Published:Updated:

கடவுளின் உணவு பெருங்காயம்!

கடவுளின் உணவு பெருங்காயம்!
பிரீமியம் ஸ்டோரி
கடவுளின் உணவு பெருங்காயம்!

அஞ்சறைப் பெட்டிடாக்டர் வி.விக்ரம்குமார்

கடவுளின் உணவு பெருங்காயம்!

அஞ்சறைப் பெட்டிடாக்டர் வி.விக்ரம்குமார்

Published:Updated:
கடவுளின் உணவு பெருங்காயம்!
பிரீமியம் ஸ்டோரி
கடவுளின் உணவு பெருங்காயம்!

`நாற்றமடிக்கும் பிசின்’ என்று விலக்கி வைக்கப்பட்ட பெருங்காயம், பிற்காலத்தில் `கடவுளின் உணவு’ (Food of the god’s) என அழைக்கப்பட்டது இயற்கை நிகழ்த்திய விந்தை. தாவரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் ‘பிசின்’ வகையைச் சார்ந்த `பெருங்காயம்’, நோய் போக்கும் அதன் குணத்தின் மூலம் உலகை வசீகரித்தது.  

கடவுளின் உணவு பெருங்காயம்!

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், `ஸ்பானிஷ் புளூ’ எனப்படும் விஷக்காய்ச்சலின் தாக்கம் அமெரிக்காவில் அதிகம் இருந்தது. பல்வேறு மருந்துகளும் பொய்த்துப்போன நிலையில், செய்வதறியாமல் தவித்த அமெரிக்காவின் அப்போதைய மருத்துவ அமைப்பு பெருங்காயத்தைப் பரிந்துரைத்தது. நம்மூர்க்காரர்கள் கழுத்திலும் இடுப்பிலும் தாயத்துக் கட்டுவதைப்போல, அமெரிக்கர்கள் விஷக்காய்ச்சலில் இருந்து தப்பிக்க, பெருங்காயத் துண்டைக் கழுத்தில் கட்டிக்கொண்டு அலைந்தனர். முற்காலத்தில் தொற்றுநோய்க் கிருமிகள் தாக்காமல் இருக்க, ஒவ்வொரு வீட்டிலும் கிருமிநாசினி பண்புடைய பெருங்காயம் தொங்கவிடப்பட்டிருந்தது.

‘நாற்றமடிக்கும் ஒரு பொருளை, இந்தியர்கள் எப்படி சமையலில் சேர்த்துக்கொள்கிறார்கள்?’ என்று முதலில் அதிர்ச்சி அடைந்த பல்வேறு நாடுகளின் உணவு ஆய்வாளர்கள், பெருங்காயம் சேர்க்கப்பட்ட இந்திய உணவுகளை ருசித்த பிறகு, அதற்கு அடிமையாகிப் போனார்கள். உடலில் ஏற்படும் காயங்களைக் குணப்படுத்தப் பயன் படுவதாலே, `பெருங்காயம்’ என்று பெயர்சூட்டி மகிழ்ந்தது தமிழ்ச் சமுதாயம். கந்தி, ராமடம், ரணம், சந்துநாசம், வல்லீகம், பூதநாசம், காயம், அத்தியாகிரகம் என பல பெயர்களைக் கொண்ட பெருங்காயத்தில் பல வகைகள் இருக்கின்றன. ஆனால், பெருங்காயத்துடன் சிறிது மாவையும் சில வகைக் கோந்துகளையும் கலந்த ரகங்களே நமக்குக் கிடைக்கின்றன. தென்னிந்தியாவில் அரிசி மாவும் வடஇந்தியாவில் கோதுமை மாவும் சேர்க்கப்படுகின்றன.

`சோமகாயம்’ என்று அழைக்கப்படும் வெள்ளைப் பெருங்காயத்துக்கு மதிப்பு அதிகம். தரமான பெருங்காயத்தை நீரில் போட்டால், பால் நிறமாகிவிடும். பழுப்பு அல்லது கருமை நிறத்தில் கிடைக்கும் பெருங்காயம் தரமற்றது. கற்கள் சேர்க்கப்பட்ட பெருங்காயம், நீரில் கரையாமல் அடியில் தேங்கி நிற்கும். கற்கள் மட்டுமல்லாமல் சாயங்களும் இதில் கலக்கப்படுகின்றன.

கி.மு நான்காம் நூற்றாண்டில் மாவீரன் அலெக்சாண்டரின் பெரும்படை இந்தியாவை நோக்கி வந்தது. வழியில் இரான், ஆப்கானிஸ்தானைக் கடந்து வரும்போது, தங்கள் நாட்டில் விளையும் மருத்துவக் குணம் நிறைந்த `ஸில்பியம்’ என்ற தாவரத்தைப் போல பல தாவரங்கள் அந்தப் பகுதிகளில் இருப்பதைக் கண்டு, சில செடிகளைப் பறித்து இந்தியாவுக்கு எடுத்து வந்தது. அப்படி கொண்டுவரப்பட்ட செடிகளில் பெருங்காயச் செடிகளும் இருந்ததாக ஒரு செய்தி உண்டு. ஐரோப்பிய நாடுகளில் பெருங்காயம் பரவ  அலெக்சாண்டரின் படையே காரணமானதாகவும் ஒரு வரலாற்றுக் குறிப்பு சொல்கிறது. பெர்சியா, இரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் வணிகர்களால் இந்தியாவில் பெருங்காயத்தின் தாக்கம் அதிகரித்தது.

கரகரப்புடன் கூடிய கைப்புச்சுவை கொண்டிருந்தாலும், இந்திய சமையலில் பெருங்காயம் சேர்க்காமல் உணவு முழுமையடையாது.  உணவுகளில் கூடுதலாகப் பெருங்காயம் சேர்த்தால், கசப்புச் சுவை அதிகரித்துவிடும். தாளிக்கும்போதே பெருங்காயத்தைத் தூவுவதே நல்லது. ஃபெருலிக் அமிலம், அம்பெல்லிஃபெரோன், அஸாரெசினால் போன்ற வேதிப்பொருள்கள் பெருங்காயத்தில் பொதிந்து கிடக்கின்றன. பூண்டையும் வெங்காயத்தையும் தவிர்ப்பவர்கள், அவற்றுக்கு மாற்றாக பெருங்காயத்தைச் சேர்க்கிறார்கள். வாதநோய்களைக் குணப்படுத்தும் சித்த மருந்துகளில் பெருங்காயம் தவறாமல் இடம்பெறும். செரியாமை, பசியின்மையைக் குணமாக்கப் பயன்படும் சித்த மருந்தான அஷ்ட சூரணத்தில் பெருங்காயம் முக்கிய பங்குவகிக்கிறது.

பெருங்காயத்துக்குக் காமத்தைப் பெருக்கும் தன்மை இருப்பதைத் தெரிந்துகொண்ட பலர், ஆரம்ப காலங்களில் அதைத் தேடி அலைந்து, உட்கொள்ளும் அளவு தெரியாமல் திண்டாடிய நகைச்சுவை கதைகள் பல உண்டு. ஐந்து சிட்டிகை பெருங்காயத்தை நெய்யில் பொரித்து, அதை ஒரு டீஸ்பூன் ஆலம்பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் விரைவில் விந்து வெளியேறுவது தடுக்கப்படும். பெருங்காயம், சினைப்பை ஹார்மோன்களை முறையாகச் சுரக்கவைப்பதாகவும் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

உடுப்பி வகை பச்சடி உணவுகளில் மிகவும் பிரபலமான `மெனஸ்காய்’ ரகங்களில் பெருங்காயம் சேர்ப்பதால்தான், அதற்குத் தனித்துவமான சுவை கிடைப்பதாகக் கூறப்படுகிறது. பெருங்காயம், கருஞ்சீரகம், இஞ்சி சேர்த்துத் தயாரிக்கப்படும் ஸ்டஃப்டு பூரி வகைகள், வங்காள மக்களின் பாரம்பர்யத்தில் இணைந்த ஒன்று. பெருங்காயத்தின் வாசனையுடன் கிடைக்கும் இந்த உணவுக்கு `ஹிங்கர் கொச்சூரி’ என்று பெயர்.

அசைவ உணவுகளால் உண்டாகும் செரிமானக் கோளாறுகளைத் தடுக்க, அவை பரிமாறப்படும் பாத்திரங்களில் பெருங்காயத்தைத் தடவலாம். இது இரானியர்கள் நெடுங்காலமாகப் பின்பற்றும் வழக்கம். அசைவ வகை உணவுகளில் பெருங்காயம், உப்பைத் தூவி, அரைமணி நேரம் கழித்துச் சமைத்தால், கடினமான அசைவ வகைகள்கூட மிருதுவாகும் என்பது ஆப்கானிஸ்தானின் உணவியல் குறிப்பு.

12-ம் நூற்றாண்டில் வெளியான நூல் ஒன்றில் பெருங்காயம், உப்பு, மஞ்சள் கலந்த நீரில், மீன் துண்டுகளை ஊறவைத்துச் சமைத்ததாகக் குறிப்பு உள்ளது.

சாளுக்கிய மன்னன் மூன்றாம் சோமேஸ்வரனால் எழுதப்பட்ட  `Manasollasa’ என்னும் நூலில், அரிசி கழுவிய நீரில் சிறிது புளி, பெருங்காயம், ஏலம், இஞ்சி சேர்த்துச் சுவையும் ஊட்டச்சத்தும் நிறைந்த `வியாஞ்சனா’ பானம் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சியில், மார்பகப் புற்று, நுரையீரல் புற்று மற்றும் கல்லீரல் புற்று செல்களின் அசுர வளர்ச்சியைப் பெருங்காயத்தில் உள்ள `பாலிபீனால்கள்' வெகுவாகக் குறைப்பதாகத் தெரியவந்துள்ளது. உடலில் ஆங்காங்கே திட்டுதிட்டாகக் காணப்படும் `காணாக்கடி’ எனப்படும் சரும நோய்க்கு, மூன்று சிட்டிகை பெருங்காயத்தை வாழைப்பழத்துக்குள் வைத்து விழுங்கினால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். விடாத இருமலைக் கட்டுப்படுத்த, பெருங்காயத்தை சிறிது நீர்விட்டு அரைத்து, மார்பின்மீது பற்று போடலாம். இதே கலவையை வயிறு உப்புசமாக இருக்கும்போது, வயிற்றின் மீதும் பற்று போடலாம்.

மருந்தாகப் பயன்படுத்தும்போது, பெருங்காயத்தை லேசாகப் பொரிப்பது நல்லது. பிரசவத்துக்குப் பிறகு, வேகவைத்த வெள்ளைப்பூண்டுடன் பனைவெல்லம் சேர்த்து அரைத்து, சிறிது பொரித்த பெருங்காயத்தை மேலோட்டமாகத் தூவி, மோரில் கலந்து தினமும் காலையில் குடித்துவந்தால், கருப்பை விரைவில் பழைய நிலைக்குத் திரும்பும். தாய்ப்பால் சுரப்பையும் அதிகரிக்கும். நாட்டுக்கோழி முட்டையின் மஞ்சள் கருவை வேகவைத்து மிளகுத்தூள் தூவுவதைப் போல, பெருங்காயத்தைத் தூவி சாப்பிட்டால், உடலில் உள்ள வாய்வு நீக்கப்படுவதுடன் உடல் வலிமையைக் கொடுக்கும். வேனிற்காலத்தில் சிறிது பெருங்காயத்தை மோரில் கலந்து குடித்தால், குடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்களை அதிகரித்து, செரிமானக் கோளாறுகளை நீக்கும்.

ஓமம், சீரகம், கறிவேப்பிலை, இந்துப்பு, சுக்கு, மிளகு, திப்பிலி…  தலா 100 கிராம் எடுத்துக்கொண்டு, 25 கிராம் பெருங்காயம் சேர்த்து நன்றாகப் பொடித்தால் கிடைப்பதை அன்னப்பொடி என்பார்கள். இதை சாதத்தில் அரை டீஸ்பூன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டால், செரிமானக் கோளாறுகள் குணமாகும். மருந்துக் கடைகளில் செரிமானத்துக்கான மருந்துகளை வாங்குவதை நிறுத்திவிட்டு, இந்த அன்னப்பொடியை முயற்சி செய்து பார்க்கலாம்.

காலிஃபிளவர், முட்டைக்கோஸ், கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு போன்றவற்றால் செய்யப்படும் `வெஜ் கோஃப்தா’ மற்றும் `நான்-வெஜ் கோஃப்தா'க்களிலும் பெருங்காயம் சேர்க்கப்படுகிறது. வாய்வு நிறைந்த பொருள்களைச் சமைக்கும்போது, தவறாமல் பெருங்காயம் சேர்த்தால், அவற்றின் வாயுவை அதிகரிக்கும் தன்மை நீங்கி, மருத்துவக் குணம் வெளிப்படும். `தன் காயம் காக்க பெருங்காயம்’ என்ற மருத்துவ மொழி உணர்த்துவது மரபு அறிவியல்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism