அலசல்
Published:Updated:

‘தாடி’ தரகருக்காக வந்த கோட்டை உத்தரவு!

‘தாடி’ தரகருக்காக வந்த கோட்டை உத்தரவு!
பிரீமியம் ஸ்டோரி
News
‘தாடி’ தரகருக்காக வந்த கோட்டை உத்தரவு!

‘தாடி’ தரகருக்காக வந்த கோட்டை உத்தரவு!

சென்னை விபசாரத் தடுப்புப் பிரிவு (ஏ.வி.எஸ்) போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இருவர் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள விவகாரம், கோட்டை வரை முட்டிக்கொண்டு நிற்கிறது. “இது நிர்வாகரீதியிலான இடமாற்றம் மட்டுமே... வேறு காரணம் இல்லை” என்கிறார் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன். போலீஸ் வட்டாரத்திலோ, “இதன் பின்னணி வேறு” என்று கிசுகிசுக்கின்றனர். 

சென்னை மத்தியக் குற்றப் பிரிவு 2-ன் துணை கமிஷனரான மல்லிகா கன்ட்ரோலில், சென்னை விபசாரத் தடுப்புப் பிரிவு போலீஸ் உள்ளது. இதன் உதவி கமிஷனராக ஜெரீனா பேகம் இருக்கிறார். இவருக்குக் கீழே சென்னை நகர போலீஸ் இன்ஸ்பெக்டராக சரவணன், புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டராக சாம் வின்சென்ட் ஆகியோர் இருந்தனர். இவர்கள்தான் இங்கிருந்து ஒரேநாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றப் பின்னணி குறித்து விசாரித்தோம்.

‘தாடி’ தரகருக்காக வந்த கோட்டை உத்தரவு!

“சென்னை விபசாரத் தடுப்புப்பிரிவு என்பது பொன்முட்டை இடும் வாத்து போன்றது. பெரிய ஹோட்டல்கள், கடற்கரை ரிசார்ட்கள் போன்றவை விபசாரத் தடுப்புப் பிரிவின் ரெய்டுக்கு ஏற்ற இடங்களாக இருந்து வருகின்றன. இதுதவிர, அடுக்குமாடி வீடுகளிலும் ஆன்லைன் மூலமாகவும் நடைபெற்றுவரும் விபசாரத்தைத் தடுப்பதும் இந்தப் பிரிவின் முக்கியப் பணி. இவைதவிர ‘ஸ்பா’ என்ற பெயரில் இயங்கும் மசாஜ் சென்டர்கள், விபசாரத் தடுப்புப் பிரிவின் நிரந்தர வருமானத்துக்கு உரியவை. சென்னை மற்றும் புறநகரில் மட்டுமே சிறிதும், பெரிதுமாக 1,200 ‘ஸ்பா’க்கள் உள்ளன. இவற்றில் சில, மசாஜ் என்பதைப் பெயரளவில் வைத்துக்கொண்டு விபசாரத்தையே முழு இலக்காய் வைத்து இயங்கும் ஸ்பாக்கள். ஸ்பா ஒன்றுக்கு 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை மாத வசூல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுத் தடையில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதுவே 70 முதல் 96 லட்சம் ரூபாய் வரை வருமானம் கொடுக்கிறது. அடுக்குமாடி வீடுகள், தனி வீடுகள், ஆன்லைன் மூலம் ‘பிக்கப்’புகள், நட்சத்திர ஹோட்டல்கள் போன்றவற்றின் வரவு-செலவு கணக்குத் தனி.

‘தாடி’ என்ற ‘நிக்’ நேம் கொண்ட தஞ்சையைச் சேர்ந்த தரகர் ஒருவர் 20 ஆண்டுகளுக்கு முன்னர், சென்னைக்குப் பிழைக்க வந்தார். முதல் ஐந்து ஆண்டுகள், ‘ஸ்பா’ சென்டர்களில் பணியாற்றியவர், அடுத்த ஐந்தாண்டுகளில் தரகர், முதலாளி ரேஞ்சுக்கு விஸ்வரூபம் எடுத்தார். கேரளாவைச் சேர்ந்த பெண்கள் இருவர் உள்பட ‘தாடி’க்கு தற்போதைய கணக்குப்படி ஐந்து மனைவிகள். ஐந்து பேருமே ‘ஸ்பா’ பிசினஸைக் கவனித்துக் கொள்கிறார்கள். இவர்கள் கன்ட்ரோலில்தான் சென்னையின் பெரிய விபசார நெட்வொர்க் இன்று இயங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில், அரசியல் செல்வாக்கையும் ‘தாடி’ வலுப்படுத்திக் கொண்டதால், அவர் சொல்வதே சட்டம் என்பதுபோல் ஆகிவிட்டது. ‘தாடி’க்குத் தெரியாமல் புதிதாக யாரும் தொழிலுக்குள் வந்துவிட முடியாது. அந்தப் பலம்தான், பிரபல விபசாரக் கும்பல் தலைவன் கன்னட பிரசாத்தையே தமிழ்நாட்டில் ‘தொழில்’ செய்ய முடியாமல் ஓடிப்போக வைத்தது.

தஞ்சாவூரில் ‘தாடி’ கட்டியுள்ள சூப்பர் மார்க்கெட் திறப்பு விழாவுக்கு, சென்னை விபசாரத் தடுப்புப் பிரிவின் அதிகாரி நேரில் போனார். அப்போது, ‘‘வரமுடியாத ஆபீசர்ஸ் பலர், தங்கள் வாழ்த்துகளைத் தெரிவிக்கச் சொன்னார்கள்’’ என்று அந்த அதிகாரி வரிசையாகப் பெயர்களைச் சொல்லிக்கொண்டே போக, வெட்கம் தாங்காமல் ‘தாடி’யே கொஞ்சம் நெளிந்துதான் போயிருக்கிறார்.

சென்னையைப் பொறுத்தவரை விபசாரத் தடுப்புப் பிரிவுக்கு போஸ்டிங்கை உறுதி செய்வதில், எப்போதுமே அரசியல் பின்னணி இருக்கும். அந்தப் பின்னணியில், ‘தாடி’ வலுவாக இருக்கிறார். மாதத்தில் இரண்டு வழக்குகளைத் தாமே முன் வந்து போலீஸுக்குக் கொடுத்துவிடுவார். கணக்கில் காட்டியிருக்கும் 50 ஸ்பாக்களுக்கு உரிய மாமூலையும் அதேபோல் தவறாமல் கொடுத்துவிடுவார். ‘தாடி’யின் இந்தத் தொழில் நேர்த்தியாலும் தொடர்புகளாலும், அவரது ‘ஸ்பா’க்களில் யாரும் ரெய்டுக்குப் போவதில்லை. இவரது ஸ்பாவில் வேலை பார்ப்பது (?) சிறப்பானது என்ற கருத்து நிலவுவதால், பல மாநிலங்களிலிருந்து இறக்குமதியாகும் விபசாரப் பெண்கள், ‘தாடி’யின் ஸ்பாவுக்குத்தான் நேராகப் போய்ச் சேர்ந்துகொள்வார்கள். 

இவ்வளவு செல்வாக்குள்ள ‘தாடி’யின் ‘ஸ்பா’விலேயே சமீபத்தில் ரெய்டு நடத்தப் பட்டிருக்கிறது. வேறு ஏரியா போலீஸ் அதிகாரி லிமிட் தாண்டிவந்து நிகழ்த்திய ‘எல்லை தாண்டிய பயங்கரவாதம்’ என இந்தப் பிரிவில் வேறு அதிகாரிகள் கொதித்தனர். இந்த ரெய்டின் தாக்கம் கோட்டைவரை எதிரொலித்திருக்கிறது. இதையடுத்து, ‘‘தஞ்சை தாடியின் ஸ்பாவில் ரெய்டு நடத்தியது ஒரு இன்ஸ்பெக்டர்தான். இருந்தாலும், இரண்டு பேரையும் மாற்றிவிடுங்கள். தேவைப் பட்டால், ‘விபசாரத் தரகர்களிடம் விலை போய்விட்டார்கள்’ என்று விஷயத்தை மாற்றலாம்’’ என்று கோட்டையிலிருந்து வந்த உத்தரவே திடீர் டிரான்ஸ்ஃபரின் பின்னணி.

தஞ்சைத் தரகரின் ‘ஸ்பா’வில் ரெய்டு அடித்த அதிகாரி, பிடிபட்ட பெண்களை ‘ரிமாண்ட்’ செய்யத் துடிக்க, மேலதிகாரியோ அந்தப் பெண்களை விடுவிக்கும் முயற்சியில் பரபரப்பு காட்டியிருக்கிறார். விவகாரம், கமிஷனர் அலுவலகத்தில் உயரதிகாரி முன்பு பஞ்சாயத்தாகவே போயிருக்கிறது. ‘‘பஞ்சாயத்து முடிந்த கையோடு, முதற்கட்டமாக இப்போதைக்கு இடமாற்றம் நடந்திருக்கிறது, ‘தாடி’யின் அடுத்தகட்ட நடவடிக்கையில், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டருக்கு மேஜர் ஆபரேஷன் ரெடியாகிக் கொண்டிருக்கிறது” என்கின்றனர் உள் விவரங்களை அறிந்தவர்கள்.

விபசாரத்தை ஊக்குவிக்கவும் ஒரு பிரிவு..?

- ந.பா.சேதுராமன்