Published:Updated:

`மக்கள் கேட்டலாக்குகளை படிப்பதே இல்லை!' - இலக்கிய நோபல் அட்ராசிட்டி #IgNobelPrize

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`மக்கள் கேட்டலாக்குகளை படிப்பதே இல்லை!' - இலக்கிய நோபல் அட்ராசிட்டி #IgNobelPrize
`மக்கள் கேட்டலாக்குகளை படிப்பதே இல்லை!' - இலக்கிய நோபல் அட்ராசிட்டி #IgNobelPrize

காமெடி, கலாய் என செம ரகளையாக ஒரு நோபல் பரிசு விழா ஆண்டுதோறும் நடந்துகொண்டிருக்கிறது. அதன்பெயர் Ig நோபல் பரிசு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விஞ்ஞானிகள் என்றாலே சாமானியர்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களை, ஆய்வுக் கூடத்திலிருந்து அகழாமல், இறுக்கமான முகத்துடன் ஆராயும் விஞ்ஞானிகள்தாம் ஞாபகத்தில் வருகிறார்களா. இந்தப் பிம்பத்தை அப்படியே புரட்டிப் போடுகிறது Ig நோபல் பரிசு. Improbable Research என்ற அமைப்பும், ஆனல் பப்ளிகேஷன் நிறுவனமும் இணைந்து நடத்தும் Ig நோபல் பரிசு ,`மக்களைச் சிந்திக்க வைக்கும், சிரிக்கவைக்கும் கண்டுபிடிப்புகளுக்கான' அங்கீகாரத்தை வழங்குகிறது.

இவர்கள் தேர்ந்தெடுக்கும் கண்டுபிடிப்புகள்தாம் விநோதமானவை என்று நினைத்தால் அதைவிட விநோதமானது Ig நோபல் பரிசளிப்பு விழா. பரிசு பெறுபவர்கள் தங்கள் சொந்தச் செலவில்தான் விழா நடக்கும் இடத்துக்கு வரவேண்டும். விழா தொடங்கும் முன் பேப்பர்  ராக்கெட்டுகள் பறக்கவிடப்படும். வரவேற்புரை ஆற்றும் அறிஞர் ``வெல்கம், வெல்கம்" என்ற இரண்டு வார்த்தைக்கு மேல் எதுவும் பேச மாட்டார். பரிசைப் பெற்ற அறிஞர் 60 நொடிக்குள் தான் சொல்ல வந்த கருத்தைச் சொல்லி உரையை முடித்துக் கொள்ளாவிட்டால் Ms.sweety poo என்னும் 8 வயதுச் சிறுமி பேச்சாளர்களின் அருகில் சென்று ``please stop, i am bored" எனக் கத்த தொடங்குவார்; அதன் பின்பும் ஏற்புரை தொடர்ந்ததாக வரலாறு இல்லை. வெற்றியாளர்களுக்கு மதிப்பிழந்த ஒரு ட்ரில்லியன் ஜிம்பாவே டாலர் (2,025,976,609,126.80 ரூபாய்) ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இப்படியாக விழா முடியும் வரை அறிவியலும் சிரிப்பும் அரங்கத்தை நிரப்புகிறது. இந்த ஆண்டுக்காக விழா கடந்த செப்டம்பர் மாதமே நடந்துமுடிந்துவிட்டது. இனி அடுத்த ஆண்டுதான். இந்த வருடம் இவர்கள் விருது அளித்த கண்டுபிடிப்புகளை மட்டும் பாருங்களேன். செம ரகளையாக இருக்கிறது. 

மருத்துவம் :

Marc Mitchell and David Wartinger 

ஆய்வுத் தலைப்பு: தீம் பார்க்குகளில் இருக்கும் ரோலர் கோஸ்டரில் பயணிப்பது சிறுநீரகக் கல்லை வெளியேற்ற உந்துதலாக இருக்கிறது.

புளோரிடாவின் ஒர்லேண்டோ மாகாணத்தின் வால்ட் டிஸ்னி பூங்காவில் இருக்கும் big thunder mountain rail road-ல் சவாரி செய்த ஒருவர் தன்னுடைய சிறுநீரகக் கல் வெளியேறியதை உறுதி செய்யவே மிச்சிகன் ஸ்டேட் பல்கலைக்கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டது. அதன்படி ரோலர் கோஸ்டரின் கடைசி சீட்டில் சவாரி செய்வது சிறுநீரகக் கற்களை வெளியேற்ற உந்துதலாக இருப்பது கண்டறியப்பட்டது. 

மானுடவியல்:

Tomas Persson, Gabriela-Alina Sauciuc, and Elainie Madsen 

ஆய்வு: வனவிலங்குப் பூங்காவில் சிம்பன்சிகள் பார்வையிட  வரும் மனிதர்களின் செயல்களை சிம்பன்சிகள் இமிடேட் செய்வதைப் போல மனிதர்களும் சிம்பன்சிகளின் செயல்களை இமிடேட் செய்வதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

ஸ்வீடன் நாட்டின், Furuvik வனவிலங்குப் பூங்காவில் நடைபெற்ற ஆய்வில் 1579 தடவை சிம்பன்சிகள் மனிதர்களை காப்பி செய்ததாகவும், 2211 தடவை மனிதர்கள் சிம்பன்சிகளை காப்பி செய்ததாகவும் கண்டறியப்பட்டது (பாவத்த!). இந்தச் செயல்பாடு உயர் விலங்கு (primates) இனத்தைச் சேர்ந்த மனிதர்களும், சிம்பன்சிகளும் தகவலைப் பரிமாறிக்கொள்ள அல்லது கற்றுக்கொள்ள பரிணாம வளர்ச்சியால் உருவாக்கப்பட்டது எனக் கண்டறியப்பட்டது.

ஊட்டச்சத்து துறை:

James Cole

ஆய்வு: விலங்கு இறைச்சியில் இருக்கும் ஊட்டச்சத்தைவிட மனித மாமிசத்தில் இருக்கும் கலோரிகள் குறைவு.

Paleolithic காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் தன் இன உண்ணிகளாக வாழ்ந்தது தொல்லியல் ஆய்வில் கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில் செய்யப்பட்ட ஆய்வில் வன விலங்குகளின் மாமிசத்தில் இருக்கும் கலோரிகளை விட மிகக் குறைவான அளவில்தான் மனித மாமிசத்தில் கலோரிகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஆகையால் paleolithic காலத்தில் வாழ்ந்த மனிதர்கள், தங்கள் எதிரிகளைக் கொன்று வெற்றியின் அடையாளமாக மாமிசத்தை உண்றிருக்கலாம் அல்லது பஞ்சத்தால் தன் இன உண்ணிகளாக வாழ்ந்திருக்கலாம், மற்றபடி போஷாக்கான உணவுப் பட்டியலில் மனித மாமிசத்துக்கு இடமில்லை என நிறுவப்பட்டது.

மருத்துவக் கல்வி:

Akira Horiuchi

ஆய்வு: நோயாளியை நாற்காலியில் உட்கார வைத்து கொலனோஸ்கோபி செய்வது அல்லது நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு சுயமாக கொலனோஸ்கோபி செய்வது வலியைக் குறைப்பதுடன் எளிமையான செயல்முறையையும் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டது .

வேதியியல் :

Paula Romão, Adília Alarcão, and the late César Viana 

ஆய்வு: அசுத்தமான இடங்களைச் சுத்தம் செய்ய மனித உமிழ்நீர் சிறந்தது. (பார்றா...!)

புழக்கத்தில் இருக்கும் துடைக்கப் பயன்படுத்தும் ரசாயனங்களை விட மனித உமிழ்நீர் சிறந்த துடைக்கும் ரசாயனம் எனக் கண்டறியப்பட்டது. உமிழ்நீரில் இருக்கும் Beta amylase கிருமிகளைக் கொள்வதுடன் வழுவழுப்பான தரையைச் சுத்தம் செய்யச் சிறந்தது எனக் கண்டறியப்பட்டது.

இலக்கியம்:

Thea Blackler, Rafael Gomez, Vesna Popovic, and M. Helen Thompson 

ஆய்வு: எலக்ட்ரானிக் உபகரணங்களை வாங்கும் மக்கள் அதனுடன் கொடுக்கப்படும் கையேடுகளைப் (Catalogue) படிப்பதேயில்லை.

இந்த ஆய்வுப்படி உயர்கல்வி பெற்றவர்களை விடப் பெறாதவர்கள் கையேடுகளை முழுமையாகப் படிப்பதாகவும். ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் கையேடுகளைப் படிப்பதைத் தவிர்ப்பதாகவும், ஓர் உபகரணத்தில் இருக்கும் பாதிச் செயல்பாடுகளைத்தான் பயனாளர்கள் பயன்படுத்துவதாகவும், இளைஞர்களைவிட வயதானவர்கள்தாம் அதிகம் கையேடுகளைப் படிப்பதாகவும் கண்டறியப்பட்டது. (ஸ்ஸ்ஸ்...!)

பொருளாதாரம் :

Lindie Hanyu Liang, Douglas Brown, Huiwen Lian, Samuel Hanig, D. Lance Ferris, and Lisa Keeping 

ஆய்வு: வேலைச் சூழலில் ஏற்படும் மனச்சோர்வைத் தடுக்க எரிச்சலூட்டும் உயரதிகாரியைக் கற்பனை செய்துகொண்டு voodoo பொம்மைகளைத் திட்டுவதும் அடிப்பதும் குறிப்பிடத்தகுந்த மனமாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டது.

அமைதிக்கான நோபல் பரிசு:

Francisco Alonso, Cristina Esteban, Andrea Serge, Maria-Luisa Ballestar, Jaime Sanmartín, Constanza Calatayud, and Beatriz Alamar 

ஆய்வு: வாகனத்தை இயக்கும்போது கடுஞ்சொற்கள் பயன்படுத்தித் திட்டுவதும் மற்றொரு ஓட்டுநரை நோக்கிக் கத்துவதும் ஆபத்தானது. (இதான் எல்லாருக்கும் தெரியுமே?!)

ஸ்பெயின் நாட்டின் நடத்தப்பட்ட ஆய்வில் குடித்துவிட்டு போதையில் வண்டி ஓட்டுவதை விடவும் கோபத்தில் எதிரில் வரும் ஓட்டுநரைத் திட்டுவதும், கத்துவதும் அதிக அளவு சாலை விபத்துக்குக் காரணியாக இருப்பது கண்டறியப்பட்டது.

உயிரியல் துறை:

Paul Becher, Sebastien Lebreton, Erika Wallin, Erik Hedenstrom, Felipe Borrero-Echeverry, Marie Bengtsson, Volker Jorger, and Peter Witzgall

ஆய்வு: பழப்பூச்சியின் வாசனை 

ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வில் 8 ஒயின் தர கட்டுப்பாட்டு நிபுணர்கள் கலந்துகொண்டனர். அவர்களிடம் கொடுக்கப்பட்ட ஒயின் மாதிரிகளின் சிலவற்றில் பெண் பழப்பூச்சி சேர்க்கப்பட்டிருந்தது. சாதாரண ஒயினையும் பழப்பூச்சி இருந்த ஒயினையும் நிபுணர்கள் எளிதாக வேறுபடுத்தினர். அதற்குக் காரணம் பெண் பழப்பூச்சியின் pheromone (இணையை ஈர்க்க வெளிப்படும் திரவம்) எனக் கண்டறியப்பட்டது. இந்தக் குறிப்பிட்ட pheromone-க்கான உணர்திறன் மனிதர்களிடம் இருப்பதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.

இனப்பெருக்க அறிவியல் துறை:

John Barry, Bruce Blank, and Michel Boileau 

ஆய்வு: Nocturnal penile tumescence குறைபாட்டை, அஞ்சல் தலையைப் பயன்படுத்திக் கண்டுபிடிக்கும் முறை.

ஆண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் விறைத்தல் குறைபாட்டை கண்டறிய, ஏற்கெனவே இருக்கும் பரிசோதனை முறைகள் நோயாளிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதோடு அதிகச் செலவும் ஆனது. இவற்றைத் தவிர்க்க இவ்வாய்வு பெரிதும் உதவியது. ஒரு அஞ்சல் தலை சரத்தை வைத்து ஆண்களின் விறைப்புத் தன்மையைச் சோதிக்கும் முறை இது. கொஞ்சம் 'A' ரகம்.

இப்படி ஒவ்வோர் ஆண்டும் வித்தியாசமான, அநாயசமான கற்பனை கொண்ட கண்டுபிடிப்புகளுக்குப் பரிசளித்துவருகிறது இந்தக் குழு. எதற்காம், மக்களைச் சிரிக்கவைப்பதுடன், அறிவியல் மீதான ஆர்வத்தையும் தூண்டுவதற்காகவாம். சரிதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு