Published:Updated:

"கடவூர் ஜமீனின் ஆளுகையில் இருந்த மலையைப் பற்றி யாருக்குத் தெரியும்?" - ஒரு மலையேறும் கரூர்க்காரரின் கதை!

இருபது வருடங்களுக்கு முன்பு, எங்கள் பதினெட்டு ஊர்களிலும் டி.வி-யோ, தியேட்டரோ இல்லை. அதனால், 'ஒளியும் ஒலியும்' பார்ப்பதற்காக 500 அடி மலையேறி அந்தப் பக்கம் இருக்கும் திண்டுக்கல் மாவட்டத்துக்குப் படையெடுப்போம்.

"கடவூர் ஜமீனின் ஆளுகையில் இருந்த மலையைப் பற்றி யாருக்குத் தெரியும்?" - ஒரு மலையேறும் கரூர்க்காரரின் கதை!
"கடவூர் ஜமீனின் ஆளுகையில் இருந்த மலையைப் பற்றி யாருக்குத் தெரியும்?" - ஒரு மலையேறும் கரூர்க்காரரின் கதை!

லையும் மலை சார்ந்த இடங்களையும் சுற்றிப் பார்க்காதவர்கள் யார்தான் இருக்க முடியும்? அவற்றை எத்தனை முறை பார்த்தாலும் எவருக்கும் சலிப்பு ஏற்படாது என்பது உண்மைதான். அதனால்தான் பலரும் சுற்றுலாத்தலம் சம்பந்தப்பட்ட மலைக்குன்றுகளில் மலையேற்றம் காண்கின்றனர். அப்படியான கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மலைப் பகுதிக்குத்தான் அனுபவம் வாய்ந்த தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவரோடும் பாலா என்ற இளைஞரோடும் பயணித்தோம்... 

"இந்த மலை, கரூர் மாவட்டம், கடவூர் அருகே மாவட்ட எல்லையாக உள்ள தெற்கு அய்யம்பாளையம் உள்ளிட்ட 18 ஊர்களைச் சுற்றி காம்பஸை வைத்து வரைந்ததுபோல் வட்டவடிவில் உள்ளது. இதை தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு மலைகள் எனப் பெயர்வைத்து அழைக்கின்றனர். அதோடு, இன்னும் சில மலைகளைத் தொப்பிசாமி மலை, புள்ள முழுங்கி மலை என்று சுவாரஸ்யமான பெயர்களையும் வைத்து அழைக்கிறார்கள்" என்ற முத்துசாமி, "இந்த மலைப்பாதை கரடுமுரடாக இருக்கும். மேலும், இங்குப் பெயர் தெரியாத விஷ ஜந்துக்களும் நிறைய இருக்கும். எதற்கும் எச்சரிக்கையுடன் இருங்கள்" என்று அறிவுறுத்தியபடியே தொடர்ந்தார். 

"இந்த மலையின் அடிவாரத்தில்தான் என்னுடைய ஊர் இருக்கிறது. ஆனால், இப்படி மலையேறி இருபது வருடங்களுக்கு மேலாகுது. உசிலை, விராலி, செமுனா, இண்டுமுள், தெரளி, சுளுந்தை, வெடத்தலையான் என இங்குப் பெருகியிருக்கும் பல மரங்களுடைய விறகுகளைப் பொறுக்குவதற்காக இளஞ்சிறார்களோடு அடிக்கடி வருவேன். அப்புறம், இந்த மலையில் இயற்கையாக விளைந்துகிடக்கும் காரக்காய், பொவுஞ்சி, வீரப்பழம், சூரப்பழம், களிப்பூலாம் பழம், கொள்ளுக்குறிச்சான், நரி நத்தைப் பழம், செமுனாப் பழம், பொடாத்திப் பழம், ஆனைப்பழம் எனப் பல பழங்களைப் பறித்துத் தின்போம். தலையில் தேய்ப்பதற்கு மரிக்கலாம்பட்டையையும், வீட்டில் குழம்பு வைப்பதற்கு காட்டுச் சுண்டைக்காயையும் பறித்துச் செல்வோம். விடுமுறை நாள்களில் இங்குதான் ஆடு, மாடுகளை மேய்க்க வருவோம். ஆனால் வீட்டில் உள்ளவர்கள், 'மலைமேல மோகினி, பிசாசு எல்லாம் இருக்கு. அங்கே போகாதீங்க'னு சொல்வாங்க. ஆனால், நாங்கள் அவர்களின் பேச்சையெல்லாம் கேட்காமல்தான் மலைக்குச் செல்வோம். அவையெல்லாம் இனி, திரும்பவே வராத காலம்" என்று ஏக்கப் பெருமூச்சுவிட்ட அவர், திடீர் என யாரும் எதிர்பாராத வகையில், எதிரில் இருந்த ஒரு மரத்துமீது ஏறினார். 

"இந்த மரத்தில்தான் சிறுவர்களுடன் ஏறி 'குரங்கு தாவுதல்' விளையாடுவோம்" என்றவர், பின்னர் அதிலிருந்து கீழ் இறங்கி நடைபாதையின் ஓரத்திலிருந்த கள்ளிச்செடிகளைப் பார்வையிட்டார். பின், ஒரு குச்சியை எடுத்து அந்தச் செடியில், 'எம்.வி' என்று எழுதி ரசித்துப் பார்க்கிறார். பின் அதனருகில் இருந்த ஆனைப்பழங்களைப் பார்த்து, "அய்யோ, இதைத் தின்று எவ்வளவு வருடமாகிவிட்டது" என்று ஆசையோடு  பறித்துத் தின்றவர், எங்களுக்கும் கொடுத்தார். பின்னர், தொடர்ந்து பயணித்தோம். 

குறிப்பிட்ட ஓர் இடம் வந்ததும்,  "நாம் வரவேண்டிய இடத்துக்கு வந்துவிட்டோம்" என்றார். அந்த இடத்தில், முத்துசாமி முன்பே சொன்னதுபோலவே பெரிய அளவில் கருங்கற்களால் ஆன நிலை போன்ற அமைப்பு இருக்கிறது. அதில், இரண்டு பிரமாண்ட கதவுகள் இருந்ததற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அதைப் பார்வையிட்ட நம்மிடம், "இதுதான் அந்தக் கதவு கணவாய். 100 வருடங்களுக்கு முன்பு திண்டுக்கல்லைச் சேர்ந்தவர்கள் எங்கள் ஊர் பக்கமாக வந்துசெல்வதற்கு இதுதான் வாசலாக இருந்தது. அந்நியர்கள் எவரும் எங்கள் பகுதிக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் கடவூர் ஜமீனால் இந்த நிலைக் கதவு அமைக்கப்பட்டது. இங்கு 10-க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டதுடன், அந்நியர்கள் வந்தால் அவர்களைத் தடுத்து நிறுத்தவும் இதை அமைத்திருந்திருக்கிறார்கள். அப்போது மலைகளுக்குக் கீழே இருக்கும் 18 பட்டிகள் மட்டுமின்றி, இந்த மலைகளும் ஜமீன் ஆளுமையின்கீழ்தான் இருந்திருக்கிறது. 

இருபது வருடங்களுக்கு முன்புதான் இந்த மலைகள் வனத்துறையின் கட்டுப்பாட்டுக்கு வந்திருக்கிறது. இந்த மலைக்குள் இருக்கும் எங்கள் கிராமங்களுக்கு வெளியில் இருந்துவர இரண்டு வழிகள்தான் இருந்திருக்கின்றன. ஒன்று, நடந்துபோகும் இந்தக் கதவு கணவாய் வழி. மற்றொன்று, பாலவிடுதி வழியாக வாகனங்களில் போய்வரும் வழி. ஆனால், மறைந்த கருணாநிதி முதல்வராக இருந்தபோது, கிழக்கு மலையைக் குடைந்து பொன்னணியாறு அணையை அமைத்தார். அதன் ஓரமாக ஒரு சாலையும் அமைக்கப்பட்டது. இதனால் மூன்று வழியானது. அதன்பிறகு, திண்டுக்கல் செல்வதற்கு கதவு கணவாய் வழியாக மலையேறி இறங்க வேண்டும் என்பதால், சேவாப்பூர் வழியாக மலையைக் குடைந்து சாலையமைத்தனர். இதையும் சேர்த்து மொத்தம் நான்கு வழியாகிவிட்டது. இதனால், தற்போது இந்தக் கதவு கணவாய் வழியை யாரும் பயன்படுத்துவதில்லை. 

இருபது வருடங்களுக்கு முன்பு, எங்கள் பதினெட்டு ஊர்களிலும் டி.வி-யோ, தியேட்டரோ இல்லை. அதனால், ஒளியும் ஒலியும் பார்ப்பதற்காக 500 அடி மலையேறி அந்தப் பக்கம் இருக்கும் திண்டுக்கல் மாவட்டத்துக்குப் படையெடுப்போம். அதேபோல, அய்யலூரில் இருந்த  லாலாகிருஷ்ணன் என்கிற டூரிங் டாக்கீஸுக்குப் படம் பார்க்கச் செல்வோம். படம் பார்த்து முடித்துவிட்டு வரும்போது, நரி, காட்டுப் பன்றி, மான் என விலங்குகளின் நடமாட்டம் இருக்கும். இதனால் டார்ச் லைட்டின் உதவியுடன் இந்த மலை வழியாகவே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வீட்டுக்கு வருவோம். அப்படி வரும் எங்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் அடிப்பார்கள். அதேபோல், வாராவாரம் நடக்கும் அய்யலூர் சந்தையில் ஆடு, மாடு, கோழி, காய்கறிகள் விற்கவோ வாங்கவோ இந்த வழியாகத்தான் மக்கள் போய் வருவார்கள். ஆனால், தற்போது எல்லாரும் வாகனங்களில் சாலை வழியாகப் போகிறார்கள். ஆனால், இந்த மலையும், கதவு கணவாயும் எப்போதும்போல எங்களுக்கு அரணாகத்தான் இருக்கிறது" என்றார், புன்னகையுடன்.

"முத்துசாமி அண்ணன், இந்த மலையிலே பலமுறை ஏறியிருக்கிறார். ஆனால், நான் இரண்டு தடவை மட்டுமே ஏறியிருக்கிறேன். இவர் சொன்ன மரங்கள் மற்றும் பழங்களின் பெயர்களை எல்லாம் நான் இதுவரை கேட்டதில்லை. இந்தக் கதவு கணவாய் வழியாக ஊருக்குள் அந்நியர்களோ அல்லது தீய சக்திகளோ வந்துவிடக்கூடாது என்பதற்காக ஊர் மக்கள் ஒன்றுகூடி பூஜை செய்வார்கள். மற்றபடி, அவ்வளவாக இந்தப் பக்கம் யாரும் வருவதில்லை. சிலருக்கு, இப்படி ஓர் இடம் இருப்பதுகூடத் தெரியாது. நம் உடம்பையும், மனதையும்  இந்த மலை புத்துணர்ச்சியாக்கும் என்று எங்கள் ஊரில் இருக்கும் முதியவர்கள் சொல்வார்கள். அதை, இப்போது உணர முடிகிறது" என்றார் பாலா, புத்துணர்ச்சியுடன்.