Published:Updated:

பாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை!

பாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை!
பிரீமியம் ஸ்டோரி
News
பாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை!

பாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை!

காரைக்குடியில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகளுக்குப் பயன்படுத்துவதாகச் சொல்லி அனுமதி வாங்கிய ஆற்றுமணலை வெளி மாவட்டங்களுக்குக் கடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தத் திட்டம் ரூ.112.5 கோடியில் 2016-ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்துக்காக 13 ஆயிரம் லோடு ஆற்றுமணலை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. எனினும், ஆற்றுமணலுக்குப் பதிலாக எம் சாண்ட் எனப்படும் செயற்கை மணலைப் பயன்படுத்தி, பாதாள சாக்கடைப் பணிகள் தரமில்லாமல் நடைபெற்றுவருவதாகக் குற்றம் சாட்டுகின்றன எதிர்க்கட்சிகள். 

பாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை!

‘‘மணல் தட்டுப்பாடு காரணமாக பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் தாமதமாகின்றன என்று சொன்னதால், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே முத்தூரிலிருந்து மணல் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. (மணல் கொள்ளையர்களால் அனுமதியின்றி எடுக்கப்பட்ட மணல், மாவட்ட நிர்வாகத்தால் பறிமுதல் செய்யப்பட்டு இங்கு வைக்கப்பட்டிருந்தது). ஆனால், இங்கிருந்து எடுத்த மணலை சட்டவிரோதமாக வெளிமாவட்டங்களுக்குக்  கடத்திவிட்டார்கள். இதன் பின்னணியில் ஆளும்கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சொல்கிறார்கள்.  

பொறியாளரும் முன்னாள் காரைக்குடி நகர்மன்ற உறுப்பினருமான சொக்கு என்கிற லெட்சுமணன், ‘‘தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிபந்தனைகள்படி இந்தப் பணி நடைபெறவில்லை. ஆற்றுமணல் கொண்டு கட்டவேண்டும் என்று ஒப்பந்தத்தில் உள்ளது. இந்தத் திட்டத்துக்கு மணல் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி எடுக்கப்படும் மணல் எங்கே போகிறது என்று தெரியவில்லை. ஆற்று மணலுக்குப் பதிலாக எம் சாண்ட் கொண்டு பூசுகிறார்கள். கான்க்ரீட் போட்டுச் சாக்கடைத் தொட்டி கட்டவேண்டிய இடங்களில் செங்கல் வைத்துக் கட்டுகிறார்கள். இதன்மேல் கனரக வாகனங்கள் போகும்போது தொட்டி உடைந்துவிடும். கான்க்ரீட் முறையாகத் தண்ணீர் ஊற்றினால்தான் செட்டாகும். அதையும் செய்வதில்லை. அவசரகதியில் கட்டி, மண்போட்டு மூடிவிடுகிறார்கள். சித்தாள் வேலை பார்க்கிற பெண்களை, சாக்கடைத் தொட்டிகளுக்கு சிமென்ட் பூசச் சொல்லுகிறார்கள். எல்லாமே சீக்கிரம் மண்ணுக்குள் நொறுங்கிப் புதைந்துவிடும் ஆபத்து உள்ளது’’ என்கிறார். 

பாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை!

காங்கிரஸைச் சேர்ந்த காரைக்குடி எம்.எல்.ஏ ராமசாமி, ‘‘எம் சாண்ட் பயன்படுத்தலாம்னு ஒப்பந்ததாரருக்கு அனுமதி கொடுத்துவிட்டார்கள். இது போதாதா அவர்களுக்கு? குறைந்த விலையில் எம் சாண்ட் வாங்கி விட்டு, இதற்காக வருகிற மணலை வெளி மார்க்கெட்டில் ஒரு லோடு குறைந்தது நாற்பது ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்பனை செய்கிறார்கள். இதைத் தடுப்பதற்கு யாருமில்லை. அரசாங்கம் என ஒன்று இங்கே இயங்கினால்தானே இந்தக் குற்றச்சாட்டுகளை அவர்களிடம் எடுத்துச் செல்லலாம்’’ என்கிறார் வருத்தத்தோடு.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் காரைக்குடி செயற்பொறியாளர் மணிவண்ணனிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டோம். ‘‘பணிகள் தரமாகவே நடக்கின்றன. இடையில் மணல் தட்டுப்பாடு இருந்தபோது, ஒப்பந்ததாரரை எம் சாண்ட் பயன்படுத்தச் சொல்லியிருந்தோம். தற்போது மணல் கிடைத்திருக்கிறது. இனி அனைத்து வேலைகளையும் மணல் பயன்படுத்தியே செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். பணிகள் முடிந்தாலும், ஐந்து வருடம் பராமரிப்புப் பணிகள் செய்துகொடுக்க வேண்டிய பொறுப்பு ஒப்பந்ததாரருக்கு இருக்கிறது. எனவே, தரமில்லாமல் செய்ய வாய்ப்பில்லை’’ என்றார்.

- தெ.பாலமுருகன், படங்கள்: சாய் தர்மராஜ்