Election bannerElection banner
Published:Updated:

``அழுது தீர்க்கணும்... இல்லேன்னா சிரிச்சுக் கடக்கணும்... இதுதான் பாடம்’’ - எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் #LetsRelieveStress

``அழுது தீர்க்கணும்... இல்லேன்னா சிரிச்சுக் கடக்கணும்... இதுதான் பாடம்’’ - எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் #LetsRelieveStress
``அழுது தீர்க்கணும்... இல்லேன்னா சிரிச்சுக் கடக்கணும்... இதுதான் பாடம்’’ - எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் #LetsRelieveStress

"துயரமான நேரங்கள்ல கண்ணீரை விட வாய்விட்டு அழுவது மிகப் பெரிய ரிலீஃபா இருக்கும். அழுகை, ஓர் அற்புதமான மருந்து. அது என்னுடைய எந்த மரியாதையையும் குறைச்சதில்ல!"

வீனத் தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத பெயர்  ச.தமிழ்ச்செல்வன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், தலைவராகவும் இருந்து பல்வேறு கலை, இலக்கிய நிகழ்வுகளை முன்னெடுத்தவர். `வெயிலோடுபோய்’, `அசோகவனங்கள்’ ஆகிய இரு சிறுகதைகளை இணைத்து, இயக்குநர் சசி  `பூ’ என்ற பெயரில் திரைப்படமாக்கினார். இந்தப் படத்துக்காக சிறந்த கதாசிரியர் விருது பெற்றார் தமிழ்ச்செல்வன். மக்கள் பிரச்னைகளுக்காக பல மேடைகளில் உரக்க முழங்குபவர். தன்னுடைய வாழ்க்கையில் மனஅழுத்தம் தந்த தருணங்களையும் அதைக் கடந்த விதங்களையும் இங்கே பகிர்கிறார். 

``ஒவ்வொரு மனுஷனுக்கும் ரெண்டு மூணு வாழ்க்கை இருக்கும். எனக்கு நாலைந்து வாழ்க்கை இருக்கு. கொஞ்சக்காலம் ராணுவத்தில் வேலைபார்த்தேன். அதுவொரு வாழ்க்கையிருக்கு. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொதுச்செயலாளரா இருந்தேன். அதுவொரு வாழ்க்கை. தபால்துறையில வேலை பார்க்கும்போது தொழிற்சங்க வாழ்க்கை. அப்புறம் எல்லாருக்கும் இருக்கிற குடும்ப வாழ்க்கை. இந்த ஒவ்வொரு வாழ்க்கையிலுமே இக்கட்டான சந்தர்ப்பங்கள் வந்திருக்கு. ஒவ்வொண்ணையும் ஒவ்வொரு விதமா அந்தந்த வயசுல சமாளிச்சிருக்கேன்.

ராணுவத்துல சேரும்போது எனக்கு வயசு 20. ஒருமுறை, இமயமலையில சக ராணுவ வீரர்களோடு மலையேறிப் போனேன். அது சுமார் 12 ஆயிரம் அடிக்கு மேல இருக்கும். இந்திய-சீன எல்லையின் ஜுலுக் என்கிற பகுதி. அப்போ, நான் மட்டும் வழிதவறிட்டேன். பல மணி நேரமா வழியைத் தேடி, அலைஞ்சேன். என்னால கண்டுபிடிக்கவே முடியல. என் மனசு உடைஞ்சு போச்சு. அந்த டென்ஷன் எப்போ எனக்கு சரியாச்சுன்னா ஒரு பாறையில உட்கார்ந்து 10 நிமிஷம் வாய்விட்டு அழுததுக்குப் பிறகுதான். அப்போ எனக்கு திருமணம் ஆகியிருக்கல. அதனால, `அய்யோ.. பெத்தவங்கள வுட்டுட்டு வந்து, இப்படித் தனியா மாட்டிக்கிட்டேனே.. உங்களையெல்லாம் பார்க்காமலேயே செத்துடுவேன் போலிருக்கே..!’ன்னு அழுதேன். அழுததுக்குப் பிறகு மனசு சமநிலைக்கு வந்துடுச்சு. அதுவரைக்கும் போன பாதையை விட்டுட்டு வேறொரு பாதையில போய், பிறகு சரியான வழியைக் கண்டுபுடிச்சுட்டேன்! 

(எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் இளமைக்கால புகைப்படம்) 

2007-ல்  என்னோட அம்மா இறந்துபோயிட்டாங்க. அது எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகவும் துயரமாகவும் இருந்துச்சு. எல்லாப் பிள்ளைகளுக்குமே அம்மா இறந்துபோறது அதிர்ச்சியான விஷயம்தானே...அந்த அதிர்ச்சியிலிருந்து மீளுறதுக்கு முன்னாடி, சில மாதங்கள்லயே என்னோட ஒரு தங்கையும் இறந்துட்டா. நாங்க அஞ்சு பசங்க. ஒரு தங்கச்சிதான். இந்த ரெண்டு பேரோட மரணம் அடுத்தடுத்து நடந்ததுல ரொம்பவே மனஅழுத்தத்துக்கு ஆளாயிட்டேன். அப்போதான் தனிமையை விரும்பினேன். அப்படியிருந்தா நிலைமை சரியாயிடும்னு நினைச்சேன். 

அப்படித் தனிமையில உட்கார்ந்தப்போ எதை நினைச்சுக்கிட்டு இருந்தேன்னா... அதுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னாடிதான் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தோழர்களோட போயிருந்தேன். அங்கே வாலிபர் சங்கத் தோழர்கள் மேற்கொண்ட நிவாரணப் பணிகளை ரெக்கார்டு பண்ணினேன். கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவன், தாய், தந்தையரை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர்களையெல்லாம் சந்திச்சேன். எண்ணற்ற மரணங்கள். தனிமையில அதைத்தான் யோசிச்சிட்டு இருந்தேன். நம்முடைய இழப்பல்லாம் ஒண்ணுமேயில்லன்னு அப்போ மனசு சாந்தமாச்சு. ஒரு சின்ன கோட்டுக்கு முன்னாடி பெரிய கோட்டை போட்டா தப்பிச்சுக்கலாம் இல்லையா?

நமக்கு வந்ததைவிட பெரிய துயரங்கள் இந்த உலகத்துல இருக்கு. `உனக்கும் கீழே உள்ளவர் கோடி.. எண்ணிப்பார்த்து அமைதியை நாடு’ன்னு பாட்டே இருக்கே. ஆனாலும், தனிமையும் நினைவுகளும் மட்டுமே போதுமானதாயில்ல. அதனால, நான் என்ன செஞ்சன்னா, அப்போ ஒரு புத்தகம் எழுதிக்கிட்டிருந்தேன். அது கட்சித் தோழர் எம்.பாண்டியன் என்பவரோட வாழ்க்கை வரலாறு. அம்மா இறந்த அன்று அம்மாவை அடக்கம் செய்துவிட்டு வந்த அந்த இரவே, என்னுடைய நண்பன் மாரீஸ் வீட்டுக்குப் போயிட்டேன். அவனோட கம்ப்யூட்டர்ல  உட்கார்ந்து விடிய விடிய அந்தப் புத்தகத்தை டைப் செய்ய ஆரம்பிச்சேன். பாண்டியனைத் துரத்திய வெள்ளைக்கார போலீஸ், தலைமறைவு வாழ்க்கையில் சோத்துக்கு வழியில்லாமல் காட்டுக்குள் கிடைத்த பச்சை வாழைக்காய்களைத் தின்று பசியாறிய கொடுமைன்னு அப்படியே அந்த ராத்திரி பூராவும் அந்தத் தியாக வாழ்வுக்குள் பயணித்தேன். அப்படித்தான் அந்தத் தருணங்களைக் கடந்தேன். இப்படி, எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தொடர்ந்து நம்முடைய வேலைகளில் ஈடுபட்டோம்னா, அந்த வேலை எப்பேர்ப்பட்ட மனஅழுத்ததிலிருந்தும் நம்மைக் காப்பாற்றி வெளியே கொண்டு வந்துவிடும்.

இப்போ எனக்கு 65 வயசாகுது. வாழ்க்கையை எப்படி பேலன்ஸ் பண்ணிக்கிறதுன்னு மனசே பயிற்சி எடுத்துடுச்சு. எந்த நேரத்திலும் நிதானத்தை இழந்துடக் கூடாதுன்னு மனசுக்குச் சொல்லிச் சொல்லி, அதுவே இப்போ தாமரை இலைமேல கிடக்கிற தண்ணீர் மாதிரி எந்த இடத்திலும் இருக்க முயற்சிக்குது. மனஅழுத்தம் தர்ற அந்தச் சந்தர்ப்பத்தை அந்த நிமிடத்தை மட்டும் கடக்கப் பழகணும். ஆனாலும், அந்தத் துயரத்தால தாக்கப்படுவோம். தாக்குண்ட மனநிலையிலேயே இருப்போம். அழுவோம், கதறுவோம். நெருக்கடியான தருணத்தை அந்த நேரத்துல கடந்து போறதுதான் கஷ்டமாக இருக்கும். ஆனா, அதைக் கடக்க எனக்கு வயசு கத்துக்கொடுத்துடுச்சு. துயரமான நேரங்கள்ல கண்ணீரை விட வாய்விட்டு அழுவது மிகப் பெரிய ரிலீஃபா இருக்கும். அழுகை, ஓர் அற்புதமான மருந்து. அது என்னுடைய எந்த மரியாதையையும் குறைச்சதில்ல!

தபால்துறையில வேலைப் பார்த்தபோது, தொழிற்சங்கத்துல செயலாளரா இருந்தேன். அப்போ, ஒரு போஸ்ட்மேன் தோழரை சஸ்பெண்டு  பண்ணிட்டாங்க. முன்விரோதம் காரணமா, ஒரு அதிகாரி இவரை பழிவாங்கறதுக்காக, `மணியார்டர் கொடுக்கும்போது காசு வாங்கிட்டாரு'னு கேஸைப் போட்டு சஸ்பெண்டு செஞ்சிட்டாரு. `நாம செயலாளரா இருக்கும்போது நம்முடைய தோழருக்கு ஒரு இழப்பு நடந்துடுச்சே’ன்னே நினைச்சு, ரொம்ப மனஅழுத்தத்துக்கு ஆளாயிட்டேன். பிறகு, அந்த அதிகாரியோட அலுவலகத்துக்கு முன்னாடி போய் சக தோழர்களோடு சேர்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினேன். அவர் நினைச்சிருந்தா எங்களை கைது பண்ணியிருக்கலாம். ஆனா, அப்படி எதுவும் நடக்கல. அந்தப் போராட்டத்துக்குப் பிறகு, சஸ்பெண்டு ஆனவரு, திரும்பி வேலையில சேர்ந்துட்டாரு. இப்படித் தொழிற்சங்கத்துல இருக்கும்போது நிறைய போராட்டங்களைச் சந்திச்சிருக்கேன். பிறகு, போராடி ஜெயிக்கவும் செஞ்சிருக்கேன்! தோற்கவும் செஞ்சிருக்கேன். இரண்டையும் சமமாக ஏத்துக்கிட்டு முன்னேற தொழிற்சங்க வாழ்க்கை எனக்குக் கற்றுக்கொடுத்தது.

வாழ்க்கையில `அழுது தீர்த்து’டுங்கிறது முக்கியமான வார்த்தை. தமிழ்ச் சமூகம் பல துயரங்களை அழுது தீர்த்துதான் கடந்து வந்திருக்கு. இன்னைக்கு இருக்கிற அரசியல் சூழல், நமக்கு மனஅழுத்தத்தைத்தானே கொடுக்குது. `நாளைக்கு என்ன நடக்குமோ?’ங்கிற பயத்துலதான் ஒவ்வொருத்தரும் வாழ்ந்துட்டு இருக்கோம். தனிமனுசனா நம்மால் ஒண்ணும் பண்ண முடியாதுதான். கூட்டாகச் சேர்ந்துதான் சமூகப் பிரச்னைகளைச் சந்திக்க முடியும். ஆனா, அதுக்கு முன்னாடி மன அழுத்தங்களைத் தன்னந்தனியாகத்தான் சந்திக்க வேண்டியிருக்கு. அதைக் கடந்துதான் போக வேண்டியிருக்கு. `கொடுமையைச் சிரிச்சுதான் கழிக்கணும்’னு சொல்வாங்க. அழுது தீர்க்கணும்... இல்லேன்னா சிரிச்சுக் கழிக்கணும். வாழ்க்கையோட பாடம் இதுதான்!’’ என்கிறார் ச.தமிழ்ச்செல்வன்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு