Published:Updated:

'முரட்டு கதை'க்காக நாடக மேடையேறும் சரத்குமார்!

'முரட்டு கதை'க்காக நாடக மேடையேறும் சரத்குமார்!
'முரட்டு கதை'க்காக நாடக மேடையேறும் சரத்குமார்!

சில்வர் ஸ்க்ரீனில் கலக்கும் 'சுப்ரீம் ஸ்டார்', இனி நாடகத்திலும் கலக்கப்போகிறார். 'Theatre காரன்' நாடக குழுவோடு சேர்ந்து, 'Wild Tales' எனும் 'தங்கிலீஷ்' நாடகத்தின்மூலம், மேடை நாடகத்தில் தடம் பதிக்கப்போகிறார் சரத்குமார். "ஸ்கூல் படிக்குறப்போதான் முதல்முதல்ல ஒரு ஹிந்தி நாடகத்துல நடிச்சேன். துரோணாச்சாரியா வேஷம். ரொம்பப் பெரிய டயலாக். அதுலாம் எப்படி பண்ணுனேன்னு நெனைச்சுப் பார்த்தா இப்போகூட புல்லரிக்குது. 'ஓம் நச்சிவாய'னு கஷ்டமான டயலாக்கை சொன்னேன்" என்று கலகலவென ஆரம்பித்த சரத்குமாரிடம் பேசினேன்.

"இந்த நாடகம் மக்களுக்கு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?"

 "1 மணிநேரம் 20 நிமிடங்கள் ஓடும் இந்த நாடகம் முழுக்கமுழுக்க மக்களை என்டெர்டெய்ன் பண்ணும். கூடவே அங்கங்க சில கருத்துகள் இருக்கும். நாடகம் முழுக்க கருத்து சொல்லுறதுபோல இருந்தா அது 'ஆர்ட் ஃபிலிம்' ஆகிடும். அதுனால, ரொம்ப பேலன்ஸுடாதான் பண்ணியிருக்கோம். அப்போப்போ 'பன்ச்' டயலாக் இருக்கும். ஒரே வரில சொல்லனும்னா... 'Wild Tales', மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்"

"வெள்ளித்திரைல இருந்து, முதல்முறையா இப்போ நேரடி நாடக மேடைல நடிக்கப்போறீங்க. உங்களுக்கு ஏதாவது பதற்றம் இருக்கா?"

"பதற்றம்னு சொல்ல முடியாது. எந்தத் தளமா இருந்தாலும், அதுக்கு ஏற்ற மாதிரி மாத்திக்கணும்தானே... ஏதாவது தப்பு பண்ணிட்டா சினிமாவுல ரீடேக் பண்ண முடியும். டப்பிங் பண்ணுறப்போகூட அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். மொழி தெரியாதவங்க 'ப்ராம்டிங்'மூலம் வசனங்களைக் கேட்டு பேசிக்கலாம். ஆனா, மேடை நாடகத்துல அப்படி எதுவுமே பண்ண முடியாது. இங்க நம்முடைய டயலாக் மட்டுமில்ல, நடிக்குற எல்லாருடைய டயலாக்கையும் தெரிஞ்சு வெச்சிருக்கணும். அப்போதான், யாருக்கடுத்து யாரு பேசணும், என்ன டயலாக் பேசணும்னு தெரியும். அதுனால, சினிமாவைவிட மேடை நாடகங்களுக்குக் கொஞ்சம் அதிகமா ஒர்க் பண்ணனும். அதுக்குன்னு சினிமா ஈஸினுலாம் சொல்ல மாட்டேன். எங்கேயுமே உழைச்சுதான் ஆகணும்" என்றார் சுப்ரீம் ஸ்டார்.

நாடகத்தின் இயக்குநரும், 'Theatre காரன்' நாடகக் குழுவின் நிறுவனருமான ஸ்ரீராம் ஜீவனிடம் பேசினேன்.

"சினிமாவை விட்டுவிட்டு, மேடை நாடகத்தைத் தேர்ந்தெடுத்ததுக்கு காரணம் என்ன?" 

"இந்தத் தலைமுறையினருக்கு நாடகம்னா என்னன்னே தெரியாம போச்சு. இப்போல்லாம் வாரவாரம் தியேட்டருக்குப் போறோம். இதேபோலதான் அப்போல்லாம் நாடகங்களுக்கு போவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். அப்படி நாம மறந்துபோன கலையைத் திரும்ப கொண்டுவர்ற முயற்சியோட முதல் அடிதான் இது. எங்களைப்போல தமிழ்நாட்டுல நிறைய நாடகக் குழுக்கள் இருக்கு. சென்னைல மட்டுமே 60 குழுக்கள் இருக்கும். அதையெல்லாம் விரும்பிப் போய் பார்க்குறவங்க எத்தனைபேர்? இந்த ஓட்டத்துல கருத்து சொல்லும் நாடகம்தான் அதிகம். நாங்க கொஞ்சம் கமெர்ஷியலா ட்ரை பண்ணியிருக்கோம்" என்றார்

"Wild Tales-ன் கரு என்ன?"

"இதுல 4 வெவ்வேறு கதைகள் இருக்கு. ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு கரு இருக்கும். 'கர்வம்', 'சில ஸ்டீரியோடைப் விஷயங்கள்', 'அறியாமை - கொலை மர்மம்', 'ரொமான்டிக் காமெடி' இப்படி நாலு விஷயங்கள்ல பயணிக்குற கதைதான் வைல்ட் டேல்ஸ். இதுகூடவே பாலியல் துன்புறுத்தல் பற்றியும் சொல்லிருப்போம். எதையும் மையப்படுத்தி சொல்லல ஆனா, மக்கள் எடுத்துக்குற விதத்துலதான் எல்லாமே இருக்கு" என்று கூறி போட்டோஷூட்டிற்கு விரைந்தார் ஸ்ரீராம்.