Published:Updated:

ரிசர்வ் வங்கி - அரசு மோதலுக்குக் காரணமான 6 விஷயங்கள்!

ரிசர்வ் வங்கி - அரசு மோதலுக்குக் காரணமான 6 விஷயங்கள்!
ரிசர்வ் வங்கி - அரசு மோதலுக்குக் காரணமான 6 விஷயங்கள்!

ரிசர்வ் வங்கி என்பது சுயாட்சி கொண்ட சுதந்திரமான அமைப்பு. ஆனால், சமீபகாலமாக மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை மதிப்பது இல்லை.

ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே முக்கியப் பிரச்னைகளில் கடந்த பல மாதமாக மோதல் இருந்துவந்தபோதிலும், தற்போது அந்த மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளதற்கு ஆறு முக்கிய விஷயங்களே காரணமாகச் சொல்லப்படுகிறது. 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு, `ரிசர்வ் வங்கியின் கவர்னராக இதற்கு முன்னர் இருந்த ரகுராம் ராஜன், அரசு சொல்வதைக் கேட்டு நடப்பதில்லை' என்ற அதிருப்தி, பிரதமர் மோடிக்கும் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கும் இருந்தது. குறிப்பாக, மோடியின் `மேக் இன் இந்தியா' திட்டத்தை விமர்சித்த ரகுராம் ராஜன், `இந்தியாவின் உள்நாட்டுச் சந்தை மிகப்பெரியது என்பதால், இந்தியாவை சர்வதேச நாடுகளுக்கான உற்பத்தி மையமாக உருவாக்குவதற்கு பதில், `இந்தியாவுக்காகத் தயாரிக்கும்' (make for india) திட்டமாக அதன் கொள்கையை மாற்ற வேண்டும்' என்றார். மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையையும் அவர் கடுமையாக விமர்சித்தார். இதனால், ரகுராம் ராஜனை ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றெல்லாம் பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி குரல் எழுப்பினார். 

இந்நிலையில்தான், ரகுராமின் பதவிக்காலம் முடிவடைந்து உர்ஜித் படேல் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டார். இவராவது அரசின் கொள்கைகளோடு ஒத்துழைப்பாரா என மோடியும் அருண் ஜெட்லியும் எதிர்பார்த்தனர். ஆனால், அவருமே முக்கியப் பிரச்னைகளில் கடந்த சில மாதமாக அரசுக்கு எதிரான மாற்றுக் கருத்துகளைத் தெரிவித்துவருகிறார். 

மத்திய அரசை விளாசிய ரிசர்வ் வங்கி அதிகாரி

அவரைத் தொடர்ந்து, அந்த வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா, கடந்த வார இறுதியில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், ``ரிசர்வ் வங்கி என்பது, சுயாட்சிகொண்ட சுதந்திரமான அமைப்பு. ஆனால், சமீபகாலமாக மத்திய அரசு, அதன் சுதந்திரத்தை மதிப்பதில்லை. விரைவிலோ அல்லது கால தாமதமாகவோ சந்தையில் மிகப்பெரிய பொருளாதாரப் பெருந்தீ பற்றிக்கொண்டு சேதத்தை உருவாக்கும். சுதந்திரமான இந்த வங்கியின் முக்கியத்துவத்தை அவர்கள் அப்போது உணர்வார்கள்.

சந்தைக்கு என தனிப்பட்ட ஒழுங்கு இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை ஒருபோதும் மத்திய அரசு அழித்துவிட முடியாது. அதேசமயம், சட்டத்தை மீறி மத்திய அரசு செய்யும் தவறுகளுக்கும் பாவங்களுக்கும் நிச்சயம் விலை கொடுக்க வேண்டியது இருக்கும். `வட்டியைக் கடுமையாகக் குறைத்துவருவது என்பது, அதிகமான கடன் உருவாக்கத்துக்கு வழிவகுக்கும்; பணவீக்கத்துக்குக் கொண்டுசெல்லும். விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும்' என்று கூறுகிறார்கள். ஆனால், அது நீண்டகாலத்துக்கு நிதிச் சிக்கலை உண்டாக்கும்" என்று கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தார். 

உர்ஜித் படேலைத் தொடர்ந்து துணை கவர்னர் விரால் ஆச்சார்யா என அந்த வங்கித் தரப்பிலிருந்து வரும் எதிர் கருத்துகளைக் கண்டு, மத்திய அரசு அதிர்ச்சியடைந்துள்ளது. 

இந்நிலையில், இந்த மோதல் போக்குக்கு இருதரப்புக்கும் இடையேயான தகவல் தொடர்பு முற்றிலும் செயலிழந்துபோனதுதான் காரணம் எனக் கூறப்படுகிறது. உர்ஜித் படேலின் மூன்று ஆண்டு பதவிக்காலம், அடுத்த ஆண்டு செப்டம்பருடன் முடிவடைய உள்ள நிலையில், தற்போதைய மோதலால் அவருக்கு பதவி நீட்டிப்புக் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. பதவி நீட்டிப்புக்காக மத்திய அரசுடன் வளைந்து கொடுத்துச் செல்ல அவர் தயாராக இல்லை எனப் படேலுக்கு நெருக்கமான அதிகாரிகள் கூறுகிறார்கள். 

இந்த நிலையில், ``மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்படுவதில் உர்ஜித் படேலுக்கு முன்னர் அந்தப் பதவியில் இருந்த ரகுராம் ராஜன் எவ்வளவோ பரவாயில்லை" என்று மோடி அரசில் இடம்பெற்றுள்ள பெயர் சொல்ல விரும்பாத அமைச்சர்கள் சிலர் கூறுவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மோதலுக்கான காரணங்கள்

இத்தகைய சூழலில் ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசு ஆறு முக்கியப் பிரச்னைகள் இங்கே...

1. வட்டிவிகிதம்

பணவீக்கத்தைக் கவனத்தில்கொண்டு வட்டிவிகிதத்தைக் குறைக்க ரிசர்வ் வங்கி மறுத்ததோடு மட்டுமல்லாது, அவற்றை அதிகரிக்கவும் செய்ததன் காரணமாகத் தொடங்கியது அரசு தரப்பிலான அதிருப்தி. ஆனாலும், பிறகு அதை ஒழுங்குப்படுத்த அந்த வங்கி தவறவில்லை. இருப்பினும் வட்டிவிகிதத்தை ஒழுங்குப்படுத்துவது தொடர்பாக இருதரப்பும் தத்தமது நிலையில் உறுதியாக இருந்ததால், மோதல் நீடித்தது. 

2. வாராக்கடனை வகைப்படுத்துதல்
 
இந்த ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதியன்று, அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை ஒன்றில், எவையெவை வாராக்கடன்கள் என்பதை வகைப்படுத்துவது தொடர்பான அறிவுறுத்தல்களும், கடன் வழங்குவதற்கான விதிமுறைகளை மாற்றியமைத்ததும் மத்திய அரசைக் கோபம்கொள்ளவைத்தன. `சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் மிகக் கடுமையாக இருப்பதாக, குறிப்பாக வங்கிகள் கடன் வழங்குவது தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும்' என அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், இந்தக் கடுமையான விதிமுறைகள்தான், வங்கிகளின் வாராக்கடன் விகிதத்தைக் குறைக்கும் எனச் சொல்லி, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது ரிசர்வ் வங்கி. 

3. நிரவ் மோடி ஊழல்

மேற்கூறிய சுற்றறிக்கை அனுப்பப்பட்ட நேரத்தில்தான் நிரவ் மோடியின் ஊழல் விவகாரம் வெடித்துக் கிளம்பியது. `ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில்தான் பொதுத்துறை வங்கிகள் செயல்படுகின்றன. அப்படி இருக்கையில்,  இந்த ஊழலைக் கண்காணிக்கத் தவறியது எப்படி?' என மத்திய அரசு தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டதோடு, பொதுத்துறை வங்கிகளுக்கு, தனியார் வங்கிகள் போன்று கூடுதலான கண்காணிப்பு அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. 

4. தனியார் நிதி நிறுவனங்கள்

ஐஎல்&எஃப்எஸ் தனியார் நிதி நிறுவனம் நிதிச் சிக்கலில் சிக்கியதைத் தொடர்ந்து,  ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடு காரணமாக, என்பிஎஃப்சி (Non Banking Financial Company -NBFC) எனப்படும் தனியார் நிதி நிறுவனங்களுக்கு பொதுத்துறை வங்கிகள் மூலம் பெரிய அளவில் கடன் கிடைப்பது குறைந்துபோனது. இதனால், அவை பணப்புழக்கமின்றி தவித்துவருகின்றன. அந்த நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில்,  கடன் வழங்குவது தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என அரசு தரப்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. 

5.  நிர்வாகக் குழுத் தலைவர் பதவி நீக்கம்

கடந்த செப்டம்பர் மாதம், ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ள தலைவர்களில் ஒருவரான நாச்சிகெட் மார் என்பவர், பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுக்கு முன்னதாகவே, அந்தக் குழுவிலிருந்து நீக்கப்பட்டார். இதுகுறித்து அவருக்கு முன்கூட்டியே எதுவும் தெரிவிக்கப்படவும் இல்லை. இது, அந்த வங்கித் தலைமையை வெகுவாக ஆத்திரப்படுத்தியது. டிவிடெண்டை அதிகப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாலேயே, அவர் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. 

6. அரசின் பரிந்துரையும் ரிசர்வ் வங்கியின் நிராகரிப்பும்

பேமென்ட் (payment) துறைகளிடையே போட்டியை அதிகரிக்கவும், நுகர்வோர் பாதுகாப்புக்காகவும், இந்தத் துறையை விரிவுபடுத்துவதற்காகவும் பேமென்ட் அண்ட் செட்டில்மென்ட் (payment and settlement system- PSS) முறையை ஏற்படுத்துமாறு ரிசர்வ் வங்கிக்கு, மத்திய அமைச்சகங்களுக்கு இடையேயான கமிட்டி பரிந்துரைத்தது. ஆனால், அதை ஏற்க அந்த வங்கி மறுத்துவிட்டது. இதுவும் இருதரப்புக்குமான மோதலை அதிகரிக்க இன்னொரு காரணமாக அமைந்துவிட்டது. 

இந்த நிலையில், ரிசர்வ் வங்கிக்கும் தங்களுக்கும் இடையே மோதல் எதுவுமில்லை என்றும், அதன் அதிகார வரம்பை அரசு முடக்கப்பார்ப்பதாகவும் கூறப்படுவதை மறுப்பதாக மத்திய அரசு தரப்பில் கூறுகின்றனர். வங்கித் துறையின் வளர்ச்சி கருதியே சில யோசனைகளை தாங்கள் கூறுவதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். ஆனால், ரிசர்வ் வங்கி தனது மறுப்புகள் மற்றும் நிராகரிப்புகள் மூலம் மத்திய அரசுக்கான  தனது பதிலைத் தெரிவித்துக்கொண்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு