பிரீமியம் ஸ்டோரி

``தயிரிலிருந்து வெண்ணெயை அகற்றிய பின் கிடைக்கும் நீர்மப்பொருளாக இருந்தாலும்கூட, மோர் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற பானமே. குறிப்பாக, கோடைக்காலத்தில் மோர் தணிக்கும் தாகத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. குறைந்த கொழுப்புச்சத்தே கொண்ட மோரில் கால்சியம் சத்து நிறைந்து காணப்படுகிறது. கொஞ்சம் புரதமும் உண்டு.   

மோர் புராணம்!

மோரில் என்னவெல்லாம் செய்யலாம்... மோர்க்குழம்பு, தாளித்த மோர் தவிர? பிஸ்கட் செய்யலாம், கேக் தயாரிக்கலாம், டெஸர்ட்டாக்கி ருசிக்கலாம். ஏன், தோசை கூட வார்க்கலாம். மோரை விரும்பிப் பருகாதவர்கள்கூட, ரசித்து ருசித்துச் சாப்பிடும் வகையில் வித்தியாசமான பட்டர்மில்க் ரெசிப்பிகளை அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல்கலைஞர் மீனா சுதிர். ஆகவே, இந்தக் கோடையில் மோர் புராணம்தான்! 

மோர் புராணம்!

பட்டர்மில்க் பனகோட்டா

தேவையானவை:


மோர் – ஒரு கப்
ஃப்ரெஷ் க்ரீம்,
சர்க்கரை – தலா அரை கப்
அகர் அகர் – 2 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - சிறிதளவு

சாஸ் செய்ய:

ஆரஞ்சுச் சாறு – ஒரு கப்
ஆரஞ்சுச் சுளைகள் – 5
(தோல், கொட்டை நீக்கவும்)
சர்க்கரை – அரை கப்

அலங்கரிக்க:

ஸ்ட்ராபெர்ரி – சிறிதளவு  

மோர் புராணம்!

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் ஃப்ரெஷ் க்ரீமுடன் சர்க்கரை, அகர் அகர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும். அதனுடன் மோர் சேர்த்துக் கலக்கவும். பவுலில் லேசாக வெண்ணெய் தடவி மோர்க் கலவையை ஊற்றி ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து செட் செய்யவும். சாஸ் செய்யக் கொடுத்துள்ள ஆரஞ்சுச் சாற்றுடன் சர்க்கரை சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கொதிக்கவிட்டு சர்க்கரையைக் கரையவிடவும். அதனுடன் ஆரஞ்சுச் சுளைகள் சேர்த்துக் கிளறி இறக்கவும். செட்டான பனகோட்டாவை பவுலில் இருந்து வெளியே எடுத்து, தட்டுக்கு மாற்றவும். அதன்மீது ஆரஞ்சு சாஸ் ஊற்றி குளிரவைத்து ஸ்ட்ராபெர்ரி அலங்கரித்துப் பரிமாறவும்.

மோர் புராணம்!

பட்டர்மில்க் சாஃப்ட் பிஸ்கட்

தேவையானவை:


மோர் – ஒரு கப்
மைதா மாவு – 2 கப்
பேக்கிங் பவுடர், சர்க்கரை  – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
பேக்கிங் சோடா –  ஒரு டீஸ்பூன்
வெண்ணெய் – அரை கப் (சதுர துண்டுகளாக்கி ஃப்ரீசரில் வைக்கவும்)
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

அவனை ப்ரீஹீட் செய்யவும். மைதா மாவுடன் சர்க்கரை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து விரல்களால் நன்கு பிசிறவும். அதனுடன் வெண்ணெய் சேர்த்து பிரெட் கிரம்ப்ஸ் போல வரும் வரை நன்கு தேய்க்கவும். பிறகு மோர் சேர்த்துக் கலக்கவும். மாவை லேசாகத் தேய்த்து உள்ளங்கையில் வைத்து வட்ட வடிவமாகத் தட்டி பிஸ்கட் கட்டரால் வெட்டி எடுக்கவும். பேக்கிங் ட்ரேயில் பிஸ்கட்டுகளை அடுக்கி அவனுள் (oven) வைத்து 180 டிகிரி சென்டிகிரேடில் 12 நிமிடங்கள் வரை `பேக்’ செய்து பொன்னிறமாக எடுக்கவும். காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்துப் பயன்படுத்தவும்.

மோர் புராணம்!

மோர் கிரிஸ்பி கேப்சி ரிங்ஸ்

தேவையானவை:


குடமிளகாய் – ஒன்று (விதைகளை நீக்கி வட்ட வடிவமாக நறுக்கவும்)
மைதா மாவு – அரை கப்
கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – ஒரு டேபிள்ஸ்பூன்
பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் – ஒரு டீஸ்பூன்
பெரிபெரி மசாலா, பூண்டுப் பொடி – தலா ஒரு டீஸ்பூன்
மோர் – ஒரு கப்
நொறுக்கிய கார்ன்ஃப்ளேக்ஸ் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத்  தேவையான அளவு

செய்முறை:

மைதா மாவுடன் சோள மாவு, பேக்கிங் பவுடர், சில்லி ஃப்ளேக்ஸ், பூண்டுப் பொடி, பெரிபெரி மசாலா, உப்பு சேர்த்துக் கலக்கவும். குடமிளகாய் வளையங்களுடன் மைதா கலவை சேர்த்துப் புரட்டவும். பிறகு குடமிளகாய் வளையங்களை மோரில் முக்கி எடுத்து ஐந்து நிமிடங்கள் அப்படியே ஊறவிடவும். மீண்டும் இதே போல மைதா கலவையில் புரட்டி எடுத்து மோரில் முக்கி எடுத்து ஊறவிடவும். இறுதியாக அதன் மீது நொறுக்கிய கார்ன்ஃப்ளேக்ஸ் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு குடமிளகாய் வளையங்களைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுத்து உடனே பரிமாறவும்.

மோர் புராணம்!

பட்டர்மில்க் எக்லெஸ் கேக்

தேவையானவை:


கோதுமை மாவு – ஒன்றரை கப்
சர்க்கரை – முக்கால் கப்
பேக்கிங் சோடா – ஒரு டீஸ்பூன்
பட்டைத்தூள், ஜாதிக்காய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன்
மோர் – ஒரு கப்
சாக்கோ சிப்ஸ், டூட்டி ஃப்ரூட்டி – தலா கால் கப்
உருக்கிய வெண்ணெய் – அரை கப்
வெனிலா எசென்ஸ் – ஒரு டீஸ்பூன்
பொடித்த சர்க்கரை - சிறிதளவு

செய்முறை:

அவனை ப்ரீஹீட் செய்யவும். கோதுமை மாவுடன் சர்க்கரை, பேக்கிங் சோடா, பட்டைத்தூள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் மோருடன் வெண்ணெய், வெனிலா எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் சிறிது சிறிதாக கோதுமை கலவையைச் சேர்த்து மிருதுவாகக் கலக்கவும். பிறகு சாக்கோ சிப்ஸ், டூட்டி ஃப்ரூட்டி சேர்த்துக் கலக்கவும். இதை வெண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் ஊற்றி 200 டிகிரி சென்டிகிரேடில் 35 முதல் 40 நிமிடங்கள் வரை வைத்து `பேக்’ செய்யவும். டூத்பிக்கால் கேக் வெந்துவிட்டதா என உறுதிசெய்த பிறகு எடுக்கவும். ஆறியதும் மேலே பொடித்த சர்க்கரை தூவி, துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

மோர் புராணம்!

நெல்லி மோர்

தேவையானவை:


மோர் – ஒரு கப்
நெல்லிக்காய் – ஒன்று (கொட்டை நீக்கி துண்டுகளாக்கவும்)
தோல் சீவிய இஞ்சி – ஒரு இன்ச் துண்டு
பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை கலவை – கால் கப்
கறுப்பு உப்பு – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ஐஸ்கட்டிகள் – சிறிதளவு

செய்முறை:

நெல்லிக்காயுடன் புதினா, கொத்தமல்லித்தழை, இஞ்சி, உப்பு, கறுப்பு உப்பு சேர்த்து அரைக்கவும். அதனுடன் மோர், ஐஸ்கட்டிகள் சேர்த்து பிளெண்டர் அல்லது மிக்ஸியில் நுரை வர அடித்தெடுத்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி உடனே பரிமாறவும்.

மோர் புராணம்!

பட்டர்மில்க் - பனானா ஸ்டெம் ஐஸ் பாப்ஸ்

தேவையானவை:


தயிர் – அரை கப்
வாழைத்தண்டு – 10 இன்ச் துண்டு (தோல், நார் நீக்கி, சதுர துண்டுகளாக்கவும்)
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – ஒரு கப்
 
செய்முறை:

வாழைத்தண்டு துண்டுகளுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். பிறகு தயிர், பெருங்காயத்தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு, கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். இதை பாப்சிகல் மோல்டில் நிரப்பி, ஃப்ரீசரில் ஆறு மணி நேரம் வைத்து செட் செய்யவும். பிறகு வெளியே எடுத்து குழாய் நீரில் காட்டி பாப்சிகலை மோல்டில் இருந்து வெளியே எடுத்து ஜில்லெனப் பரிமாறவும்.

மோர் புராணம்!

அமிர்த பலம் (மோர்க்களி)

தேவையானவை:


அரிசி மாவு – ஒரு கப்
மோர் – இரண்டரை கப்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 2
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

மோருடன் பச்சை மிளகாய் விழுது, அரிசி மாவு, உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு கரைத்த மோர்க் கலவையைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறி வேகவிட்டு இறக்கவும். கலவையைத் தட்டில் பரப்பி சமப்படுத்தி விருப்பமான வடிவில் துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

மோர் புராணம்!

மோர் தோசை

தேவையானவை:

இட்லி அரிசி – ஒன்றரை கப்
கெட்டி அவல் –  முக்கால் கப்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
மோர் – ஒரு கப்
தேங்காய்த் துருவல் – ஒரு கப்
ஃப்ரூட் சால்ட் – அரை டீஸ்பூன்
வெல்லத்தூள் – 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

அரிசியுடன் அவல், வெந்தயம், மோர் சேர்த்து நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு, உப்பு சேர்த்து இட்லி மாவுப் பதத்துக்குக் கரைக்கவும். மாவை இரண்டு பாகங்களாகப் பிரிக்கவும். ஒரு பாகத்துடன் மஞ்சள்தூள், வெல்லத்தூள் சேர்த்துக் கலக்கவும். மாவை ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். பிறகு மாவு வகைகளுடன் ஃப்ரூட் சால்ட் சேர்த்துக் கரைத்துப் பத்து நிமிடங்கள் ஊறவிடவும். தோசைக்கல்லைச் சூடாக்கி மாவை ஊற்றி, தேய்க்காமல் சுற்றிலும் வெண்ணெய்விட்டு மூடி வேகவிட்டு எடுக்கவும் (திருப்பி போடக் கூடாது). தேங்காய் சட்னியுடன் பரிமாறவும். இதேபோல இனிப்பு கலந்த மாவையும் தோசைகளாக வார்த்து எடுத்துப் பரிமாறவும்.

மோர் புராணம்!

பட்டர்மில்க் - பப்பாயா ஸ்மூத்தி

தேவையானவை:


மோர் – 2 கப்
பப்பாளிப்பழத் துண்டுகள் – ஒரு கப்
ஸ்ட்ராபெர்ரி – 6
வறுத்த ஓட்ஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்
பாதாம் – 6
தேன் – 2 டீஸ்பூன்
ஐஸ் கட்டிகள் – சிறிதளவு

அலங்கரிக்க:

ஸ்ட்ராபெர்ரி – சிறிதளவு

செய்முறை:


கொடுக்கப்பட்டுள்ள  பொருள்களை ஒன்றாகச் சேர்த்து பிளெண்டர் அல்லது  மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். இதைக் குளிரவைத்து ஸ்ட்ராபெர்ரி அலங்கரித்துப் பரிமாறவும்.

மோர் புராணம்!

மஜ்ஜிக சாறு

தேவையானவை:


புளித்த மோர் - 3 கப்
தேங்காய் – ஒரு மூடி (துருவவும்)
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
கடுகு – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

தேங்காய்த் துருவலுடன் வெந்தயம், பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும். புளித்த மோருடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து மோருடன் கலக்கவும் (இதைக் கொதிக்கவைக்கக் கூடாது). சூடான சாதத்துடன் பரிமாறவும். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு