Published:Updated:

மேக்கப் ஆர்டிஸ்ட், ஃபேஷன் டிஸைனர், புகைப்படக் கலைஞர்... கேரளாவில் அசத்தும் திருநங்கை அபீல் ராபின்!

திருநங்கையாக வாழ்வதே பெரும் போராட்டமாக இருக்கும் இந்தச் சமூகத்தில், போட்டிகள் நிறைந்த கலைத்துறையில் சாதிப்பது சாதாரணமா? அந்தச் சாதனையின் ஆரம்ப புள்ளியே, சவால்கள்தான் எனச் சிரிக்கிறார் அபீல் ராபின்.

மேக்கப் ஆர்டிஸ்ட், ஃபேஷன் டிஸைனர், புகைப்படக் கலைஞர்... கேரளாவில் அசத்தும் திருநங்கை அபீல் ராபின்!
மேக்கப் ஆர்டிஸ்ட், ஃபேஷன் டிஸைனர், புகைப்படக் கலைஞர்... கேரளாவில் அசத்தும் திருநங்கை அபீல் ராபின்!

கேரளாவைத் தாண்டி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மலையாளத் திரைப்படம், `மாயாநதி’. அஷீக் அபு (Aashiq Abu) இயக்கிய இந்தப் படத்தில், சிறிய வேடத்தில் நடித்திருப்பார், திருநங்கை அபீல் ராபின். ஆனால், இது மட்டுமே அவரின் அடையாளமல்ல; அவர் கடந்துவந்த வெற்றிகளின் சிறு பகுதி மட்டுமே.

அபீல் ராபினின் முதல் அடையாளம், ஆடை வடிவமைப்பாளர். அப்படித்தான் தன்னை அறிமுகப்படுத்தவும் விரும்புகிறார். தன் மூன்று வருட ஃபேஷன் உலகப் பயணத்தில், மஞ்சு வாரியர் முதல் நிக்கி கல்ராணி வரையில் பல முன்னணி நடிகைகளுடன் பணி புரிந்துள்ளார். மேக்கப் ஆர்டிஸ்ட், புகைப்படக் கலைஞர், பாடகர், நடிகர் எனப் பல பரிமாணங்களை எடுத்திருக்கிறார்.

``பென்னி கட்டாபானா என்பவர், என் ஃபேஸ்புக் ஃப்ரெண்ட். அவர் எனது வொர்க்ஸ் எல்லாத்தையும் தொடர்ந்து கவனிச்சிருக்கார். ஒருநாள், ``இயக்குநர் ஆஷிக் அபுவின் `மாயநதி’ படந்தில் ஒரு ரோல் பண்ணமுடியுமா?' எனக் கேட்டார். நடிப்பு எனக்கும் பிடிக்கும். அதனால், இயக்குநரைச் சந்திச்சேன். அவங்க சொன்னபடி நடிச்சேன். எனக்கான அந்தச் சின்ன ரோலுக்கு அங்கீகாரம் கிடைச்சது மனநிறைவா இருக்கு” என மலையாளம் கலந்த தமிழில் பேசுகிறார் அபீல் ராபின்.

``திருநங்கையாக வாழ்வதே பெரும் போராட்டமாக இருக்கும் இந்தச் சமூகத்தில், போட்டிகள் நிறைந்த கலைத்துறையில் சாதிப்பது சாதாரணமா? அந்தச் சாதனையின் ஆரம்ப புள்ளியே, சவால்கள்தான்'' எனச் சிரிக்கிறார் அபீல் ராபின்.

``என் சொந்த ஊர், கண்ணமாலி (Kannamaly). நான்கு சகோதரிகள், இரண்டு சகோதர்கள். ஸ்கூல் படிக்கும்போதே என்னிடம் பெண்தன்மை அதிகமாக இருப்பதைப் பார்த்து, சக மாணவர்கள் கேலி பண்ணுவாங்க. எனக்கு ஸ்கூலுக்குப் போகவே ரொம்பக் கூச்சமா இருக்கும். அப்போ, அம்மாதான் எனக்குப் பெரிய ஆறுதலா இருந்தாங்க. என் சின்ன வயசிலேயே அப்பா இறந்துட்டாங்க. அம்மாதான் எல்லாமே. நான் கிராஃபிக் டிஸைனிங் படிச்சேன். சின்ன வயசிலேயே பாட்டும் கத்துக்கிட்டேன். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அம்மாவும் இறந்துட்டாங்க.

அப்புறம், வீட்டைவிட்டு வெளியில் வரவேண்டிய இக்கட்டான சூழ்நிலை. என் திறமை மேலே நம்பிக்கைவெச்சு தைரியமா வந்துட்டேன். கொச்சிக்கு வந்து, மேக்கப் மற்றும் ஃபேஷன் டிஸைனிங் படிச்சேன். ஆரம்பத்தில், பிரைடல் மேக்கப், டிரஸ் டிஸைனிங் பண்ணினேன். சமூக வலைதளத்தில் பார்த்துட்டு, பலரும் வாய்ப்பு கொடுத்தாங்க. அப்படியே சினிமாவில் மேக்கப் ஆர்டிஸ்டாக வொர்க் பண்ண ஆரம்பிச்சேன். மூணு வருஷம் நிறைய அனுபவங்கள். நல்ல மனிதர்களின் சந்திப்பு கிடைச்சது. ஒரு காலத்தில், எனக்கு வேலை சொல்லிக்கொடுக்கவே ரொம்ப தயங்கினாங்க. இப்போ, நான் பலரும் மேக்கப், ஃபேஷன் டிஸைனிங் சொல்லித் தரேன். என்னைப் பொறுத்தவரை, இதைத்தான் வெற்றியா நினைக்கிறேன்.

2015-ம் வருஷத்திலிருந்து தொடர்ந்து 3 வருஷம் ஃபேஷன் ஷோ பண்ணிட்டிருக்கேன். நான் பண்ணின பிகினி ஃபேஷன் ஷோவுக்குச் சில விமர்சனங்களும் நிறைய பாராட்டுகளும் கிடைச்சது. நான் பெரும்பாலும் அனுபவத்திலிருந்தே கத்துக்கிட்டவள். என்னை எப்பவுமே ஒரு ஃபேஷன் டிஸைனராவே அடையாளப்படுத்திக்க விரும்புறேன். உலக அளவில் ஒரு நல்ல ஆடை வடிவமைப்பாளரா அறியப்படணும் என்பது என் ஆசை" என்று தன் பயணத்தைச் சொல்கிறார் அபீல் ராபின்.

தடைகளைத் தாண்டி சாதிக்கும் மனிதர்கள், வெற்றிகளையோ அங்கீகாரத்தையோ தேடிச் செல்வதில்லை. அதுவே, அவர்களைத் தேடி வந்துவிடும்!