Published:Updated:

``புலியை சுட்டுக்கொல்வது தவறான முடிவு!" - விளக்கும் புலிகள் ஆராய்ச்சியாளர் குமரகுரு

ஆம், உண்மைதான். கடந்த இரண்டு ஆண்டுகளில் சத்தியமங்கலம் பகுதியில் இரண்டு புலிகளும், நீலகிரியில் நான்கைந்து புலிகளும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளன.

``புலியை சுட்டுக்கொல்வது தவறான முடிவு!" - விளக்கும் புலிகள் ஆராய்ச்சியாளர் குமரகுரு
``புலியை சுட்டுக்கொல்வது தவறான முடிவு!" - விளக்கும் புலிகள் ஆராய்ச்சியாளர் குமரகுரு

புலிகளின் வாழிடங்கள் மனிதர்களால் துண்டாக்கப்படுவதும் ஆக்கிரமிக்கப்படுவதும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. மனித-விலங்கு மோதல் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து நிற்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அவ்னி என்ற புலியை வேட்டையாடுவதில் மொத்த வனத்துறையும் ஈடுபட்டுள்ளது. புலிகள் மனிதர்களை வேட்டையாடுவதும் அவற்றை மேன் ஈட்டர் (Man eater) என்று பிரகடனப்படுத்தி சுட்டுக் கொல்வதும் மட்டும்தான் ஒரே தீர்வா? விலங்குகளால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க முதலில் அவற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மக்களுக்கு அந்தப் புரிதலை நல்குவதில் காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களின் பங்கு மிக முக்கியமானது. அந்தவகையில் சமீபத்தில் சென்னை வந்திருந்த புலிகள் ஆராய்ச்சியாளர் முனைவர். திரு. குமரகுரு அவர்களைச் சந்தித்து உரையாடினேன். இவர் தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பில் உறுப்பினராக இருக்கிறார். புலி, சிறுத்தை, செந்நாய் போன்ற விலங்குகள் ஆராய்ச்சியாளரான இவர் நாட்டின் பல்வேறு மாநில வனப்பகுதிகளுக்குப் பயணித்தவர். வெறும் வன உயிரின சரணாலயமாக இருந்த பகுதிகளில் ஆனைமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயங்கள் தோன்றுவதில் இவரின் முயற்சியும், ஐந்து வருடகால ஆராய்ச்சிகளும் மிக முக்கியப் பங்கு வகித்தன. அவருடனான சிறப்பு நேர்காணல்.

"புலிகள் அதன் வாழ்விடத்தை எப்படி நிர்ணயிக்கின்றன? அவற்றுக்கான வாழ்விடம் எது?"

"வேட்டையாடி விலங்குகளை இரண்டு பிரிவுகளாகப் பிரிப்பார்கள். பெரிய வேட்டையாடி, சிறிய வேட்டையாடி. புலி, சிறுத்தை, காட்டு நாய் போன்றவை பெரிய வேட்டையாடிகள். அதுபோக காட்டுப்பூனை போன்ற மேலும் பல விலங்குகள் சிறிய வேட்டையாடிகள். புலிகள் பெரும்பாலும் இரவில்தான் செயல்படும். வேட்டையாடுவது, தீர்க்கமாகத் தன் வாழிட எல்லையைப் பராமரிப்பது போன்ற அனைத்தையுமே இரவில்தான் செய்யும். தன் வாழிட எல்லையைச் சில குறியீடுகள் மூலம் அடையாளப்படுத்தும். மரங்கள், மண் மேடுகள், பாறைகள் மூலமாகக் கணக்கு வைத்துக்கொள்ளும். அங்கு தன் நகங்களால் கீறி வைப்பது, சிறுநீர் கழிப்பது போன்றவற்றின் மூலமாக மற்ற புலிகளுக்கு அடையாளம் காட்டும். அதாவது, இது என் எல்லை அதற்குள் நீ வராதே என்று மற்ற புலிகளை எச்சரிக்கும். ஒரு வனப்பகுதியில் கிடைக்கும் அவற்றுக்கான இரையைப் பொறுத்தே அதன் வாழிடம் அமையும்."

"அப்படியென்றால் போதுமான இரை கிடைக்காதபோது அவை அந்தப் பகுதியிலிருந்து வெளியே வருமா?"

"காடுகளை நம் மூதாதையர்களோ நீங்களோ நானோ யாரும் உள்ளே சென்று வளர்க்கவில்லை. அவை நமக்கும் முன்னமே தோன்றியவை. அது பல தலைமுறைகளின் பரிணாம வளர்ச்சியில் உருவானவை. நிறைய பறவைகள், விலங்குகள் இதில் பெரும் பங்கு வகித்தன. பழந்தின்னிப் பறவைகள், வௌவால்கள் போன்றவை இதில் முக்கியப் பங்கு வகித்தன. விலங்குகளிலும் அதுபோன்ற பழந்தின்னிகளுக்குப் பங்குண்டு. உதாரணத்துக்குக் கரடிகள், யானைகள் போன்றவை. அவையெல்லாம் காட்டில் விளையும் மாம்பழம், நாவல் பழம், பலாப் பழம் போன்ற பல வகைப் பழங்களைச் சாப்பிடும். உண்ணப்பட்ட பழங்களின் விதைகள் செரிமானமாகிக் கழிவுகளாக வெளியேறுகின்றன. அந்தக் கழிவுகளிலிருந்து மீண்டும் மரங்கள் துளிர்விட்டுப் பல இடங்களுக்குப் பரவுகின்றன. இப்படித்தான் காடு, அதில் வாழும் உயிரினங்களுக்கும், அதில் வாழும் உயிரினங்கள் அந்தக் காட்டுக்கும் உதவிசெய்து உயிர்த்திருக்கின்றன. 

ஒருவேளை அந்த உணவு சுழற்சி தடைப்பட்டால் அங்கு வாழும் உயிரினங்களால் அங்கு வாழமுடியாது. அப்போது அந்த வாழிடத்தை அவை இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். வேறு வழியில்லாமல் அருகிருக்கும் பகுதிக்கு விலங்குகள் இடம்பெயர வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றன."

"ஒருவேளை அப்படி வெளியே வருவதைக்கூட மனித-விலங்கு எதிர்நோக்குதலுக்குக் காரணமாக எடுத்துக் கொள்ளலாமா?"

"மனித-விலங்கு பிரச்னைகள் என்பது மிகப்பெரிய தலைப்பு. அதில் முக்கியமானது, வாழிடங்கள் மனித வளர்ச்சித் திட்டங்களால் துண்டாடப்படுவது. விலங்குகள் வாழக்கூடிய பகுதிகளுக்குள் மேற்கொள்ளும் வளர்ச்சித் திட்டங்கள். உதாரணத்துக்கு ரயில் பாதைகள், சாலைகளைச் சொல்லலாம். என்ன... ரயில்தானே போகிறதென்று சொல்கிறோம். அப்படிப் போகும் ரயில்களில்தான் அவ்வளவு யானைகள் அடிபட்டுச் சாகின்றன. உங்களுடைய வீடு. ஆனால், அதில் எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வந்துபோவார்கள் என்றால் அதை நீங்கள் வீடாகக் கருதுவீர்களா? அப்படிச் செய்வதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? நாம்தான் அவற்றின் வீட்டுக்குள் சென்றோம். இப்போது அங்கு வாழமுடியாமல் வேறு இடம்தேடி நம்மை நோக்கி வருகின்றன. விலங்குகளுக்கு ஏற்படும் இந்தச் சிக்கல்களை நாம் புரிந்துகொண்டு அறிவியல்பூர்வமாகச் செயல்பட வேண்டும். 

அதுபோக வேட்டையும் ஒரு காரணம். கடமான், புள்ளி மான் போன்றவற்றை வேட்டையாடுகிறார்கள். அதனால் அங்கு வாழும் புலி, சிறுத்தை போன்ற வேட்டையாடிகளுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது. வீட்டில் உணவு இல்லையென்றால் வெளியே எங்காவது உணவுதேடிப் போகத்தானே வேண்டும். அப்படித்தான் ஊருக்குள் வருகின்றன. இப்படியாக வாழிடத்தை அழிப்பது, துண்டாக்குவது, வேட்டையாடுவது போன்றவற்றை நாம் அவற்றின் வீட்டுக்குள் செய்தால் அவை நம் வீட்டுக்குள் நுழைந்துவிடுகின்றன."

"ஆனைமலை புலிகள் சரணாலயம் இந்திரா காந்தி வன உயிரின சரணாலயமாக இருந்தபோது அங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தீர்கள். அந்த அனுபவத்தைப் பற்றி..."

"ஒரு காடு தன் நிலையிலிருந்து மாறுகிறது என்றால் அங்கு வாழும் அனைத்து வகைக் காட்டுயிர்களையுமே அதன் தாக்கம் பாதிக்கும். டாப் ஸ்லிப்பில் ஐந்து வருடங்கள் தங்கி ஆய்வு மேற்கொண்டேன். கேமரா டிராப்புகள் உள்பட பலகட்ட ஆய்வுகளை மேற்கொண்டோம். அதன்மூலம் புலிகள் அதிக எண்ணிக்கையில் அங்கிருப்பதை நிரூபித்தோம். அதற்குப் பிறகுதான் அது புலிகள் சரணாலயமாக மாற்றப்பட்டது. அந்தச் சமயத்தில் அங்கிருந்த கரியன் சோலை, புல்வெளி, மஞ்சம்பட்டி என்று ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வகை. அங்கு மரபியல் ஆய்வுகள் மூலமாக ஆண் பெண் புலிகளின் எண்ணிக்கைகளைத் தனித்தனியாகக் கண்டறிந்தோம்."

"விலங்குகளுக்கு விஷம் வைப்பதாகச் சொல்லப்படுகிறது. அது உண்மையா? உண்மையென்றால் எப்படி வைக்கிறார்கள்? "

"ஆம், உண்மைதான். வேட்டையாடி இழுத்துச் செல்லும் மாமிசத்தை ஒரே சமயத்தில் மொத்தமாகச் சாப்பிட முடியாது. ஒரு வேளைக்கு அதிகபட்சம் பத்து கிலோ வரை உண்ணும். பிறகு மாமிசத்தை விட்டுவிட்டுப் புதர்களுக்குள்ளோ குகைக்குள்ளோ மறைந்து ஓய்வெடுக்கும். அந்தச் சமயத்தில் இழுத்து வரப்பட்ட மாமிசத்தின் தடயங்களை வைத்துத் தேடிவருபவர்கள் அந்த மாமிசத்தில் பூச்சி மருந்தைத் தூவிவிட்டு விடுகிறார்கள். மீண்டும் அதைச் சாப்பிடும் புலிகள் அதே இடத்தில் பலியாகின்றன. இந்த மாதிரி சம்பவங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் சத்தியமங்கலம் பகுதியில் இரண்டு புலிகளும், நீலகிரியில் நான்கைந்து புலிகளும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளன."

"எதற்காக விஷம் வைத்துக் கொல்லுகிறார்கள்? இதையெல்லாம் செய்வது யார்? அதைத் தடுக்க வழிகள் உண்டா?"

"முன்னமே கூறியதுபோல் உணவுப் பற்றாக்குறையும் வாழிடச் சிக்கலும் ஏற்படும்போது புலிகள் ஊருக்குள் வருகின்றன. மந்தையிலிருக்கும் ஆடுகளை வேட்டையாடி இழுத்துச்சென்று தங்கள் உணவுத்தேவையைப் பூர்த்தி செய்யவேண்டிய கட்டாயம் அவற்றுக்கு ஏற்படுகின்றன. அப்படி ஊருக்குள் வரும் புலிகளால் நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அவற்றுக்கு விஷம் வைக்கிறார்கள். தங்கள் கால்நடைகள் புலித் தாக்குதலுக்கு உள்ளானால் அதற்கு நஷ்டஈடு கிடைக்கும். ஆனால், அதை வாங்குவதற்குத் தாக்கப்பட்ட கால்நடை சடலத்தின் ஒளிப்படம் அல்லது வேறு சில ஆதாரங்கள் வேண்டும் என்பது வனத்துறை விதிகள். பெரும்பாலும் அவற்றைப் புலிகள் இழுத்துச் சென்றுவிடுவதால் எங்கிருந்து புகைப்படம் எடுப்பது? அது முடியாமல் போவதால் மேன்மேலும் நஷ்டங்களை மட்டுமே சந்திக்கும் மக்கள் இதுபோன்ற செயல்களைச் செய்யவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். அவர்களைக் குறைகூற முடியாது. அறிவுப்பூர்வமான திட்டமிடலை நாம் நடைமுறைப் படுத்தாததால் அம்மக்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள் அவர்களை அதற்குத் தூண்டுகிறது."

"காடு தன் இயல்புநிலையை தன் தரத்தை இழப்பதால் காட்டுயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறதென்று சொன்னீர்கள். அந்தத் தரமிழப்பு ஏன் ஏற்படுகிறது? அது என்ன மாதிரியான விளைவுகளை அங்கிருக்கும் விலங்குகளிடம் ஏற்படுத்துகின்றது?"

"காப்புக் காடுகளுக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்கிறார்கள். ஒவ்வொருவரும் சுமார் 50 முதல் 200 மாடுகள்வரை வைத்திருக்கிறார்கள். அவற்றைக் காட்டுக்குள் சுதந்திரமாக விட்டுவிடுகிறார்கள். அவை அங்கிருக்கும் தாவரங்களைப் பெரும்பாலும் மேய்ந்துவிடுகின்றன. அதனால் அங்கிருக்கும் தாவர உண்ணிகளின் மேய்ச்சலுக்கு எதுவுமில்லாமல் போகிறது. வேறு வழியில்லாமல் காட்டுக்கு அருகேயுள்ள தனியார் நிலங்களுக்குள் வந்து மேய்கின்றன. பொள்ளாச்சியில் சேத்துமடை, உடுமலைப்பேட்டை, அமராவதி போன்ற இடங்களில் தனியார் நிலங்களுக்குள்ளும், காடுகளுக்கு வெளியேயும் புள்ளி மான், கட மான், காட்டு மாடு போன்றவை மேய்ந்து கொண்டிருப்பதை சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். அதற்குக் காரணம் காட்டில் அவை உண்ணக்கூடிய தாவரங்கள் இல்லாமல் போனதுதான்.

இதுபோக இன்னொரு காரணத்தாலும் வனத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அங்கு காட்டுயிர்கள் வாழத் தகுதியற்ற சூழல் உருவாகும். அது ஆக்கிரமிப்புத் தாவரங்களின் வருகை. மூக்குத்திப் பூண்டு (Lantana camera), யூபடோரியம் (Eupatorium), சீமைக் கருவேலம், சீகை மரம் போன்ற தாவரங்கள் காட்டுக்குள் தற்போது அதிகமாகக் காணப்படுகின்றன. இவை வேகமாகப் பரவும். தன் கிளைகளை நிலத்தில் நன்றாகப் பரப்பியவாறு விரிவாகவும் அடர்ந்த புதர்களாகவும் வளரும். அவற்றை நம் காட்டில் வாழும் எந்த உயிரினத்தாலும் சாப்பிடவும் முடியாது. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் இவையெல்லாமே களைச்செடிகள். அதனால், அங்கு சாப்பிடக்கூடிய தாவரங்கள் குறைந்து உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றன. சிறிய மழைக்குக்கூட முளைக்கும் புற்களைக்கூட வளரவிடாது. அதனால் அங்கு தாவர வளம் குறைந்துவிடும். பார்ப்பதற்குக் காடு வளமிக்கதாக இருக்கும். ஆனால் அவை எதுவுமே விலங்குகள் சாப்பிட உகந்ததாக இருக்காது. இதுவும் வனவிலங்குகள் காட்டுக்கு வெளியே வந்து மேய்ச்சல் நிலத்தைத் தேடவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும். அல்லது வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்துவிடும். இதனால் அங்கு வாழும் வேட்டையாடிகள் இரையின்றி ஊருக்குள் வருகின்றன. இப்படியாகக் காட்டின் தரமிழப்பு அங்கு வாழும் உயிர்களைச் சிக்கலுக்கு உள்ளாக்குகின்றன."

"ஆக்கிரமிப்புத் தாவரங்கள், அதாவது களைச்செடிகள் பற்றிச் சொன்னீர்கள். அவை நம் காட்டுக்குரிய தாவரங்கள் இல்லையென்றால் வேறு எப்படி இங்கு வந்திருக்கும்? "

"அவை ஆங்கிலேய ஆட்சியின்போது அவர்களின் விருப்பத்தின்பேரில் கொண்டுவரப்பட்டவை. காலப்போக்கில் அது அதிகமாகப் பரவி களைச்செடிகளாக  விஸ்வரூபம் எடுத்துவிட்டன."

"மகாராஷ்டிராவில் 13 பேரைக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட பெண் புலியைப் பிடிக்க கால்வின் க்ளெயின் என்ற மனித நறுமணத் தைலத்தைப் பயன்படுத்துவதாகச் சொல்கிறார்கள். அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? அந்த முறை உண்மையில் சரியானதுதானா?"

"இதெல்லாம் முறையான செயல்முறைகளே கிடையாது. அனைத்து புலிகளுக்குமே மோப்ப சக்தி அதிகம். அந்தப் பகுதியில் மேலும் சில புலிகள் வாழ்கின்றன. அப்படியிருக்க இந்த வாசனைக்கு அவ்னி மட்டும்தான் வருவாளென்று எப்படி உறுதியாகச் சொல்லமுடியும்? அமைதியாக வாழும் புலிகளும் வரத் தொடங்கிவிட்டால்? ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாத இம்மாதிரியான விஷயங்களை முயல்வது விபரீதங்களுக்கு வித்திடும்."

"அவ்னி புலியை 'மேன் ஈட்டர்' என்று சொல்கிறார்கள். அவ்னி நிகழ்த்திய மனித வேட்டைகளுக்கு இடையில் மாதக்கணக்கில் இடைவெளி இருந்துள்ளது. ஒருவேளை அது மனித மாமிசத்தை ருசித்துப் பழகியிருந்தால் தொடர்ச்சியான வேட்டை நடந்திருக்கும். அதோடு இரண்டைத் தவிர மற்ற தாக்குதல்கள் அனைத்துமே காட்டுக்குள்தான் நடந்திருக்கும்போது அவ்னியை எப்படி 'மேன் ஈட்டர்' என்று சொல்லமுடியும்? இது சரியான முடிவுதானா? ஒரு புலியை எப்போது 'மேன் ஈட்டர்' என்று சொல்லலாம்? "

"முதலில் எந்தப் புலியையுமே நாம் 'மேன் ஈட்டர்' என்று சொல்லமுடியாது. சொல்லவும் கூடாது. ஏதாவதொரு கட்டாயத்தின் பேரில்தான் இது நடக்கிறது. அதன் வாழிடத்துக்குள் தொடர்ச்சியான மனிதத் தலையீடுகள் இருக்கிறது. அப்போது இது என் வீடு என்பதை அது காட்டுகிறது. தன் இருப்பைக் காட்டி மிரட்டுகிறது. தன் வாழிடத்துக்குள் வேறொரு புலி வந்தாலே சண்டை ஏற்படும். அப்படியிருக்க ஓயாமல் மனிதர்கள் தொந்தரவு செய்துகொண்டே இருந்தால்? தாக்குதல் ஏற்படத்தான் செய்யும். அதுபோக அவர்களால் ஏற்படும் உணவுப்பற்றாக்குறை வேறு. அதனால் அவை வெளியேறுகின்றன. புலிகள் போன்ற வேட்டையாடிகளுக்கு உணவில்லாமல் ஊருக்குள் உணவுதேடி வருகின்றன. இதை நாம் புரிந்துகொண்டு அவற்றுக்கான வாழிடத்தை அமைத்துக்கொடுக்க வேண்டுமே தவிர சுட்டுக்கொல்லக் கூடாது.  Anti-depredation squad என்று வனத்துறையில் ஒரு தனிப்படை உண்டு. யானைகள் விவசாய நிலத்துக்குள் வந்தால் அவற்றை விரட்டுவதற்காகவே இவர்கள் இருக்கிறார்கள். இப்படிச் செய்வது நிலையான தீர்வுகளுக்கு வழிவகுக்குமா? உங்கள் வீட்டிலுள்ள உணவுகளையும் அழித்துவிடுகிறேன். நீங்கள் வெளியிலும் போய் சாப்பிடக்கூடாது என்று தடுத்துவிடுகிறேன். என்ன செய்வீர்கள்? உக்கிரமடைய மாட்டீர்களா? அதைத்தானே விலங்குகளும் செய்கின்றன. அவற்றுக்கானதை நாம் அழிக்காமல் விட்டுவிட்டால் ஏன் நம்மைத் தொந்தரவு செய்கின்றன?"

"ஷாஃபத் அலி கான் பற்றி அறிந்திருப்பீர்கள். அவர் அவ்னியை வேட்டையாட வந்திருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அவரை அழைத்தது சரியா? அடுத்த பத்தாண்டுகளில் புலிகளுக்கும் மனிதர்களுக்கும் வாழிடப் பிரச்னைகள் ஏற்படும். அதைச் சரிசெய்ய ஒரே தீர்வு அவற்றை வேட்டையாடி எண்ணிக்கையைக் குறைப்பதுதான் என்று சொன்னவர். அதைப் பற்றி உங்கள் கருத்து? "

"அவரைப் பொறுத்தவரை அது வந்தால் பிரச்னைதான். அதனால் கொல்லவேண்டும். ஒரு வேட்டைக்காரரிடம் இதைத்தான் எதிர்பார்க்க முடியும். அதை நாம் பெரிதுபடுத்தக் கூடாது. இவர்களைப் போன்றவர்கள் சொல்வதை நாம் முக்கியமாகக் கருதுவதால்தான் அந்தக் கருத்துகள் பொதுவெளியில் அதிகம் பரவுகின்றன. அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாலே போதும். அவரை வேட்டையாட அழைத்ததைப் பற்றிக் கேட்டீர்கள். ஒரு புலியைப் பிடிக்கக்கூட திறனில்லாத அளவுக்கு அந்த மாநில வனத்துறை வலிமையிழந்து இருப்பது வேதனையளிக்கிறது. வனத்துறையை அவர்கள் இன்னமும் மேம்படுத்த வேண்டும்."

"அவரை இயற்கைப் பாதுகாவலர் என்றும் ஹீரோ என்றும் பல பத்திரிகைகள் சித்திரிக்கக்கிறார்களே?"

"தவறான சித்திரிப்பு. 2000-ம் ஆண்டுவரை நம்மிடம் மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கிகளே கிடையாது. அப்போதுகூட எந்த விலங்கையும் சுட்டுக்கொல்வதுதான் ஒரே தீர்வு என்று நாம் நினைத்ததில்லை. ஆனால் விரைவுக் கலாசாரத்துக்கு மாறிவிட்ட இந்தச் சூழலில் பிரச்னைகளுக்கும் உடனடித் தீர்வு தேட நினைக்கிறோம். அதைத் தருபவர்களையே சிறந்தவராகக் கருதுகிறோம். விலங்கு பிரச்னை தருகிறதா சுட்டுவிட்டால் வேலைமுடிந்தது என்று நினைக்கும் இவர் மாதிரியான ஆள்கள் சமூகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலானவர்கள். அவர்களை ஆதரிப்பது மிகப் பெரிய தவறு."

"உலகிலேயே புலிகள் வாழக்கூடிய அலையாத்திக் காடு இந்தியாவின் சுந்தர்பான் காடுகள்தான். அதிலிருக்கும் தாவரங்களே உப்புநீரிலிருந்துதான் நன்னீரைப் பிரித்தெடுத்து வளர்கின்றன. அப்படியிருக்க அங்கு புலிகளால் எப்படி வாழமுடிகிறது? அதற்கான இரைகள்? "

"நீலகிரி வரையாடு பற்றி நாம் அனைவருக்கும் தெரியும். நீலகிரியில் மட்டுமே வாழக்கூடியது என்பதால் அதை நாம் அப்படி அழைக்கிறோம். அதாவது உலகில் வேறு எங்குமே இவற்றைப் பார்க்கமுடியாது. அந்த வரையாடுகள் பூம்புகாரில் வாழ்ந்தன. அதற்கான ஆதாரங்கள் சிலப்பதிகாரம் போன்ற இலக்கியப் பதிவுகளில் காணப்படுகின்றன. கடலோர சமதளத்தில்கூட வாழ்ந்து கொண்டிருந்த உயிரினத்தை இப்போது மலை உச்சியில் மட்டுமே பார்க்கமுடிகிறது. அதனால் அவை அங்கு மட்டும்தான் வாழமுடியுமென்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்குத்தான் நம் புரிதல் இருக்கிறது. அதேபோலத் தான் சுந்தர்பான் புலிகளும். அவை வாழ்ந்துகொண்டிருந்த காட்டிலிருந்து அதன் இரை விலங்குகளான மான்கள் இங்கு இடம்பெயர்ந்து வந்திருக்கலாம். அதைத் தொடர்ந்து புலிகளும் வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கலாம். இது நடந்து பல ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால் ஆதாரபூர்வமாக இன்னும் நிரூபிக்க முடியவில்லை. தண்ணீரைப் பற்றிக் கேட்டீர்கள். யானைகள் சில சமயம் மண்ணை எடுத்துச் சாப்பிடும். அதன்மூலம் ஈரமான மண்ணிலிருந்து நீரை உறிஞ்சிக்கொள்கின்றன. புலிகளும் அதேபோல்தான். ஆனால் மண்ணைத் திங்காது. அலையாத்திக் காட்டில் உப்புநீர் நிலைக்கு வெகு அருகிலேயே குழி தோண்டினால் அங்கு நன்னீர் கிடைக்கும். எங்கு தோண்ட வேண்டுமென்று நமக்குத் தெரியாது. ஆனால், அதைக் கண்டுபிடிக்கும் திறன் இயற்கையாகவே விலங்குகளுக்கு உண்டு. அதனால்தான் அவற்றால் அங்கு உயிர்த்திருக்க முடிகிறது."

"தமிழக வனப்பகுதியில் ஒரேயொரு வெள்ளைப்புலி இருக்கிறதல்லவா? அது முதலில் எப்படித் தெரிந்தது? இப்போது அதன் நிலை என்னவென்று சமீபத்தில் ஏதேனும் தெரிந்ததா?"

நீலகிரி பல்லுயிர்ச்சூழல் பகுதியில் அமைந்திருக்கிறது அவலாஞ்சி. அங்கு ஒரு காட்டுயிர் ஒளிப்படக்காரர் தற்செயலாக வெள்ளைப் புலியைக் காணநேர்ந்தது. அதை அவர் பதிவுசெய்தார். அதுதான் முதல்முறை. அதன்பிறகு அனைவருக்கும் தெரியவரவே ஆய்வுகளுக்குப் பின்னர் அதை உறுதிசெய்தோம். அது இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறது."

"வெள்ளைப்புலி பற்றிச் சொல்லுங்கள். அதன் வெள்ளை நிறத்துக்கான காரணம்...?"

"நெருங்கிய உறவுக்குள்ளேயே ஏற்படும் இனச்சேர்க்கைகளால் இந்த மாதிரி நிகழலாம். காடுகளின் தொடர்ச்சி மனிதக் கட்டுமானங்களால் வெட்டப்படுகின்றன. அவற்றால் வேறெங்கும் செல்லமுடியாமல் அங்கு மட்டுமே தேங்கி வாழவேண்டிய அவலநிலை. அதனால் தங்களால் உருவான கூட்டத்திலேயே இணைசேர்ந்து வம்ச விருத்தி செய்யவேண்டிய கட்டாயமும் ஏற்படுகின்றது. இந்த மாதிரி நெருங்கிய உறவுகளுக்குள்ளான உடலுறவு மரபியல் பன்மையைக் (Genetic diversity) குறைக்கிறது. அது பல குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். அதில் ஒன்றுதான் புலிகளுக்கு வரும் வெள்ளை நிறம். இதை நாம் ஆச்சர்யமாகவும் அரிதாகவும் பார்க்கக்கூடாது. இது ஒரு குறைபாடு, சரிசெய்வதற்கு முயலவேண்டும்."

"காட்டுயிர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நாம் இன்னமும் செய்யவேண்டியவை... ?"

"அதிகாரிகளும், ஆராய்ச்சியாளர்களும், ஆர்வலர்களும் மட்டுமே இயற்கையைப் பாதுகாக்க முடியாது. அனைத்து மக்களுமே சூழலியல் ஆர்வலர்களாக மாறவேண்டும். அனைத்து ஆராய்ச்சிகளையும் மக்களிடம் கொண்டுபோக வேண்டும். அவர்களுக்கு அனைத்து புரிதல்களையும் வழங்கவேண்டும். சரியான பாதையைக் காட்டவேண்டும். நமது கல்வித்திட்டத்தில் சுற்றுச்சூழல் எந்த நிலையிலிருக்கிறது? அதிகபட்சம் இரண்டு அல்லது ஐந்து மதிப்பெண் கேள்வியாகக் கடந்து போகும் அளவுக்குத்தான் இருக்கிறது. நம் பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் ஓர் அகதி போல ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அது மாறவேண்டும். அப்போதுதான் இந்த நிலை மாறும்."