Published:Updated:

``கலாபவன் மணி பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?!" - `சாலக்குடிக்காரன் சங்காதி' படம் எப்படி?

``கலாபவன் மணி பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?!" - `சாலக்குடிக்காரன் சங்காதி' படம் எப்படி?
``கலாபவன் மணி பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?!" - `சாலக்குடிக்காரன் சங்காதி' படம் எப்படி?

இந்தியச் சமூக அடுக்கின் கீழே இருந்து மேலெழுவதற்குத் திறமையை மட்டுமே நம்பி உழைக்கிற கலைஞனின் வலியைப் படம் பதிவு செய்கிறது. கலாபவன் மணியின் சிறுவயதிலிருந்து நிறத்தாலும் சாதியாலும் அவர் சந்தித்த புறக்கணிப்புகள், அவமானங்களைத் தைரியமாக காட்சிகளாக்கியுள்ளனர். முற்போக்கு மாநிலமாக, திரை உலகமாகக் கருதப்படுகிற கேரளாவிலும் சாதிய, நிற பாகுபாடுகள் இருப்பதைக் கலாபவன் மணியின் வாழ்க்கையிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

மலையாள சினிமாவில் வாழ்க்கை வரலாற்றுப் படங்களுக்குப் பஞ்சமில்லை. எழுத்தாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் என பல்வேறு நிஜ மனிதர்களின் கதையைப் படமாக்கிய பெருமை தென்னிந்திய திரையுலகில் கேரள நாட்டையே சாரும். அந்தப் பட்டியலில் நடிகர் கலாபவன் மணியின் வாழ்க்கைக் கதையும் இணைந்துள்ளது. மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த குறிப்பிடத்தகுந்த நடிகர்களில் கலாபவன் மணி முக்கியமானவர். அவர் இறந்து இரண்டரை வருடங்கள் ஆன நிலையில் அவரது வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது, `சாலக்குடிக்காரன் சங்காதி'. மணியின் நெருங்கிய நண்பரும் இயக்குநருமான வினயன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் சாலக்குடியில் சமூகத்தில் பின்தங்கிய குடும்பத்திலிருந்து வரும் ராஜாமணிக்கு நடிப்பு, பாட்டு என்றால் சிறுவயதிலிருந்தே கொள்ளைப் பிரியம். பள்ளி விழாக்களிலும் ஊர் திருவிழாக்களிலும் மேடை கிடைக்காதா என ஏங்குகிறான். கறுப்பாக இருப்பதால், எங்கேயும் அவனுக்கான வாய்ப்பு வழங்கப்படவே இல்லை. வளர்ந்த பிறகும் மேடை தேடி அலைகிறான். அப்படியொரு மேடையும் வாய்ப்பும் `கலாபவனி'ல் அமைகிறது. ராஜாமணியின் திறமை அவனை  மலையாள சினிமாவிலும் தென்னிந்திய சினிமாவிலும் மிக முக்கிய நடிகனாக உயர்த்துகிறது. அதற்கிடையில் அவன் சந்தித்த அவமானங்கள், தடைகள், புறக்கணிப்புகள், வறுமை, பாராட்டுகள் எனப் பலவற்றைச் சொல்கிறது படம். நபர்களின் பெயர்களையும் சம்பவங்களையும் ஆங்காங்கே மாற்றி சாலக்குடிக்காரன் சங்காதியை உருவாக்கியிருக்கிறார்கள்.  

இந்தியச் சமூக அடுக்கின் கீழே இருந்து மேலெழுவதற்குத் திறமையை மட்டுமே நம்பி உழைக்கிற கலைஞனின் வலியைப் படம் பதிவு செய்கிறது. கலாபவன் மணியின் சிறுவயதிலிருந்து நிறத்தாலும் சாதியாலும் அவர் சந்தித்த புறக்கணிப்புகள், அவமானங்களைத் தைரியமாகக் காட்சிகளாக்கியுள்ளனர். முற்போக்கு மாநிலமாக, திரை உலகமாகக் கருதப்படுகிற கேரளாவிலும் சாதிய, நிறப் பாகுபாடுகள் இருப்பதை கலாபவன் மணியின் வாழ்க்கையிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. சாதியின் காரணமாகவும் நிறத்தின் காரணமாகவும் சிறுவயதில் பள்ளி நாடக நிகழ்வில் வாய்ப்பு மறுக்கப்படுவது, மலையாளத் திரை உலகில் முக்கிய நடிகராக அறியப்பட்ட பிறகும் நிறத்தின் காரணமாகவும், சாதியின் காரணமாகவும் புறக்கணிக்கப்படுவது, இவரது வளர்ச்சியைப் பார்த்து பொறாமையில் அவரை வீழ்த்த சக நடிகர்களே இறங்குவது, எவ்வளவு வளர்ந்தாலும் மாறாத பணிவும் சுயமரியாதையும் உடையவராக கலாபவன் மணி இருப்பது, யார் உதவி எனக் கேட்டாலும் தேவைப்பட்டாலும் உடனே உதவுவது... எனக் கலாபவன் மணியைப் பற்றி அறியாத பக்கங்களைச் சொல்கிறது இப்படம்.     

இப்படிப்பட்ட ஒருவரின் கதையைக் கேட்கும்போதே நெகிழ்ச்சியும் கோபமும் வருத்தமும் மகிழ்ச்சியும் எனப் பல உணர்வுகள் நம்மையறியாமலே நம்மிடம் இருந்து வெளிப்படும். ஆனால், `சாலக்குடிக்காரன் சங்காதி'யைப் பார்க்கும்போது மேற்சொன்ன எந்த உணர்வுகளும் எழவே இல்லை. படம் முழுவதுமே அதீத நாடகத்தனமாகவே இருக்கின்றன. மிகவும் பலவீனமாக எழுதப்பட்டிருக்கும் கதையும் அது எடுக்கப்பட்டிருக்கும் விதமும் நம்மை இன்னும் சோர்வாக்குகிறது. மேலே சொன்ன விஷயங்கள்கூட `ஓ இப்படியெல்லாம் இவரது வாழ்க்கையில் நடந்திருக்கிறதா?' என்ற பாணியில்தான் நம்மைக் கடந்து செல்கிறது. கலாபவன் மணி என்ற பெயரைக் கேட்டதும் நமக்கு முதலில் ஞாபகம் வருவது அவரது மிமிக்ரியும் உடல் மொழியும் நல்ல நடிகன் என்ற பெயரும்தான். விலங்குகளின் குரலில் மிமிக்ரி செய்து அவற்றின் உடல்மொழியிலேயே கதை சொல்லி, ஜெமினிக்கெதிராய் வில்லத்தனம் காட்டிய தேஜாவைக் கண்டிப்பாக மறந்திருக்க முடியாது. ஆனால், திரைப்படத்தில் தேஜா குறித்தோ அவர் செய்த முக்கியமான கதாபாத்திரங்கள் குறித்த எந்தவொரு காட்சியமைப்பும் இல்லை. அதற்காக மெனக்கெடவும் இல்லை. படத்தில் இவை எதுவும் எங்கேயும் வரவே இல்லை. மணியின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படம், `வசந்தியும் லக்‌ஷ்மியும் பின்னே நானும் (Vasanthiyum Lakshmiyum Pinne Njaanum)'. இதுதான் தமிழில் 'காசி'யாக ரீமேக் ஆனது. மலையாள காசியாக கலாபவன் மணியின் நடிப்பு தேசிய அளவில் பேசப்பட்டது. ``மணி சேட்டன் நடித்ததில் கால்வாசிகூட நான் நடிக்கவில்லை", என விக்ரமே காசியின் வெற்றிவிழாவில் கூறியிருந்தார். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த படம் குறித்தான காட்சிகள் சில நொடிகளில் கடந்து போகிறது. `சாலக்குடிக்காரன் சங்காதி'யை இயக்கியிருக்கும் இதே வினயன்தான், அந்தப் படத்தின் இயக்குநரும்கூட.

கலாபவன் மணி, காவேரி, இயக்குநர் வினயன்

சரி, மணியின் அக வாழ்க்கையைத்தான் படம் பேசுவதாக எடுத்துக்கொண்டால்கூட அவரது அப்பா, அம்மா, நண்பர்கள் குடும்பப் பின்னணி, நடிப்பதற்காக அவர் பட்ட கஷ்டங்கள், முன்னாள் காதலி, மனைவி, வளர்ச்சிக்குப் பின்னான அகச்சிக்கல்கள் இவை எது குறித்தும் அழுத்தமான விவரிப்புகள் இல்லை. அழுத்தமற்ற கதாபாத்திரப் பின்னணி நாடகத்தனமான சம்பவங்கள் என 'சாலக்குடிக்காரன் சங்காதி' சராசரியான படமாகவே இருக்கிறது. அதேபோன்று நடிகனாக முயன்ற வேளையில் கலாபவனில் (நம்மூர் கூத்துப்பட்டறை போன்ற இடம்) சேர்ந்து தேர்ந்த நடிகனாகவும் பாடகராகவும் உருப்பெற்றார், மணி. அது குறித்தான  காட்சிகளும் தேமேவென வந்துபோகிறது. நாம் நடிகராக மட்டுமே அறிந்த கலாபவன் மணி மிக முக்கியமான மலையாள நாட்டுப்புறப் பாடகர். நடிகனாக வளர்ச்சியடைந்தபோதும் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவதை அவர் விடவில்லை. அதைப் பதிவு செய்திருப்பது ஆறுதல்.

ராஜாமணியாக நடித்திருக்கும் ராஜாமணி பார்ப்பதற்கு கலாபவன் மணியைப் போன்று இல்லையென்றாலும், அவரது குரல் ஒத்துப்போகிறது. 22 வயதில் நடிக்க ஆரம்பிக்கும் ராஜாமணி, இறக்கும்வரை அதே தோற்றத்தில்தான் இருக்கிறார். வயதுக்கேற்ற தோற்றத்தைக் கொண்டுவருவதற்கும் முயற்சி செய்யவில்லை, படக்குழுவினர். இதுதான் ராஜாமணியின் முதல் படம். தந்தையாக நடித்திருக்கும் சலீம் குமார் வழக்கம்போல் நன்றாக நடித்திருக்கிறார். ஆனால், பெரிதாய் முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரம். ஹனிரோஸ், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடிப்பில் போதுமானதாய்ச் செய்திருக்கிறார்கள். பிரகாஷ் குட்டியின் வழக்கமான  ஒளிப்பதிவும், அபிலாஷ் விஸ்வநாத்தின் எடிட்டிங்குமே படம் முழுக்கத் தென்படுகிறது. பிஜிபாலின் பின்னணி இசை சில இடங்களில் நன்றாக இருக்கிறது. கலாபவன் மணியின் `சாலக்குடி சந்தை', `ஆராருமாவத்த காலத்து' என இரண்டு நாட்டுப்புறப் பாடல்களை மிக்ஸிங் செய்து பயன்படுத்தியிருக்கிறார்கள். 

கேரளாவில் ஒடுக்கப்பட்டவர்களுக்குள்ளும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றன, தேசிய விருதைக்கூட லாபி செய்துதான் பெறவேண்டும்... என நுணுக்கமான காட்சிகளை வைத்த அதே நேரத்தில், மலையாள சினிமாவில் தமிழர்களை எப்படிக் கேலியாகச் சித்திரிப்பார்களோ அப்படியே இந்தப் படத்திலும் செய்திருக்கிறார்கள். தமிழக ரசிகர்கள் கலாபவன் மணியைக் கொண்டாடவே செய்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, ஏன் இப்படி?! அதேபோல, படத்தில் பெண்கள் குறித்த வர்ணனைகளும், இரட்டை அர்த்த காமெடிகளும் கதைக்குத் தேவையில்லாதவை. கலாபவன் மணியின் இறப்பு இன்னும் மர்மமாகவே இருக்கும்பட்சத்தில், வினயன் அவரின் இறப்பு குறித்து முடிவாக சில காட்சிகளை வைத்திருக்கிறார். இது முழுக்க முழுக்க கலாபவன் மணியின் பயோபிக் கிடையாது, அவரது வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டதுதான் என வினயன் கூறியிருந்தாலும், இது அவரது பயோபிக்காகத்தான் பார்க்கப்படுகிறது.

கலாபவன் மணியின் பல மொழி ஆளுமை, இசையறிவு, அரசியலில் இடதுசாரி சிந்தனை என அவரைப் பற்றிச் சொல்ல இன்னும் நிறைய இருக்கின்றன. படத்தில் சொல்லியதைக்கூட இன்னும் நேர்த்தியாய் மெனக்கெட்டு சொல்லியிருந்தால், இன்னுமொரு முக்கியமான பயோபிக்காக மாறியிருக்கும். அவரை நன்கு அறிந்த அவரது வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்த அவரது நெருங்கிய நண்பரும் இயக்குநருமான வினயனே அவரைப் பற்றிய படத்தைச் சராசரியாகக் கொடுத்திருப்பதுதான் வருத்தம். கலாபவன் மணிக்கு அஞ்சலி இந்தத் திரைப்படம் எனப் படத்தின் டைட்டில் கார்டில் வருகிறது. தென்னிந்திய திரை உலகமே வியந்து பார்த்த அந்தக் கலைஞனுக்கு இதைவிடச் சிறப்பான அஞ்சலியையும் காணிக்கையையும் செலுத்த வேண்டும். `சாலக்குடிக்காரன் சங்காதி' போதவில்லை.

அடுத்த கட்டுரைக்கு