Published:Updated:

``எங்க திறமைகளைப் பாருங்க... பரிதாபம் வேண்டாம்!’’ - மொழி மனிதர்களுடன் ஒரு நாள்

2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி உலக அளவில் சராசரியாக ஏழு கோடி பேர் அந்த மொழியில்தான் உரையாடிக்கொண்டிருக்கின்றனர். நீங்கள் அறியாத அந்த மொழி எது தெரியுமா?

``எங்க திறமைகளைப் பாருங்க... பரிதாபம் வேண்டாம்!’’ - மொழி மனிதர்களுடன் ஒரு நாள்
``எங்க திறமைகளைப் பாருங்க... பரிதாபம் வேண்டாம்!’’ - மொழி மனிதர்களுடன் ஒரு நாள்

ங்களுக்குத் தோராயமாக எத்தனை மொழிகள் தெரியும்? இரண்டு அல்லது நான்கு... அல்லது அதற்கும் மேல்..? உங்களால் புரிந்துகொள்ள முடியாத, உணர்ந்துபார்க்க முடியாத ஒரு மொழி இந்த உலகத்தில் இருக்கிறது. உலகின் ஏதோவொரு மூலையிலிருக்கும் யாரோ ஒருவர் பயன்படுத்தும் மொழி இல்லை அது. உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் மொழி. அவ்வளவு ஏன், உங்கள் அருகிலேயே ஒருவர் இப்போது பயன்படுத்திக்கொண்டிருக்கலாம். 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி உலக அளவில் சராசரியாக ஏழு கோடி பேர் அந்த மொழியில்தான் உரையாடிக்கொண்டிருக்கின்றனர். நீங்கள் அறியாத அந்த மொழி எது தெரியுமா? மௌன மொழி, அது காற்றின் மொழி!

மௌனம்... பரபரப்பான வேலைகளுக்கிடையே அவற்றைப் புரிந்துகொள்ள நமக்கு நேரம் கிடைப்பதில்லை. யாராவது விளையாட்டாகச் சைகையில் பேச முயன்றால்கூட `அட, என்னன்னு வாயைத்தொறந்துதான் சொல்லேன்...' என்று கோபப்படுகிறோம். இங்கு எல்லாமே, உடனடியாகச் சீக்கிரமாக நடந்துவிட வேண்டும். 'ரன், ரன், ரன்... லைஃப் இஸ் எ ரேஸ். நீ ஓடலைன்னா பின்னாடியிருக்கவன் உன்ன ஏறி மிதிச்சுட்டு ஓடிடுவான்' என்றே ஓடிப்பழக்கப்பட்ட அல்லது ஓடச்சொல்லிப் பழக்கப்பட்ட நமக்கு வாழ்வின் ஏதோவொரு சூழலில், மௌனத்தின் மொழியை அறிய ஆவல் ஏற்படலாம். அந்த ஆவலின் தேடலாக சிலரைச் சந்தித்தேன்.

முதலாவதாக, காது கேட்காத மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கு இன்டர்பிரிட்டராகப் பணிபுரியும் சித்ராவை, அக்குழந்தைகளுக்கான ஒரு போட்டி நிகழ்ச்சியில் சந்தித்தேன். "பேச்சுத்திறன் இல்லாமல், கேட்கும் திறன் இல்லாமல் அவர்களின் உலகம் எப்படி இயங்குகிறது?" என்று அவரிடம் கேட்டேன். 

``அவங்க உலகம், ரொம்ப அமைதியா, வார்த்தையில் வன்முறைகள் எதுவும் இல்லாம ரொம்பப் பொறுமையா, இயல்பா இருக்கும். எந்த இரைச்சலும், பதற்றமும் அவங்ககிட்ட இருக்காது. எப்பவும் கத்துக்கணும்ங்குற ஆர்வத்தோட இருப்பாங்க’’ என்று என் ஆர்வத்தைத் தூண்டினார். 

``கேட்கவோ பேசவோ முடியாதுன்னாலும், ரொம்பக் கூர்மையான பார்வைத்திறனும், கற்றல் திறனும் அவங்களுக்கு இருக்கும். படிப்பு, கிராஃப்ட் வொர்க்னு வந்துட்டா, அவங்களை அடிச்சுக்க முடியாது. பொதுவா, குழந்தைங்க வளரும்போது தன்னைச் சுத்தி இருக்கவங்களோட அறிவுரைகள், பாசம், கனிவு எல்லாத்தையும் கேட்டு வளர்வாங்க. நிறைய விஷயங்கள் பேசுவாங்க. அதுமூலமா சரி எது, தப்பு எதுன்னு கத்துக்குவாங்க. ஆனா இவங்களுக்கு அப்படியான அனுபவங்கள் கிடைக்காது. அதுமாதிரியான நேரத்துலதான், இன்டர்பிரிட்டரான எங்களுடைய தேவை ஏற்படும். 

இந்த மாதிரியான குழந்தைகளோட இத்தனை வருஷம் பயணப்பட்டிருக்கேங்குற அனுபவத்துல சொல்றேன்... இவங்களோடது, தனி உலகம். நினைச்சாக்கூட நம்மால அதுக்குள்ள போக முடியாது. அவங்க அதை விரும்பவும் மாட்டாங்க. அவங்களை நிறைய விஷயங்கள்ல இந்தச் சமூகம் கஷ்டப்படுத்தியிருக்கு. பலபேர் இவங்களை பரிதாபமாவே பாக்குறாங்க. அது ரொம்பவே தப்பு. எவ்வளவோ திறமைகள் இருந்தும், முறையா அங்கீகரிக்காம அவங்களைப் பரிதாபமாப் பாக்குறது எவ்வளவு பெரிய வேதனை? உங்களையும் என்னையும் மாதிரிதான் அவங்களும். அவங்கக்கிட்ட நாம வியந்து பார்க்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. அதுல ரொம்பவும் முக்கியமான விஷயம், அவங்களோட திறமை. இந்தச் சமூகம் அவங்களை சரியா புரிஞ்சுக்கலையேன்ற வருத்தம் அவங்கள்ல நிறைய பேர்ட்ட இருக்கு. பரிதாபங்கள் இல்லாத கண்களையும் பொறுமையுள்ள மனங்களையுமே அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அதனாலேயே வாழ்க்கைத்துணைன்னு வர்றப்போகூட, அவங்களைப்போலவே ஒருவரைத்தான் எதிர்பார்க்கிறாங்க" என்றார் சித்ரா.

அங்கே உற்சாகமாக வேலைசெய்துகொண்டிருந்த பிரமிளா, எங்கள் அருகே வந்து அமர்ந்தாள். தமிழ் இலக்கியம் முடித்துவிட்டு, அழகப்பா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்துக்கொண்டிருக்கிறாள் பிரமிளா. நாங்கள் பேசியவற்றை அவளிடம் அவளது மொழியில் சித்ரா கூறினார். அதற்குப் பதிலளிக்கும்விதமாக பிரமிளாவால் ஓரளவு பேச முடிந்தது. க், ட், த் போன்ற சொற்களை நன்கு உச்சரித்தாள். மற்றபடி, முழுக்க முழுக்க சைகை மொழிதான். 

இதைத்தொடர்ந்து பிரமிளாவுக்கும் எனக்குமான உரையாடல் அதுபோன்றதொரு மொழிக்கலவையில் நிகழ்ந்தது. ``பொதுவா,

பேச முடிஞ்சவங்களால எங்களைப் புரிஞ்சுக்க முடியறதில்ல. ஏன்னா நாங்க சொல்றத கேக்குற அளவுக்கு அவங்களுக்குப் பொறுமை இருக்காது. பேச முடிஞ்ச ஒருவரும் எங்களைப்போல உள்ள ஒருவரும் காதலிச்சா, ஆரம்பத்துல நல்லா போகும். ஆனா, போகப்போக நிறைய மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் ஏற்படும். கல்யாணம், அதைவிட மோசம். ஆமா, கல்யாணம்னு வந்தா சில விஷயங்களைச் சொல்லாமலே புரிஞ்சுக்குற பக்குவம் சம்பந்தப்பட்ட ரெண்டு பேருக்கும் இருக்கணும். எங்களை மாதிரி ஒருவராலதான் ஈஸியா புரிஞ்சுக்க முடியும். எங்களோட மொழியிலதான் எங்களால விஷயத்தைச் சரியாச் சொல்ல முடியும். இதே மனநிலை, வரப்போறத் துணைக்கும் இருக்கணும். இதை நான் ஒரு குறையா சொல்லலை. ஆனா, இதுதான் நிதர்சனம்" என்றாள். 

பிரமிளாவுக்கு வாசிப்புதான் பொழுதுபோக்கு. பெரும்பாலான காதுகேளாதோருக்கு, வாசிப்புதான் பொழுதுபோக்காக இருக்கிறது. பேசும் திறன் உள்ளவர்கள் மற்றும் கேட்கும் திறன் உள்ளவர்களுக்கு ஒரு விஷயம் தெரியவில்லை அல்லது புரியவில்லை என்றால் வீட்டில் உள்ளவர்களிடமோ, அருகில் இருப்பவர்களிடமோ கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். இவர்களுக்கு அவர்களது மொழி தெரிந்த ஒருவர்தான் அவற்றை எடுத்துரைக்க வேண்டியிருக்கும். அந்த இடத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், அவர்களது வாழ்க்கையே சிக்கலாக வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில், இவர்களுக்கு வாசிப்பு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுக்கிறது. ஆக, அவர்களையும் நம்மையும் இணைக்கப் படிப்பு பெரிதும் உதவி செய்யும். 

'பேசும் வார்த்தைபோன்று மௌனம் புரியாது' என்பார்கள். அவள் பேசிய பல வார்த்தைகளை என்னால் சட்டென புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், என்னைப்போலவே நிறையபேரை பார்த்துப்பழக்கப்பட்ட அவளுக்கு என்னைப் புரிந்துகொள்வதில், பெரிதாக சிரமமிருந்ததாகத் தெரியவில்லை. ரொம்ப இயல்பாகவே மீண்டும் மீண்டும் எனக்கு விஷயத்தைப் புரியவைத்தாள்.

பி.காம் படித்துவிட்டு, இப்போது சி.ஏ படித்துக்கொண்டிருக்கும் அபிநயாவின் பெற்றோரிடம் பேசினேன். அப்பா ஜெயக்குமார் பேசத்தொடங்கினார். ``எங்க ரெண்டு பேருக்கும், பேசுறதிலயோ கேக்குறதுலயோ சிக்கல் கிடையாது. ரெண்டு குழந்தைங்க. முதல் குழந்தை அபி. அவ பொறந்தப்போ, காது கேட்குதா இல்லையான்னு தெரிஞ்சுக்க, நாங்க ரொம்ப சிரமப்பட்டோம். ஒரு தடவை, குழந்தை விளையாடும்போது பின்னாடி இருந்து சாப்பாட்டுத் தட்டை கீழப்போட்டு பார்த்தோம். அவளால அதிர்வலைகளை உணர முடிஞ்சதே தவிர, சத்தத்தை உணர முடியலை. அதுக்கு அப்புறம், ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டுப்போனோம். முதல்ல குழந்தைக்கு இப்பிடி ஒரு பிரச்னை இருக்குன்னு தெரிஞ்சப்போ, ரொம்ப நொறுங்கிப்போய்ட்டேன். என்ன பண்றதுன்னே தெரியல. சொந்த ஊரான மயிலாடுதுறையை விட்டுட்டு, திருப்பூருக்கு வேலைக்காக வந்துட்டேன். அதுக்குப் பிறகு எல்லாமே திருப்பூர்னு முடிவெடுத்துட்டேன். 

எங்களுக்கு சைகை பாஷை தெரியாதுங்கறதுதான் பெரிய சிக்கலா இருந்துச்சு. என்ன பண்றதுன்னே தெரியல. திருப்பூர்லயே ஒரு நல்ல ஸ்பெஷல் ஸ்கூலாப் பார்த்து பிள்ளையைச் சேர்த்தோம். அவங்க ஸ்கூல் டீச்சர்ஸ் அவளுக்கு ஏத்தமாதிரி பேசுவாங்க, சொல்லிக்கொடுப்பாங்க. பெர்சனலா அவளுக்கு எதாவது பிரச்னைனாகூட, அவங்க டீச்சர்ஸ் மூலமாதான் நாங்க அவளைப் புரிஞ்சுக்குவோம். அம்மா - அப்பாவா 'அவக்கிட்ட ஏதோ ஒரு விஷயம் சரியில்லை, ஏதோ பிரச்னை'ங்கிறது மட்டும்தான் எங்களுக்கு புரியுமே தவிர, அந்தப் பிரச்னை என்னன்னு தெளிவா புரியாது. அவளாலயும் எங்ககிட்ட தெளிவா சொல்ல முடியாது. ரெண்டுபேருக்கும் இடையில, மொழிப் பிரச்னைகள் நிறைய இருக்கும். இதுமாதிரியான சிரமங்களைத் தாண்டி வர, இந்தக் குழந்தைங்களுக்கு படிப்பு ரொம்ப அவசியம்னு ஒருகட்டத்துல புரிஞ்சுது. நான்கூட அஞ்சு வயசு வரைக்கும் ஸ்கூலுக்கு அனுப்பாமதான் இருந்தேன். ஏதோவொரு நம்பிக்கையில அதுக்குப் பிறகு அனுப்பினேன். ஆனா, அதுதான் இன்னைக்கு எம்பொண்ணோட வாழ்க்கையே மாத்தியிருக்கு. அபி மாதிரியான குழந்தைகளை பெத்தவங்க, குழந்தைக்காக தன்னோட வாழ்க்கைல சில விஷயங்களை மாத்திக்கணும். பிள்ளைகளை புரிஞ்சுக்க முயற்சி பண்ணணும். காது கேட்காமப் போனதற்கும், வாய் பேச முடியாமப் போனதுக்கும் அவங்களோட தப்பு என்ன இருக்கு?  அதுக்காக பிள்ளைங்க மேல குறைபடுறது தப்பில்ல? இந்தச் சின்ன விஷயத்தைப் பெத்தவங்களும் புரிஞ்சுக்கிட்டா போதும். எல்லா குழந்தைகளும் அபிமாதிரி சமத்துப்பிள்ளைங்களா வாழ்க்கையில ஜெயிச்சுடுவாங்க" என்கிறார் பெருமிதத்துடன்.

மாற வேண்டியது பெற்றோர் மட்டுமல்ல... நாமும்தான். வியக்க எத்தனையோ இருந்தும், அந்தக் குழந்தைகளிடம் இன்னும் நாம் பரிதாபத்தை மட்டுமே பரிசாகக்கொடுக்கிறோம். அந்த நிலை மாறும்போது, அந்த எண்ணம் மாறும்போதே அபிநயாக்களும் பிரமிளாக்களும் இன்னும் கூடுதல் நம்பிக்கையுடனும் பாதுகாப்புடனும்  உலகத்தை வலம் வருவார்கள்.