Published:Updated:

நெட்ஃபிளிக்ஸ் முதல் ஹாட்ஸ்டார் வரை... எந்த ஸ்ட்ரீமிங் சேவை பெஸ்ட்?

நெட்ஃபிளிக்ஸ் முதல் ஹாட்ஸ்டார் வரை... எந்த ஸ்ட்ரீமிங் சேவை பெஸ்ட்?

இந்தியாவில் இப்போது இருக்கும் ஸ்ட்ரீமிங் தளங்களில் எது சிறந்தது? - முழு அலசல்

நெட்ஃபிளிக்ஸ் முதல் ஹாட்ஸ்டார் வரை... எந்த ஸ்ட்ரீமிங் சேவை பெஸ்ட்?

இந்தியாவில் இப்போது இருக்கும் ஸ்ட்ரீமிங் தளங்களில் எது சிறந்தது? - முழு அலசல்

Published:Updated:
நெட்ஃபிளிக்ஸ் முதல் ஹாட்ஸ்டார் வரை... எந்த ஸ்ட்ரீமிங் சேவை பெஸ்ட்?

ட்டிதொட்டி வரை இன்டர்நெட் கிடைக்கும் அளவு கடந்த சில வருடங்களில் நடந்த தொழில்நுட்ப வளர்ச்சி யாருக்கு நன்மையோ இல்லையோ, பல ஸ்ட்ரீமிங் தளங்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது. பெரும் மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா போன்ற ஒரு நாட்டில் மாபெரும் சந்தையாக உருமாறிவருகிறது இந்த வீடியோ ஸ்ட்ரீமிங் சேவை. முதலில் வெறும் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு போன்றவற்றை மட்டும் வைத்து ஆரம்பிக்கப்பட்ட இவை இன்று அதற்கென்றே சிறப்பு நிகழ்ச்சிகள் தயாரிக்கும் அளவு வளர்ந்துள்ளன. ஏற்கெனவே ஏகப்பட்ட தளங்கள் இந்தியாவில் செயல்பட்டுவரும் இந்நேரத்தில் ஆப்பிள், டிஸ்னி போன்ற முன்னணி நிறுவனங்களும் விரைவில் இந்தச் சந்தையில் கால்பதிக்கவுள்ளன. தற்போது இந்தியாவில் இருக்கும் முக்கிய ஸ்ட்ரீமிங் தளங்களின் நிறைகுறைகள் என்னவென்று பார்ப்போம்.

அமேசான் ப்ரைம் வீடியோ 

ஒரு மாதத்துக்கு 129 ரூபாயிலும், ஒரு வருடத்துக்கு 999 ரூபாயிலும் கிடைக்கிறது ப்ரைம் வீடியோ சப்ஸ்கிரிப்ஷன். ஸ்ட்ரீமிங் தரத்திலும், பலதரப்பட்ட நிகழ்ச்சிகளிலும் தான் யார் என்பதை நிரூபிக்கிறது அமேசான். இந்திய மக்களுக்கென்றே சிறப்பு நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்குகிறது ப்ரைம் வீடியோ. ஆங்கிலப் படங்கள், சீரிஸ்கள் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி என உள்ளூர் படங்களின் ஸ்ட்ரீமிங் உரிமம் பெறுவதிலும் கவனமாக இருப்பதால், இந்தியாவின் தவிர்க்க முடியாத ஒரு ஸ்ட்ரீமிங் தளமாகவே ப்ரைம் வீடியோ மாறிவருகிறது. நமது இந்தியக் குடும்பங்கள் அன்றாடம் பார்க்கும் டிவி சீரியல்கள் போன்ற வடிவத்தில் நிகழ்ச்சிகள் பெரிதாக இல்லாததால் இந்திய தாய்மார்களை இது அந்த அளவு ஈர்க்காது. சமீபத்தில் அமேசான் ஒரிஜினல்ஸாக வெளியிடப்பட்ட `Breathe', `Inside Edge' போன்ற இந்திய சீரிஸ்களுடன் தற்போது `Mirzapur' என்ற சீரிஸும் சேரவுள்ளது. 4K டிவிகளில் Ultra HD-யில் இதன் நிகழ்ச்சிகளைப் பார்க்கமுடியும். இதுதவிர அமேசான் மியூசிக் மற்றும் அமேசான் ப்ரைம் டெலிவரி சேவையும் கிடைப்பதால் கொடுக்கும் பணத்துக்கு நல்ல பலனைத் தரும் ஒன்றாகவே இருக்கிறது அமேசான் ப்ரைம் வீடியோ. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ப்ளஸ்

ஸ்ட்ரீமிங் தரம், குறைந்த டேட்டாவிலேயே நல்ல தரமான வீடியோக்கள் பார்க்கலாம்.

பலதரப்பட்ட சர்வதேச மற்றும் இந்திய நிகழ்ச்சிகள்.

கூடுதலாகக் கிடைக்கும் அமேசான் மியூசிக் மற்றும் அமேசான் ப்ரைம் டெலிவரி. (அனைத்தும் மாதம் 129 ரூபாய்க்கு)

மைனஸ் 

இளைஞர்களை எளிதாகக் கவர்ந்தாலும் இந்தியா நடுத்தரக் குடும்பங்களிடம் சென்று சேர பெரிதாக நிகழ்ச்சிகள் இல்லை.

லைவ் டிவி மற்றும் ஸ்போர்ட்ஸ் எதுவும் இல்லை.

ஹாட்ஸ்டார் 

2015-ல் ஸ்டார் இந்தியா நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஹாட்ஸ்டார் முதலில் ஸ்டார் நிறுவனத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஆன்லைனில் எடுத்துச்செல்ல ஆரம்பிக்கப்பட்டது. டிவி சீரியல்கள், நிகழ்ச்சிகள் பார்ப்பவர்களிடம் மட்டும் பிரபலமாக இருந்த ஹாட்ஸ்டாரை இளைஞர்களிடமும் எடுத்துச் சென்றது ஐபிஎல்-தான். சோனியிடம் ஒளிபரப்பு உரிமம் இருந்த போதிலும் ஸ்ட்ரீமிங் உரிமத்தை மட்டும் வாங்கியது ஹாட்ஸ்டார். இன்று வரை ஹாட்ஸ்டாரின் முக்கிய அங்கமாக கிரிக்கெட் இருந்து வருகிறது. மேலும் முக்கிய ஹாலிவுட் படங்கள், பிறமொழி படங்கள் பலவும் இதில் இருக்கின்றன. HBO-வின் முக்கிய தொடர்கள் அனைத்தும் ஹாட்ஸ்டார் கைவசம். பிரபல `Game Of Thrones' அதில் ஒன்று. இது தவிர தமிழில் `As I am suffering from kadhal' போன்று மற்ற மொழிகளிலும் பல தயாரிப்புகளை `ஹாட்ஸ்டார் ஒரிஜினல்ஸ்' என ஹாட்ஸ்டாரில் மட்டும் வெளியிடப்படுகிறது. ப்ரீமியம் சந்தா மாதம் 199 ரூபாய்க்கும், வருடம் 999 ரூபாய்க்கும் கிடைக்கின்றது. ஸ்போர்ட்ஸுக்கென்றே சிறப்பு சந்தாக்களும் உண்டு. ஆனால் ப்ரீமியம் இல்லாமலும் பல நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை விளம்பரங்களுடன் பார்க்கமுடியும் என்பது இதன் மற்றுமொரு சிறப்பு. ஸ்ட்ரீமிங் தரம் மட்டும் நெட்ஃப்ளிக்ஸ், ப்ரைம் வீடியோவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் கொஞ்சம் சுமார்தான். அதில் மட்டும் இன்னும் முன்னேற்றங்கள் வேண்டும்.

ப்ளஸ்

டிவி நிகழ்ச்சிகள், லைவ் ஸ்போர்ட்ஸ்.

அதிகமான இந்திய நிகழ்ச்சிகள் மற்றும் படங்கள்.

இலவச நிகழ்ச்சிகள் மற்றும் படங்கள்.

மைனஸ் 

சுமார் ஸ்ட்ரீமிங் தரம். 

விலை சற்று அதிகம்தான்.

நெட்ஃப்ளிக்ஸ்

உலக அரங்கில் ஸ்ட்ரீமிங் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது நெட்ஃப்ளிக்ஸ்தான். விளம்பரமில்லாத ப்ரீமியம் சேவையான இது சமீபத்தில்தான் இந்தியாவுக்கு வந்தது. முதலில் முக்கிய அமெரிக்க நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை நம்பிக் களமிறங்கிய இது, தற்போது இந்திய மக்களுக்கேற்ப தங்களது நிகழ்ச்சிகளை மாற்றியமைக்கும் பணியில் இருக்கிறது. `Sacred Games' போன்ற இந்திய தொடர்களை தயாரிக்க ஆரம்பித்தது இதன் தொடக்கம். இருப்பினும் உள்ளூர் மொழிகளில் இன்னும் பலவற்றைச் சேர்த்தால்தான் எல்லாருக்குமானதாகும் நெட்ஃப்ளிக்ஸ். இதன் விலையும் மிகவும் அதிகம். ஒரு நபருக்கு மாதம் 500 ரூபாய் வசூலிக்கும் இது, 4 பேர் ஷேர் செய்யும் கணக்குக்கு 800 ரூபாய் வசூலிக்கிறது. இதனால் இந்தியாவில் எலைட் மக்களுக்கான ஸ்ட்ரீமிங் சேவையாகவேதான் இருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். மேலும் ப்ரைம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் மட்டும்தான் கார்ட்டூன், அனிமேஷன் படங்கள் மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் கொண்ட தனி தளம் ஒன்றைத் தருகின்றன.

ப்ளஸ் 

தரமான சர்வேதச நிகழ்ச்சிகள் மற்றும் ஆவணத் தொடர்கள்.

ஸ்ட்ரீமிங் தரம்.

குழந்தைகளுக்கென்றே தனி மோடு.

மைனஸ் 

அதிக விலை.

போதிய இந்திய நிகழ்ச்சிகள் மற்றும் தமிழ்ப் படங்கள் இல்லாதது.

சன் நெக்ஸ்ட் 

அன்று முதல் இன்று வரை சன் குழுமத் தொலைக்காட்சிகளில் நாம் பார்த்து ரசித்த படங்கள் அனைத்தையும் தற்போது ஆன்லைனில் பார்க்க ஒரே இடம் சன் நெக்ஸ்ட்தான். லைவ் டிவி மற்றும் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் எனத் தமிழ்க் குடும்பங்களுக்கான முழு ஸ்ட்ரீமிங் தளமாக இருக்கிறது சன் நெக்ஸ்ட். எந்தத் தளத்திலும் இல்லாத அளவு தமிழ்ப் படங்கள் இதில் கொட்டிக்கிடக்கின்றன. ஆனாலும் இதை எல்லாம் கெடுக்கும் விதமாக இருக்கிறது இதன் இணையதளம் மற்றும் மொபைல் ஆப். ஒரு படத்தைத் தேடுவது தொடங்கி, முன் பின் வருவதில் கூட எதாவது பிரச்னை இருந்து கொண்டே இருக்கிறது. ஸ்ட்ரீமிங் தரமும், வசதிகளும் கூட மற்ற தளங்கள் அளவுக்கு இல்லை. டிசைனிங்கிளும் ஒரு சர்வதேச தரம் இல்லை. இதை மாற்றியமைத்தால் சன் நெக்ஸ்ட் மிகச்சிறந்த ஒரு ஸ்ட்ரீமிங் சேவையாக இருக்கும். விலையும் மாதம் 50 ரூபாய்தான் என்பதால் குறைகளைத் தற்போதைக்குப் பொறுத்துக்கொள்ளலாம். சில இலவச நிகழ்ச்சிகளும் இதில் உண்டு.

ப்ளஸ்

எக்கச்சக்க தமிழ்ப் படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள்.

குறைவான விலை.

மைனஸ்

சொதப்பலான ஆப் மற்றும் இணையதளம்.

சுமாரான ஸ்ட்ரீமிங் தரம்.

Zee5

சன் குழுமத்துக்கு சன் நெக்ஸ்ட் போல ஜீ (Zee) குழுமத்துக்கு ஜீ5 (Zee5). 2 மாதங்களுக்கு 99 ரூபாய் வசூலிக்கும் ஜீ5 லைவ் டிவி மற்றும் டிவி நிகழ்ச்சிகளுடன் ஜீ5 ஒரிஜினல்ஸ் என்று இந்த சேவைக்கென்றே சில புதுமையான நிகழ்ச்சிகளும் தயாரித்து வெளியிடுகிறது ஜீ நிறுவனம். சன் அளவுக்கு இல்லையென்றாலும் சமீபத்தில் வந்த தமிழ்ப் படங்களும் ஓரளவு இதில் இருக்கிறது. இலவசமாகவும் பல நிகழ்ச்சிகளைப் பார்க்கமுடியும். ஆப் மற்றும் இணையதளமும் நன்றாகச் செயல்படுகிறது.

ப்ளஸ் 

நல்ல ஸ்ட்ரீமிங் தரம்.

சிறப்பான ஆப் மற்றும் இணையதளம்.

சிறப்பு நிகழ்ச்சிகள்.

மைனஸ்

நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம் போல பெரிதாகக் கவர்ந்திழுக்க எதுவும் இல்லை.

வியூ (Viu)

முதலில் கொரியன் சீரிஸ்களை நம்பி ஆரம்பிக்கப்பட்ட இதில், இப்போது தமிழ் வெப் சீரிஸ்களும் இருக்கின்றன. விரல்விட்டு எண்ணும் அளவிலேயேதான் தமிழ்ப் படங்கள் இருக்கின்றன. இந்தி, கொரியன் பிரியர்களை வென்றுமானால் வியூ கவரலாம். தமிழில் `நிலா நிலா ஓடி வா', `மெட்ராஸ் மேன்ஷன்' போன்ற நிகழ்ச்சிகள் இருந்தாலும் இன்னும் முயற்சிகள் வேண்டும். சன் டிவியுடன் இணைந்து சில நிகழ்ச்சிகள் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. எனவே தொடக்க கட்டத்தில் இருக்கும் இது எப்படி வெளிவருகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். விலை இரண்டு மாதங்களுக்கு 99 ரூபாய். இருப்பினும் முக்கிய கொரியன் மற்றும் இந்தி நிகழ்ச்சிகளைத் தவிர்த்து மற்றவற்றை இலவசமாகவே பார்த்துவிடலாம்.  

ப்ளஸ் 

ஸ்ட்ரீமிங் தரம் மற்றும் நல்ல இணையதளம்.

முக்கிய கொரியன் சீரிஸ்கள் அனைத்தும் இவர்கள் வசம்.

இலவச தமிழ் சீரிஸ்கள்.

மைனஸ் 

போதிய பிரபல தமிழ் நிகழ்ச்சிகள் இல்லாதது.

Sony LIV 

அனைத்து டிவி சார்ந்த ஸ்ட்ரீமிங் தளங்களிலும் சுமாரானது சோனி நிறுவனத்தின் தளமான Sony LIV-தான். லைவ் கிரிக்கெட் இருந்தாலும் ஹாட்ஸ்டார் போன்ற வசதிகள் இல்லை. தமிழிலும் பெரிதாக எந்த நிகழ்ச்சிகளும் கிடையாது. இந்தியாவின் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் இந்தித் தொடர்கள் பார்க்க மட்டுமே இது உதவும். மாதம் 99 ரூபாய்க்கு சோனி லிவ் சேவை கிடைக்கும்.

ப்ளஸ் 

இந்தியாவின் வெளிநாட்டு கிரிக்கெட் போட்டிகள் மற்றும் மற்ற விளையாட்டுப் போட்டிகள்.

மைனஸ் 

மோசமான ஸ்ட்ரீமிங் தரம் மற்றும் இணையதளம்.

அதிக விலை.

மேலும் கலர்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வூட் என்ற ஸ்ட்ரீமிங் சேவை உண்டு. மற்ற டிவி சார்ந்த ஸ்ட்ரீமிங் தளங்களுக்கும் இதற்கும் ஒரே வித்தியாசம்தான். இதற்குப் பணம் எதுவும் கட்டவேண்டியதில்லை. அதனால் ப்ளஸ், மைனஸ் எல்லாம் பார்க்க வேண்டியதில்லை. எல்லாம் நலம். விளம்பரங்கள் மட்டும் நடுவில் வரும், அதைப் பொறுத்துக்கொள்ளலாம். மேலும் தொலைத்தொடர்பு சேவைகளான ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஆகிய நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஸ்ட்ரீமிங் சேவைகளை வழங்குகின்றன. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism