Published:Updated:

மார்கழி இசைத் திருவிழாவிலிருந்து 7 பேர் நீக்கம்... பின்னணி என்ன? #MeToo

``அகாடமி சார்ந்த சில முக்கியப் பிரமுகர்களுடன் பேசிய பிறகே இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்த 7 பேரில் `சங்கீத கலாநிதி' விருது பெற்ற சித்ரவீணா ரவிகிரணும் ஒருவர்.’’

மார்கழி இசைத் திருவிழாவிலிருந்து 7 பேர் நீக்கம்... பின்னணி என்ன? #MeToo
மார்கழி இசைத் திருவிழாவிலிருந்து 7 பேர் நீக்கம்... பின்னணி என்ன? #MeToo

சினிமா, பத்திரிகை துறைகளில் எழுந்துவந்த #MeToo குற்றச்சாட்டுகள், இப்போது கர்னாடக இசைத் துறையிலும் எழுந்துள்ளன. கடந்த சில வாரங்களாக முன்னணி கர்னாடக இசைக் கலைஞர்கள் சிலர் மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் நடக்கவிருக்கும் மார்கழி இசைக் கச்சேரியில் கலந்துகொள்ள இருந்தவர்களில் சிலரின் பெயரை நீக்கியுள்ளது சென்னை மியூசிக் அகாடமி.

மியூசிக் அகாடமியின் மார்கழி மாத இசைத் திருவிழா, இந்தியாவின் மிகப்பெரிய இசைத் திருவிழாவாகப் பார்க்கப்படுகிறது. கர்னாடக இசையும் பரதநாட்டியமும் இதில் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறும். உலகெங்கிலும் இதற்கு ரசிகர்கள் உண்டு. யுனெஸ்கோவின் `கலைவளம்மிக்க நகரங்கள்' பட்டியலில் சென்னையையும் இணைத்ததில், இந்த விழாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. இந்த ஆண்டு நடக்கவிருக்கும் இசைத் திருவிழாவிலிருந்து என்.ரவிகிரண், ஓ.எஸ்.தியாகராஜன், மன்னார்குடி ஏ.ஈஸ்வரன், ஶ்ரீமுஷ்ணம் வி.ராஜா ராவ், நாகை ஶ்ரீராம், ஆர்.ரமேஷ், திருவாரூர் வைத்தியநாதன் என முன்னணி இசைக்கலைஞர்கள் 7 பேரை நீக்கியுள்ளது சென்னை மியூசிக் அகாடமி.

இதுகுறித்து அதன் தலைவர் என்.முரளி ஓர் ஆங்கில இணையதளம் ஒன்றிற்கு பேசும்போது... ``இசைக் கலைஞர்கள் மீது வெளிவந்த பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், #MeToo இயக்கத்தின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. இவர்களில் சிலர் மீது, முழு விவரம் அடங்கிய புகார் உள்ளது. அதை வைத்து, அகாடமி சார்ந்த சில முக்கியப் பிரமுகர்களுடன் பேசிய பிறகே இந்த  முடிவை எடுத்துள்ளோம். இந்த 7 பேரில் `சங்கீத கலாநிதி' விருது பெற்ற சித்ரவீணா ரவிகிரணும்  ஒருவர்.

வலைதளம் ஒன்றில் ஓ.எஸ்.தியாகராஜன் மீதும் புகார் வந்ததாக செய்தி கிடைத்துள்ளது. அகாடமி என்ற முறையில், இதற்கு நாங்கள் ஏதேனும் ஒரு முடிவை எடுத்தாக வேண்டும். சுற்றி நடப்பதைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. இவர்கள் குற்றம் செய்தார்கள் என்று சொல்லவில்லை. ஆனால், யாரை பாடவைக்க வேண்டும் என்று முடிவுசெய்யும் உரிமை அகாடமிக்கு உண்டு" என்றார்.  

பிரபல நடனக் கலைஞரும் நடிகையுமான சொர்ணமால்யா கணேஷ், கலைத் துறையில் குறை தீர்க்கும் அமைப்பு ஒன்றை நிறுவுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியுள்ளார். "கலைத் துறையில் இருக்கும் தனியார் நடனப் பள்ளிகள், சபாக்கள், நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், அமைச்சகங்கள், கலைஞர்கள், பல்கலைக்கழகங்கள் என அனைத்து இடங்களிலும் எப்பேர்ப்பட்ட பிரபலங்களாக இருந்தாலும் நாம் கேள்வி கேட்க வேண்டும். உங்கள் பாலினம், அதிகாரம், பதவி, வயது என்னவாக இருந்தாலும் நீங்கள் எங்களை பயமுறுத்த முடியாது. இதை மனதில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள். அவர்கள் செய்த குற்றங்கள் எந்தச் சூழ்நிலையிலும் சமூகத்துக்குத் தெரியக் கூடாது என எதிர்பார்க்கிறார்கள். அது நம்மையே நாம் அழித்துக்கொள்ளும் செயல் மட்டுமல்ல, மகளிருக்கான எதிர்காலத்தையே முடமாக்கும் செயலாகும். ஆகையால், நடந்த உண்மைச் சம்பவங்களை உரிய ஆதாரத்துடன் சமூகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். இந்தப் போராட்டம் அனைவருக்குமானது. இதன்மூலம் அடுத்த தலைமுறையாவது தைரியமானதாக வளரும்" என்று தன்னுடைய ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகர் ஓ.எஸ்.தியாகராஜனிடம் இசை பயின்ற மாணவி ஒருவர், இசைப்பயிற்சி முடியும் நாளில் தியாகராஜன் தன்னிடம் பாலியல் சீண்டல் செய்ததாக, அக்டோபர் 12 அன்று வலைதளம் ஒன்றில் புகார் செய்திருந்தார்.

#MeToo புகார்கள் எழுந்தபோது, பல கர்னாடக இசைக்கலைஞர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தார்கள். அதனைத் தொடர்ந்து உலகத்திலுள்ள பல கலைஞர்களும் ஒன்றிணைந்து கர்னாடக இசைத் துறையில் இதுபோன்று எதுவும் நடக்காமல், பாதுகாப்பு கிடைப்பதற்கான அமைப்பு ஒன்றைத் தொடங்க வேண்டும் என்று கையெழுத்து இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். `இந்தப் புகார்கள் குறித்து விரிவான விசாரணை வேண்டும்' என்று கேட்கும் ஆவணத்தில், பிரபல பாடகர்களான ரஞ்சனி-காயத்ரி, டி.எம்.கிருஷ்ணா, ஶ்ரீராம் பார்த்தசாரதி, பாம்பே ஜெயஶ்ரீ ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.