மிடில் கிளாஸ் குடும்பங்கள் குழம்பும் பல கேள்விகளில் முக்கியமானது `வீட்டுக்கடனை, முன்கூட்டியே கட்டி முடிப்பது நல்லதா அல்லது நாம் எடுத்திருக்கும் கடன் காலம் வரை பணம் கட்டுவது நல்லதா?’ என்பதுதான்.
கையில் பணம் இருந்தால், நாம் அனைவரும் ரொக்கத்துக்குத்தான் வீட்டை வாங்க விரும்புவோம். பணம் குறைவாக இருப்பவர்கள், வங்கிகளில் அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி வீடு வாங்குகிறார்கள். இந்தக் கடனை மாதத் தவணையாக செலுத்தி அடைக்கிறார்கள். இடையில் வருமானம் கூடும்போதோ அல்லது கணிசமான தொகை கிடைக்கும்போதோ வாங்கிய கடனை விரைவாகக் கட்டி முடிக்க விரும்புகிறார்கள். இதற்கு மக்கள் சொல்லும் முக்கியக் காரணம், `வட்டி நிறைய’ என்பதுதான்.

உதாரணத்துக்கு, நீங்கள் 20 வருடத்துக்கு, 8.50 சதவிகித வட்டியில் 25 லட்சம் ரூபாய் வீட்டுக்கடன் வாங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். உங்களின் இ.எம்.ஐ 21,696 ரூபாய். 20 வருடங்களில் நீங்கள் மொத்தமாகக் கட்டியிருக்கும் வட்டித்தொகை மட்டும் 27,06,939 ரூபாயாக இருக்கும். இத்துடன் அசல் 25 லட்சம் ரூபாயையும் சேர்த்து மொத்தமாக நீங்கள் தவணைமுறையில் கட்டியிருக்கும் தொகை 52,06,939 ரூபாய்.
`வாங்கிய கடனைவிட வட்டி அதிகமாகக் கட்டியுள்ளேன்’ என்பதுதான் பலரின் கவலை. அதனால் கடனை சீக்கிரம் அடைத்துவிட வேண்டும் எனத் துடிப்பார்கள். ஆங்கிலத்தில் `ஆப்பர்ச்சுனிட்டி காஸ்ட்’ (Opportunity cost) எனச் சொல்வார்கள். அதை யாரும் கணக்கிடுவதில்லை. மேலும், காலம் அதிகமாக அதிகமாக வட்டி அதிகமாகத்தானே செய்யும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீங்கள் வீட்டுக்கடன் வாங்கும்போது, அதற்காகச் செலுத்தும் அசல் மற்றும் வட்டிக்கு வருமான வரிச் சலுகை உண்டு. ஆகவே, அதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால், உங்களின் எஃபெக்டிவ் வட்டிச் செலவு இன்னும் குறையும். அதைப் பலரும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
உங்களால் ஒவ்வொரு மாதமும் அதிக இ.எம்.ஐ தொகை கட்ட முடிந்தால், நீங்கள் 10 வருடத்தில் கடனை முடித்துவிடலாம். 10 வருட அடிப்படையில் இ.எம்.ஐ 30,996 ரூபாயாக இருக்கும். ஆக, நீங்கள் அதிகமாக இ.எம்.ஐ கட்டவேண்டிய தொகை 9,300 ரூபாய். இந்த எக்ஸ்ட்ரா தொகையை நீங்கள் அதிக வருமானம் (8.50 சதவிகிதத்துக்கும் அதிகமாக) தரக்கூடிய முதலீடுகளில் முதலீடு செய்ய முடியும் என்றால், கடனை முன்கூட்டிச் செலுத்தாமல் இருப்பது நல்லது. இன்று மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீடுகளால் நீண்டகாலத்தில் குறைந்தது 12 சதவிகித வருமானம் தர முடியும். ஆகவே, கடனை முன்கூட்டி செலுத்துவதற்குப் பதிலாக மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வது சிறந்தது.
உங்களால் அதிகபட்சம் மாதம் எவ்வளவு இ.எம்.ஐ செலுத்த முடியும் என நினைக்கிறீர்களோ, அந்தத் தொகையை SIP முறையில் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். தேவை ஏற்பட்டால், மியூச்சுவல் ஃபண்ட்களில் உள்ள தொகையை எடுத்து, கடனை முடித்துக்கொள்ளலாம்.
-வரவு வைப்போம்...