அலசல்
Published:Updated:

அப்பாவிகளின் ஆதாரை வைத்து கிரிமினல்களுக்கு சிம் கார்டு!

அப்பாவிகளின் ஆதாரை வைத்து கிரிமினல்களுக்கு சிம் கார்டு!
பிரீமியம் ஸ்டோரி
News
அப்பாவிகளின் ஆதாரை வைத்து கிரிமினல்களுக்கு சிம் கார்டு!

அதிர வைக்கும் டெக் பயங்கரம்

ங்கள் ஆதார் விவரங்களை வைத்து, உங்களுக்குத் தெரியாமலே உங்கள் பெயரில் வேறு யாரோ ஒருவர் சிம் கார்டு வாங்கமுடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படி வாங்கிய சிம் கார்டைப் பயன்படுத்தி அவர் படுபயங்கரக் குற்றங்களில் ஈடுபட்டால், நீங்களும் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்க நேரிடும் என்பதும் தெரியுமா?  

சமீபத்தில் வெளியான ‘இரும்புத் திரை’ படத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத் தகவல் திருட்டை மையப்படுத்தியே கதை நகரும். அதுபோல, வேறு நபர்களின் ஆதார் தகவல்களை வைத்து, அவர்களின் பெயரில் பல சிம் கார்டுகள் சமூக விரோதக் கும்பலுக்கு விற்கப்பட்டுள்ளன. அந்த சிம்கார்டுகளை விலைக்கு வாங்கி, டாக்டர்களைக் குறிவைத்து மிரட்டிப் பணம் பறித்த இன்ஜினீயர்களை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த நெட்வொர்க் குறித்து விசாரித்தபோது கிடைத்த தகவல்கள், போலீஸ் வட்டாரத்தையே அதிரவைத்துள்ளன. 

அப்பாவிகளின் ஆதாரை வைத்து கிரிமினல்களுக்கு சிம் கார்டு!

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உத்தண்டியில்,   குடியிருப்பவர் டாக்டர் ஹரீஷ். இவர் மே 3-ம் தேதி, கானத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். ‘நள்ளிரவில் எனக்கு போன் செய்த நபர், பணம் கேட்டு மிரட்டினார். பணம் தரவில்லை என்றால், கொலை செய்துவிடுவதாகக் கூறினார்’ என்று புகார் செய்த டாக்டர், அந்த மிரட்டல் ஆடியோவையும் போலீஸாரிடம் கொடுத்தார். இந்தப் புகாரை வைத்து, போலீஸார் ரகசியமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இதேபோல சென்னையில் 20-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மிரட்டப்பட்டது தெரியவந்தது.

மிரட்டல் கும்பலைப் பிடிக்க உடனடியாகத் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸாரின் பலநாள் தேடுதல் வேட்டையில், அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த முருகன், அவரின் நண்பர் பாலாஜி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து விலையுயர்ந்த செல்போன்கள், சிம் கார்டுகள் ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல்செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளிடம் விசாரித்தோம். ‘‘ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த முருகனும், கடலூரைச் சேர்ந்த பாலாஜியும், ஒன்றாக சென்னையில் டிப்ளமோ இன்ஜினீயரிங் பயின்றுள்ளனர். அப்போது நண்பர்களான இவர்கள் இருவரும், ஆடம்பரமாக வாழவும், குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்கவும் திட்டம் போட்டனர். இதற்காக டாக்டர்களை மிரட்டிப் பணம் பறிக்கத் திட்டமிட்டுள்ளனர். சிம் கார்டுகளை விற்பவர்களிடம் கூடுதல் பணம் கொடுத்து, வேறு நபர்களின் முகவரி மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் சிம் கார்டுகளை வாங்கியுள்ளனர். அந்த சிம்கார்டுகளைப் பயன்படுத்தி, சென்னையில் சிறிய அளவில் பிராக்டீஸ் செய்யும் டாக்டர்களை மிரட்டத் தொடங்கினர். ஒரு குறிப்பிட்ட டாக்டருக்குக் குறி வைத்தால், அவரிடம் சிகிச்சை பெற எவ்வளவு கூட்டம் வருகிறது என்பதைக் கண்காணித்து, அதற்கு ஏற்றபடி பணம் கேட்டு மிரட்டுவார்கள்.

இவர்களின் மிரட்டலுக்குப் பயந்து சில டாக்டர்கள், லட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்துள்ளனர். ‘வீண் பிரச்னை எதற்கு’ என அவர்கள் யாரும் போலீஸிடம் புகார் கொடுக்கவில்லை. இதனால், இவர்கள் துணிச்சல் பெற்று பலரையும் மிரட்டிப் பணம் குவித்தனர். ஹரீஷுக்கு வந்த மிரட்டல் செல்போன் நம்பரை ஆய்வுசெய்தோம். அது, பாரிமுனையில் ஒருவரின் முகவரியைக் காட்டியது. அங்குசென்று அந்த நபரிடம் விசாரித்தோம். அவருக்கும் மிரட்டலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிந்தது. அப்போதுதான் அந்த நபருக்கு, அவர் பெயரில் இன்னொரு சிம் கார்டை யாரோ வாங்கியிருப்பது தெரிந்தது.

அப்பாவிகளின் ஆதாரை வைத்து கிரிமினல்களுக்கு சிம் கார்டு!

அவர் எங்கு சிம் கார்டு வாங்கினார் என விசாரித்தோம். தாம்பரத்தில் ஒருவரிடம் அவர் வாங்கியது தெரிந்தது. அங்கு சென்றோம். சிம் கார்டு விற்றவர், ஒரே நபரின் ஆதார் விவரங்களை வைத்து இன்னொருவருக்கு சிம் கார்டு விற்றதை ஒப்புக்கொண்டார். ‘இத்தனை கார்டு விற்கவேண்டும் என இலக்கு உள்ளது. அதற்காகத்தான் செய்தேன்’ என்றார். அந்த சிம்கார்டு தற்போது யாரிடம் உள்ளது என்று விசாரித்தோம். இந்தச் சமயத்தில் பல்லாவரத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவருக்கும் இதேபோல மிரட்டல் வந்தது. உடனடியாக அந்த டாக்டரிடம் விசாரித்தோம். அவருக்கு வந்த மிரட்டல் போன் நம்பரை ஆய்வுசெய்து, முருகனையும் பாலாஜியையும் கைதுசெய்தோம்’’ என்றனர் அவர்கள்.

கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்ட முருகன், வழக்குகளிலிருந்து எப்படியெல்லாம் தப்பிக்கலாம் என்று தெரிந்துகொள்ள பி.ஏ கிரிமினாலஜி படித்துவருகிறார். இன்னொருவர் பெயரில் சிம்கார்டுகளை வாங்கி மிரட்டிப் பணம் பறிக்கும் டெக்னாலஜியை அவருக்கு யார் சொல்லிக்கொடுத்தது என போலீஸார் விசாரிக்கின்றனர்.

‘‘இந்த மிரட்டல் சம்பவத்தின் தொடர்ச்சியாக, ஒருவரின் பெயரில் அவருக்கே தெரியாமல் சில சிம் கார்டுகள் இருக்கும் அதிர்ச்சித் தகவல் எங்களுக்குத் தெரியவந்தது. அதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்துக்குப் புகார் அனுப்பியுள்ளோம்” என்றனர் போலீஸார். இதுகுறித்து நேஷனல் சைபர் சேஃப்டி அண்டு செக்யூரிட்டி ஸ்டாண்டர்டு அமைப்பின் இயக்குநர் அமர்பிரசாத் ரெட்டி, “ஆதார் எண் அடிப்படையில்தான் சிம் கார்டுகள் கொடுக்கப்படுகின்றன. சிம்கார்டு வாங்கும் நடைமுறையில் அரசு கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஆதார் அடிப்படையில் சிம்கார்டுகளைப் பெறும்போது, உங்களின் மொபைல் நம்பருக்கு எஸ்.எம்.எஸ் வரும். ஒன்றுக்கும் மேற்பட்ட எஸ்.எம்.எஸ்-கள் வந்தால், சிம்கார்டு வாங்குபவர்கள் கவனமாக இருக்க வேண்டும்” என்கிறார்.

‘‘சிம் கார்டு பெற ஆதார் எண் விவரத்தைத் தெரிவித்ததும் உங்களின் கைரேகையை சிம் கார்டு விற்கும் ஏஜென்டுகள் பயோ மெட்ரிக் கருவியில் பதிவு செய்வார்கள். அப்போது, ‘கைரேகை சரியாகப் பதிவாகவில்லை’ என்றுகூறி மீண்டும் பதிவுசெய்வார்கள். முதலில் வைக்கும் பதிவுக்கான சிம் கார்டு உங்களுக்குக் கிடைக்கும். மீண்டும் வைக்கும் கைரேகை ஒவ்வொன்றுக்கும் கிடைக்கும் சிம் கார்டுகளை சமூக விரோதக் கும்பலிடம் கணிசமான தொகைக்கு விற்றுவிடுவார்கள்” என்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள்.

எல்லோரும் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

- எஸ்.மகேஷ்