அலசல்
Published:Updated:

“அதாவது கண்ணுங்களா!” - 9 - காணாமல்போன காலிஃபர்!

“அதாவது கண்ணுங்களா!” - 9 - காணாமல்போன காலிஃபர்!
பிரீமியம் ஸ்டோரி
News
“அதாவது கண்ணுங்களா!” - 9 - காணாமல்போன காலிஃபர்!

ஜான்ஸி ராஜா

ள்கடத்தல், மிரட்டல், நிலம் அபகரிப்பு, கொலை போன்ற அசகாய சூரத்தனங்கள் அத்தனையும் அந்த திசை சொல்லும் குளத்துக்காரருக்கு அத்துப்படி. ஏரியாவில் எந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தாலும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அந்த ஆஜானுபாகு குளத்துக்காரருக்கே சொந்தமான நிலமாகவே இருக்கும். உயர்கல்வி வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும், ‘கல்லூரி சைஸ் வீட்டுக்காரர்’ என்றுதான் அவரைக் குறிப்பிடுவார்கள். இருபது ஏக்கரில் அமைந்த மிரட்சியான அந்த மாளிகைக்கு வெளியே இருபுறமும் அடியாட்கள் வசிக்க வரிசையாக அறைகள் அமைந்திருக்கும். முதல்முறையாக வந்து பார்க்கும் எவரையும் இந்தக் காட்சி குலைநடுங்க வைத்து விடும். கிராமங்களில் வீட்டுக்கு வெளியில் ஆடு, மாடுகளைக் கட்டிவைத்து வளர்ப்பது போல, அந்த அறைகளில் அடியாட்களைத் தங்கவைத்து  வளர்த்துக் கொண்டிருந்தார் குளத்துக்காரர்.

அப்பாவை மிஞ்சும் அளவுக்கு வாரிசுகள் வளர்ந்த பின்னர், நூற்றுக்கணக்கில் புதிய அறைகள் அங்கே முளைத்தன. ‘கிரேட் டேன்’ போன்ற வெளிநாட்டு நாய்களும், அந்த வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற ‘கன்னி’ ரக வேட்டை நாய்களும் அங்கே கூட்டமாகச் சுற்றிக் கொண்டிருக்கும். ட்ரையல் பார்ப்பதற்காக பிள்ளைகள் பொறுப்பில் இரண்டு பொறியில் கல்லூரிகள், ஒரு கலைக்கல்லூரி மற்றும் மூன்று பாலிடெக்னிக்குகள் அப்பாவின் 60-வது வயதில்  ஒப்படைக்கப்பட்டன. அடுத்த இரண்டே ஆண்டுகளில் அந்தக் கல்வி நிறுவனங்கள் ஒன் ப்ளஸ் ஒன் என அசுரவேகத்தில் குட்டிகளைப் போட்டன.

“அதாவது கண்ணுங்களா!” - 9 - காணாமல்போன காலிஃபர்!

கல்வி வட்டாரத்தைப் பொறுத்தவரை, ‘மேலிடத்து அழுத்தம் இருக்கிறது’ என்று காரணங்காட்டி யாரையும் ‘அட்ஜெஸ்ட்’ செய்யச் சொல்லும் வேலையே அங்கு இல்லை. வெளிநாட்டு மாணவிகளே இங்கு அதிகளவு படிப்பதால் குட்டி தாதாக்கள் முதல், ‘ஸ்கெட்ச்’ போடுவதில் கைதேர்ந்த தாதாக்கள் வரை இந்தக் கல்வி மையத்தையே சுற்றிச் சுற்றி வருவார்கள். கல்வி நிறுவனத்தார் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னை, இவர்கள்தான். இவர்களுக்கு அசைன்மென்ட் கொடுக்கும் பெரிய மனிதர்கள் அடிக்கடி இந்த தாதாக்களைப் பார்க்க வருவார்கள். ‘கேஸ்காரர்கள்’ என அந்தப் பெரிய மனிதர்களை தாதாக்கள் அழைப்பார்கள். அப்படி வருபவர்களுக்கு தடபுடல் பார்ட்டிகள் நடக்கும். அப்போது, “எங்க கேஸுக்காரனுக்கு இரண்டு நாளில் பார்ட்டி கொடுக்கணும். சுண்டுனா ரத்தம் வர்றா மாதிரி ரெண்டு ‘டிக்கெட்’களை ரெடி பண்ணிட்டு லைன்ல வாங்க” என்று தாதாக்கள் தரும் பிரஷர்தான் பெரும் பிரச்னையாக இருக்கும்.

இனிஷியலை மட்டுமே சொன்னால்கூட போதும், மாவட்டமே அலறும். அப்படிப்பட்ட தாதா ஒருவர்தான், மற்ற தாதாக்களை தணிக்கை செய்யும் வேலையில் இறங்கினார். ஏ, பி, சி, ஏ-ப்ளஸ், ஏ-டபுள் ப்ளஸ், ஏ-ட்ரிபிள் ப்ளஸ் ரேங்க் தாதாக்கள் அனைவரையும் அந்த ‘இனிஷியல்’ தாதா வரவழைத்து ஒரு மீட்டிங் போட்டார். “நமக்குள் பல மாறுபட்ட கருத்துகள் இருக்கும். ஆளைத் தூக்கும் அசைன்மென்ட்களில் போட்டியும் இருந்திருக்கும். ஆனால், ‘இந்த’ விவகாரத்தைப் பொறுத்தவரை யாராவது ஒருவர் பொறுப்பேற்றுக் கொண்டால்தான் பிரச்னை வராது. நம் எல்லோருக்கும் பொதுவான நாகலட்சுமியிடம் இந்தப் பொறுப்பைக் கொடுப்போம். நாகலட்சுமிக்கு டிரக்ஸ் ஏரியாவிலும், போலீசிலும் இருப்பது போல், கல்லூரிகளிலும் செல்வாக்கு இருக்கிறது” என்று சொன்னார். அனைவரும் நாகலட்சுமியின் வரவை ஏற்றுக்கொண்டனர். அன்று முதல் இன்றுவரை அவர்கள் ‘விரும்பியது’, நாகலட்சுமி மூலமாக அனைவருக்கும் நிறைவாகக் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

டிரக்ஸ் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து போன்ற சட்டவிரோத வேலைகளுக்காகத் தனியே கூலிப்படையே வைத்திருக்கும் நாகலட்சுமிக்கு, இந்த டீலிங் பிடித்துப் போனதற்கும் ஒரு காரணம் இருந்தது. நாகலட்சுமிக்கு பிசினஸில் உதவும் பல பெரிய மனிதர்களின் ‘மேற்படி’ தேவைகளை, அடியாட்களை வைத்துத்தான் அதுவரை நிறைவேற்றி வந்தார். இப்போது நாகலட்சுமியே நேரடியாக இறங்கி விட்டதால், சொந்தத் தேவையையும் சேர்த்தே பூர்த்தி செய்துகொள்ள முடிந்தது.

நல்லி எலும்புமீது மெல்லிய புடவையைச் சுற்றியது போன்ற உடல்வாகு, ரோஸ் நிறம், கறையேறிய பற்கள், சிரிக்கும்போது அதில் இரண்டு தங்கப்பற்கள் மின்னினால், அவர்தான் நாகலட்சுமி. கைகள் இரண்டிலும் அரை டஜன் தங்க வளையல்கள், காதிலும் மூக்கிலும் ஜொலிக்கும் வைரங்கள், வெளியில் தெரியாமல் இருக்கும் இன்னொரு சங்கதி... இடுப்பில் ஒளிந்திருக்கும் குளோரோஃபார்ம் பொட்டலம்.

நாகலட்சுமியின் கைக்குப் பொறுப்பு வந்த பின்னால், முன்பைவிட அதிகமாகவே அந்தக் கல்வி நிறுவனப் பெண்களின் வாழ்க்கை வீணாகிக் கொண்டிருக்கிறது. தாதாக்கள் சிரமப்பட்டது போல நாகலட்சுமி இதற்கு அத்தனை சிரமப்படவில்லை. போதைப் பழக்கம், இரவு நேரங்களில் பாய் ஃப்ரெண்ட்ஸ்களுடன் வெளியில் சுற்றுவது என்றிருக்கும் பெண்களையே நாகலட்சுமி டார்கெட் செய்ய ஆரம்பித்தார். கேட்பதைவிட அதிகமாக போதை மருந்து கொடுத்துத் தாராளம் காட்டுவார். கேட்ட நேரத்தில் செலவுக்குப் பணம் கிடைக்கும். இதனால் அவர்கள் நாகலட்சுமியைச் சுற்றிச்சுற்றி வர ஆரம்பித்தனர்.

“அதாவது கண்ணுங்களா!” - 9 - காணாமல்போன காலிஃபர்!

வெளிநாடுகளிலிருந்து இங்கு தங்கிப் படிக்க வந்த பல பெண்களில், ‘காலிஃபர்’ கொஞ்சம் வித்தியாசமானவர். கல்வியோடு, இந்தியாவின் கலாசாரத்தை ஆய்வு செய்வதிலும் அவருக்கு விருப்பம் இருந்தது. கலாசார ஆய்வுக்காக  அவுட்டோர் போயிருந்த வேளையில்தான் காலிஃபர் திடீரெனக் காணாமல் போனார். காரணங்களை உருவாக்கிக்கொண்டு ஊர் சுற்றுவது, போதையில் கிடப்பது போன்ற எதிலும் விருப்பம் இல்லாத பெண் என்பதால், ‘குளத்துக்காரர்’ காப்பாற்றிக் கொடுத்த மொத்தக் கல்லூரி நிர்வாகமும் பரபரத்தது. நாகலட்சுமியின் லிஸ்ட்டில் காலிஃபர் பெயர் இல்லாதபோதும், கல்லூரியில் நாகலட்சுமியிடமும் ‘மிஸ்ஸிங்’ விவகாரத்தைச் சொல்லி தேடிப் பார்க்கச் சொன்னார்கள். தூதரக லெவலில் பிரஷர் தரப்பட்டதால், எப்போதும் வராத போலீஸும் கல்லூரி எல்லைக்குள் வந்து விசாரித்து விட்டுப் போனது. உயர் அதிகாரிகளே ‘அய்யா’ என்ற வார்த்தைக்குக் குறைவாகக் குளத்துக் காரரிடம் பேசியதில்லை. முதல்முறையாக, ‘‘எதுக்கும் நாளைக்கு டவுன் ஸ்டேஷனுக்கு வந்துட்டுப் போயிடுங்க. வக்கீலையெல்லாம் அனுப்பாதீங்க, நீங்களே நேராக வந்துடுங்க’’ என்ற வார்த்தையையும் கேட்டார்.

மாதக்கணக்கில் நீண்ட காலிஃபர் தேடலில், உள்ளூர் தாதாக்கள் மொத்த பேரும் கல்லூரி நிர்வாகத்துக்கு உதவியாக நின்றனர். ஆனால், இந்த நிமிடம் வரையில் எந்தத் தகவலும் இல்லை. முக்கிய அரசியல்வாதி ஒருவர் கண்ணில் பட்டதே, காலிஃபர் காணாமல் போனதன் பின்னணி என்பது எல்லாத் தரப்புக்கும் தெரிந்திருந்தாலும், யாரும் மூச்சு விடவில்லை. ஒருவர்மீது ஒருவர் இறைக்க ஊர் முழுவதும் சகதி இருந்ததே அதற்கான காரணம் என்றுகூட சொல்லலாம். கண்ணைப் போல் காத்து வளர்த்த கல்வி நிறுவனங்களை அதைவிட அதிக அக்கறையுடன் பிள்ளைகள் பார்த்துக் கொண்டாலும், சொந்த மாவட்டத்துப் பிள்ளைகள் யாரும் படிக்க வருவதில்லை என்ற குறை மட்டும் தீராமலே, குளத்துக்காரர் போய்ச் சேர்ந்து விட்டார்.

நிர்மலாதேவிகளும் அவர்களை உருவாக்கும் கல்வி தாதாக்களும் பரவலாகவே இருக்கிறார்கள். ‘நல்ல கல்வியைத் தருமா? சிறந்த எதிர்காலத்தைத் தருமா?’ என்றெல்லாம் கல்வி நிறுவனங்களைப் பற்றி விசாரிப்பது போலவே, ‘இங்கே பாதுகாப்பு இருக்கிறதா? நிர்மலாதேவிகள் யாரும் இல்லையே!’ என உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.

(அடுத்தது யார்?)