Published:Updated:

ஊடகத் துறையில் #MeToo... விவரிக்கும் 3 பத்திரிகையாளர்கள்!

ஊடகத் துறையில் #MeToo... விவரிக்கும் 3 பத்திரிகையாளர்கள்!
ஊடகத் துறையில் #MeToo... விவரிக்கும் 3 பத்திரிகையாளர்கள்!

`மீ டூ’ அளித்த இந்தத் தீர்வு மன நிம்மதியை அளித்தது. ஊடகத் துறையில் உள்ள பெண்கள் எல்லாவற்றுக்கும் ஓ.கே சொல்வார்கள் என்ற மனப்பான்மையில் இருக்கும் ஆண்களுக்கு இது ஒரு பாடமாக அமையும்.

பாலியல் ரீதியான தொந்தரவுகளைச் சந்திக்கும் பெண்கள், மனதுக்குள்ளேயே வேதனைப்பட்டுக் கடந்துவிடாமல், தைரியமாக வெளியே சொல்லுங்க' என `மீ டூ’ குறித்து மனம் திறந்து பேசுகிறார்கள், ஊடகத்தில் பணிபுரியும் பெண்கள்.

செளமியா, `நியூஸ் மினிட்' இணையப் பத்திரிகையாளர். 

``சட்டத்தின் வழியாகத்தான் பாலியல் புகார்களைக் கையாள வேண்டும்னு சொல்றாங்க. ஆனால், சட்டத்தை எந்த அளவுக்கு எல்லாத் தரப்புப் பெண்களாலும் அணுகமுடியுது? பணம் மற்றும் நேரத்தை அதற்காக ஒதுக்கணும். எனவே, இந்த `மீ டூ’ முறை வரவேற்கத்தக்கது. பெரும்பாலான அலுவலகங்களில், ஐ.சி.சி (Internal Complaints Committee) கமிட்டி ஆரம்பிக்கவும் இந்தக் காரணங்கள்தான் அடிப்படை. ஊடகத்துறையில் ஐ.சி. கமிட்டி எப்பவுமே ஆக்டிவாக இருக்கு. புகார் கொடுத்ததும் சம்பந்தப்பட்ட நபரை வேலையிலிருந்து நீக்கும் அளவுக்கு `மீ டூ’ தாக்கம் ஊடகத் துறையில் பரவியிருக்கு. தெருவில் செல்லும் ஒரு நபர், பாலியல் தொல்லை செய்வதற்கும், அலுவலகத்தைச் சார்ந்தவர் அணுகுவதற்கும் வித்தியாசம் இருக்கு. அந்தத் தெரு நபரைத் திரும்பவும் சந்திப்பது அரிது. எனவே, மறக்க வாய்ப்பு இருக்கு. ஆனால், அலுவலகத்தில் அதிகாரத்தில் இருக்கும் நபர், நம்மை அடிக்கடி சந்திப்பார். அந்தச் சூழலே பெண்களுக்குச் சிக்கலாக மாறிவிடும். இந்த விஷயத்தை, ஓர் அறை அறைந்துவிட்டு கடக்கலாமே என ஒரு குரூப் சொல்கிறது. எத்தனை பேரை இப்படி அறைஞ்சுட்டே இருக்கமுடியும்? செய்யும் வேலையும், அது சார்ந்த முன்னேற்றமும் அவசியம் என்றுதானே அந்தப் பெண் நினைப்பார். பாதிக்கப்பட்டவரின் நிலையிலிருந்து பேச வேண்டும். எனக்கும் சில வருடங்களுக்கு முன்பு, என்னுடன் வேலை பார்க்கும் நபரால் பாலியல் ரீதியான கோரிக்கை வைக்கப்பட்டது. அவரும் நானும் ஒரே நிலையில் பணிபுரிந்து கொண்டிருந்தோம். அதனால் எளிதில் என்னால் அவரிடம் எனக்கு விருப்பமில்லை எனத் தைரியமாக மறுத்துவிட முடிந்தது.  எல்லாருக்கும் அப்படி அமையும் என சொல்லிவிட முடியாது. அதனால் அலுவலங்களில் பெண்கள் பாலியல் தொல்லையால் புகார் கொடுத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றநோக்கில் சந்தேகப்படாமல் சம்பந்தப்பட்ட நபர் மீது  துரிதமாக ஐ.சி சி வழியாக  நடவடிக்கை எடுக்கணும். பாலியல் ரீதியான தொல்லைகளை கையாளும் விதம் குறித்து அலுவலகத்தில் வொர்க்‌ஷாப் பண்ண ஆவண செய்ய வேண்டும். எல்லா அலுவலங்களிலும் ஐ.சி.சி கமிட்டி கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என தெளிவாக சொல்கிறார்.

சுபகீர்த்தனா, ப்ரீலான்ஸ் பத்திரிகையாளர்.

``ஜூன் வரைக்கும் `தி இண்டியன் எக்ஸ்பிரஸ்'ல சினிமா பிரிவில் மூத்தப் பத்திரிகையாளரா இருந்தேன். இப்போ, ப்ரீலான்ஸ் பண்ணிட்டிருக்கேன். 2012-ம் வருஷம், வீட்டின் பல எதிர்ப்புகளைத்

தாண்டியே 19 வயசில் ஊடகத் துறைக்குள்ளே வந்தேன். என் எதிர்காலத்தின் தொடக்கமே அதுதான். அப்பவே சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்த ஆள். என் துறையில் இருக்கிறவங்களை நண்பர்கள் பட்டியலில் வெச்சிருந்தேன். அப்போ, ஹைதராபாத்தில் உள்ள `டைம்ஸ் ஆஃப் இண்டியா'வின் ரெசிடன்ட் எடிட்டர் கே.ஆர்.ஶ்ரீனிவாஸ் முகநூலில் குறுஞ்செய்திகள் அனுப்புவார். துறையில் சீனியர் என்ற அடிப்படையில் நான் அவருக்குப் பதிலளிப்பேன். ஆனால், அவரின் போக்கு நாளடைவில் மாற ஆரம்பிச்சது. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. பதில் பேசாமல் இருந்தால், அவர் பேசறதையெல்லாம் ஏத்துக்கிட்டதா ஆகிடும்னு சில பதில்கள் அனுப்பினேன். ஆனால், அவர் எதிர்பார்த்த பதில் இல்லை என்பதால் கொஞ்சம் தள்ளியிருந்தார். இப்போதானே ஃபீல்டுக்கு வந்திருக்கோம் எதுக்கு வம்புனு அன்ஃப்ரெண்டு பண்ணிட்டேன்.

சமீபமாக, `மீ டூ’ வைரலானதும், எல்லோரும் அவங்களின் கசப்பான அனுபவத்தைப் பகிர்வதைப் பார்த்து உந்துதல் ஏற்பட்டது. நானும்தானே பாதிக்கப்பட்டிருக்கேனு மனசுக்குள்ள உறுத்திட்டிருந்தது. அப்போதான் சந்தியா மேனனின் பதிவைப் பார்த்தேன். நானும் பாதிக்கப்பட்டதை சொன்னேன். என்னைப்போலவே அவரால் 6 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிஞ்சது. எங்களுக்காக ஒரு வாட்ஸ்அப் குரூப் ஆரம்பிச்சு தகவல்களைப் பகிர்ந்துக்கிட்டோம். டைம்ஸ் ஆஃப் இண்டியாவுக்கு பெட்டிசன் போட்டோம். அதைப் பரிசீலனை செய்த நிறுவனம், எங்களுடன் உரையாடியது. 7 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுத்தது. தற்போது, அவர் வேலையில் இல்லை. சரியான சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்த காத்திருந்த எனக்கு, `மீ டூ’ அளித்த இந்தத் தீர்வு மன நிம்மதியை அளித்தது. ஊடகத் துறையில் உள்ள பெண்கள் எல்லாவற்றுக்கும் ஓ.கே சொல்வார்கள் என்ற மனப்பான்மையில் இருக்கும் ஆண்களுக்கு இது ஒரு பாடமாக அமையும். இனியாவது, தொல்லை பண்றது உயர் அதிகாரி என அமைதியாக இருக்காமல், பொதுவெளியில் வெளிப்படுத்துங்கள்.''


லோக் ப்ரியா, நிருபர்

``நான் லோக் ப்ரியா. தனியார் நாளிதழ் ஒன்றில் நிருபரா இருக்கேன். என்னைப் பொறுத்தவரை, ‘மீ டூ’ ரொம்ப அவசியம். பகிரப்படாமல் ஊமையாக்கப்பட்டப் பெண்களின் மறுபக்கத்தை உலகத்துக்கு வெளிப்படையாகச் சொல்ல உதவும் கருவிதான் `மீ டூ'. ஊடகத்துறையில் இருக்கும் பெண்கள் பலதரப்பட்ட மக்களைச் சந்திக்கவேண்டி இருக்கு. பேரணிகள், போராட்டம் என எப்பவும் கூட்டம் இருக்கும் இடங்களுக்குப் போயிட்டிருக்கோம். பெண்களுக்கு அது எளிதான விஷயமில்லை. நான் ஆரம்ப காலகட்டத்தில் கொஞ்சம் பயந்தாலும் என்னை நானே தற்காத்துக்க ஆரம்பிச்சுட்டேன். யாராவது என்னைத் தொந்தரவு பண்ணினா அந்த இடத்திலே பதிலடி கொடுத்துட்டுதான் வருவேன்.”

அடுத்த கட்டுரைக்கு