்து 2 புள்ளிகளாக எடுத்து அஜய் தாகூரும் ஜஸ்வீரும் மீண்டும் ஆல் அவுட் செய்தனர். ஆனால், தமிழ்த் தலைவாஸ் டிபண்டிங் யூனிட் லாபி லைனில் அவசரப்பட்டு டேக்கில் செய்வது, ஏறி வந்து போனஸ் போட்டாலும் பிடிக்க யோசிப்பது எனத் தடுமாறியது. இதனால், கடைசி 5 நிமிடத்தில் புனேரி பால்டன் 10 புள்ளி இடைவெளியை 4 புள்ளியாகக் குறைத்தது. இதற்கிடையே, ரெய்டு செல்ல கூடுதல் நேரம் எடுத்ததாக மீண்டும் ஒரு டெக்னிக்கல் பாய்ன்ட்டை இழந்தது. டென்ஷன் எகிறியது. 

கடைசி 2 நிமிட ஆட்டத்தில் அஜய் தாகூர் டேக்கில் ஆக, மஞ்சீத் அவசரப்பட்டுப் பிடிக்க, 29-31 எனக் களை கட்டியது ஆட்டம். கடைசி நிமிடத்தில் ரெய்டு சென்ற ஜஸ்வீரை பல்க் லைனைத் தொடவிடாமல் பிடிக்க முயன்று 2 பேர் அவுட் ஆனதால் தமிழ்த் தலைவாஸ் 4 புள்ளிகள் முன்னிலை பெற்றது. இருந்தும் கடைசி நிமிடத்தில் புனேரி பால்டனுக்கு இரண்டு ரெய்டிங் வாய்ப்பு கிடைத்தது. 39 நிமிடம் சைலன்ட்டாக இருந்த அமித் ஹூடா, அந்த இரண்டு டேக்கில்களிலும் வயலன்ட் ஆனார். ஒற்றை ஆளாக ரெய்டர்களைத் தூக்கி வீசி, தமிழ்த் தலைவாஸ் வெற்றியை உறுதி செய்தார். பலம் வாய்ந்த புனேரி பால்டன் அணியை 36-31 என வீழ்த்தி தமிழ்த் தலைவாஸ் இரண்டாவது வெற்றியைப் பெற்றது.

அடுத்த கட்டுரைக்கு