ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

கார் டெஸ்ட் டிரைவ்!

கார் டெஸ்ட் டிரைவ்!
பிரீமியம் ஸ்டோரி
News
கார் டெஸ்ட் டிரைவ்!

கார் வாங்குவது எப்படி? - 5தமிழ், படங்கள்: விநாயக்ராம்

‘மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 20 லட்சத்துக்கு விற்ற இனோவா, இப்போது 27 லட்ச ரூபாய். அறிமுகமானபோது 1.5 லட்சத்துக்கு விற்ற நானோ,  இப்போது 3 லட்ச ரூபாயிலிருந்துதான் தொடங்குகிறது. எனவே, சட்டு புட்டென ஒரு முடிவை எடுத்து, கடனை உடனை வாங்கி காரை வாங்குவதுகூட கார் பிரியர்களுக்கு ஒரு நல்ல ஐடியாதான்.

கடனில் கார் வாங்குவது என்று முடிவெடுத்தாகிவிட்டது. காரையும் தேர்ந்தெடுத்தாகிவிட்டது. விளம்பரத்திலோ, ரெவ்யூவிலோ ஒரு காரைப் பற்றித் தெரிந்துகொண்டுவிட்டு, அந்த காரைப் பார்த்தவுடனே பிடித்துப்போய் வாங்கிவிடுவது என்பது ஒருவித அவசரக் குடுக்கைத்தனம்தான். காரை வாங்குவதற்கு முன்பு நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் - டெஸ்ட் டிரைவ். ஒரு சட்டை/பேன்ட்டையே ட்ரையல் போட்டுப் பார்த்துவிட்டு வாங்கும்போது, காருக்கு டெஸ்ட் டிரைவ் என்பது மஸ்ட்.

கார் வாங்கும்போது சிலர் டெஸ்ட் டிரைவ் கேட்கக் கூச்சப்பட்டு, உடனே காரை புக் செய்துவிடுவார்கள். லட்சங்களில் கார் வாங்கும்போது, தூக்கி எறிய வேண்டிய முதல் விஷயம் - கூச்சம். கோடிக்கணக்கில் ஆடி, பிஎம்டபிள்யூ, ஜாகுவார் போன்ற பிரீமியம் கார்கள் வாங்கும்போதும் கூட, 10,000 ரூபாய்க்கெல்லாம் டீலர்களிடம் அடித்துப் பேசும் பல வாடிக்கையாளர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், மிடில் க்ளாஸ் மக்கள் கூச்ச சுபாவத்தால், தங்களுக்குக் கிடைக்க வேண்டிய பல சலுகைகளை இழந்து நிற்பார்கள்.

 காருக்குள் ஏறி அமரும் முன்பு, அந்த காரைப் பற்றிய அத்தனை தகவல்களையும் விலாவாரியாகக் கேட்டு விடுங்கள். ‘நல்லா கேட்குறார்யா டீட்டெய்லு’ என்று டீலர் நொந்துபோனாலும் பரவாயில்லை. தெரிகிறதோ இல்லையோ... கார் ஹூடைத் திறந்து காட்டச் சொல்லி 4 சிலிண்டரா, 3 சிலிண்டரா... பிரேக் ஆயில் எது... கூலன்ட் ஆயில் கேப் எது... ஏர் பாக்ஸ் எது... வைப்பர் ஃப்ளூயிட் கேன்... இன்ஜின் ஆயில் அளவை எப்படி செக் செய்வது... என்று எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளுங்கள். உங்களைப் பற்றிய ஒரு தெளிவான பிம்பத்துக்கு சேல்ஸ்மேன் வந்துவிடுவார். ஹெட்லைட்கள் பற்றி, டயர்கள் பற்றி, பூட் ஸ்பேஸ் பற்றி... எதையும் விட வேண்டாம்.

கார் டெஸ்ட் டிரைவ்!

அதே காரின் டாப் மாடலில் என்னவெல்லாம் சேர்த்திருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் விசாரித்துக் கொள்ளுங்கள். உதாரணத்துக்கு, சில கார்களின் டாப் மாடலில் 15 இன்ச் டயர்கள், டச் ஸ்கிரீன் மட்டும் எக்ஸ்ட்ராவாக இருக்கும். இதற்காக எக்ஸ்ட்ரா 75,000 வரை ஆன்ரோடு விலை சொல்வார்கள். இந்த வசதி உங்களுக்குத் தேவைதானா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். டச் ஸ்கிரீன் மட்டும் தேவை என்றால், வெளிமார்க்கெட்டில்கூட பொருத்திக் கொள்ளலாம். ஆனால், காரின் எலெக்ட்ரானிக்ஸில் கை வைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வாரன்ட்டியில் பிரச்னை வரலாம்.

காரோ, பைக்கோ - டெஸ்ட் டிரைவ் செய்யாமல் புக் செய்வது நல்லதல்ல! அதேபோல், அவசர அடியாக காரை ஸ்டார்ட் செய்துவிட்டு, மெயின்ரோட்டில் சும்மா ஒரு ரவுண்டு போய்விட்டு வந்து, ‘‘கார் செமையா இருக்கு’’ என்று ஒரு முடிவுக்கு வராதீர்கள். டெமோவுக்காக இருக்கும் புது கார்கள் எல்லாமே நன்றாகத்தான் இருக்கும். டெஸ்ட் டிரைவில் எக்கச்சக்க விஷயங்கள் உண்டு. ஒரு டெஸ்ட் டிரைவ் பெஸ்ட்டாக அமைய, இதெல்லாம் கவனிங்க! டெஸ்ட் டிரைவில் ஸ்டார்ட்டிங்கில் இருந்து பார்க்கிங் வரை இந்த 10 பாயின்ட்கள் ரொம்ப முக்கியம்!

1. முதலில் காரின் அமர்ந்து பாருங்கள். அதேபோல அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள் என எல்லோரையும் ஒவ்வொருவராக காரில் உட்கார்ந்து பார்க்கச் சொல்லுங்கள். அப்போதுதான் காரில் ஏறவும் இறங்குவும் பெரியவர்களுக்கு சுலபமாக இருக்கிறதா, உயரமானவர்களுக்கு தலை இடிக்கிறதா, காலை நீட்டி மடக்க முடிகிறதா என்பதெல்லாம் தெரியவரும்.

2.  நேரம் ஆனாலும் பரவாயில்லை; சீட்களை நன்றாக அட்ஜஸ்ட் செய்த பிறகே, காரை ஸ்டார்ட் பண்ணுங்கள். காரின் பானெட் எங்கே முடிகிறது என்று தெரியவில்லை; சீட் தாழ்வாக இருப்பது; ரோடு விஸிபிளிட்டி நன்றாகத் தெரியாமல் இருப்பது; தலை காரின் கூரையில் இடிப்பது; லம்பர் மற்றும் பேக் சப்போர்ட் இடைஞ்சலாக இருப்பது போன்ற சில விஷயங்களுக்கான செக்கிங் இது.

3.  காரின் வலது-இடது பக்க பில்லர்களைக் கவனியுங்கள். சில பில்லர்கள் தடிமனாக இருக்கும். இதனால், காரில் பிளைண்டு ஸ்பாட் ஏற்படும். அதாவது, காரைத் திருப்பும்போது இந்த பில்லர்கள் சாலையை மறைத்துவிடும். ஹோண்டா ஜாஸ் போன்ற கார்கள் இதில் வீக். பின் பக்க விண்டோக்களும் பிளைண்ட் ஸ்பாட் ஏற்படுத்தலாம். அதனால்தான் குடும்ப உறுப்பினர்களை பின்னால் அமர்ந்து பார்க்கச் சொல்லலாம். சைடு மிரர்களைக் கவனியுங்கள். அட்ஜஸ்ட் செய்து பாருங்கள். ஈஸியாக இருக்கிறதா? சில கார்களில் சைடு மிரர்கள் மொந்தையாக இருந்தால், இதுவும் பிளைண்ட் ஸ்பாட்டை ஏற்படுத்தும். அதையும் கவனிங்க!

கார் டெஸ்ட் டிரைவ்!

4.  இண்டிகேட்டர் ஸ்டாக், வைப்பர் ஸ்டாக் போன்றவை எந்தப் பக்கம் இருக்கிறது என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். ஜெர்மன் மற்றும் அமெரிக்க கார்களில்... உதாரணத்துக்கு ஃபோக்ஸ்வாகன், ஸ்கோடா போன்ற கார்களில் இடது பக்கத்தில் இண்டிகேட்டர்கள், வலது பக்கத்தில் வைப்பர்களுக்கான ஸ்டாக்குகள் இருக்கும். தெரியாமல் வைப்பர் ஸ்டாக்கை ஆன் செய்துவிட்டு, ‘விண்ட்ஷீல்டு ஸ்க்ராட்ச் ஆகிடுச்சு’ என்று சேல்ஸ்மேன் புலம்பாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

5.  ஸ்டீயரிங்தான் ஒரு காருக்கு ஹேண்ட்லிங்கை ஈஸியாக்கும் விஷயம். ஸ்டீயரிங் ஹெவியாக இருக்கிறதா என்பதை செக் செய்யுங்கள். சிட்டி டிராஃபிக்கில் லைட் வெயிட் ஸ்டீயரிங்தான் கையாள ஈஸியாக இருக்கும். மிகவும் லைட்டாக இருந்தால், காரை கன்ட்ரோல் பண்ணுவதும் சிரமம். சும்மா மேடு பள்ளங்களிலோ, ஸ்பீடு பிரேக்கர்களிலோ காரை ஏற்றி - இறக்கி ஹேண்ட்லிங்கை சோதனை செய்து பாருங்கள். தப்பில்லை.

6. பிரேக் ரொம்ப முக்கியம். வேகமாகப் போய் வேண்டுமென்றே ‘பச்சக்’ என சடர்ன் பிரேக் அடித்துப் பார்க்கலாம். கார் நிற்பதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறது; ஸ்லோ பிரேக்கிங்கா, ஸ்பீடு பிரேக்கிங்கா என்பதை நீங்களே கணக்குப் போட்டுப் பாருங்கள். ஏபிஎஸ் இருந்தால் வேலை செய்கிறதா என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

7.  கியர் பாக்ஸ் ஸ்மூத்னெஸ்ஸும் ஒரு காரின் ஃபன் டு டிரைவுக்கும் மைலேஜுக்கும் அவசியம். கியர்களை ஈஸியாக மாற்ற முடிகிறதா, ஷார்ட் கியரிங் செட்-அப்பா, டால் கியரிங்கா என்பதை செக் செய்யுங்கள். ஷார்ட் கியரிங் செட்-அப் என்றால், நகரத்துக்குள் ஓட்ட ஃபன் ஆகவும், மைலேஜும் நன்றாகவே கிடைக்கும். டால் கியரிங் செட்-அப் ஹைவே ரைடிங்குக்கானது. இது சிட்டிக்குள் கடுப்படிக்கும்; அதேநேரம் மைலேஜும் ஆவரேஜாகவே கிடைக்கும். எல்லா கியரிலும் ஆக்ஸிலரேஷனை வேகமாகக் கொடுத்துப் பாருங்கள்; ஒரு ஐடியா கிடைக்கலாம்.

கார் டெஸ்ட் டிரைவ்!

8.  மேனுவல் டிரான்ஸ்மிஷன் என்றால், கிளட்ச்தான் ரைடிங்கை ஜாலியாக்கவும் செய்யும்; எரிச்சல் அடையவும் வைக்கும். ஹெவி கிளட்ச் என்றால், கால் வலி ஜாக்கிரதை! போலோ போன்ற கார்களில், கிளட்ச் ப்ளேவில் ‘தட தட’ சத்தம் வந்தால், முழுவதுமாக ரிலீஸ் செய்ய வேண்டும் என்று அர்த்தம்.

9. சாதாரண சாலைகளில் மட்டுமல்லாமல், நெடுஞ்சாலைகளில் ஒரு ரவுண்ட் போய் வந்தால்தான் காரைப் பற்றிய முழுமையான ஐடியாவே கிடைக்கும். சேல்ஸ்மேன் டபாய்த்தாலும், நிச்சயம் ஹைவே ரைடிங் வேண்டும் என்று கேளுங்கள். அதிக வேகங்களில் rpm முள் 2,500-க்கு மேலே இருந்தால், மைலேஜ் அவ்வளவாகக் கிடைக்காது. அதிக வேகங்களில் கேபினுக்குள் வரும் சத்தத்தை வைத்துத்தான் இன்ஜின் இன்சுலேஷன் பற்றியும் ஒரு ஐடியாவுக்கு வர முடியும்.

10.  டெஸ்ட் டிரைவ் முடிந்ததும், சும்மா ஓரிடத்தில் நிறுத்தி சாவியை ஒப்படைக்காமல், காரை ரிவர்ஸ் எடுத்து, ஸ்ட்ரெய்ட் எடுத்து நீங்களே பார்க்கிங்கையும் பண்ணினால், காரை பார்க் செய்ய கஷ்டமாக இருக்கிறதா, ஈஸியாக இருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

இது தவிர, எலெக்ட்ரானிக் அம்சங்கள் வேலை செய்கின்றனவா, கிளைமேட் கன்ட்ரோல், மியூஸிக் சிஸ்டம், ஏ.சி வென்ட்கள், பூட் வசதி, ஸ்டீயரிங் வீல் கன்ட்ரோல், கைவசம் பென் டிரைவ் இருந்தால் யுஎஸ்பி போர்ட் என ஏகப்பட்ட விஷயங்கள் டெஸ்ட் டிரைவில் செக் செய்ய வேண்டியது அவசியம். எல்லாமே பிடித்துப் போயிருந்தால், அடுத்து ஆன்ரோடு விலை, டிஸ்கவுன்ட், டெலிவரி, கலர், வேரியன்ட் பற்றிப் பேச ஆரம்பியுங்கள்.

- கார் வாங்கலாம்