Published:Updated:

`அச்சச்சோ!' திடீர் சிக்கலில் மாமல்லபுரம்

புத்தனைத் தேடி அவன் பிறந்த லும்பினியை விட, அவன் ஞானம் பெற்ற கயாவை விட மாமல்லபுரத்துக்குத்தான் அதிகமாக வெளிநாட்டினர் வந்து செல்கிறார்கள்.

`அச்சச்சோ!' திடீர் சிக்கலில் மாமல்லபுரம்
`அச்சச்சோ!' திடீர் சிக்கலில் மாமல்லபுரம்

``பூமி எதையும் தன்னால் எட்டிப்பிடிக்க முடியவில்லையே என மனச்சோர்வடைந்த சின்னம்தான் மலைகள் " என்கிறார் மகாகவி ரவீந்திரநாத் தாகூர். ஆனால், அந்த மலைகளிலும், பாறைகளிலும் தங்களின் கலைத்திறனால் உயிரோட்டமுள்ள சிலைகளைச் செதுக்கி ஏராளமான இதயங்களைக் கொள்ளையடித்தவர்கள் சிற்பிகள். அதிலும் மாமல்லபுரம் சிற்பிகள் பற்றிச் சொல்லவே வேண்டாம். உலகிலேயே சிற்பக்கலைக்கென்று ஒரு நூல் வகுத்த மகேந்திரவர்ம பல்லவன் ஆட்சி செய்த மண் இது. 

இன்றும், இந்தியாவின் தெற்குப்பகுதி நோக்கி உலகெங்கிலும் இருந்து மக்கள்  படையெடுப்பதற்கு மாமல்லபுரம் சிற்பங்களும், அதை வடித்த சிற்பிகளுமே காரணம். . யாருமே வெல்ல முடியாத சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை வென்று வெற்றிக்கொடி நாட்டியவர் நரசிம்மபல்லவன். அவரின் மற்றொரு பெயரான மாமல்லன் என்பதில் இருந்து உருவான பெயர்தான் `மாமல்லபுரம்'. கி.பி. ஏழாம் நூற்றாண்டில், பல்லவ மன்னர்களின் முக்கியத் துறைமுகமாக விளங்கிய இடம் இது.

குடைவரைக் கோயில்களும், விமானச் சிற்பங்களும், ஒற்றைக்கல் ரதங்களும்தாம் மாமல்லபுரத்தின் அடையாளங்கள். பெரும்பாலும், பல்லவ மன்னர்கள் ஆட்சிக் காலங்களில்தாம் அதிகமான சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. அன்று தொட்டு இன்றுவரை யாராலும் கற்பனையில் கூட சிந்தித்துப் பார்த்திராத கலை வடிவங்களை கற்சிற்பங்களாகச் செதுக்கிக் கொண்டிருக்கிறார்கள், இம்மண்ணைச் சேர்ந்த சிற்பிகள். பழங்காலத்தில் அவர்களால் செதுக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை `உலகப் பண்பாட்டுச் சின்னம்' என்று யுனெஸ்கோ அறிவித்தது. தற்போது அவர்கள் சந்ததியினரால் செதுக்கப்படும் சிற்பங்களும், சிலைகளும் உலகின் பல இடங்களில் தமிழ்ப் பண்பாட்டின்  பெருமிதங்களாக நின்றுகொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு இங்குத் தயாராகும் சிற்பங்களுக்குப் புவிசார் குறியீடும் கிடைத்திருக்கிறது.

தற்போது மாமல்லபுரத்தில் 150 -க்கும் மேற்பட்ட சிற்பத் தொழிற்கூடங்கள் செயல்படுகின்றன, 3000-க்கும் மேற்பட்டவர்கள் சிற்ப வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் 2000 பேருக்கு மேல் கற்சிற்பிகள். 50 பெரிய சிற்ப விற்பனை மையங்களும், 1000- க்கும் மேற்பட்ட சிறு, குறு விற்பனைக் கூடங்களும் இருக்கின்றன. சிற்ப உற்பத்தி மற்றும் விற்பனையைக் குடிசைத் தொழிலாகவும் சிலர் செய்துவருகிறார்கள். ஒவ்வொரு மாதமும் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடக்கும் இடமாக மாமல்லபுரம் விளங்குகிறது.

இத்தாலி, ஜெர்மன், பிரான்ஸ், இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை எனப் பல நாடுகளிலிருந்தும் தினமும் இங்கு சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். கலைநயமிக்க, விதவிதமான சிலைகள் இங்கிருந்து உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. புத்தனைத் தேடி அவன் பிறந்த லும்பினியை விட, அவன் ஞானம் பெற்ற கயாவை விட மாமல்லபுரத்துக்குத்தான் அதிகமாக வெளிநாட்டினர் வந்து செல்கிறார்கள். ஆம், மாமல்லபுரத்தில் செய்யப்படும் புத்தர் சிலைகளுக்கு வெளிநாட்டினர் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு. ''எண்பது சதவிகித வெளிநாட்டினர் புத்தர் சிலைகளைத்தான் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். `` என்கிறார்  சிற்பி புண்ணியகோட்டி. 

மாமல்லபுரத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வடகடும்பாடிதான் சிற்பி புண்ணியகோட்டியின் சொந்த ஊர். தமிழ்நாடு அரசின் சார்பாக சிறந்த சிற்பிக்கான விருது பெற்றவர். `சிற்பங்களும் அளவு முறைகளும்' என்னும் தலைப்பில் எம்.பில் பட்டம் பெற்றிருக்கிறார். சிவன் சிலைகளைச் செய்வதில் பெயரெடுத்த சிற்பி புண்ணியகோட்டி, சிலைகள், சிற்பங்கள் உருவாகும் முறை பற்றி விரிவாக விளக்குகிறார்,

``பொதுவாகக் கருங்கல், பச்சை மாவுக்கல், மாவுக்கல், மார்பிள் ஆகிய நான்கு வகையான கற்களில்தான் சிலைகள் செய்கிறோம். கருங்கல் காஞ்சிபுரத்திலிருந்தும், மாவுக்கல் திருவண்ணாமலையிலிருந்தும், பச்சை மாவுக்கல் மற்றும் மார்பிள் கற்களை ராஜஸ்தான் மாநிலத்திலிருந்தும் இறக்குமதி செய்கிறோம். `சிற்பச் சென்னூல்' என்னும் நூலில் சொல்லப்பட்ட வழிமுறைகளின்படியும், அளவுமுறைகளின் படியும்தான் சிலைகளையும், சிற்பங்களையும் செய்து வருகிறோம். கோயிலில் வைத்து வணங்கப்படும் கடவுள் விக்கிரகங்கள் கருங்கல்லில்தான் செய்யப்படும். மிகவும் பளபளப்பாகச் செய்யவேண்டிய சிலைகளை பச்சை மாவுக்கல்லில் செய்கிறோம். புதிதாகச் சிலை செய்து பழகுவதற்கு மாவுக்கல்லைப் பயன்படுத்துகிறோம். அழகுக்காகச் செய்யப்படும் சிலைகளை மார்பிள் கல்லில் செய்கிறோம்.

எந்தச் சிலையாக இருந்தாலும் ஒரு அடி சிலை செய்வதற்கு 10 முதல் 20 நாள்கள் வரை ஆகும். முதலில் என்ன உருவம் தேவையோ அதன் வெளிப்புற வடிவத்தைச் செதுக்குவோம். தேவையான அளவு உருவ அமைப்பு கிடைத்தவுடன் ஏற்கெனவே வரைந்ததைச் செழுமைப்படுத்துவோம். மூன்றாவது முறையில் கை, கால், ஆபரணங்கள் போன்ற ஒவ்வொரு இடத்தையும் நுணுக்கமாகச் செதுக்குவோம். அடுத்து இரண்டு முறையும் சிலையை மேம்படுத்துவதற்கான வேலையைச் செய்து, ஆறாம் கட்டமாக `பாலிஷ்' செய்தால் அற்புதமான சிலை தயாராகிவிடும். ``

மாமல்லபுரத்தில் பரம்பரையாகச் சிற்பங்கள் செய்துவருபவர்களும் இருக்கிறார்கள். சிற்பக்கல்லூரியில் படித்து சிற்பங்கள் செய்பவர்களும் இருக்கிறார்கள். இங்கே செயல்பட்டுவரும் அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக்கல்லூரியில் மரபுக் கட்டடக்கலை, மரபுச் சிற்பக்கலை, மரபு வண்ண ஓவியக்கலை ஆகிய மூன்று பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மரபுச் சிற்பக்கலையில் கற்சிற்பம், மரபுச் சிற்பம், சுதைச் சிற்பம், உலோகச் சிற்பம் ஆகிய நான்கு உட்பிரிவுகள் இருக்கின்றன. வருடத்துக்கு 60 மாணவர்கள் இங்கே பயின்று வருகிறார்கள்.

``நான் 12-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கற்சிற்பங்கள் பற்றி 3 வருட டிப்ளோமா படிப்பு படித்தேன். அடுத்ததாக, 3 வருடப் பட்டப்படிப்பும் முடித்தேன். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் எம்.பில் முடித்திருக்கிறேன். 2002 - லிருந்து சொந்தமாகச் சிற்பங்கள், சிலைகள் செய்துவருகிறேன். விதவிதமான சிவன் சிலைகளைச் செய்வதில் எனக்கு விருப்பம். ``என்னும் சிற்பிப் புண்ணியகோட்டியிடம், `சுற்றுலாப் பயணிகள் எந்த மாதங்களில் அதிகமாக வருகிறார்கள், என்ன மாதிரியான சிலைகளை விரும்பி வாங்கிச் செல்கிறார்கள்' என்று கேட்டோம்,

``ஜனவரி, பிப்ரவரி, டிசம்பர் மாதங்களில் உலலெங்கிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஜூன், ஜூலை மாதங்களில் அதிகமாக வருவார்கள். ஜெர்மன், பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் புத்தர் சிலைகளையும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து சுற்றுலா வருபவர்கள் முருகன், விநாயகர், அம்மன் சிலைகளையும் விரும்பி வாங்கிச் செல்வார்கள். பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் யானை சிலைகளைத்தான் அதிகமாக வாங்குவார்கள். அதேபோல, சென்னையில் உள்ள பெரிய பெரிய `மால்'களிலிருந்தும் எங்களிடம் நேரடியாகச் சிலைகளைக் கொள்முதல் சென்னையில் உள்ள பெரிய பெரிய `மால்'களிலிருந்தும் எங்களிடம் நேரடியாகச் சிலைகளைக் கொள்முதல் செய்து விற்பனை செய்கிறார்கள். எங்களிடம் வாங்கி ஆன் - லைன் வழியாக வர்த்தகம் செய்பவர்களும் இருக்கிறார்கள் `` என்று கூறிய புண்ணியகோட்டி, சிலைகளை ஏற்றுமதி செய்வதில் தற்போது ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் குறித்து விளக்குகிறார்,

``வெளிநாடுகளுக்கு, 20 கிலோவுக்குக் கீழுள்ள சிலைகளை மாமல்லபுரம் `போஸ்ட் ஆபீஸில்' இருந்தே முன்பெல்லாம் அனுப்ப முடியும். இப்போது அப்படிச்செய்ய முடிவதில்லை. சென்னைக்குச் சென்று `கலை பண்பாட்டு மைய' அலுவலகத்தில் `கோயில் சிலைகள் இல்லை' என்று அனுமதி வாங்கி வரவேண்டியிருக்கிறது. மாதத்துக்கு 20 அல்லது 30 சிலைகளுக்குத்தான் அனுமதி தருகிறார்கள். விற்பனை செய்யும் ஒவ்வொரு சிலைக்கும் அனுமதி வாங்கிவர சென்னைக்குச் சென்று வருவதற்குச் சிரமமாக இருக்கிறது. சென்னைக்குச் சென்று ஒப்புதல் வாங்கிவர வேண்டும் என்று வெளிநாட்டினரிடம் சொன்னால், ஏதாவது பிரச்னை இருக்குமோ என பயந்து அவர்கள் சிலைகள் வாங்க மறுக்கிறார்கள். இது போன்ற கட்டுப்பாடுகளால் பெரிய அளவில் வர்த்தகம் செய்பவர்களுக்குப் பெரிய பாதிப்பில்லை. எங்களைப் போன்ற சிறு - குறு வியாபாரிகள்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகிறோம். அதனால் எங்களின் தொழில் கடந்த 5 ஆண்டுகளாக மிகவும் நலிவுற்று வருகிறது. ஜி.எஸ்.டி யிலிருந்து விலக்குக் கிடைத்ததுபோல், சிலைகளை அனுப்ப அனுமதி வாங்குவதற்கான வசதியை மாமல்லபுரத்திலேயே ஏற்படுத்தித் தந்தால் மிகவும் உதவியாக இருக்கும்``என்கிறார் சிற்பி புண்ணியகோட்டி.

இயந்திரங்களைத் தவிர்த்து, கைகளால் செதுக்கப்படுவதுதான் மாமல்லபுரச் சிற்பங்களின் தனிச்சிறப்பு. அப்படிக் கரங்களின் வாயிலாகத் தமிழர் கலைகளை  உலகறியச் செய்யும் சிற்பிகளின் தோள்களை வலிமைப்படுத்த வேண்டிய கடமை அரசின் கைகளிலும், அவர்களை மேலும் ஊக்கப்படுத்துவது மக்களாகிய நம் கைகளிலும்தான் இருக்கிறது.