Published:Updated:

`நைட் நல்லா தூங்குங்க..!' தூங்குவதற்காக ஊழியர்களுக்கு போனஸ்

ஜப்பானியர்கள் அதீதமாக வேலை செய்யக்கூடிய மனோபாவம் உள்ளவர்கள் என்பது ஏற்கெனவே உலகம் அறிந்த ஒன்று. இந்த நிலையில், தற்போதைய போட்டி நிறைந்த கார்ப்பரேட் உலகில் கேட்கவே வேண்டாம்.

`நைட் நல்லா தூங்குங்க..!' தூங்குவதற்காக ஊழியர்களுக்கு போனஸ்
`நைட் நல்லா தூங்குங்க..!' தூங்குவதற்காக ஊழியர்களுக்கு போனஸ்

ரவு தூக்கம் எவ்வளவு முக்கியமானது என்பது  இன்றைய பரபரப்பு மற்றும் போட்டி நிறைந்த உலகில் தொலைந்துபோன  ஒன்றாகிவிட்டது. நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் சொல்வது, "நான் இருக்கும் பிஸியில் ஒரு முழு இரவு தூக்கமெல்லாம் சாத்தியமில்லை" என்பதுதான். ஆனால், உண்மை என்னவென்றால், விலை மதிப்பில்லாத அந்த 8 மணி நேர இரவு தூக்கத்தை இழக்கும் ஒருவரால், அடுத்த நாள் தனது பணியில் முழுக் கவனத்துடனும், திறனுடனும் பணியாற்ற முடியாது. 

சமீபத்தில், நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் வேலைத் திறன் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சர்வே ஒன்றில், இரவில் சரியாக தூங்காததால், தங்களால் வேலையில் முழு கவனம் செலுத்த முடியாமல் போவதாகவும், வேலையின் செயல் திறன்  பாதிக்கப்படுவதாகவும் 60 சதவிகிதம் பேர் ஒப்புக்கொண்டுள்ளனர். 

ஊழியர்கள் தூங்காவிட்டால் நிறுவனத்துக்கு இழப்பு

'Occupational and Environmental Medicine' என்ற மற்றொரு பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றில்,  இரவில் போதுமான அளவில் தூங்காத பணியாளர்களின் வேலைத்திறன் வெளிப்பாடு குறைவாகவே இருப்பதாகவும், இதனால், அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கு அத்தகைய பணியாளர்கள் ஒவ்வொருவரும் ஆண்டொன்றுக்கு சுமார் 2,000 டாலர் அளவுக்கு இழப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதன் தாக்கமோ என்னவோ, உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள நிறுவனங்கள் தற்போது, தங்கள் ஊழியர்கள் இரவில்
நன்றாகத் தூங்குவதை ஊக்கப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், ஜப்பானைச் சேர்ந்த திருமண நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கும் நிறுவனம் ஒன்று, தனது ஊழியர்களின் வேலைத் திறனை மேம்படுத்தும் விதமாக, அவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து இரவில் நன்றாக தூங்கச் சொல்கிறது. 

தூங்கினால் பணம் பரிசு

இது தொடர்பாக அந்த நிறுவன உரிமையாளர் கஸூகிகொ மொரியாமா, "இரவில் நன்றாக தூங்கக் கூடிய பணியாளர்களால்தான் வேலையை நன்றாகச் செய்ய முடியும். எங்களுக்கு அத்தகைய தொழிலாளர்கள்தான் தேவை. எனவேதான், குறைந்தபட்சம் வாரத்தில் ஐந்து நாட்களாவது தினமும் 6 மணி நேரம் தூங்கும் எங்கள் பணியாளர்களுக்கு, குறிப்பிட்ட அளவு பாயின்ட்களை பரிசாக வழங்குகிறோம்.  

இத்தகைய பாயின்ட்களைப் பெறும் பணியாளர்கள், தங்களது பாயின்ட்களுக்கு ஏற்ப, நிறுவனத்தின் கேன்டீனில் இலவசமாக உணவு பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு ஒரு ஊழியர் தொடர்ந்து பாய்ன்ட்களைப் பெறுவதன் மூலம், ஆண்டொன்றுக்கு சுமார் 41,000 ரூபாய்க்கு (இந்திய மதிப்பில்) ஈடான உணவுகளையோ அல்லது அதற்குரிய பணத்தையோ பெற்றுக் கொள்ளலாம்" என்கிறார். 

அதே சமயம், ஓர் ஊழியர் இரவில் குறைந்தபட்சம் 6 மணி நேரமாவது தூங்குகிறாரா இல்லையா என்பதை எப்படிக் கண்டறிவார்கள் என்று கேட்டால், மெத்தைகள் தயாரிக்கும் ஏர்வீவ் என்ற நிறுவனம், தூக்கத்தைக் கண்டறிவதற்காகவே பிரத்தியேகமாக உருவாக்கி உள்ள 'ஆப்' மூலம் கண்காணிக்கிறார்கள். 

கார்ப்பரேட் கலாசாரத்துக்கான தியாகம்

சமீபத்தில் இந்த மெத்தை தயாரிக்கும் நிறுவனம் நடத்திய சர்வே ஒன்றில், ஜப்பானியர்களில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களில் 92 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், இரவில் போதுமான அளவில் தூங்குவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.  இதை `கார்ப்பரேட் நிறுவனங்களின் வேலை கலாசாரத்துக்கு (work culture) ஊழியர்கள் செய்யும் நவீன தியாகம்’ என்று வர்ணிக்கிறது அந்த நிறுவனம். 

ஜப்பானியர்கள் அதீதமாக வேலை செய்யக்கூடிய மனோபாவம் உள்ளவர்கள் என்பது ஏற்கெனவே உலகம் அறிந்த ஒன்று. இந்த நிலையில், தற்போதைய போட்டி நிறைந்த கார்ப்பரேட் உலகில் கேட்கவே வேண்டாம். கடந்த 2015-ம் ஆண்டில் விளம்பர நிறுவனம் ஒன்றின் பணியாளர் ஒருவர், அளவுக்கு அதிகமாக வேலைபார்த்து, பணியின்போதே உயிரிழந்து விட்டார்.  

இத்தகைய சூழ்நிலையில்தான், மொரியாமா, தனது நிறுவன ஊழியர்கள் நன்றாகத் தூங்கி மகிழ்ச்சியாக இருந்தால்தான்  அலுவலகத்தில் தூங்கி வழியாமல், சிறப்பாக பணியாற்றுவார்கள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டுள்ளார். 

நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும்

"பணியாளர்களின் உரிமைகளை நீங்கள் பாதுகாக்காவிட்டால், நாடு தானாகவே பலவீனமடைந்துவிடும். தொழிலாளர்களுக்குத்  தூக்கம் மட்டும் முக்கியமானதல்ல. நல்ல ஊட்டச்சத்தான உணவு, உடற்பயிற்சி, நல்ல சுற்றுச்சூழல், வார விடுமுறை நாள்களை எடுத்துக்கொள்வதற்கான வாய்ப்பை அளித்தல் போன்றவையும் முக்கியமானது" என்கிறார் மொரியாமா. 

"நல்ல இரவு தூக்கம் பணியாளர்களின் உற்பத்தித் திறன் அல்லது வேலைத் திறனை அதிகரிக்கும் என்பது கற்பனையான ஒன்றல்ல. அது, ஊழியர்களை நன்றாக வேலை செய்ய வைத்து நிறுவனத்துக்கு லாபத்தை ஏற்படுத்துவதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது. 

2009-ம் ஆண்டில் ரேண்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், ஊழியர்கள் போதுமான அளவு தூங்காதது அமெரிக்க பொருளாதாரத்தில் 411 பில்லியன் டாலர் அளவுக்கு, அதாவது அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் (ஜிடிபி) 2.28% அளவுக்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிய வந்தது. இதுவே ஜப்பானில், அந்த நாட்டின் ஜிடிபி-யில் 2.92% அளவுக்கு இழப்பை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிய வந்தது.

ஊழியர்களை நன்றாக தூங்கச் சொல்லும் இதுபோன்ற மற்றவர்கள் வேடிக்கையாக அல்லது பைத்தியக்காரத்தனமாகக் கருதும் விஷயத்தை, எனது வாழ்நாளில் குறைந்தபட்சம் 10 லட்சம் தொழிலாளர்களுக்காவது செய்துவிட வேண்டும் என்பதுதான் எனது லட்சியம்" என்று மேலும் சொல்கிறார் மொரியாமா.

நன்றாகத் தூங்குவோம்... உற்சாகமாக வேலை செய்வோம்!