Published:Updated:

அழைப்பிதழ் தொடங்கி அலங்காரம் வரை.. 'ஜீரோ வேஸ்ட்' கல்யாணம்! #ZeroWaste

"சமூகத்தில் ஒரு மாற்றம் கொண்டுவர நினைக்கிறப்போ, அதை குடும்பத்திலிருந்துதானே ஆரம்பிக்கணும். அதனால், என் கல்யாணத்தை முடிஞ்ச வரை பூமியை நோகடிக்காம பண்ண நினைச்சேன். ‘ஜீரோ வேஸ்ட்’ என்பதுதான் கல்யாணத்தின் திட்டம்."

அழைப்பிதழ் தொடங்கி அலங்காரம் வரை.. 'ஜீரோ வேஸ்ட்' கல்யாணம்!  #ZeroWaste
அழைப்பிதழ் தொடங்கி அலங்காரம் வரை.. 'ஜீரோ வேஸ்ட்' கல்யாணம்! #ZeroWaste

ஓர் இனிய காலை பொழுதில், கையில் வகை வகையான வயர் கூடைகளுடன் அந்த இளம் பெண்ணைப் பார்த்தேன். சென்னையில், புது மாடல் ஹேண்டு பேக்குகளைப் பயன்படுத்துவதையே பார்த்து பழகிவிட்ட நமக்கு அது புதுமையாக இருந்தது. லேப்டாப் வைக்க, கைப்பை என எல்லாமே நைலானில் செய்தவைதான். அவரிடம் பேச ஆரம்பித்தேன்.​​​​​​​​​​​​​​

“என் பேரு வீணா. ஃபேஷன் டெக்னாலஜி படிச்சிருக்கேன். ஆனால், ஃபேஷனைவிட சுற்றுச்சூழலை அதிகம் மாசுப்படுத்தும் விஷயம் வேற இல்லைன்னு புரிஞ்சது. ஒரு டி-சர்ட் தயாரிக்க எத்தனை லிட்டர் தண்ணீர் செலவாகும் தெரியுமா? சுற்றுப்புறத்தைக் கொஞ்சமும் பாதிக்காத மாதிரி ஃபேஷன்ல ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. என் ஜூனியர், சுதர்ஷனாகிட்ட இதுபற்றி பேசினேன். ரெண்டு பேரும் சேர்ந்து நியூயார்க்கில், ‘Sustainable Fashion’ பற்றி ஓர் ஆய்வு பண்ணினோம். அது சக்சஸ் ஆச்சு. அதையே சென்னையில், ‘ஜீரோ வேஸ்ட்’ என்ற பெயரில் கேம்பைன் பண்ணிட்டிருக்கோம்” என ஜீரோ வேஸ்ட் என்ற கான்செப்டின் உள்ளே நம்மையும் அழைத்துச் செல்கிறார்

“ஒரு நாள் வீணா, 'பூமியிலிருக்கும் மொத்த வேஸ்ட்டும் எங்கேயுமே போகமுடியாதுனா என்ன ஆகும்னு?’ கேட்டாங்க. 'பூமிக்கு மேலே குப்பை மட்டும்தான் இருக்கு'னு சொன்னேன். பூமியில் சேரும் முதன்மையான கழிவு, பிளாஸ்டிக். அடுத்து துணிகள். இதை மறுசுழற்சி செஞ்சு பயன்பாட்டுக்கு கொண்டுவர்றதுக்கு ரொம்ப செலவாகும். என்ன பண்ணலாம்னு யோசிச்சோம் அந்த நேரத்துல வீணாவுக்குக் கல்யாணம் முடிவாச்சு'' என்கிறார் சுதர்ஷனா. 

“சமூகத்தில் ஒரு மாற்றம் கொண்டுவர நினைக்கிறப்போ, அதை குடும்பத்திலிருந்துதானே ஆரம்பிக்கணும். அதனால், என் கல்யாணத்தை முடிஞ்ச வரை பூமியை நோகடிக்காம பண்ண நினைச்சேன். ‘ஜீரோ வேஸ்ட்’ என்பதுதான் கல்யாணத்தின் திட்டம். நானும் சுதர்ஷனாவும் எப்படியெல்லாம் கழிவுகளைக் குறைக்கலாம்னு லிஸ்ட் போட்டோம். இன்விடேஷனுக்குப் பதிலா, இ-இன்வைட் பண்ணிட்டு, நேரில் போய் சொந்தக்காரங்ககிட்ட சொன்னோம். எல்லாரும் புரிஞ்சுகிட்டு பாராட்டினாங்க. சாப்பாடு தொடங்கி, தாம்பூலம் வரை எல்லாமே சிம்பிளா பண்ணினோம். என் கணவர் விக்னேஷ், என்னைப் புரிஞ்சுட்டு ரொம்ப உதவியா இருந்தார்.

பாரம்பர்யமான முறைகளில் செய்யும் திருமணத்தில், பல வகையான செய்முறைகள் இருக்கும். அதில் எது முக்கியம் என ஆராய்ந்து அதை மட்டும் செய்தோம். என் கல்யாண புடவை, பாட்டியுடையது. அதேமாதிரி, வீட்ல எல்லாரும் ஏற்கெனவே இருக்கும் உடைகளை போட்டுக்கிட்டாங்க. ஒரு நாளுக்காக அதிக விலை கொடுத்து வாங்கிட்டு, பிறகு பீரோவுல பூட்டி வைக்கிறதால் என்ன லாபம்? நகைகளும் ஏற்கனவே இருந்ததுதான்.

“டெக்கரேசனுக்கும்கூட மக்கும் பொருள்களையே பயன்படுத்தினோம். மணமக்கள் பெயர் எழுத, ஒரு கரும்பலகையும் சாக்பீஸ் மட்டும்தான் உபயோகிச்சோம். அதையும் ஒரு நர்சரி ஸ்கூலுக்குக் கொடுத்துட்டோம். காய்கறி கழிவுகளை எல்லாம் அரைச்சு பக்கத்து வீட்டுத் தோட்டத்துக்கு உரமா மாற்றினோம். மீதமான உணவை ஆதரவற்ற இல்லத்துக்கு அனுப்பினோம். காகித இலையோ, டம்ளரோ பயன்படுத்தாமல், முழுவதும் வாழை இலை, பாக்கு மட்டை, சில்வர் டம்பளர்தான் பயன்படுத்தினோம். கடைசியில், சேர்ந்த குப்பைகளை ஒரு அட்டைப் பெட்டியில் அடைச்சு, மறுசுழற்சிக்குக் கொடுத்துட்டோம்'' எனப் பெருமிதம் பொங்க  சிரிக்கிறார் வீணா.

“பிளாஸ்டிக்தான் நம் நாட்டில் அதிகம் சேரும் குப்பை. அதை ஒரே நாளில் நிறுத்திட முடியாது. பயன்படுத்தாமலும் இருக்க முடியாது. அதனால், அதன் ஆயுளை நீட்டித்துப் பயன்படுத்துறதுதான் எங்க டார்கெட். ஒரு டி- சர்டை ஒருத்தர் மூணு மாசம் பயன்படுத்திட்டு தூக்கிப் போடறதுக்குப் பதில், அதை இன்னொருத்தர் பயன்படுத்த கொடுக்கலாம். ஒரு பொருளின் ஆயுளை நீட்டிச்சு, நடுத்தர குடும்பங்கள் வாங்கும் விலையில் கொண்டுபோய் சேர்க்கணும்னு 'ஜீரோ வேஸ்ட்' விழிப்பு உணர்வு கேம்ப் நடத்திட்டு வர்றோம்” என்கிறார் சுதர்ஷனா.

மூங்கில் பிரஷ், விதை பென்சில், துணிப்பை என அத்தியாவசியமான பொருள்களைத் தொடர்ந்து, பரிசுப் பொருள்கள், கழிவுகள் உருவாகாத கல்யாணம் எனப் புது வகையான ஐடியாக்களுடன் வீணாவும் சுதர்சனாவும் மக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். இனி, நாமும் குப்பைகளை குறைத்து, பூமியை ஆசுவாசப்படுத்தலாமே!