Published:Updated:

“அதாவது கண்ணுங்களா!” - 8 - “எனக்கு அந்த சாக்லேட் வேணும்!”

“அதாவது கண்ணுங்களா!” - 8 - “எனக்கு அந்த சாக்லேட் வேணும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“அதாவது கண்ணுங்களா!” - 8 - “எனக்கு அந்த சாக்லேட் வேணும்!”

ஜான்ஸி ராஜா

ருகருவென ‘ஹிப்பி’ ஹேர் ஸ்டைலுடன் அந்தத் துணைவேந்தர் நடந்துவரும் கம்பீரமே தனி. ஒரே ‘ரிங்’கில் போனை எடுத்து, ‘‘யெஸ், ஐ ஆம்...’’ என்று பதிலளிக்கக் கூடியவர். தலைநகரில் இவர் அறிமுகம் இருந்தவர்கள், ஆண்டுதோறும் டபுள் டிஜிட்டில் யூனிவர்சிட்டியில் ‘சீட்’ வாங்கிக்கொண்டிருந்த காலமும் இருந்தது. எந்த இடையூறும் இல்லாமல் இரண்டாவது முறையாகத் தன்னுடைய  பதவியை ‘ரென்யூவல்’ செய்துகொண்டு பலரை வியப்பில் ஆழ்த்தினார்.

துணைவேந்தரின் ஆசைக்கும், அவர் விரும்பும் விஷயங்களைப் பெறுவதற்கும் புதுசு புதுசாகக் கல்லூரிப் பெண்கள் அவருடைய தேவைப்பட்டியலில் எப்போதும் இருப்பார்கள். அதற்கெல்லாம் அவருக்கு ஒரு பெண் சாமியார்தான், வரம் கொடுக்கும் சாமி. ‘குறி’ சொல்லும் சாமியாடி அல்ல, கார்ப்பரேட் சாமியார்களுடன் டெக்னாலஜி தொடர்பில் இருந்த பெண் சாமியார் அவர். பெயர், மேகலை என்று வைத்துக்கொள்வோமே! ஹிப்பி வேந்தர் மட்டும், நெருக்கத்தின் காரணமாக செல்லமாக வேறு பெயர் வைத்துக் கூப்பிடுவார்.

ஈ.சி.ஆர்., கோவளம் என்று தகதகக்கும் கடற்கரை ஏரியா ரிசார்ட்களிலும், தனி ஆவர்த்தன மாளிகைகளிலும் ‘மேகலை’க்குத் தனி மரியாதைதான். ஆயிரம் வீடுகளில் மேகலையின் பெயர் உச்சரிக்கப்பட்டாலும் அவருக்கென ஒரு வீடு, சென்னை கோட்டூர்புரம் பக்கத்தில் இருக்கிறது. ஹிப்பி வேந்தரின் வீடோ, ‘கோட்டம்’ பக்கத்தில். கோட்டம் வீட்டுக்கும் கோட்டூர்புரம் வீட்டுக்கும் வந்துபோகாத கார்ப்பரேட் சாமியார்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆசிரமப் பணிவிடைகளை(?)ச் செய்யவும், ஆசிரமப் பின்புலத்தில் இயங்கும் கல்வி நிறுவனங்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும் ‘ஹிப்பி’யின் பங்களிப்பு அந்தக் காலகட்டத்தில் அதிகம் தேவையாக இருந்தது.

“அதாவது கண்ணுங்களா!” - 8 - “எனக்கு அந்த சாக்லேட் வேணும்!”

அட்மிஷனுக்கு வரும் மாணவிகள், ஹிப்பியோ, மேகலையோ வைக்கும் ‘அட்ஜெஸ்ட்மென்ட்’ தேர்வில் பாஸாகிவிட்டால் ஹிப்பியின் வீட்டுக்கும், மேகலையின் வீட்டுக்கும் போக்குவரத்தாக இருப்பார்கள். ஏதாவது ஒரு காரணத்தின் அடிப்படையில் அங்கே திரும்பத் திரும்ப வரவழைக்கப்படுவார்கள். டொனேஷனைக் கொட்டிக் கொடுக்க முடிகிற, அல்லது மேலிடப் பரிந்துரையில் வரக்கூடிய பெண்களுக்கு இடம் கிடைப்பதில் எந்த சிரமமும் இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு ஹிப்பியின் அலுவலக அறையிலேயே எல்லாம் நல்லபடியாக முடிந்துவிடும்... எந்த வீட்டுக்கும் போக வேண்டிய அவசியமும் இல்லை. கரன்ஸியைக் கொட்டிக் கொடுக்கவும் வழியில்லை... படித்தும் தீர வேண்டும் என்று இருந்தால், அந்த இரண்டு வீடுகள்தான் ஒரே வழி. அங்கிருந்துதான் ஈ.சி.ஆர்., ஓ.எம்.ஆர்., கோவளம், கடற்கரை ஏரியா ரிசார்ட்கள் என்று அடுத்த நிலை ஆபத்துப் பயணம் ஆரம்பிக்கும்.

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் அனாமிகா. பெயரில் மேல்தட்டு வாசம் தெரிந்தாலும், அலுமினியத் தட்டுகூட இல்லாத மண் வீட்டில்தான் அனாமிகாவின் குடும்பம் இருந்தது. பழைய சைக்கிள், ஓர் இரும்புக் கடாய், வறுப்பதற்காகக் காத்திருக்கும் வேர்க்கடலைக் கொத்து ஆகியவைதான் அனாமிகாவின் அப்பாவுக்கு சொத்து. டாஸ்மாக் கடைப்பக்கம் போய் நின்று ‘டங் டங் னங் னங்’ என கரண்டியால் இரும்புக் கடாயைத் தட்டித்தட்டி கஸ்டமரைப் பிடித்தால்தான் அனாமிகா வீட்டில் சாப்பாட்டுக்கு உத்தரவாதம். அப்படிப்பட்ட வீட்டில் பிறந்தாலும், படிப்பில் சுட்டியாக இருந்தார். அனாமிகா பெற்ற ப்ளஸ் டூ மதிப்பெண், மாவட்ட அளவில் அவருக்கு இரண்டாமிடம் வாங்கிக் கொடுத்திருக்கிறது என்று பள்ளியில் மகிழ்ச்சியுடன் சொன்னபோது, ஏரியாவில் எல்லோருக்கும் ஐம்பது பைசா சாக்லேட் கொடுத்து மகிழக்கூட சக்தியில்லை.
 
ரிசல்ட் வந்தபோது செய்தித்தாளில் வெளியான அனாமிகாவின் போட்டோதான் அவள் வாழ்க்கையையே திசைமாற்றிப் போட்டது. திருவொற்றியூரில் இருக்கும் அந்த மண்குடிசை வீட்டைத் தேடி ஒருநாள் மேகலை வந்தார். பொதுவாக மேகலை இப்படி யாரையும் நேரில் தேடிப் போய்ப் பார்ப்பதில்லை. யாரையாவது பிடித்து, அவர்கள் மூலமாகவே பேசி, சம்பந்தப்பட்ட பெண்ணையே தன்னைப் பார்க்க வரும்படி செய்துவிடுவார். அல்லது, தேவை இருப்பவர்கள் தேடி வந்துவிடுவார்கள். அனாமிகா விஷயத்தில் மேகலை நேரில் வருவதற்கு முக்கியக் காரணம், அந்த ஆசிரமம். பிரபல நாளிதழில் கட்டை விரலை உயர்த்திக் காட்டியபடி உதடு சுழித்துச் சிரிக்கும் அனாமிகாவின் புகைப்படத்தை ஆசிரமத் தலைமை பார்த்துவிட்டது. அந்த நிமிடத்திலிருந்து அந்த சுவாமிஜிக்குத் தூக்கம் வரவில்லை. ‘‘எனக்கு அந்த சாக்லேட் கண்டிப்பாக வேணும்’’ என்று குழந்தை போல் அடம்பிடித்த சுவாமிஜியின் எண்ணத்தை முடித்தால் கிடைக்கப் போகும் வாழ்க்கையை நினைத்துப் பார்த்தார் மேகலை. அந்த நினைப்பே இனிக்க, அதே வேகத்தில் அனாமிகாவைத் தேடிப்போனார். நண்பகல் நேரம் அது. அனாமிகாவைப் பார்த்ததும், ஸ்வீட் பாக்ஸைத் திறந்து, யார் அனுமதியையும் கேட்காமலே அனாமிகாவுக்கு ஊட்டிவிட்டார். பொதுவாகவே வரையறுக்கப்பட்ட வறுமைக் கோட்டையும் தாண்டிவிட்டவர்களிடம் இப்படியான ஆதிக்கத்தை எளிதில் செலுத்தலாம் என்பது மேகலையின் கணக்கு.

அனாமிகா, அவள் பெற்றோர், அக்கம்பக்கத்து மக்கள் என்று எல்லோரும் மேகலையின் தோரணையை வியப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். பிரபல தனியார் நிறுவனத்தின் வைஸ் பிரசிடென்ட் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார். ‘‘நீ இங்கே இருக்க வேண்டிய பொண்ணே இல்ல கண்ணு’’ என்று உருகியவர், அனாமிகாவின் அம்மா கையில் நூறு ரூபாய் நோட்டுக்கட்டுகள் இரண்டைத் திணித்தார். ‘‘முதல்ல நல்ல புடவையா வாங்கிக் கட்டும்மா. நாலஞ்சு பாத்திரங்களை வாங்கிப் போடு, அனாமிகாவுக்கும் இப்பவே போயி, நல்ல டிரஸ்ஸா எடுத்துக் கொடு. நான் மறுபடியும் சாயந்திரம் வர்றேன்... ரெடியா இருங்க. அனாமிகா வாங்கின மார்க்குக்கு அவ எங்கேயோ போயிடுவா! படித்துக்கொண்டே, கைநிறைய சம்பாதிக்க நான் ஏற்பாடு பண்றேன்’’ என்று சொல்லிவிட்டு மேகலை கிளம்பினார்.

“அதாவது கண்ணுங்களா!” - 8 - “எனக்கு அந்த சாக்லேட் வேணும்!”

சொன்னபடி மாலையில் வந்த மேகலை, அனாமிகாவையும் அவள் பெற்றோரையும் அழைத்துக்கொண்டு போனார். அப்போது ‘பீக்’கில் இருந்த சாமியாருக்குச் சொந்தமான ஆசிரம பங்களா அது. கதவைத் திறந்ததும் ஏர்கண்டிஷன் குளிர்காற்று வந்தது. குட்டை கவுனுடன் ரிசப்ஷனில் வரவேற்ற பெண், அலங்காரப் பொருட்கள் குவிந்திருந்த வரவேற்பறை, என்ட்ரியை அனுமதிக்கும் பன்ச் கார்டு என அந்த இடம் அனாமிகாவுக்கு ஐ.டி கம்பெனி போலத்தான் தெரிந்தது. லிஃப்ட்டில் நான்காவது மாடிக்குப் போய் அங்கிருந்த ரெஸ்டாரென்டில் அனைவரும் சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்ததும், கோட் சூட்டுடன் வந்த மூன்று பேர் அனாமிகாவை இன்டர்வ்யூ செய்தனர். அடுத்த ஒரு மாத காலம் அடிக்கடி ஆசிரம பங்களாவுக்குப் போவதும் வருவதுமாக இருந்தாள் அனாமிகா. அவளுடைய போக்கிலும் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. வீட்டில் உள்ளவர்கள், அதை உணரத் தொடங்கினாலும் முழுமையாக எதிர்க்கவில்லை.

அடுத்த மூன்றாவது மாதத்தில் எல்லாமே தலைகீழாக மாறியது. ‘ஏதோ சதிசெய்து, எங்கள் மகள் மனதைக் கலைத்துவிட்டார்கள். ஆசிரமத்தில் எங்கள் மகளைச் சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள், மீட்டுக் கொடுங்கள்’ என்று உள்ளூர் போலீஸில் ஆரம்பித்து கமிஷனர் வரை அனாமிகாவின் பெற்றோர் புகார்களைக் கொடுத்தனர். ஆனால் அனாமிகாவோ, ‘‘என்னை யாரும் மூளைச்சலவை செய்யவில்லை. என் பெற்றோருக்குக் கொஞ்ச நாள்களாகவே மனநிலை சரியில்லை. நான் மேஜர்... சுவாமிஜியால் ஈர்க்கப்பட்டு ஆசிரமச் சேவைக்கு வந்துவிட்டேன், சுவாமிஜியின் புகழைக் கெடுக்க நினைக்கும் என் பெற்றோர்மீது நடவடிக்கை எடுங்கள்’’ என்றார். அதன்பின் விசாரணையின் போக்கே மாறிவிட்டது. ஒருவர்மீது ஒருவர் மாற்றி மாற்றிப் புகார் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். போலீஸாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அனாமிகாவின் தந்தை எப்போதும் போல, வேர்க்கடலை வறுத்துக்கொண்டிருக்கிறார். மேகலை இப்போது பிஸியாக துணைவேந்தர்களையும் சுவாமிஜிக்களையும் சந்தித்துக்கொண்டிருக்கிறார்.

(அடுத்தது யார்?)