ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

ரேஸ்... காதல்... கல்யாணி!

ரேஸ்... காதல்... கல்யாணி!
பிரீமியம் ஸ்டோரி
News
ரேஸ்... காதல்... கல்யாணி!

சாதனை / ரேஸ்தமிழ், படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

‘‘ஆண் என்ன, பெண் என்ன... ஹெல்மெட் அணிந்துவிட்டால் எல்லாருமே ஓரினம்தான்!’’ என்று ரஜினி மாதிரி பஞ்ச் டயலாக்கோடுதான் ஆரம்பிக்கிறார் கல்யாணி பொடேக்கர். ‘‘ஆண் ரைடர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள்?’’ என்கிற கேள்விக்குத்தான் இப்படி ஒரு தத்துவத்தைச் சொன்னார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள திவாஸ் எனும் சிற்றூரில் பிறந்த கல்யாணி, இப்போது ரேஸிங் உதவியால் நாடு முழுதும் அறியப்பட்ட ஒருவராகிவிட்டார். காரணம், இவர் ஏறிய போடியம்கள், ஃபினிஷ் செய்த ரேஸ் போட்டிகள், வின்னர் டைட்டில்கள் என ஒரு பெரிய லிஸ்ட்டே உண்டு. அலீஷா, ரெஹானா என்று எத்தனை பெண்கள் வந்தாலும், பெண்கள் பிரிவில் ‘பெஸ்ட் ரைடர்-இந்தியா’ எனும் டைட்டில் அவார்டு கல்யாணிக்கு மட்டுமே சொந்தம். FMSCI-யே ‘Outstanding Woman in MotorSports’ என்கிற விருதைத் தந்து கௌரவித்திருக்கிறது. பைக் ரைடிங், போட்டோகிராபி, டர்ட் ட்ராக் ரைடிங், ஹார்ஸ் ரைடிங், ஐயன் பட் செய்வது, தனது பைக்கிலேயே இந்தியா முழுக்கச் சுற்றுவது என்று டிரைவிங்... ரைடிங்... ரேஸிங் - இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது கல்யாணியின் பொழுதுகள். ‘‘அண்ணா, டூயிங் ஜிம் ஒர்க்அவுட்... ரைடிங் பைக்... ஐ’ம் இன் ட்ராக்..’’ என்று எப்போது போன் செய்தாலும் இப்படி ஏதாவது ரிப்ளை வருகிறது.

ரேஸ்... காதல்... கல்யாணி!

இந்தியாவில் எந்த இடத்தில் ரேஸ் நடந்தாலும், அங்கே கல்யாணியின் பைக் இருக்கும். கரி மோட்டார் ஸ்பீடுவே, டெல்லி புத் ரேஸ் ட்ராக், பெங்களூர், சென்னை என்று எல்லா இடங்களிலும் பைக் முறுக்கியிருக்கிறார் கல்யாணி. இது தவிர, வெளிநாடுகளிலும் தன் ரேஸ் பயணத்தைத் தொடங்கிவிட்டார். தன் வாழ்நாளில் மறக்க முடியாத விஷயமாகக் கருதுவது - தாய்லாந்து மற்றும் தாய்வானில் நடந்த ஆசியன் கப் ஆஃப் ரோடு ரேஸிங்கில் கலந்துகொண்டதுதான் என்கிறார். சென்ற ஆண்டு சாம்பியன்ஷிப் ரேஸ் நடந்து முடிந்ததும், தாய்லாந்து, தாய்வானில் ஆசியன் கப் ரேஸ் நடக்க இருந்தது. பெண்கள் சார்பாக இந்த ரேஸுக்கு யாரை அனுப்பலாம் என்று FMSCI தேடிக்கொண்டிருந்தபோது, ‘அவர்தான் இதுக்குச் சரியான ஆளு’ என்று விஜயகாந்த் படங்களில் பில்டு-அப் கொடுப்பதுபோல கல்யாணி-ரெஹானா ஜோடியைப் பரிந்துரைத்தார்கள்.

ரேஸ்... காதல்... கல்யாணி!

FMSCI நம்பிக்கையைக் காப்பாற்றி இருக்கிறார். கல்யாணியும் ரெஹானாவும் இந்தியா சார்பில் 3-வது இடத்தைத் தக்க வைத்துப் பெருமை தேடித் தந்துவிட்டார்கள். “முதலாவது வர வாய்ப்பில்லையா?”

‘‘ரேஸிங் முதல் நாளிலிருந்தே ரொம்பவும் நெர்வஸாக இருந்தது. காரணம், தாய்லாந்தில் நடந்தது அண்டர்போன் பைக் ரேஸ். ஸ்கூட்டர்போல் முன் பக்கம் டேங்க் இருக்காது. ஆனால், கியர் இருக்கும். இதில் உடனே பழகி, உடனே ரேஸில் கலந்து கொண்டதுதான் காரணம். ரேஸிங்கில் சண்டையெல்லாம் நடந்தது. தாய்வானில் ஸ்கூட்டர் போட்டி. நல்ல எடை கொண்ட இந்த ஸ்கூட்டர்களை நம் வேகத்துக்குப் பழக்கி ரேஸில் கலந்துகொண்டது மறக்கவே முடியாது!’’ என்றார்.

ரேஸ்... காதல்... கல்யாணி!

‘பையனுக்குப் பதிலா பொண்ணு... ஸ்கூட்டருக்குப் பதிலா பைக் ஓட்டுது... ரேஸ்ல கலந்துக்குது.. அவ்வளவுதானே..’ என்று கல்யாணியின் ரேஸிங் புரொஃபஷனலிஸத்தைச் சாதாரணமாகக் கணக்கிட்டுவிட முடியாது. சென்னை, கோவைப் பெண்கள் என்றால் பரவாயில்லை; மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் ஒரு பெண், ரேஸராவது என்பது சாதாரணமில்லை. காரணம், அங்கே எந்தவொரு ரேஸ் ட்ராக்கும் கிடையாது. ரேஸிங்கில் கலந்துகொள்ள, ஏன் பயிற்சி எடுப்பதற்குக்கூட சென்னைக்குத்தான் வர வேண்டும். ‘‘ஆனால், இது என் ரேஸிங்குக்குத் தடையாக இருந்துவிடக் கூடாது. என்னுடைய வேலையையும் என் காதலையும் அதாவது ரேஸையும் பேலன்ஸ் பண்ணி பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்!’’ என்கிறார் கல்யாணி.

சில ரேஸர்கள் நடக்கப் பழகும் வயதிலேயே ட்ராக்கில் பாக்கெட் பைக் ஓட்டப் பழகியிருப்பார்கள். ஆனால், கல்யாணி அதுக்கும் மேல! ‘‘என் அப்பா ஒரு டர்ட் பைக் ரேஸர். ஒரு தடவை என்னை அவர் ஊட்டியில் ஒரு ரேஸ் ட்ராக்குக்குக் கூட்டிட்டுப் போனார். அப்போதிருந்தே எனக்கும் அவர் மாதிரி ட்ராக்கில் பைக் ஓட்டணும்ங்கிற ஆசை வந்துச்சு. ஸோ, ரேஸிங்கிறது என் ஜீன்லயே இருக்குனு நினைக்கிறேன். 2013-ல், தனது 20வயதில் மாருதி சுஸூகி நடத்திய ‘ரைடு தி ஹிமாலயா’-வில் கலந்துகொள்ளும் அளவுக்கு பைக் ரைடிங்கில் கலக்குகிறார் கல்யாணி. இதில் ஹைலைட் என்னவென்றால், அதில் கலந்துகொண்ட 200 ஆண்களில் கல்யாணி மட்டும்தான் பெண்.

ரேஸ்... காதல்... கல்யாணி!

ரேஸிங் ஜீனிலேயே பிறந்ததால், அப்பாவின் யமஹா RX100-பைக்கில்தான் கல்யாணியின் ட்ரெயினிங் ஆரம்பித்தது. கேடிஎம் டியூக் 200, அவென்ஜர் 220, ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள், யமஹா FZ-S, கரீஸ்மா என்று கல்யாணி இப்போது 5 படா பைக்குகளின் ஓனர்.

‘பிடித்த பைக்?

‘‘எனக்கு பிக் பைக்குகளின் மீதுதான் காதல். படா படா பைக்குகள்தான் என் ஃபேவரைட். இப்போதைக்கு என் செல்லம் ட்ரையம்ப்பும் கேடிஎம் பைக்குகளும்தான். அதனால், கேடிஎம் நடத்தும் ஆரஞ்ச் டே போட்டியில் என்னை நீங்கள் பார்க்கலாம். வருங்காலத்தில் கேடிஎம் டியூக் 1290... அப்புறம் பிஎம்டபிள்யூ S1000RR பைக் வாங்கணும்னு ஆசை. இந்த இரண்டும்தான் என் டார்கெட்!’’ என்று கல்யாணியிடம் இருந்து பதில் வருகிறது. பைக் கிளப்புகள், ரைடர்ஸ் அசோஷியேஷன் ஆஃப் இண்டோர், லேடி ரைடர்ஸ் ஆஃப் இந்தியா என்று பல கிளப்புகளில் உறுப்பினராக இருக்கிறார் கல்யாணி.

ரேஸ்... காதல்... கல்யாணி!

‘‘என்னோட ரோல் மாடல் ராஸி, மார்க் மார்க்யூஸ், அப்புறம் என் அப்பா. முக்கியமா அங்கிள் அனூப் பண்டிட், சந்தீப் ரத்தோர். இவங்கதான் என்னோட மோட்டிவேஷன். என்னதான் பெண்களுக்கு பைக் ஓட்டும் ஆசை இருந்தாலும், யாராவது சப்போர்ட் பண்ணினா தான் அதை நோக்கிப் போக முடியும். இவங்க இல்லேனா நான் பைக் முன்சீட்டில் ஏறியிருக்கவே முடியாது. வெறும் பைக் ஓட்டத் தெரிஞ்சா மட்டும் ரேஸ்ல கலந்துக்க முடியாது. கார்னரிங், அப்புறம் ட்ராக் ரேஸிங்கில் ஏகப்பட்ட டெக்னிக்ஸ் இருக்கு. அதைக் கத்துக் கொடுத்தது ஷஹீல். எல்லோருக்கும் தேங்க்ஸ்!’’ என்று குடோஸ் சொல்லும் கல்யாணி, இன்னும் த்ராட்டில் செய்ய வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

கீப் த்ராட்டிலிங் கல்யாணி!