அலசல்
Published:Updated:

நோயாளி ஆக்கும் மருத்துவக்கழிவு ஆலை!

நோயாளி ஆக்கும் மருத்துவக்கழிவு ஆலை!
பிரீமியம் ஸ்டோரி
News
நோயாளி ஆக்கும் மருத்துவக்கழிவு ஆலை!

நோயாளி ஆக்கும் மருத்துவக்கழிவு ஆலை!

‘‘இங்கு செராமிக் தொழிற்சாலை வர்றதா சொன்னாங்க. ஊர் மக்களுக்கு வேலை கிடைக்கும்னு சந்தோஷப்பட்டோம். முன்பகுதியில் பெயருக்கு செராமிக் தொழிற்சாலை அமைத்துவிட்டு, பின்பகுதியில் மருத்துவக் கழிவை எரிக்கும் ஆலையை அமைப்பது அப்புறம்தான் தெரிந்தது. ஏற்கெனவே அருகிலுள்ள சர்க்கரை ஆலையால் எங்களின் நிலத்தடி நீர் கெட்டுப் போச்சு. இந்த ஆலையும் இங்கு வந்தால், ஊரே பாலைவனமாகிடும். மருத்துவக் கழிவுகளை இங்கே எரிப்பதாலும், புதைப்பதாலும் நாங்க நிரந்தர நோயாளிகளா ஆகிடுவோம். இதை எதிர்த்துப் போராடினா, எங்கள்மீது பொய் வழக்குகள் போடறாங்க. எங்கள் உயிரை எடுக்க வர்ற ஆலையை, உயிரைக் கொடுத்தாவது தடுப்போம்’’ என்று கொந்தளித்தார் தே.புடையூர் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ்.

நோயாளி ஆக்கும் மருத்துவக்கழிவு ஆலை!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள தே.புடையூர் கிராமத்தில் புதுச்சேரி திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் என்ற மருத்துவக் கழிவு எரிப்பு ஆலை அமைக்கப்படுவதை எதிர்த்துப் போராட்டங்கள் நடக்கின்றன. மருத்துவக் கழிவுகளை எரிக்கும்போது வெளியேறும் புகையால் கிராம மக்களுக்கு புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படும். ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால், நீர் நிலைகள் பாதிக்கப்படும், கால்நடைகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனக் கூறிப் போராடுகிறார்கள் மக்கள்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருத்தாசலம் வட்ட செயலாளர் அசோகன், ‘‘பக்கத்திலேயே வேப்பூர் அருகே மக்கள் வசிக்காத பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடம் நிறைய இருக்கும்போது, இந்த ஆலையை இங்கு ஏன் அமைக்க வேண்டும்? கடலூர் கலெக்டர் கிராமத்தை ஆய்வு செய்தபோது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறோம்’’ என்றார்.

ஆலை நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘‘எங்களுடையது தனியார் ஆலை என்றாலும், இது தமிழக அரசின் வழிகாட்டுதலுடன் கூடிய மருத்துவத் திடக்கழிவு மேலாண்மை நிலையம்தான். தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியம், சுகாதாரத் துறை மற்றும் இந்திய மருத்துவர் சங்க வழிகாட்டுதலின்படியே இங்கு இது அமைகிறது. தமிழகத்தில் ஏழு இடங்களில் இப்படி ஆலைகள் உள்ளன. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட மருத்துவக் கழிவுகளுக்காக இங்கு ஆரம்பிக்கப்பட உள்ளது. எங்களுக்கு நாளொன்றுக்கு அரசு ஒதுக்கீடு 10 டன் மட்டுமே. இதில், பிளாஸ்டிக் போன்ற மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள் ஐந்து டன் போக மீதமுள்ளது மட்டுமே எரிக்கப்படும். அதுவும் 900 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் எரிக்கப்பட்டு, 30 அடி உயரமுள்ள புகைபோக்கி மூலம் குறைந்த அளவு புகை மட்டுமே வெளியேற்றப்படும். தவிர, கழிவுகளில் உள்ள கண்ணாடி போன்ற வேஸ்ட் பொருட்களும் வேறு தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அவை இங்கு புதைக்கப்படாது’’ என்றனர்.

நோயாளி ஆக்கும் மருத்துவக்கழிவு ஆலை!

கடலூர் கலெக்டர் தண்டபாணி, ‘‘அரசின் அனைத்துத் துறைகளிலும் அனுமதிபெற்று, நன்கு ஆராய்ந்தே இந்த இடம் தேர்வுசெய்யப்பட்டது. கிராமத்திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலிருந்து 75 கி.மீ தூரத்துக்குள் மருத்துவக் கழிவுகளைப் பாதுகாப்பாக மறுசுழற்சி செய்யவும் எரிக்கவும் பாதுகாப்பான நிலையம் இல்லை என்பதால், இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆபத்து இல்லை. அச்சம் காரணமாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

- ஜி.சதாசிவம், படங்கள்: எஸ்.தேவராஜன்