Published:Updated:

கடல் கவிழ்க்கும்... கைகொடுக்கும்!

சர்ஃபிங் சாகசம்

##~##

ர்ஃபிங்! ஆர்ப்பரித்து வரும் கடல் அலைகளில் சறுக்கி விளையாடும் வித்தியாசமான த்ரில் விளையாட்டு. இதில் தமிழகத்தில் முக்கியமானவர் மூர்த்தி. சென்னை, கோவளம் கடல்புர மீனவக் கிராமத்தைச் சேர்ந்த இவர், கடலுக்கும் கரைக்கும் இடைப்பட்ட வாழ்க்கையைப் பற்றிப் பேசத் தொடங்கினார்.

''நமக்கு எல்லாமே கடல்தாங்க. சின்ன வயசில் பழைய வீட்டை இடிச்சி புதுப்பிக்கிறப்ப தூக்கிப்போடுற கதவு, ஜன்னல்களை கடல்ல எடுத்துப் போட்டு அது மேல மிதப்பேன். சர்ஃபிங்குங்கிற விளையாட்டு எனக்கே தெரியாம அப்படித்தான் அறிமுகமாச்சு. நான் கடல்ல விளையாடுறதைப் பார்த்த ஒருத்தர், 'குட். நல்லாவே விளையாடுறே. இப்ப இந்த போர்டுல ட்ரை பண்ணி பாரேன்’னு சொல்லி மீன் மாதிரி இருக்கிற ஒரு பலகையைக் கொடுத்தார். அப்போதான் முதல்முறையா 'சர்ஃபிங் போர்ட்’ எனக்கு அறிமுகமாச்சு. நான் அதில் மிதந்துகிட்டு சட்டுனு ஏறி பேலன்ஸ் பண்ணி நின்னுட்டு ஒரு சுத்து சுத்திட்டு வந்தேன். ஆச்சர்யமாப் பார்த்தவர், 'அபாரம் தம்பி! நீ நல்லா வருவே’னு வாழ்த்திட்டுப் போனார். அவர், இந்தியாவிலேயே முதல்முதலா சர்ஃபிங் விளையாட்டுக்கான கிளப்பைத் தொடங்கிய 'சர்ஃபிங்’ நரசிங்கா ஸ்வாமினு பிறகுதான் தெரிஞ்சுது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கடல் கவிழ்க்கும்... கைகொடுக்கும்!

2003-ல் ஒரு வெள்ளைக்காரர் எனக்குத் தெரிஞ்ச பையன் ஒருத்தனுக்கு சர்ஃபிங் போர்ட் கொடுத்துட்டுப் போனார். அந்தப் பையனுக்கு அதன் அருமை தெரியலை. நான் அப்படி இப்படி காசைப் புரட்டி, அவன்கிட்ட கொடுத்து அந்த போர்டை வாங்கிட்டேன். பிறகு ரெகுலர் பிராக்டீஸ்ல நல்ல அனுபவம் கிடைச்சுது.  இப்ப ரெகுலர், கூஃபி, கட் பேக், ஸ்ட்ரோக்னு எல்லா வெரைட்டியும் பண்றேன். நான் சர்ஃபிங் பண்றதைப் பார்த்துட்டு சில வெளி நாட்டுக்காரங்க எங்கிட்ட பயிற்சிக்கு வந்தாங்க.

கடல் கவிழ்க்கும்... கைகொடுக்கும்!

சர்ஃபிங்கை விட, இதை எப்படிப் பண்றதுனு அவங்களுக்கு இங்கிலீஷ்ல விளக்குறதுதான் பெரும்பாடா இருந்துச்சு. நல்லா கத்துக்கிட்டுப் போன வெளிநாட்டினர் பலபேர் என்னைப் பாராட்டி தங்களோட சர்ஃபிங் போர்டைப் பரிசா கொடுத்துட்டு போயிருக்காங்க. அப்படிச் சேர்ந்த அஞ்சாறு போர்டுகளை என் கிராமத்துப் பசங்களுக்குக் கொடுத்து சர்ஃபிங் கத்துத் தர்றேன். நானும் கஷ்டத்தில் அடிபட்டு கரை சேர்ந்தவன்தான். அதனால் பயிற்சிக்குப் பசங் கள்கிட்ட காசு வாங்குறது இல்லை.

அலை நம்மைத் துரத்த, நாம் அலையைத் துரத்தணும். சர்ஃபிங்ல உள்ள ஸ்பெஷலே அதோட த்ரில்தான். அலையோட சேர்ந்து நாமும் பயணிக்கிறப்ப, சர்ஃபிங் போர்டு செங்குத்தா கவிழும். விழாமல் பேலன்ஸ் பண்ணி நாம வலது கைப் பக்கமா விழணும். இடப்பக்கம் விழுந்தோம்னா, போர்டு மேலே போய் நம்ம தலையையே பதம் பார்த்துடும். தண்ணிக்கு உள்ள போனா  உப்புத் தண்ணிய குடிச்சாலும் பரவாயில்லை, அப்படியே சில செகண்டுகள் இருக்கணும். அவசரப்பட்டு மேலே வந்துடக் கூடாது. சமயங்களில் 42 விநாடிகள் எல்லாம் தண்ணிக்கு உள்ளே இருந்து உப்புத் தண்ணியைக் குடிச்சிருக்கேன். கடல் எப்போ நம்மைக் கவிழ்க் கும், எப்போ கைகொடுக்கும்னே தெரியாத விளையாட்டு இது! இந்தத் த்ரில்தான் தேசிய அளவில் எனக்கு ரெண்டாம் பரிசு வாங்கித் தந்துச்சு.

ஆறாவது வரைக்கும்தான் படிச்சேன். அப்புறம் மீன் பிடிக்கப் போயிட்டேன். சொந்தமாப் படகு வாங்கி அஞ்சு பேருக்கு ஓனரா இருந்தேன். சுனாமியில் அதுவும் அடிச்சிட்டுப் போயிடுச்சு. அப்புறம் மனசைத் தேத்திகிட்டு, சர்ஃபிங்ல முழுக் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். அந்தச் சமயத்தில்தான் 'பான்யன்’ அமைப்போட அறிமுகம் கிடைச்சுது. அதோட சேர்ந்து மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நலனுக்காக உதவிகள் செய்யறேன்.

கடல் கவிழ்க்கும்... கைகொடுக்கும்!

சர்ஃபிங் கத்துக்க வர்ற சாஃப்ட்வேர் ஆட்கள்கிட்ட மட்டும் ஒரு மணி நேரத்துக்கு 500 ரூபா வாங்குவேன். என்னைப் பார்க்கிறவங்க எல்லாம் 'வெளிநாட்டுல நடக்கிற போட்டிகள்ல கலந்துக்கப்பா’ம்பாங்க. பாஸ்போர்ட், விசானு போய் நின்னா, 'படிச்சவனே தடுமாறுறான். நீ போய் என்ன செய்யப்போறே?’ங்கிறாங்க. 'சர்ஃபிங், அலைச் சறுக்கு விளையாட்டு’னு எப்படிச் சொன்னாலும் புரியாத நிலைமைதான் இங்க இருக்கு. ஆனா, இது ஒரு நாளைக்கு மாறும். சர்ஃபிங் ஸ்கூல் ஒண்ணு ஆரம்பிக்கணும்...அதுதான் என் லட்சியம். உலக அளவில் இன்னிக்கு போட்டி போட முடியலைனாலும் நாளைக்கு நான் தயார் பண்ணின பசங்க பேர் எடுப்பாங்கள்ல... அந்தச் சந்தோஷம் போதும்ங்க!''

வெல்டன் மூர்த்தி!

- ந.வினோத்குமார்
படங்கள்: ஜெ.தான்யராஜு