Published:Updated:

``#MeToo புகார்களுக்குச் சட்டப்படி தண்டனை உண்டா?!’’ பதில் சொல்கிறார் வழக்கறிஞர் அஜிதா

``#MeToo புகார்களுக்குச் சட்டப்படி தண்டனை உண்டா?!’’ பதில் சொல்கிறார் வழக்கறிஞர் அஜிதா
News
``#MeToo புகார்களுக்குச் சட்டப்படி தண்டனை உண்டா?!’’ பதில் சொல்கிறார் வழக்கறிஞர் அஜிதா

``#MeToo புகார்களுக்குச் சட்டப்படி தண்டனை உண்டா?!’’ பதில் சொல்கிறார் வழக்கறிஞர் அஜிதா

ஹாலிவுட்டில் தொடங்கி கோலிவுட் வரை ஒரு ரவுண்டு வந்துவிட்டது, `மீ டூ'. இந்த நேரத்தில் சட்டபூர்வமாகப் பாலியல் குற்றங்களை அணுகும் விதம் குறித்து அறிவதும் அவசியமாகிறது. அதைப் பற்றிச் சொல்கிறார், வழக்கறிஞர் அஜிதா.

``காலம் காலமாகப் பெண்களை அழகு, பாலியல் இச்சைகளைத் தீர்க்கும் தகுதி ஆகியவற்றைப் பொறுத்தே மதிப்பிடுவது நிகழ்ந்துவருகிறது. விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்கள் சாதித்தாலும், ஆண்கள் கண்காணிப்பில் அவர்கள் இன்னும் இருப்பது வருத்தமானது. 1990- களுக்குப் பிறகு ஏற்பட்ட உலகமயமாக்கல், பெருமளவில் பெண்களை பணிக்காக வெளிக்கொணர்ந்தது. எனவே, ஆண்களை அடிக்கடி சந்திக்கவும் அவர்களுடன் பணிபுரிவதற்கான சூழல் ஏற்படுட்டது. அங்கே, பெண்களின் அச்சங்களை, அடிமைத்தனத்தில் பழக்கப்படுத்தப்பட்ட பலவீனங்களை ஆண்கள் பயன்படுத்திக்கொள்ள தொடங்கினார்கள். ``பெண்கள் வேலைக்கு வருவதால்தானே பிரச்னை, அவர்கள் வீட்டிலே இருந்தால் பாலியல் துன்புறுத்துதல் வராது என சிலருக்குத் தோன்றலாம். ஆனால்,வீட்டுக்குள் இருக்கும் குடும்ப வன்முறையை விடக் கொடூரமானது வேறில்லை." குடும்பத்தில் மட்டுமே நடந்துகொண்டிருந்த வன்முறைகள் இப்போது வெளிச் சமூகத்துக்கும் இடம்பெயர்ந்துள்ளதே தவிர, அது குறையவேயில்லை. 

இப்படி, பாலியல் துன்புறுத்துதல் - வன்முறை இல்லவே இல்லை என்று சொல்பவர்கள், அறியாமையில் இருக்கிறார்கள் என்றே புரிந்து கொள்ள வேண்டும். காலம் காலமாக ஒடுக்குமுறைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இங்கு ஆண்களின் பாலியல் சீண்டல்களை, அவர்களின் சாமர்த்தியம் என்று சொல்லும் பழக்கம் உள்ளது. அதாவது, ஆங்கிலத்தில் ஃப்ளர்டிங் ( flirting) என்பார்கள். இப்படிப்பட்ட ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண் எப்படித் தனக்கு நடந்த பாலியல் சீண்டலை உடனடியாகச் சொல்வாள்? அப்படிச் சொன்னாலும் இந்தச் சமூகம் அவளிடமே குற்றம் செய்தவளைப் போல கேள்விகளைக் கேட்கிறது. மேலும், `நீ ஏற்கெனவே அப்படிப்பட்டவள்?'  என்று பழிச் சுமத்துபவர்களை யாரும் கேள்வி கேட்பதில்லை. இதற்கு பயந்தே பல பெண்கள் வெளிப்படுத்துவதில்லை. அதையெல்லாம் கடந்து, தன் பெயருக்கு `களங்கம்' ஏற்படும் என்பதைப் புரிந்தே குரலை உயர்த்துகிறார்கள் என்றால், அதை நாம் ஆதரிக்க  வேண்டும்'' என அழுத்தமாகச் சொல்கிறார் அஜிதா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``எந்த ஒரு மாற்றத்துக்கு எதிராகவும் சமூகம் முதலில் குரல் உயர்த்தித் தடுக்கவே பார்க்கும். அதற்காக இசைந்து கொடுக்கமுடியாது. பெண் கல்வி, விதவை மறுமணம் என எதைத்தான் உடனே ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், அந்த மாற்றத்தின் பலனை அனுபவிக்கும்போது ஏற்றுக்கொள்வார்கள். மீ டூவில் பதிவுசெய்த பெண்கள் யாரும் தங்களுடைய விளம்பரத்துக்காகச் செய்யவில்லை. ஒரு பாலியல் குற்றம் நடக்கும்போது, நாள், தேதி, புகைப்படம் ஆதாரம் கேட்பவர்கள், அந்தக் குற்றத்தைச் செய்யும் அயோக்கியர்களின் பக்கம் நிற்கின்றனர். `நீ ஏன் அப்பவே சொல்லலை? இப்போ சொல்வதன் உள்நோக்கம் என்ன?' என்பதெல்லாம் அபத்தமான கேள்விகள். இது போன்ற பாலியல் துன்புறுத்தல்களை உடனடியாகக் கேட்டு நியாயம் வாங்கிக் கொடுக்க எந்தச் சட்டமும் அமைப்பும் இல்லை என்பதே உண்மை. அது தவறு செய்யும் அயோக்கியர்களுக்குச் சாதகமாக, தைரியத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, மீ டூ இயக்கம் இன்றைய கட்டாயத் தேவை. சட்டத்தில் அதற்கான நடவடிக்கைகள் துரிதமாக இல்லை. மீ டூ இயக்கத்தின் மூலம் வரும் பாலியல் புகார்களில், சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு இது ஒரு சவுக்கடி. செய்த தவற்றுக்காக வருந்தி மன்னிப்பு கேட்பது, அவர்களின் மரியாதையைத் தக்க வைத்துக்கொள்ளும். ஒவ்வொரு முறையும் பாதிக்கப்பட்ட நபர்களிடமே சமூகம் கேள்வி கேட்கும் நிலை மாற வேண்டும். மீ டூ இயக்கம் அந்த வாய்ப்புகளை எதிர்காலச் சந்ததியினருக்கு உருவாக்கித் தரும்” என்கிறார் நம்பிக்கையுடன்.

சட்டத்தின் செயல்பாடுகள்

மீ டூ  குற்றச்சாட்டுகளுக்குச் சிறப்பான சட்டம் என்று எதுவும் தற்போது வரவில்லை. 1860-களில் இயற்றப்பட்ட சட்டங்களிலே, பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு என்று தனியாக எந்தப் பிரிவும் இல்லை. இந்தியா சுதந்திரமடைந்து, 66 ஆண்டுகளுக்குப் பின்பு, 2013-ம் ஆண்டில் பாலியல் குற்றம் தொடர்பான சட்டங்கள் இணைக்கப்படுகின்றன. அதிலும் சில தடைக்கற்கள் இருக்கத்தான் செய்கின்றன.

சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனில், முதலில் குற்றம் நிகழ்ந்த உடனே காவல் துறையினரை அணுக வேண்டும். பாதிக்கப்பட்டவரின் நிலையைப் பொறுத்து துரிதமாகச் செயல்பட வேண்டும். அப்படி இல்லையெனில், குற்றவாளி தப்பிக்க நேரிடும். அதாவது, நீண்ட காலம் ஆகும்போது, சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கமுடியாத சூழ்நிலையில், குற்றவாளி தப்பிவிடுவார். அல்லது முன்விரோதத்தால் கொடுக்கப்படும் புகார் எனச் சந்தேகம் ஏற்படலாம். வழக்கின் உண்மைத்தன்மை கேள்விக்குறியாகிவிடும்.

`பாலியல் தொந்தரவு' என்பது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354  ( A) படி,

தொடுதல் மற்றும் தொடுதலுக்கான முயற்சிகள்.

பாலியல் ரீதியான கோரிக்கைகள் அல்லது கெஞ்சல்கள்.

பாலியல் ரீதியான குறிப்புகள் அடங்கிய பேச்சுகள்.

போர்னோகிராபி வகையிலான புகைப்படங்கள், வீடியோக்களைக் காட்டுதல்.

பாலியல் ரீதியான அர்த்த தொனிக்கும் வார்த்தைகள் அல்லது சைகைகள், செயல்பாடுகள். 

இவைபோன்ற தொந்தரவுகளைச் சந்திக்கும் பெண்கள், உடனே அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம். பணிபுரியும் இடங்களில் உள்ள புகார் கமிட்டியிடமும் புகார் கொடுக்கலாம்.

354 ( A) IPC-ன்படி, பொது இடங்களில், பணியிடங்களில், கல்லூரிகளில் குற்றவியல் நோக்கத்துடன் பெண்களுக்கு நடக்கும் மேற்குரிய அனைத்துப் பாலியல் வன்முறைகளுக்கும் எதிரான சட்டம் இதுவே.

தண்டனை: பிணையில் விடமுடியாதது. குற்றத்தைப் பொறுத்து 1 முதல் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும்.

 354 ( B) IPC-ன்படி, பாலியல் குற்ற நோக்குடன்  பெண்ணின் விருப்பத்துக்கு எதிராகக் கட்டாயப்படுத்தி, அவர்களின் ஆடைகளைக் களைய முற்படுவது. தவறான நோக்கத்துடன் தொடுவது, அடிப்பது, மிரட்டுவது போன்றவை இதில் அடங்கும். 

தண்டனை: 3 வருடத்துக்குக் குறையாமல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம்.

354 ( C) IPC-ன்படி,  ஒரு பெண்ணின் அந்தரங்கத்தைப் புகைப்படம் எடுத்தல், வீடியோ எடுத்தல், மறைந்திருந்துப் பார்த்தல் போன்றவை தண்டனைக்குரிய குற்றம். ஓர் ஆண், தன் உடலை ஆபாசமாகக் காட்டிப் பார்க்கவைப்பதும் குற்றமே.

தண்டனை: 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம்.

354 ( D) IPC-ன்படி, ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாதபோதும், அவளைப் பின்தொடர்தல் தண்டனைக்குரிய குற்றம். குறுந்தகவல், இணைய வழித் தொடர்பு எந்த தொடர்வாக இருப்பினும்  குற்றமே.

தண்டனை: 1 முதல் 2 ஆண்டுகள் சிறை தண்டனை. இதையே இரண்டாவது முறை செய்யும்போது, 5 ஆண்டுகள் சிறை தண்டனை, பிணை கிடையாது.