Published:Updated:

இதுவரை பயன்படுத்தாத சட்டம்... ரிசர்வ் வங்கிக்கு எதிராக மத்திய அரசு அதிரடி..!

இதுவரை பயன்படுத்தாத சட்டம்... ரிசர்வ் வங்கிக்கு எதிராக மத்திய அரசு அதிரடி..!
இதுவரை பயன்படுத்தாத சட்டம்... ரிசர்வ் வங்கிக்கு எதிராக மத்திய அரசு அதிரடி..!

ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து, சுதந்திர இந்தியாவில் இதுவரை பயன்படுத்தாத சட்டப்பிரிவை மத்திய அரசு பயன்படுத்தியுள்ளது.

ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து, சுதந்திர இந்தியாவில் இதுவரை பயன்படுத்தாத சட்டப்பிரிவை மத்திய அரசு பயன்படுத்த உள்ளது. இதனால், ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியிலிருந்து உர்ஜித் படேல் ராஜினாமா செய்யக்கூடும் எனத் தகவல் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மோதல் ஏன்? 

பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட சில பொதுத் துறை வங்கிகளில் கடன் வழங்கியதில் நடந்த ஊழல்கள் மற்றும் வாராக் கடன் அதிகரிப்பு உள்ளிட்டவை காரணமாக, வாராக்கடன் சுமையால் தவிக்கும் வங்கிகளுக்குக் கடன் மறுப்பு, வங்கிக்கான வட்டி விகிதங்கள் உள்ளிட்ட விஷயங்களில் மத்திய அரசின் பரிந்துரையை ரிசர்வ் வங்கி தொடர்ந்து நிராகரித்து வந்தது. 

மேலும், ஐஎல்&எஃப்எஸ் தனியார் நிதி நிறுவனம் நிதிச் சிக்கலில் சிக்கியதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடு காரணமாக, என்பிஎஃப்சி  எனப்படும் தனியார் நிதி நிறுவனங்களுக்குப் பொதுத்துறை வங்கிகள் மூலம் பெரிய அளவில் கடன் கிடைப்பது குறைந்துபோனது. இதனால், அவை பணப்புழக்கமின்றி தவித்துவருகின்றன. அந்த நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில், கடன் வழங்குவது தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என அரசுத் தரப்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. 

இதற்குப் பதிலடியாக, கடந்த செப்டம்பர் மாதம், ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ள தலைவர்களில் ஒருவரான நாச்சிகெட் மார் என்பவர், பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுக்கு முன்னதாகவே, அந்தக் குழுவிலிருந்து நீக்கப்பட்டார். இதுகுறித்து அவருக்கு முன்கூட்டியே எதுவும் தெரிவிக்கப்படவும் இல்லை. டிவிடெண்டை அதிகப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாலேயே, அவர் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. 

வீதிக்கு வந்த சண்டை

இப்படி இருதரப்புக்கும் இடையேயான மோதல் உள்மட்டத்திலேயே நடைபெற்று வந்த நிலையில்தான், தங்களது நடவடிக்கைகளில் மத்திய அரசின் தலையீடு இருப்பதால் ரிசர்வ் வங்கியின் தனித்தன்மைக்குச் சிக்கல் எழுந்துள்ளதாக அதன் துணை ஆளுநர் வைரல் ஆச்சார்யா, கடந்த வாரம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், வெளிப்படையாகக் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. ``ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை மத்திய அரசு மதிப்பதில்லை. இதற்கான விளைவுகள் விரைவிலோ சற்று தாமதமாகவோ தெரியவரும்" என்ற அவரது பேச்சுக்கு அவ்வங்கியின் ஊழியர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்தது. அரசுடனான மோதலை இவ்வாறு பகிரங்கப்படுத்தியது, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்குக் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 

டெல்லியில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற இந்திய-அமெரிக்கக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அருண் ஜெட்லி, ரிசர்வ் வங்கித் தலைமையைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். 

``கடந்த 2008-ம் ஆண்டு உலகப் பொருளாதாரப் பெருமந்தம் ஏற்பட்டபின், 2008 முதல் 2014-ம் ஆண்டுவரை பார்த்தால், பொருளாதாரம் என்பது செயற்கையாகவே இழுத்துச் செல்லப்பட்டது. வங்கிகள் தங்கள் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு அனைவருக்கும் கடன் அளித்தன. யாருக்குக் கடன் கொடுக்கலாம், கொடுக்கக் கூடாது என்ற பாகுபாடு இல்லாமல் கடன் கொடுத்தன. இதைத் தடுப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அப்போது கண்களைத் திருப்பிக்கொண்டது. அப்போதைய மத்திய அரசு மற்றொரு பக்கம், வங்கிகள் இன்னொரு பக்கம் பார்த்துக்கொண்டிருந்தன.

இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்த வேண்டிய நிலையில் இருந்த ரிசர்வ் வங்கி அப்போது என்ன செய்து கொண்டிருந்தது என்பது ஆச்சர்யமளிக்கிறது. அவர்கள் உண்மையை, கம்பளியின் கீழ் மறைத்து விட்டார்கள். அப்போது இருந்த மத்திய அரசு, வங்கிகள் கடன்களை வாரி வழங்க அழுத்தம் தந்தது. இதனால் வங்கிகளின் கடன் வளர்ச்சி விகிதம் 14 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக கிடுகிடுவென ஏறியது.

ஆனால், பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபின், கடன் அளிப்பது 14 சதவிகிதமாக இருந்த நிலையில், அதை 31 சதவிகிதமாக உயர்த்தினோம். 2014-ம் ஆண்டுக்குப் பின் மத்திய அரசு எடுத்து பல்வேறு நடவடிக்கையால் அரசின் வருவாய் அதிகரித்தது. 2014-ம் ஆண்டிலிருந்து 2019-ம் ஆண்டுவரை அரசுக்கு வரிசெலுத்துவோர் அளவு இருமடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 6.8 கோடியாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பொதுத்துறை வங்கிகளைக் கட்டுப்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கிகளுக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்க வேண்டும்" என்று ஜெட்லி பேசியது இருதரப்புக்கும் இடையேயான மோதலை மேலும் அதிகப்படுத்தியது. 

மத்திய அரசின் அதிரடி

இந்த நிலையில்தான் தன்னாட்சி உரிமை கொண்டதாகச் சொல்லப்படும் ரிசர்வ் வங்கியின் மீது தனது பிடியை இறுக்குவதற்காக, சுதந்திர இந்தியாவில் இதுவரை எந்த ஒரு மத்திய அரசும் பயன்படுத்தாத, இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் 7-வது பிரிவைப் பயன்படுத்தியுள்ளது மத்திய அரசு. இச்சட்டப்பிரிவு, பொதுநலன் கருதி குறிப்பிட்ட சில பிரச்னைகள் குறித்து அதன் கவர்னருடன் கலந்தாலோசிக்கவும், அவருக்கு அறிவுறுத்தல்களை வழங்கவும் அதிகாரம் அளிக்கிறது. 

அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, மத்திய அரசு தற்போது கவர்னர் உர்ஜித் படேலுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், பொதுத் துறை வங்கிகள் கடன் வழங்கிய விவகாரத்தை அவ்வங்கி அதிகாரிகள் கையாண்ட விதம் குறித்தும், நிதிச் சந்தையில் நிலவும் இறுக்கமான பணப்புழக்கம் மற்றும் அதைப் போக்க அரசுத் தரப்பில் செய்த பரிந்துரைகள் குறித்தும் படேலின் கருத்தைக் கேட்டுள்ளதாக, அவ்வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

உர்ஜித் படேல் ராஜினாமா

இந்த நிலையில், மேற்கூறிய மோதல் மற்றும் இதுவரை பயன்படுத்தாத சட்டப்பிரிவை மத்திய அரசு பயன்படுத்தியது போன்றவை காரணமாக அதிருப்தியடைந்துள்ள உர்ஜித் படேல், தனது பதவியை ராஜினாமா செய்வது குறித்துப் பரிசீலித்து வருவதாகப் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதுகுறித்து ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டன. 

அடுத்த கட்டுரைக்கு