Published:Updated:

`ஹேஹேய் ஆப்பிள் இஸ் பேக்'... புதிய மேக்புக் ஏர் விசேஷங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`ஹேஹேய் ஆப்பிள் இஸ் பேக்'... புதிய மேக்புக் ஏர் விசேஷங்கள்!
`ஹேஹேய் ஆப்பிள் இஸ் பேக்'... புதிய மேக்புக் ஏர் விசேஷங்கள்!

பெரிய அப்டேட்கள் எதுவுமின்றி வந்துகொண்டிருந்த மேக்புக்குக்கு, இந்த முறை நிறைய சர்ப்ரைஸ் விஷயங்களைச் சேர்த்துள்ளது ஆப்பிள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

செப்டம்பர் மாதம் கலிபோர்னியாவில் நடந்து முடிந்த ஆப்பிள் நிகழ்வில் புதிய ஐபோன்கள் மற்றும் பல சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து நேற்று நியூயார்க்கில் தனது அடுத்த சிறப்பு அறிமுக விழாவை நடத்தியது ஆப்பிள். இதில் புதிய மேக்புக் ஏர், ஐபேட் ப்ரோ, மேக் மினி போன்ற புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தினார் டிம் குக். அவை என்ன, அவற்றில் என்ன ஸ்பெஷல் என்று பார்ப்போம்.

புதிய மேக்புக் ஏர் 

மேக்புக் ப்ரோ மாடல்களைவிட மெல்லியதாக இருக்கும் மேக்புக் ஏர் மாடல் லேப்டாப்கள் 2010-ம் ஆண்டுக்குப் பிறகு, எந்த ஒரு பெரிய மாற்றமும் இல்லாமல் வந்துகொண்டிருந்தன. ஒருபக்கம் ஐபோனில் மொத்த வித்தையையும் ஆப்பிள் இறக்கிக்கொண்டிருக்க, மேக்புக்கோ பெரிய அப்டேட்கள் எதுவுமின்றி வந்துகொண்டிருந்தது. இந்த விஷயத்தில், 'ஐ யம் பேக்' சொல்லியிருக்கிறது ஆப்பிள். மக்கள் எதிர்பார்ப்புக்கிடையில் இறுதியாக இவற்றுக்கு நேற்று புதிய வடிவம் கொடுத்தது ஆப்பிள். முதல்முறையாக ஏர் மாடலுக்கு ரெட்டினா டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே 13.3 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளேயுடன் வருகிறது புதிய மேக்புக் ஏர். மேலும், ஐபோன்களில் இருக்கும் டச் ஐடி வசதியையும் இதில் சேர்ந்துள்ளது. கைரேகையை வைத்து லாகின் செய்ய உதவும் இதை சப்போர்ட் செய்ய ஆப்பிளின் T2 செக்யூரிட்டி சிப்பும் இணைக்கப்பட்டுள்ளது. இன்டெல் கோர் ஐ5 ப்ராசசர்களை கொண்டுள்ள இதில் 2 டைப்-சி போர்ட்டுகளும், 3 தண்டர்போல்ட் போர்ட்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இதிலேயே சார்ஜிங், HDMI, VGA, e-GPU என அனைத்தையும் கனெக்ட் செய்ய முடியும் என்கிறது ஆப்பிள். 3 மைக்குகளைக் கொண்டுள்ள இதில் வீடியோ காலிங் துல்லியமாக இருக்குமாம். 50.3Wh பேட்டரி 13 மணிநேரம் ஐடியூன்ஸில் படம் பார்க்கும் அளவு தாக்குப்பிடிக்கும். 3 வண்ணங்களில் விற்பனைக்கு வரும் இது, இந்தியாவில் சுமார் 1.15 லட்சம் ரூபாய் விலையிலிருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 100 சதவிகிதம் மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியத்தில் தயாரிக்கப்படும் இதுதான் இருப்பதிலேயே 'Greenest' மேக்புக் என்றும் தயாரிப்பில் ஏற்படும் கார்பன் ஃபுட்பிரின்ட் எமிஷனும் வெறும் 47% தான் என்றும் தெரிவித்துள்ளது ஆப்பிள். 

ஐபேட் ப்ரோ 

புதிய ஐபேட் மாடலில் ஏற்கெனவே இருந்த ஒரு பட்டனையும் நீக்கி டிஸ்ப்ளே ஏரியாவை அதிகரித்துள்ளது ஆப்பிள். Face ID தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டுள்ளது. பெரிய டிஸ்ப்ளே இருப்பினும் அளவில் சிறியதாகவே இருக்கிறது இந்த ஐபேட் ப்ரோ. A12X பயானிக் சிப்பில் இயங்கும் இதில் 8 கோர் CPU-வும் 7 கோர் GPU-வும் உள்ளன. 64 GB முதல் 1 TB வரை ஸ்டோரேஜ் தேர்வுகள் உள்ளன. முதல்முறையாக ஆப்பிளின் லைட்னிங் போர்ட்டில் இருந்து டைப்-சி போர்ட்டுக்கு மாறுகிறது ஐபேட். ஹெட்போன் ஜாக் இல்லாததால் சார்ஜிங், ஹெட்போன் என இரண்டுக்கும் இந்தப் போர்ட்தான். 11-இன்ச், 12.9-இன்ச் என இரண்டு அளவுகளில் கிடைக்கின்றன புதிய ஐபேட்கள். பழைய ஐபேட் போலவே பின்பக்கம் 12 MP கேமராவும் முன்பக்கம் 7 MP கேமராவையும் கொண்டுள்ளது இது. போட்டோஷாப் போன்ற மென்பொருள்களை நன்றாகச் சப்போர்ட் செய்யும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். 11 இன்ச் 64 GB வேரியன்ட் இந்தியாவில் சுமார் 72,000 ரூபாய்க்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். மேக்புக் போலவே மறுசுழற்சி அலுமினியம் மூலம் தயாரிக்கப்படுகிறது இது. சிறிய முயற்சி என்றாலும் எலெக்ட்ரானிக் கழிவுகளைக் குறைக்க உதவும் இது.

ஆப்பிள் பென்சில் 

மேலும் ஐபேட்டுடன் உபயோகிக்க இரண்டாம் தலைமுறை ஆப்பிள் பென்சிலையும் அறிமுகப்படுத்தியது ஆப்பிள். மேக்னெட்டிக் சார்ஜிங் வசதி கொண்ட இது நேரடியாக ஐபேட் மேலே உள்ள மேக்னெட்டில் மாட்டிக்கொண்டால் அதிலேயே சார்ஜ் ஆகிவிடும். மேலும் பென்சிலில் விரலால் தட்டினால் ஆப்ஷன்களை மாற்ற முடியும். பழைய பென்சிலில் இருந்து இது தேவையான ஓர் அப்டேட்டாகவே பார்க்கப்படுகிறது.

மேக் மினி 

மேக் மினியும் பல வருடங்களாக எந்த ஓர் அப்டேட்டும் இல்லாமல் இருந்து வந்தது. கடைசியாக இதிலும் மாற்றங்கள் செய்து புதிய மேக் மினியை நேற்று அறிமுகப்படுத்தியது ஆப்பிள். சிறிய கையடக்க கம்ப்யூட்டர் போன்ற இதில் டிஸ்ப்ளே மற்றும் கீபோர்டு மாட்டிக்கொண்டால் PC போலப் பயன்படுத்திக்கொள்ளலாம். எல்லாவற்றிலும் சமீபத்திய தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ள இது உங்கள் தேவைக்கேற்ப Quadcore 8th-gen Intel Core ரக புராசஸர்களில் தொடங்கி பல வடிவங்களில் கிடைக்கும். இதிலும் ஆப்பிளின் பாதுகாப்பு சிப்பான T2 பொருத்தப்பட்டுள்ளது. மவுஸ், கீபோர்டு போன்ற மற்ற சாதனங்களைக் கனெக்ட் செய்யவும் எக்கச்சக்க போர்ட்டுகளை தருகிறது ஆப்பிள். 4 தண்டர்போல்ட், 3 டைப்-சி, 1 HDMI 2.0, ஈதர்நெட் மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் இதில் அடங்கும். இதன் விலை இந்தியாவில் சுமார் 76,000 ரூபாயிலிருந்து ( 8GB RAM + 128GB SSD ) தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

புதிய சாதனங்களில் வந்துள்ள மாற்றங்களை வரவேற்கும் மக்கள் அதே சமயம் முன்பைவிட ஆப்பிள் தனது சாதனங்களுக்கு அதிகமான விலையை நிர்ணயிப்பதாகப் புகார்களும் எழுந்துள்ளன. புதிய ஐபோன்களுக்கும் இதே புகார் எழுந்தன. இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் கொடுக்கும் விலைக்கேற்ற வசதிகளை ஆப்பிள் தரத் தவறுவதில்லை என்ற வாதமும் இல்லாமல் இல்லை. ஆப்பிளோட கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்றாய்ங்களே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு