Published:Updated:

``அது ரொம்ப மோசம்ங்க. ரொம்பக் கொடுமை... அது யாருக்கும் வந்துடக் கூடாது" - நடிகை கஸ்தூரி! #LetsRelieveStress

``அது ரொம்ப மோசம்ங்க. ரொம்பக் கொடுமை... அது யாருக்கும் வந்துடக் கூடாது" - நடிகை கஸ்தூரி!  #LetsRelieveStress
``அது ரொம்ப மோசம்ங்க. ரொம்பக் கொடுமை... அது யாருக்கும் வந்துடக் கூடாது" - நடிகை கஸ்தூரி! #LetsRelieveStress

``அது ரொம்ப மோசம்ங்க. ரொம்பக் கொடுமை... அது யாருக்கும் வந்துடக் கூடாது" - நடிகை கஸ்தூரி! #LetsRelieveStress

`ஆத்தா உன் கோயிலிலே’, `ஆத்மா’, `அமைதிப்படை’, `இந்தியன்’, `தூங்கா நகரம்’ உட்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி. திரைப்படத்துறையில் பல ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த அவரது வாழ்க்கையில் மனஅழுத்தம் தந்த தருணங்களையும் அதை எதிர்கொண்டவிதங்களையும் இங்கே நம்மிடம் பகிர்கிறார்.

``குழந்தைப் பருவம்கிறது பசுமையான நினைவுகளாத்தான் இருக்கும். என்னோடது சந்தோஷமான, கண்ணியமான மிடில் கிளாஸ் ஃபேமிலி. என்னோட பேரன்ட்ஸ் ரெண்டுபேரும் அவங்களுக்கு இருந்த எந்தக் கவலையும் என்னைப் பாதிச்சிடக் கூடாதுங்கிறதுல கவனமா இருந்தாங்க. சினிமாவிலும் அதேமாதிரி நடந்துக்கிட்டாங்க. சும்மா... விளையாட்டாதான் என்னோட 16 வயசுல சினிமாவுக்குள்ள வந்தேன். நான் நல்லாப் படிக்கிற பொண்ணு. நிறைய பேருக்கு ஐ.ஏ.எஸ் ஆபீஸரா ஆகணுங்கிறது கனவா இருக்கும். ஆனா, எனக்கு விளம்பரத்துறையில சாதிக்கணும்னு கனவு இருந்துச்சு. அதுல கவனம் செலுத்தினேன். பியூட்டி கான்டெஸ்ட்ல கலந்துக்கிட்டு ஜெயித்தேன். அப்போ எனக்கு எந்தக் கவலையும் இருந்ததில்ல. சினிமா எனக்கு சந்தோஷமான பயணம்தான். அதுல கத்துக்கிட்டது அதிகம். நடிச்சிக்கிட்டேதான் சட்டப் படிப்பை முடிச்சேன். எனக்கு சவாலான விஷயம், கஷ்டமான காரியம்னு எதுவும் இல்ல. 
இது `மீ டூ' (#meetoo) காலமா இருக்கிறதால ஒருவிஷயத்தச் சொல்ல வேண்டியிருக்கு. ஒரு கதை எழுதறதுக்கோ, ஒரு படம் தயாரிச்சு அதை வைச்சு கல்லா கட்டுறதுக்கோ இந்த `டர்ட்டி பிக்சர்' (Dirty picture)  கதையெல்லாம் உதவும். ஆனா, எனக்கு சினிமாப் பயணம் சீரா இருந்துச்சு. எல்லோருக்கும் ஒரு வேலை கிடைச்சா எப்படி இருப்பாங்களோ அப்படித்தான் இருந்தேன். என்கிட்ட மறைக்கப்பட்ட கறுப்புப் பக்கங்கள்னு எதுவும் இல்ல. பெரிய பெரிய ஜாம்பவான்களோட எல்லாம் வேலை செய்கிற வாய்ப்பு அமைஞ்சது. அப்படி, நான் பார்த்து வியந்தது டைரக்டர் மணிவண்ணன் சாரைத்தான். 

அதேபோல என்னோட நடிச்சவங்களும் பெரிய ஆளுங்கதான். எனக்கு உலக அனுபவம், சந்தோஷம், தைரியம், படிப்பினைனு எல்லாத்தையும் கத்துக் கொடுத்த பல்கலைக்கழகம் சினிமாதான். `நீங்க எந்த யுனிவர்சிடியில படிச்சீங்க?’ன்னு கேட்டீங்கன்னா... `நான் தமிழ் சினிமாங்கிற பெரிய பல்கலைக்கழத்துல படிச்சேன்’னு பெருமையா, தைரியமா சொல்வேன். நீங்க ஒரு பல்கலைக்கழகத்துல எத்தனை மொழி கத்துக்க முடியும். நான் இப்போ 11 மொழிகள் பேசுறேன். அதில் 9 சினிமாவுல கத்துக்கிட்டது. அது மட்டுமா... குதிரையேற்றம், நீச்சல்னு நிறைய கத்துக்க முடிஞ்சது. `கரும்புத் திங்க கூலி’னு சொல்வாங்களே.. அந்த மாதிரி, விருப்பமான வேலையைச் செய்றதுக்கு எனக்குச் சம்பளம் கிடைச்சுது. தினம் தினம் அலங்காரம் பண்ணிக்கிட்டு வேற வேற ஆளா வேற வேற அனுபவங்கள் சினிமாவுல மட்டும்தான் கிடைக்கும்! 

25 வயசுல கல்யாணம். அந்த வாழ்க்கை நல்லா போய்க்கிட்டிருந்திச்சு. கல்யாணத்துக்குப் பிறகும் நான் சினிமாவுல இருந்து விலகலே. அப்போ, அமெரிக்காவுல இருந்தேன். அதனால, சினிமா டிஸ்ட்ரிபியூஷனைக் கவனிச்சிக்கிட்டு இருந்தேன். அதுக்கு அப்புறமா, இந்தியாவுக்குத் திரும்பி வந்து `ஜி.வி.ஃபிலிம்ஸ்’ல பெரிய பொறுப்புல வேலைக்குச் சேர்ந்தேன். அந்த நேரத்துலதான், அந்த பேரிடி என் மேல விழுந்துச்சு. 

என் பொண்ணோட உடல்நிலை. அப்போ அவளுக்கு 7 வயசு இருக்கும். மகன் கைக்குழந்தை. எப்பப் பார்த்தாலும் பொண்ணுக்கு ஜுரம் வந்துக்கிட்டே இருக்கும். ஜுரம்னு ஆஸ்பத்திரில போய் நிப்போம். ஒருநாள் சாயங்காலம், ஹாஸ்பிட்டல்ல இருந்து போன். `உங்க பொண்ணுக்கு ஹீமோகுளோபின் குறைவா இருக்கு. உடனே, வாங்க’னு சொன்னாங்க. ஹாஸ்பிட்டலுக்கு கார்ல போகும்போது பொண்ணுக்கிட்ட `கீரையெல்லாம் சாப்பிட மாட்டேங்கிற.. பார்த்தியா இப்போ இப்படி ஆயிடுச்சு’ன்னு திட்டிக்கிட்டே போனேன். அங்கே போனதும், `எல்லாமே தப்பா இருக்கு.. குழந்தையை உடனே அட்மிட் பண்ணுங்க’ன்னு டாக்டர் சொல்லிட்டார். 

6 மணி நேரம் ஊசி முனைல நின்னுக்கிட்டு இருந்தோம். பிறகு, டாக்டர் வந்து, `நாங்க பயந்த மாதிரியே ஆயிடுச்சு. எல்லா டெஸ்ட்டும் எடுத்துப் பார்த்துட்டோம். உங்க பொண்ணுக்கு`பிளட் கேன்சர்’ வந்திருக்கு'னு சொன்னாங்க. அந்த நிமிஷம் என்னோட உலகமே இடிஞ்சு விழுந்துடுச்சு. அதுக்குப் பிறகு 4 வருஷமா ஒரே போராட்டம். ஒண்ணா, ரெண்டா... எதைச் சொல்றது (சொல்லும்போதே அவரது நா தழுதழுக்கிறது) தினம் தினம் ஒவ்வொரு மாதிரியான போராட்டம். என் பொண்ணு உயிர் பிழைப்பாளா... மாட்டாளான்னு தெரிஞ்சுக்கிறதுக்கே ஒரு மாசம் போராட்டம். அவ பிழைக்க வாய்ப்பிருக்குன்னு சொன்னதுக்கு அப்புறம், இரண்டரை வருஷம் போராட்டம். என் வாழ்க்கையில ரொம்பப் போராட்டமான காலம் அதுதான்!

இதுக்கெல்லாம் முன்னாடியே இதை எதிர்கொள்ள பழகிட்டேன்னுதான் சொல்லணும். அதுக்கு முன்னாடி இது நடந்துச்சு. அப்பா, அம்மா உடல்நிலை சரியில்லாம இருந்தாங்க. ஒருகட்டத்துல அவங்களுக்கு உடம்பு இன்னும் மோசமாயிடுச்சு. நான் பக்கத்துல இல்லைன்னா, அவங்க என்னைவிட்டு போயிருவாங்களோங்கிற நிலைமை வந்துடுச்சு. எனக்கு தம்பி இருக்கான். ஆனா, அவனால மட்டும் அவங்களைக் கவனிக்க முடியாதுங்கிற நிலைமை. அப்போ, அமெரிக்காவுல இருந்து இந்தியா திரும்பிட்டேன். அவங்க உயிர் ஒரே நாள்ல உடலைவிட்டுப் பிரியல. 4 வருஷமா கொஞ்சம் கொஞ்சமா போச்சு. அம்மா இறந்த மூணாவது நாள் அப்பா படுத்த படுக்கையாயிட்டார். அடுத்த அஞ்சாவது மாசத்துல அவரும் போய்ச் சேர்ந்துட்டார். அப்போல்லாம் அது கஷ்டமா தெரியல. அவங்களை கவனிச்சிக்கிறதுல 24 மணிநேரமும் பிஸியா இருந்தேன். யோசிக்கவோ, அழவோ நேரமில்ல. அம்மா, இறக்கிறதுக்கு முன்னாடி 12 கட்டளைகள் எழுதி வச்சிருந்தாங்க. தன்னுடைய கண்ணை தானம் செய்யணும்ங்கிற தொடங்கி, தன் அஸ்தியில கொஞ்சத்தை காசியில கரைக்கணும்ங்கிறது வரை அதுல இருந்துச்சு!

அவங்க இறந்த அன்னிக்கு காலைல ஆஸ்பத்திரிக்கு தகவல் சொல்லி, அங்கே பேப்பர் வொர்க்கெல்லாம் செஞ்சிட்டு, பணத்தைக் கட்டி, கண்தானம் செஞ்சு, திரும்பி உடலை வீட்டுக்குக் கொண்டுவந்து, பிரீஸர் ஆர்டர் பண்ணி, சொந்தக்காரங்களுக்கெல்லாம் தகவல் சொல்லி, சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணி பம்பரமாச் சுழன்றுக்கிட்டே இருந்தேன். ஏன்னா, வீட்டுக்கு மூத்தப் பொண்ணு நான்தான். 10 நாளைக்கு வேலை இருந்துச்சு. 13 வது நாள் வீட்டுல காரியமெல்லாம் முடிச்சுட்டேன். அதுக்குள்ள வெளிநாட்டுல இருந்து என்னோட மாமியார், குழந்தைங்க எல்லாம் வந்துட்டாங்க. அம்மா இறந்து இருபது நாள் இருக்கும். அப்போதான் அவங்க இல்லாததை நினைச்சு அழுதேன். 


அப்பா இறந்தப்போ மயானத்துக்குப் போய் கொள்ளி போட்டேன். `லேடீஸ்லாம் மயானத்துக்கு வரக்கூடாது’னு யாருமே சொல்லல. அம்மா இறந்தபோது அவங்க முகத்தை கடைசியாப் பார்க்கல. ஆனா, அப்பா முகத்தைப் பார்த்தேன். ஆனா, என் பொண்ணு விவகாரம் அப்பிடியில்ல!

என்னைப் பெத்தவங்க கொடுக்காத வலியை, நான் பெத்தெடுத்த மக கொடுத்தா. அது வலி மட்டும் இல்லைங்க. மரண பயம்னு சொல்வாங்களே... அதுதான். நான் செத்துட்டா என்ன நடக்கும்னு ஒருநாளும் யோசித்ததில்ல. அவளாலதான் எனக்கு மரண பயம்னா என்னன்னே தெரிஞ்சது. அது ரொம்ப மோசம்ங்க. ரொம்பக் கொடுமை... அது யாருக்கும் வந்துடக் கூடாது. 

மேல் சிகிக்சைக்காக என் பொண்ணை வேற ஒரு பெரிய ஆஸ்பத்திரில கொண்டுபோய் சேர்த்தோம். அவங்களால எனக்கு உறுதியான நம்பிக்கையைத் தரமுடியல. இன்னும் சில சிகிச்சை செஞ்சா காப்பாற்றிடலாம்னு பாத்தா அதுல பெருசா ஒண்ணும் பயனில்ல. அப்போதான் அவளோட அப்பா ஒரு முடிவெடுத்தாரு. தன் மேல பழியைப் போட்டுக்கிட்டு இதுக்குமேல அவளுக்கு டிரீட்மென்ட் வேணாம்னு சொன்னார். `இப்போ கொடுக்குற மருந்தையே தொடர்ந்து கொடுப்போம். ஆயுர்வேத மருந்துகளையும் கொடுப்போம். `சர்ஜரி எதுவும் வேண்டாம்’னு முடிவெடுத்தாரு. அப்போ டாக்டர் எல்லாம் `நீங்களே உங்கப் பொண்ணை கொல்லப் பாக்கிறீங்க’னு சொல்லித் திட்டினாங்க. ஆனா, `உங்களால அவளைக் காப்பாத்திட முடியுமா?’ன்னு கேட்டா, அவங்கக்கிட்ட இருந்து பதில் இல்ல!
பொண்ணுக்கு `ஸ்டீராய்டு'  கொடுத்ததால, அடிக்கடி `சாப்பிட ஏதாவது கொடும்மா..’ன்னு கேப்பா. நானும் மாமியாரும் மாறி மாறி சமைச்சுக்கிட்டே இருப்போம். ஒருத்தர் மாத்தி ஒருத்தர் ஹாஸ்பிட்டலுக்கும் வீட்டுக்கும் ஓடிட்டிருப்போம். பல நேரங்கள்ல ஹாஸ்பிட்டல்ல உள்ள சோபாவுலதான் தூங்குவேன். பல நாள் தூக்கமே வராது. அப்படித் தூக்கமில்லாம போனதுல எனக்கு `இன்சோம்னியா' (Insomnia) வந்துடுச்சு. அப்போதான் எனக்கு கடவுள் மேல கோபம் வந்துச்சி. ஆனா, என் பொண்ணுக்கு ஒவ்வொரு தடவை ஊசி போடும்போதும், அவ வலியால அழும்போது அவளுக்கு நான் நம்பிக்கையைக் கொடுக்கணும்கிறதுக்காக `முருகா... முருகா...’ன்னு சாமி பெயரை சொல்லி தைரியம் கொடுத்தேன். என்னால கடவுள் பேரைச் சொல்லி வலிகளை கடந்துபோக முடியல.. ஆனா, அவ கடவுள் நம்பிக்கையாலதான் அவளோட வலிகளை மறந்தா!

என்னைப் பொறுத்தவரைக்கும் எனக்கு கடவுள் இளையராஜாதான். எனக்கு பைத்தியம் புடிக்காம காப்பாத்தின கடவுள் அவர்தான். ஏன்னா அவரோட பாட்டுக்களை ஓயாம கேட்டதாலதான் பைத்தியம் புடிக்காம இருந்தேன். இதுதான் நிஜம். இதை அவர்கிட்டயே சொல்லிருக்கேன். மனஅழுத்தம் மட்டுமல்ல, இக்கட்டான எல்லா நேரங்கள்ல இருந்தும் என்னை மியூசிக்தான் காப்பாத்துச்சு. மியூசிக்லதான் நிம்மதியைத் தேடுனேன். சின்ன வயசுல இருந்தே தைரியமான, வலிமையான போராட்ட குணம் கொண்ட பொண்ணாதான் என்னோட அப்பா, அம்மா வளர்த்தாங்க. பாரதியோட வரிகளை ஊட்டி ஊட்டி வளர்த்தாங்க. எதற்கும் பயப்படுற மாதிரி அவங்க என்னை வளர்க்கல. அது மரணமா இருந்தாலும் சரி. சினிமாவிலும் வாழ்க்கையிலும் அதுதான் எனக்கு பலமா இருந்துச்சு! எதுவா இருந்தாலும் எதிர்த்து நின்னு ஜெயிப்போம்ங்கிற வைராக்கியத்தைக் கத்துக்கொடுத்தது சினிமா அனுபவமும், அப்பா அம்மாவும்தான்!’’ நம்பிக்கையுடன் முடித்தார் கஸ்தூரி!

அடுத்த கட்டுரைக்கு