Published:Updated:

சென்னையின் புதிய போதை ஹூக்கா!

சென்னையின் புதிய போதை ஹூக்கா!
பிரீமியம் ஸ்டோரி
News
சென்னையின் புதிய போதை ஹூக்கா!

சென்னையின் புதிய போதை ஹூக்கா!

தற்கு அனுமதி இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது; தடை இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது. அதனால் சிலர் வெளிப்படையாகவும், சிலர் ரகசியமாகவும் இதை நடத்துகிறார்கள். சென்னையின் மேல்தட்டு இளசுகளை ஈர்க்கும் புதிய போதையாக இதுதான் இருக்கிறது. பாலிவுட் படங்களில் வில்லனின் கூடாரத்தில் ஒரு கவர்ச்சி நடிகை டான்ஸ் ஆடும்போது, மையமாக ஒரு டேபிளில் ஒரு அலங்கார ஜார் வைக்கப்பட்டிருக்க, அதிலிருந்து நீளும் குழாயிலிருந்து எல்லோரும் புகையை இழுத்து உறிஞ்சுவார்களே... யெஸ்! ஹூக்கா எனப்படும் இதுதான் அந்தப் புதிய போதை. குட்காவுக்குத் தடை விதித்தார்கள். ஹூக்காவுக்குத் தடை இருக்கிறதா?

கேளிக்கை விடுதிகள், நட்சத்திர உணவு விடுதிகளில் குவியும் இளசுகளை மயக்கும் முக்கியமான போதைப் பொருள் ஹூக்காதான் என்கிறார்கள். குறிப்பாக ஐ.டி தொழில்துறையினர் அதிகம் நடமாடும் ஓ.எம்.ஆர் மற்றும் ஈ.சி.ஆர் சாலைகளில் சின்னச் சின்னதாக ஹூக்கா பார்கள் நிறைய உள்ளன. வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஹோட்டல் மாதிரியே தெரியும். இப்படி ஹோட்டல் மாதிரி தெரியும் ஹூக்கா பார்லருக்குத் தன் இடத்தை வாடகைக்குக் கொடுத்துவிட்டு சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறார் கல்யாணிராணி.

சென்னையின் புதிய போதை ஹூக்கா!

சென்னை நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயில் அமைந்துள்ள லேடி மாதவன் தெருவில் வசிப்பவர்கள், ‘‘மாலை 5 மணியில் ஆரம்பித்து, விடிய விடிய ஹூக்கா புகைத்தபடி சின்னஞ்சிறுசுகள் வீதியில் ஆட்டம் போடுவதை யாராலும் தடுக்க முடியவில்லை. நாங்கள் தகவல் கொடுத்ததும், போலீசார் உடனே வந்து ஹூக்கா விற்கும் இடத்தை ரெய்டு செய்வார்கள். ஆனால், எந்தத் தடயமும் கிடைக்காது, யாரும் சிக்கவும் மாட்டார்கள். ரெய்டு குறித்து முன்கூட்டியே அவர்களுக்குத் தகவல் வந்துவிடும்” என்றனர்.

பொதுமக்கள் குறிப்பிட்டுச் சொல்லும் இந்த இடம்தான் கல்யாணிராணிக்குச் சொந்தமானது. அவரைச் சந்தித்துப் பேசினோம். ‘‘எங்களுக்குச் சொந்தமாக இந்த வீட்டை, உணவகம் நடத்துவதற்காக மோனிஷ் ஜெயின், அவரின் தாயார் அனுபமா ஜெயின் ஆகியோர் 2015-ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் கேட்டார்கள். பானிபூரி, பேல்பூரி தயாரிக்கும் உணவகம் அமைக்கப் போவதாகத்தான் தெரிவித்தனர். அக்ரிமென்ட் போடும்போது, ‘சமூகக்கேடுகளை உண்டாக்கும் எந்தச் செயலையும் இங்கு செய்யக் கூடாது, மீறினால் அக்ரிமென்ட்டை ரத்து செய்து விடுவோம்’ என்று குறிப்பிட்டிருந்தோம்.

கொஞ்ச நாளிலேயே உணவகத்தில் போதை வஸ்துவான ‘ஹூக்கா’ விற்பனை செய்வதாக, அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் எங்களுக்குத் தெரிவித்தனர். நாங்கள் நேரில் போய்ப் பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்தோம். சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்தேன். போலீஸ் டீமை உடனே ஸ்பாட்டுக்கு அனுப்பினார். போலீஸ் வருவதற்குள் ஹூக்கா இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் அகற்றி விட்டனர். நாங்கள் அக்ரிமென்ட் செய்து கொண்ட மோனிஷ் ஜெயின், அவர் சகோதரர் அனீஷ் ஜெயினுடன் சென்னை சாஸ்திரி நகரில் ‘ஹூக்கா’ விற்ற குற்றத்துக்காக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்குப் போனவர் என்ற தகவலும் இதற்குப் பின்னால்தான் எங்களுக்குத் தெரிய வந்தது.

மகாலிங்கபுரம் குடியிருப்போர் நல்வாழ்வு சங்கத்தினர், ‘இங்கு சட்டத்துக்குப் புறம்பான செயல்கள் நடக்கின்றன. இதனால் சட்டம்- ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளது. இங்கு வசிக்கும் முதியோர்கள், இரவு நேரத்தில் வெளியில் வர அச்சப்படுகின்றனர். விரைந்து இதற்குத் தீர்வு காணுங்கள்’ என்று எங்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர். போதைப் பொருளான ‘ஹூக்கா’வை குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் பயன்படுத்துவது மிக மோசமான குற்றம். ஆனால், இந்தப் பிரச்னையை, கட்டட உரிமையாளர் - வாடகைதாரர் பிரச்னை போல் நீதிமன்றத்தில் காண்பித்து, குற்றத்திலிருந்து தப்பிக்க முயற்சி செய்கின்றனர்” என்றார்.

சென்னையின் புதிய போதை ஹூக்கா!

இதே தெருவில் அடுக்ககம் ஒன்றில் வசிக்கும் வழக்கறிஞர் ஹரிராம், “சின்னச் சின்னப் பெண்களும், பையன்களும் ஷார்ட்ஸ் அணிந்தபடி வீதியில் நின்றுகொண்டே இந்த போதை வஸ்துக்களை உபயோகிக்கிறார்கள். நானே சில நாள்களுக்கு முன்பு நேரில் பார்த்தேன். அக்கம்பக்க குடியிருப்புகளில் வசிப்பவர்கள் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வான கு.க.செல்வம் அலுவலகம் இதே தெருவில் உள்ளது. அவரிடமும் இது குறித்துச் சொன்னோம். போலீஸ் அதிகாரிகளிடம் அவரும் இதுபற்றிப் பேசினார்” என்றார். இதுகுறித்து நம்மிடம் பேசிய கு.க.செல்வம், “பொதுமக்கள் இப்படியொரு சம்பவம் நடப்பதாக என்னிடம் சொன்னதுமே, நான் ஏரியா அசிஸ்டென்ட் போலீஸ் கமிஷனரிடம் பேசினேன், அதன்பின்னர் போலீஸ் ரெய்டு வந்து போனதாக மக்கள் சொன்னார்கள். இது விஷயமாக போலீஸ் உயரதிகாரிகளிடமும் பேசவுள்ளேன்” என்றார்.

இந்த விவகாரம் குறித்து மோனீஷ் ஜெயினின் கருத்தை அறிய குறுஞ்செய்தி மூலமும், செல்போன் மூலமும் தொடர்புகொள்ள முயன்றோம். அவர் கருத்தைப் பெற முடியவில்லை.

இந்த ஹூக்கா விவகாரம் தொடர்ச்சியாக தமிழகத்தில் கண்ணாமூச்சி காட்டியபடி இருக்கிறது. மேல்தட்டுக் குடும்பத்தினரின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளின் அருகிலேயே ஹூக்கா பார்கள் செயல்படுவதாகவும், பள்ளி மாணவர்களே ஹூக்கா இழுப்பதாகவும் புகார் வந்ததால், சென்னை மாநகர போலீஸார் பல ஹூக்கா பார்களில் ரெய்டு நடத்தினர். ஆனால், ஹூக்கா பார்கள் நடத்துவது சட்டப்படி பெரிய குற்றம் இல்லை என்பதால், போலீஸ் ஸ்டேஷனிலேயே ஜாமீன் பெற்று அவர்கள் வெளியில் வந்துவிட்டனர்.

சென்னையின் புதிய போதை ஹூக்கா!

இதைத் தொடர்ந்து, சென்னை நீலாங்கரையில் ட்ரிஜில் ரெஸ்டாரன்ட் என்ற உணவு விடுதி நிர்வாகிகள், ‘எங்கள் விடுதியில் ஹூக்கா விற்பனையை நடத்திக்கொள்ள சென்னை மாநகராட்சி அனுமதி வழங்க வேண்டும்’ என்று 2017-ம் ஆண்டு டிசம்பரில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டனர். சென்னை மாநகராட்சியோ, ‘உடல்நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் ஹூக்கா பார்லர்களுக்கு சென்னை மாநகராட்சிப் பகுதியில் சட்டரீதியாகவே அனுமதி கிடையாது’ என்றது. இந்த வழக்கில் சென்னை போலீஸ் கமி‌ஷனர் சார்பிலும், ஹூக்கா பார்லர்களுக்கு அனுமதி மறுத்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘‘சிகரெட்டைவிட ஹூக்கா அதிகம் ஆபத்தானது. சிகரெட்டைவிட 150 மடங்கு அதிக ஆபத்து, ஒருமுறை ஹூக்கா புகைப்பதால் ஏற்படுகிறது. எனவே, ஹூக்காவுக்கு அனுமதி வழங்க முடியாது’’ என்று உத்தரவிட்டார்.

ஆனால், அதன்பின்னும் ஹூக்கா பார்கள் செயல்படுகின்றன. சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் கேட்டபோது, “கேளிக்கை விடுதிகள், நட்சத்திர உணவு விடுதிகளில் ‘ஹூக்கா’ பயன்படுத்தக் கண்டிப்பாகத் தடை உள்ளது” என்கிறார். தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, “நிச்சயமாக தமிழகத்தில் அதற்கு அனுமதி இல்லை” என்கிறார். பிறகு யார் அனுமதி பெற்று இவை இயங்குகின்றன என்பதுதான் புரியவில்லை.

‘சென்னை தமிழ்நாட்டில்தான் உள்ளதா’ என்ற சந்தேகம்தான் நமக்கு வருகிறது.

- ந.பா.சேதுராமன்
படங்கள்: தெ.அசோக்குமார்

ஹூக்கா தடை சட்டம் வேண்டும்!

ட இந்தியாவில்தான் கூட்டமாகச் சேர்ந்து ஹூக்கா மூலம் புகைக்கும் பழக்கம் அறிமுகமானது. அதில் போதைப் பொருட்களையும் கலந்து பயன்படுத்துவார்கள். விருந்துகளில் ஹூக்கா புகைப்பது சர்வசாதாரணம். சமீப ஆண்டுகளில்தான் இது நட்சத்திர ஹோட்டல்களில் இடம்பிடிக்க ஆரம்பித்தது. சுடச்சுட ஹூக்கா ஜாடியை ஒவ்வொரு டேபிளிலும் பரிமாறுவார்கள். ‘புகை பிடிக்க அனுமதிக்கப்பட்ட இடங்களில் ஹூக்கா புகைப்பதில் தடையில்லை’ என 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் சொன்னதை வைத்துக்கொண்டு நிறைய பேர் ஹூக்கா பார்லர் ஆரம்பித்தார்கள். ஆனால், 2017 டிசம்பரில் மும்பையில் ஹூக்கா மூலமாக ஒரு ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டு 14 பேர் பலியானபிறகு சட்டங்கள் இறுகிவிட்டன. குஜராத், பஞ்சாப், மகாராஷ்டிரா என்று பல மாநிலங்களில் ஹூக்காவுக்குத் தடைவிதித்து சட்டங்கள் வந்துவிட்டன. அதேபோல தமிழகத்திலும் சட்டம் கொண்டுவருவதுதான் இந்த போதைக்கு முடிவுகட்டும் வழி.