தற்போது உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட் போன்கள். ஸ்மார்ட் போனில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. அவற்றில் இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, வானிலை, வேளாண் காடுகள், சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்களை அளிக்கக்கூடிய செயலிகள் குறித்துப் பார்ப்போம்.

ஐஃபார்மர் (ifarmer)
விவசாயிகளுக்குத் தேவையான பல தகவல்களை இந்த ‘ஐஃபார்மர்’ எனும் ஒரே செயலி மூலம் தெரிந்துகொள்ள முடியும். இச்செயலியில் செல்போன் எண்ணைப் பதிவு செய்த பிறகுதான் பயன்படுத்த முடியும். இதில், பத்து விதமான பிரிவுகளில் தகவல்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளன. விளை பொருள்களின் சந்தை விலை குறித்து அறிந்துகொள்ளச் சில பகுதிகள் இருந்தாலும் அவற்றில் குறைவான தகவல்கள்தான் இருக்கின்றன. ‘அறிவு சார்ந்த’ எனும் பகுதியில் உள்ள உட்பிரிவுகளில் விவசாயம் தொடர்பான பல தகவல்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
‘விற்பனையாளர்’ என்ற பகுதியில், மாவட்ட வாரியாக உரம், பாசனக்கருவிகள், விதைகள் போன்றவற்றை விற்பனை செய்பவர்களின் தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இச்செயலியில் உள்ள ‘வாங்க/விற்க’ எனும் பகுதியில் பதிவு செய்துகொண்டால், விளைபொருள்களை விற்கவோ வாங்கவோ முடியும். மேலும், வானிலை, மாடித்தோட்டம் ஆகியவை குறித்த தகவல்களும் இச்செயலியில் உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இச்செயலியை https://bit.ly/2vRd5oz என்ற முகவரியிலும், கூகுள் பிளே ஸ்டோர் மூலமும் தரவிறக்கம் செய்யலாம்.

ராகி வல்லுநர் அமைப்பு (Ragi Expert System Tamil)
சிறுதானியங்களில் முக்கியப் பயிரான கேழ்வரகு மற்றும் அதைச் சாகுபடி செய்யும் விதம் குறித்த பல தகவல்களை இச்செயலி தருகிறது. பட்டத்துக்கேற்ற கேழ்வரகு ரகங்களைத் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது. ‘சாகுபடி முறைகள்’ எனும் பகுதியில் விதைப்பு, பாசனம், நாற்றங்கால் மேலாண்மை, சாகுபடி நுட்பங்கள், பயிர் பாதுகாப்பு ஆகியவை குறித்து அறிந்துகொள்ள முடியும்.

மேலும், கேழ்வரகுச் சாகுபடியில் பயன்படக்கூடிய கருவிகள், மதிப்புக்கூட்டலுக்குப் பயன்படக்கூடிய கருவிகள் போன்றவை பற்றிய முழுமையான தகவல்கள் இதில் தரப்பட்டுள்ளன. ‘அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள்’ எனும் பகுதியில் மதிப்புக்கூட்டல் குறித்த தகவல்கள் வீடியோவுடன் தரப்பட்டுள்ளன. கேழ்வரகுச் சாகுபடியில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் தொடர்புகொள்ள வேண்டிய வல்லுநர் எண்களும் இச்செயலியில் கொடுக்கப்பட்டுள்ளன.

இச்செயலியை https://bit.ly/2r4Ilux என்ற முகவரியிலும், கூகுள் பிளே ஸ்டோர் மூலமும் தரவிறக்கம் செய்யலாம்.