அலசல்
Published:Updated:

ஜூனியர் 360: பள்ளிகளை மூடு... மருத்துவமனைகளை மூடு!

ஜூனியர் 360: பள்ளிகளை மூடு... மருத்துவமனைகளை மூடு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூனியர் 360: பள்ளிகளை மூடு... மருத்துவமனைகளை மூடு!

ராங் ரூட்டில் ரயில்வே

ஜூனியர் 360: பள்ளிகளை மூடு... மருத்துவமனைகளை மூடு!

யில்வே பள்ளிக்கூடங்களை மூடப் போவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட உத்தரவால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகுவதற்குள், இப்போது ரயில்வே மருத்துவமனைகளை மூடப்போவதாக வெளியாகியுள்ள செய்தியால் அதிர்ச்சி மேலும் அதிகரித்துள்ளது.

“ரயில்வே ஸ்கூல்ஸ் எல்லாத்தையும் திடீர்னு மூடுறாங்க. இங்கே படிக்கிற மாணவர்களை வேற பள்ளிகள்ல சேர்க்கச் சொல்லிட்டாங்க. டீச்சர்ஸையும், மற்ற ஸ்டாஃப்ஸையும் என்ன செய்யப்போறாங்கனு தெரியல. டீச்சர் ஆவதுதான் என் சிறு வயதுக் கனவு. இது, எனக்கு ரொம்ப பிடிச்ச, நான் விரும்பிச் செய்யிற வேலை. வேற ஏதாவது ஒரு வேலை கொடுத்தாங் கன்னா, அதை என்னால செய்ய முடியாது. என்னை மாதிரியே இங்கே வேலை செய்யிற டீச்சர்ஸும், ஸ்டாஃப்ஸும் ரொம்ப மன அழுத்தத்துல இருக்காங்க. எங்க எதிர்காலம் என்ன ஆகப்போகுதோ தெரியல” என்று சொல்லும்போது, அந்த ரயில்வே பள்ளி ஆசிரியையின் கண்களில் கண்ணீர் முட்டுகிறது.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், ரயில்வே துறையில் பணியாற்றும் ஆங்கிலேயர்களின் பிள்ளைகள் படிப்பதற்காக நாட்டின் பல பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டன. நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளிகள், சென்னை, திருச்சி, மதுரை, அரக்கோணம், ஈரோடு, ஜோலார்பேட்டை, போத்தனூர், விழுப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. சுதந்திரத்துக்குப் பிறகு, ரயில்வே பணியில் இல்லாதவர்களின் பிள்ளைகளையும் இந்தப் பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளப் பட்டனர். மிகக் குறைந்த கட்டணத்தில், ஏழை எளிய குடும்பங்களின் பிள்ளை களும் இங்கு கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிகள் அனைத்தும் மூடப்படும் என்ற தெற்கு ரயில்வேயின் திடீர் அறிவிப்பு, இங்கு படித்துவரும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், சில நூறு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஆகியோர் தலையில் பேரிடியாக இறங்கியுள்ளது.

ஜூனியர் 360: பள்ளிகளை மூடு... மருத்துவமனைகளை மூடு!

‘தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இயங்கிவரும் ரயில்வே பள்ளிகள் 2019-ல் மூடப்படும். இங்கு படிக்கும் குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்க்குமாறு பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தின் மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இந்தப் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கையை நடத்தக் கூடாது’ என ரயில்வே பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தப் பள்ளிகளில் படித்துவதும் சுமார் 6,800 மாணவர்கள், இங்கு பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர். இங்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் ரயில்வே பள்ளிகள் இழுத்து மூடப்பட்டு வருகின்றன.

அடுத்ததாக, ரயில்வே மருத்துவமனைகளையும் மூடப்போவதாக வெளியாகியுள்ள செய்தி, இந்த மருத்துவமனைகளை நம்பியுள்ள ரயில்வே தொழிலாளர்களைப் பெரிதும் கவலையடையச் செய்துள்ளது.

“நான் ரயில்வேயில் ‘சஃபைவாலா’ வேலை செய்தேன். ரயில்வே ஸ்டேஷனைப் பெருக்குற வேலைதான் எனக்கு. ரயில்வேயில் வேலை பார்த்த என் கணவர் இறந்ததுட்டதால, எனக்கு வேலை கெடைச்சது. நான் ரிட்டயராகி ரெண்டு வருஷமாகுது. சுகர், பீ.பி-க்கு பெரம்பூர் ரயில்வே ஆஸ்பத்திரியில வைத்தியம் பாத்துட்டு வர்றேன். சமீபத்தில எனக்கு ரெண்டு கிட்னியும் ஃபெயிலியர் ஆயிடுச்சு. ரயில்வே ஆஸ்பத்திரியிலதான் இலவசமா டயாலிசிஸ் பண்ணிட்டு இருக்கேன். என்னை மாதிரி பல ஆயிரம் ரயில்வே ஊழியர்களுக்கு இந்த ஆஸ்பத்திரி ஒரு வரப்பிரசாதம். இதை மூடப்போறதா பேப்பர்ல செய்தி பார்த்து ரொம்ப அதிர்ச்சியாயிட்டேன். மனசே சரியில்லை. தனியார் ஆஸ்பத்திரிக்குப் போய் டயாலிசிஸ் பண்ற அளவுக்கு எனக்கு வசதி இல்லை” என்று சோகத்துடன் சொன்னார் ராஜலட்சுமி.

சென்னை அயனாவரத்தில் அமைந்துள்ள ரயில்வே மருத்துவமனை, ரயில்வே தொழிலாளர்களுக்காக பிரிட்டிஷ் அரசால் 1925-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 500 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் சிகிச்சை, மருந்துகள் என அனைத்தும் இலவசம். தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள், சுமார் ஒன்றரை லட்சம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என சுமார் ஐந்து லட்சம் பேர் பயனடைந்துவருகிறார்கள். காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவம் தொடங்கி இதய அறுவை சிகிச்சை வரை பல சிறப்பு மருத்துவப் பிரிவுகள் இந்த மருத்துவமனையில் உண்டு. பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் டி.ஜே.செரியன் இந்த மருத்துவமனையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூனியர் 360: பள்ளிகளை மூடு... மருத்துவமனைகளை மூடு!

இந்த மருத்துவமனையை மட்டுமல்ல, அரக்கோணம், திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டுவரும் மருத்துவமனை களையும் மூட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்தியா முழுவதும் செயல்பட்டுவரும் ரயில்வே மருத்துவமனை களில் 2,597 டாக்டர்களும், 54,000 துணை மருத்துவப் பணியாளர்களும் பணியாற்றி வருகிறார்கள். இவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த மருத்துவமனை கள், தனியார் மருத்துவமனைகளுடன் இணைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

‘மக்கள் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட அனைத்தையும் மூடிவிட வேண்டும்’ என்பதில் மன்மோகன்சிங் அரசைவிட பல மடங்கு வேகத்தில் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது நரேந்திர மோடி அரசு. இந்திய ரயில்வேயை ‘மறுசீரமைப்பு’ செய்வதற்காக ஒரு கமிட்டியை அமைத்தது மத்திய அரசு. ரயில்வே பள்ளிகள் மற்றும் ரயில்வே மருத்துவமனைகள் உள்பட எல்லா வற்றையும் மூடுவதற்கும், ரயில்வேயை கார்ப் பரேட்களுக்கு தாரை வார்ப்பதற்கும் அச்சாரம் போடுவதாக விவேக் தேப்ராய் கமிட்டியை அது அமைந்தது. இந்த கமிட்டி பல ‘முக்கிய’ பரிந்துரைகளை அளித்துள்ளது. அதன் விளைவுதான், இந்த மூடல் நடவடிக்கை.

“மைய (Core) வேலைகளை மட்டும்தான் ரயில்வே செய்ய வேண்டும்; மையம் அல்லாத (Non Core) வேலைகளை ரயில்வே செய்யக் கூடாது என்பது விவேக் தேப்ராய் கமிட்டியின் முக்கியமான பரிந்துரை” என்கிறார் தட்சிண ரயில்வே தொழிலாளர்கள் சங்கத்தின் (டி.ஆர்.இ.யூ) அகில இந்திய துணைத் தலைவர் ஆர்.இளங்கோவன்.

‘‘அது என்ன மைய (Core) வேலைகள், மையம் அல்லாத (Non Core) வேலைகள்?”

“ரயில்களை இயக்குவது என்பதுதான் ரயில்வேயின் மைய வேலை. இது தவிர, கேட்டரிங், பாதுகாப்பு, தூய்மைப்பணி, பராமரிப்பு என எல்லாமே மையம் இல்லாத வேலைகள். இவை எல்லாவற்றையும் அவுட்சோர்சிங் செய்துவிட வேண்டும் என்கிறது விவேக் தேப்ராய் கமிட்டி. அதன்படி கேட்டரிங், ரயில்களைச் சுத்தம் செய்தல், ரயில் நிலையங்களைச் சுத்தம் செய்தல், பணிமனைகளைச் சுத்தம் செய்தல் போன்றவற்றை அவுட்சோர்சிங் கொடுத்து விட்டனர். ‘ரயில்வே பாதுகாப்புப்படை என்கிற ஓர் அமைப்பு தேவையே இல்லை’ என்பது இந்த கமிட்டியின் ஆபத்தான பரிந்துரைகளில் ஒன்று. அதாவது, ஆர்.பி.எஃப் எனப்படும் ரயில்வே பாதுகாப்புப்படையை இனி கலைத்துவிடுவார்கள். அதற்குப் பதிலாக, அந்தப் பணியை தனியார் செக்யூரிட்டி ஏஜென்சியிடம் ஒப்படைத்து விடுவார்கள். ரயில்களில் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், இது எந்த அளவுக்குப் பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பது எல்லோருக்குமே புரியும்.

ரயில்வேயில் தனியாருக்குச் சமவாய்ப்பு வழங்க வேண்டும் என்பது இந்த கமிட்டியின் முக்கியப் பரிந்துரை. பயணிகள் ரயில்களையும் சரக்கு ரயில்களையும் இயக்குவதற்கு உள்நாட்டுத் தனியார் நிறுவனங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப் போகிறார்கள். இவற்றையெல்லாம் அமல்படுத்த, ‘ரயில்வே வளர்ச்சி ஆணையம்’ அமைக்கப் போகிறார்கள். அதற்காக, மத்திய அமைச்சரவை யில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ரயில்வே சட்டத்தைத் திருத்தியே ரயில்வே ஆணையம் அமைக்க வேண்டும் என்று பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஒரு நிர்வாக உத்தரவு மூலம் அந்த ஆணையத்தை மத்திய அரசு அமைக்கிறது.

ஜூனியர் 360: பள்ளிகளை மூடு... மருத்துவமனைகளை மூடு!

ரயில்வே வளர்ச்சி ஆணையம் அமைக்கப்பட்டு விட்டால், அனைத்தையும் அதுதான் முடிவு செய்யும். ரயில்வே நேர அட்டவணை, வழித்தடங்கள் உள்பட அனைத்தையும் அந்த ஆணையமே முடிவு செய்யும். தனியாரை அனுமதிப்பதால், அரசு இயக்கும் ரயில்களில் பாதி குறைந்துவிடும். பாதி ரயில்கள் தனியாருக்குப் போய்விட்டால், ரயில்வே தொழிலாளர்களில் பாதிப் பேர் வேலையை இழப்பார்கள். முக்கிய ரூட்களைத் தனியாருக்குக் கொடுத்துவிடுவார்கள். இதனால், ரயில்வேயின் வருமானத்தில் பாதி குறைந்துவிடும். உபரியாகும் பாதித் தொழிலாளர்களுக்கு சம்பளம் தரமாட்டார்கள். தெற்கு ரயில்வேயில் ஒரு லட்சம் தொழிலாளர்களும், சுமார் ஒன்றரை லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். தெற்கு ரயில்வேயின் வருவாய் 100 ரூபாய் என்றால், செலவு 153 ரூபாய். இதைச் சரிசெய்து வருவாயை அதிகரிக்கும் முயற்சியில் ரயில்வே நிர்வாகம் இறங்கவில்லை. மாறாக, கூடுதல் செலவை, மற்ற ரயில்வேக்களின் வருவாயை வைத்து ஈடுகட்டுகிறார்கள். தனியார் வந்துவிட்டால், தெற்கு ரயில்வே இருக்காது. மானியமும் கிடைக்காது. உபரியாகும் தொழிலாளர்களும் ஓய்வூதியதாரர்களும் பாதிக்கப்படுவார்கள். ரயில்வேயில் இனி தனியார் வேலைவாய்ப்புகள் தான் என்பதால், பணிப்பாதுகாப்பு இருக்காது. எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி உள்ளிட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுவரும் இட ஒதுக்கீடு இருக்காது.

அந்த ஆணையம்தான் ரயில் கட்டணங்க ளையும் தீர்மானிக்கும். தற்போது, பயணிகள் கட்டணங்களுக்கு மானியம் அளிக்கப்பட்டு வருகிறது. ரயிலில் ஒரு பயணியை ஏற்றிச் செல்ல ரூ. 100 செலவாகிறதென்றால், அதில் 53 ரூபாய் மட்டுமே பயணிகளிடம் வசூலிக்கப் படுகிறது. மீதி 47 ரூபாயை மானியமாக அரசு தருகிறது. அந்த மானியம், சரக்கு ரயில் கட்டணங்கள் மூலம் கிடைக்கும் வருவாயி லிருந்து தரப்படுகிறது. மானியமே கூடாது என்று மத்திய அரசு சொல்கிறது. அதனால் ரயில் கட்டணங்கள் உயரும்” என்ற எச்சரிக்கையுடன் முடித்தார் இளங்கோவன்.

இந்த விவகாரம் குறித்து தெற்கு ரயில்வேயின் தலைமைத் தகவல்தொடர்பு அதிகாரி தனஞ்செயனிடம் கேட்டோம். “மையம் அல்லாத பணிகளைக் கைவிட வேண்டும் என்று விவேக் தேப்ராய் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. ஆனால், இங்கு ரயில்வே மருத்துவமனைகள் அவற்றுக்கான முக்கியத்துவத்துடன் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. ரயில்வே மருத்துவமனைகளை மூடுவது பற்றியோ, தனியார்மயம் ஆக்குவது பற்றியோ இதுவரை எந்தவொரு திட்டமும் இல்லை. ரயில்வே பள்ளிகளைப் பொறுத்தவரை, அந்தப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்துவிட்டது. மேலும், அந்தப் பள்ளிகளுக்கான செலவு பெருமளவில் அதிகரித்துவருகிறது. எனவே, அந்தப் பள்ளிகளை மூடிவிட ரயில்வே வாரியம் முடிவெடுத்துள்ளது. மாணவர் சேர்க்கை நிறுத்துமாறு சில பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார் சுருக்கமாக.

ரயில் தொழிலாளர்கள், அவர்களின் பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் மீதான அக்கறையில் பள்ளிக்கூடங்களையும், மருத்துவமனைகளையும் ஆங்கிலேய அரசு திறந்தது. யார் மீதான அக்கறையில் இவற்றையெல்லாம் மோடி அரசு மூடுகிறது? உலகிலேயே அதிகம் பேர் பணிபுரியும் நிறுவனங்களின் பட்டியலில், எட்டாவது இடத்தில் உள்ளது இந்திய ரயில்வே. இந்த நிறுவனத்தை, அதன் பெருமை சிதையாமல் காப்பாற்றுவதே சரியான முடிவாக இருக்கும்.

- ஆ.பழனியப்பன்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்