ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
News
மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

நான் யமஹா R15 V2.0 பைக்கை, கடந்த ஒராண்டாகப் பயன்படுத்தி வருகிறேன். எனக்கு நீண்ட தூரப் பயணங்கள் செய்வது பிடிக்கும். அதற்கு யமஹா R15 V3.0 அல்லது டிவிஎஸ் அப்பாச்சி RR310 பைக் பொருத்தமாக இருக்குமா? எனது புதிய பைக், லிட்டருக்கு 35 முதல் 40 கி.மீ மைலேஜ் தரவேண்டும் என விரும்புகிறேன்.

- ரஜினிகாந்த், திருப்பூர்.

LED ஹெட்லைட்ஸ் , VVA இன்ஜின், ஸ்லிப்பர் கிளட்ச், டெல்டா பாக்ஸ் ஃப்ரேம் என அசத்தும் R15 V3.0 பைக், இப்போது அதிக பவரோடு இருக்கிறது. ஆனால், உங்கள் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, டிவிஎஸ் அப்பாச்சி RR310 பைக் பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றுகிறது. ஸ்போர்ட்டியான ரைடிங் பொசிஷனைக் கொண்டிருக்கும் R15 பைக்குடன் ஒப்பிடும்போது, நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்ற ரைடிங் பொசிஷன் அப்பாச்சிக்கு இருக்கிறது. தவிர, யமஹா பைக்கைவிடச் சுமார் 1 லட்ச ரூபாய் அதிகமாக இருந்தாலும், இருமடங்கு அதிக இன்ஜின் திறனைக்கொண்டிருக்கிறது டிவிஎஸ். இதனால் நெடுஞ்சாலை பயணங்களில் நீங்கள் அதிக வேகத்தில் க்ரூஸ் செய்வது வசதியாக இருக்கும். ஆனால், முன்னே சொன்ன அதே காரணத்துக்காக, மைலேஜ் விஷயத்தில் பின்தங்கிவிடுகிறது RR310. எனவே டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்து முடிவெடுங்கள்.

மோட்டார் கிளினிக்

நான் கிராமத்தில் வசிக்கிறேன். தினசரி நகரத்துக்கும் கிராமத்துக்கும் பயணிக்க, புதிதாக ஒரு பைக் வாங்கும் திட்டத்தில் இருக்கிறேன். ஹோண்டா யூனிகார்ன் எனக்குப் பிடித்திருந்தாலும், அதில்  இரண்டு மாடல்கள் (150சிசி, 160சிசி) இருக்கின்றன. அதில் எது எனக்குப் பொருத்தமாக இருக்கும்?

பாபு சரவணன், இமெயில்.

உங்கள் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, யூனிகார்ன் 150 பைக் சரியான தேர்வாக இருக்கும். இது யூனிகார்ன் 160 உடன் ஒப்பிடும்போது தோற்றம் மற்றும் வசதிகளில் பின்தங்கியிருந்தாலும், நல்ல ரீ-சேல் மதிப்பு - போதுமான பர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜ் - மனநிறைவைத் தரும் பராமரிப்புச் செலவுகள் - சிறப்பான இன்ஜின் மற்றும் கட்டுமானத் தரம் - சொகுசான சீட் மற்றும் சஸ்பென்ஷன் - குறைவான விலை என ஆல்ரவுண்டராக அசத்துகிறது. ஒருவேளை கொஞ்சம் அதிக பவர் மற்றும் குறைவான எடை கொண்ட பைக் வேண்டும் என்றால், யூனிகார்ன் 160 பைக்கைப் பரிசீலிக்கலாம்.

நான் கடந்த 5 ஆண்டுகளாக, ஹூண்டாய் அக்ஸென்ட் கார் பயன்படுத்தி வருகிறேன். தற்போது 5 - 6 லட்ச ரூபாய் பட்ஜெட்டில், யூஸ்டு கார் வாங்கலாம் என முடிவெடுத்திருக்கிறேன். எனக்கு மாருதி சுஸூகி சியாஸ் மற்றும் நிஸான் சன்னி ஆகிய கார்கள் பிடித்திருக்கின்றன. என்றாலும் அதில் எதை வாங்குவது என்பதிலும், பெட்ரோல் மாடலா அல்லது டீசல் மாடலா என்பதிலும் குழப்பமாக இருக்கிறது.

 - எம். சந்தோஷ், மதுரை.

காரில், உங்களுக்கு சொகுசான பின்பக்க இருக்கை தேவை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. மாருதி சுஸூகி சியாஸ் சரியான தேர்வாக இருக்கும். நிஸான் சன்னி நல்ல காராக இருந்தாலும், ரீ-சேல் மதிப்பு, சிறப்பம்சங்கள், டீலர் நெட்வொர்க், டிசைன் ஆகியவற்றில் பின்தங்கிவிடுகிறது. சன்னியுடன் ஒப்பிடும்போது சிறிய இன்ஜின்களையே கொண்டிருந்தாலும், சியாஸின் பர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜ் சிறப்பாகவே இருக்கிறது. மேலும் சன்னியின் பலவீனங்கள் அனைத்தும், சியாஸின் பலங்களாக இருப்பது ப்ளஸ். நீங்கள் மாதத்துக்கு 1,500 கி.மீ-க்கும் குறைவாக காரை ஓட்டுவீர்கள் என்றால் பெட்ரோல் கார்; மாதத்துக்கு 2,500 கி.மீ-க்கும் அதிகமாக காரைப் பயன்படுத்துவீர்கள் என்றால், டீசல் காரை தேர்வு செய்யுங்கள்.

மோட்டார் கிளினிக்

எனது வயது 65. நீண்ட நாட்களாக டூ-வீலரைப் பயன்படுத்தி வருவதால், கார் வாங்கலாம் என்ற யோசனையில் இருக்கிறேன். அது பாதுகாப்பானதாக இருப்பது அவசியம். எனக்கான தெளிவான பதிலை எதிர்பார்க்கிறேன்.

அன்புச்செல்வன், மதுரை.

நீங்கள் முதன்முறையாகக் கார் ஓட்டப் போகிறீர்கள் என்றால், யூஸ்டு கார் வாங்குவது நல்லது. 2 - 3 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும் 2010-ம் ஆண்டுக்குப் பிந்தைய மாருதி சுஸூகி வேகன்ஆர், உங்களுக்குப் பொருத்தமான காராக இருக்கும். இதன் பாக்ஸ் போன்ற தோற்றம், உயரமானவர்களும் வயதானவர்களும் காருக்குள்ளே செல்வதை எளிதாக்குகிறது. கறுப்பு நிற கேபின் டல்லாக இருந்தாலும், அது 4 பேருக்கான இடவசதியைக் கொண்டிருக்கிறது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், போதுமான பர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜைத் தருகிறது. மேலும், இது ஒரு மாருதி சுஸூகி கார் என்பதால், ரீ-சேல் மதிப்பு - டீலர் நெட்வொர்க் - பராமரிப்புச் செலவுகள் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை.

மோட்டார் கிளினிக்

எனது பட்ஜெட் பத்து லட்ச ரூபாய். காம்பேக்ட் செடான் அல்லது காம்பேக்ட் எஸ்யூவி வாங்க ஆசைப்படுகிறேன். நல்ல மைலேஜ், டச் ஸ்கிரீன் - சாட்டிலைட் நேவிகேசன் போன்ற லேட்டஸ்ட் வசதிகள், சொகுசான லெதர் சீட்கள் கொண்ட காரை எதிர்பார்க்கிறேன்.

சரவணன், கரூர்.

உங்கள் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, காம்பேக்ட் எஸ்யூவியில் டாடா நெக்ஸானும், காம்பேக்ட் செடானில் மாருதி சுஸூகி டிசையரும் நல்ல சாய்ஸ்களாக இருக்கின்றன. இரண்டிலுமே நீங்கள் குறிப்பிட்ட லெதர் சீட்கள் இல்லாவிட்டாலும், மற்றபடி சாட்டிலைட் நேவிகேஷன் உடனான டச் ஸ்கிரீன் சிஸ்டம் இருக்கின்றன. ஸ்டைலான கார் வேண்டுமென்றால் நெக்ஸானையும், பிராக்டிக்கலான கார் வேண்டுமென்றால், டிசையரையும் டிக் செய்யுங்கள். இரண்டு கார்களையும் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்துவிடுவது நலம்.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com