
நெடுவாசல் மக்கள் எதிர்பார்ப்பு
மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பல மாதங்களாக அச்சத்தின் பிடியில் இருந்துவந்த நெடுவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இப்போது அமைதி திரும்பியுள்ளது. நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவிக்கப்பட்டதால், ஊர் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
“10 ஏக்கரில் பண்ணையம் பார்த்துட்டு வர்றோம். அதை ஒட்டுமொத்தமா பாழாக்கத் துடிக்கிறாங்க. ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட்டுட்டதா இப்போ சொல்றாங்க. இதுக்கு பதிலா இந்தத் திட்டத்துக்கு வேற இடம் கேட்குறாங்களாம். எங்கள் நிலத்துல மாத்திரமல்ல, பயிர் விளையிற எந்த நிலத்துலயும் இதுமாதிரியான திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது. ஏன்னா, விளைஞ்சாதானே சோறு...” என்று வெள்ளந்தியாகப் பேசினார், நெடுவாசல் மேலத்தெருவைச் சேர்ந்த அலமேலு.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு 2017 பிப்ரவரி 16-ம் தேதி மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நெடுவாசலைச் சுற்றியுள்ள நல்லாண்டார்கொல்லை, வடகாடு, கருக்காகுறிச்சி, கோட்டைக்காடு உள்பட பல பகுதிகளில் தன்னெழுச்சியாக மக்கள் போராடினார்கள். குறிப்பாக, 180 நாள்களுக்கும் மேல் நெடுவாசலில் மக்கள் போராடினர். இப்போது, இத்திட்டத்தைக் கைவிடுவதாக, இங்கு ஒப்புதல் பெற்றிருந்த ஜெம் லேபாரட்ரீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
நெடுவாசல் போராட்டக்குழுவைச் சேர்ந்த ‘பசுமை’ ராமநாதன், “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எங்கள் பகுதிகளில் செயல்படுத்த அறிவிப்பு வெளியானதும் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். வெளிநாடுகளில் இருக்கும் எங்கள் பகுதி இளைஞர்கள், இந்தத் திட்டத்தால் வரும் ஆபத்துகள் குறித்து எங்களுக்கு விளக்கினர். பொன்விளையும் பூமியான எங்கள் ஊரை இது அழித்துவிடும் என்பதால், எதிர்த்துப் போராடினோம். இது எங்களின் வாழ்வாதாரப் பிரச்னை என்பதால், சுமார் 50 கிராம மக்கள் உணர்வுப்பூர்வமாக ஒன்றிணைந்து போராடினோம். அதன் விளைவாக, ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த டெண்டர் எடுத்துள்ள ஜெம் நிறுவனம், இந்தத் திட்டத்தைக் கைவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசு இந்த சுரங்கக் குத்தகையை ஓ.என்.ஜி.சி-யிடமிருந்து ஜெம் நிறுவனத்துக்கு மாற்றி வழங்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. எங்களுக்காகக் குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி” என்றார் மகிழ்ச்சியுடன்.

தமிழர் நல பேரியக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் நெடுவை பல.திருமுருகன், “ஜெம் நிறுவனம் தனது ஒப்பந்தத்தை பிப்ரவரி மாதமே கைவிட்டுவிட்டது. அடுத்ததாக, இந்தத் திட்டத்தைப்போல 24 திட்டங்களுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஜெம் நிறுவனம் வெளியேற விரும்புகிறதே தவிர, நெடுவாசல் திட்டத்தைக் கைவிடும் உரிமை மத்திய அரசிடம் மட்டுமே உள்ளது. எனவே, இங்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாது என்பதை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மேலும், போராடியவர்களுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார்.
- சி.ய.ஆனந்தகுமார், படங்கள்: ம.அரவிந்த்