Published:Updated:

"அப்பா வாங்கித் தர்ற பிரியாணிக்காகவே டிராமா போடுவோம்!”

 "அப்பா வாங்கித் தர்ற பிரியாணிக்காகவே டிராமா போடுவோம்!”
பிரீமியம் ஸ்டோரி
"அப்பா வாங்கித் தர்ற பிரியாணிக்காகவே டிராமா போடுவோம்!”

அவள் அரங்கம் - சமையல்கலை நிபுணர் ரேவதி சண்முகம்பொக்கிஷம்தொகுப்பு: ஆ.சாந்தி கணேஷ் படம் : ப.சரவணகுமார்

"அப்பா வாங்கித் தர்ற பிரியாணிக்காகவே டிராமா போடுவோம்!”

அவள் அரங்கம் - சமையல்கலை நிபுணர் ரேவதி சண்முகம்பொக்கிஷம்தொகுப்பு: ஆ.சாந்தி கணேஷ் படம் : ப.சரவணகுமார்

Published:Updated:
 "அப்பா வாங்கித் தர்ற பிரியாணிக்காகவே டிராமா போடுவோம்!”
பிரீமியம் ஸ்டோரி
"அப்பா வாங்கித் தர்ற பிரியாணிக்காகவே டிராமா போடுவோம்!”

ரேவதி சண்முகம்... கவிஞர் கண்ணதாசனின் மகள் என்கிற அடையாளத்தைத் தாண்டி, பிரபல

 "அப்பா வாங்கித் தர்ற பிரியாணிக்காகவே டிராமா போடுவோம்!”

சமையல்கலை நிபுணர் என்று தனக்கென ருசியான ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டிருப்பவர். இந்த உணவுச் சிறப்பிதழில் வாசகிகளின் கேள்விகளுக்கு சுவையான பதில்கள் தருகிறார்.

சமையல் பக்கம் உங்களை ஈர்த்தது எது?

- கே.கலாவதி, திருப்பூர்


ஓர் உண்மையைச் சொல்லட்டுமா கலாவதி... கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் எனக்குச் சமைக்கவே தெரியாது. துவரம்பருப்புக்கும் கடலைப்பருப்புக்குமே வித்தியாசம் தெரியாது. அந்தக் காலத்துல இப்ப இருக்கிற மாதிரி நிறைய பொழுதுபோக்குகள் கிடையாது. கிச்சன்ல விதவிதமா சமைச்சுப் பார்த்துத்தான் பொழுதைப் போக்கணும். இங்கிலீஷ் சமையல் புத்தகங்களைப் பார்த்து பனீர், க்ரீம் போட்டு செய்யற மாதிரியான டிஷ்களையெல்லாம் முயற்சி பண்ணிப் பார்ப்பேன். நல்லா வர்ற ரெசிப்பிகளை மட்டும் வீட்ல மத்தவங்களுக்குச் சாப்பிடக் கொடுப்பேன். என் புகுந்த வீட்ல சமையல் நல்லா இருந்தா மனம்விட்டுப் பாராட்டுவாங்க. அந்தப் பாராட்டுதான் என்னைச் சமையல் பக்கம் ஈர்த்தது.

உங்கள் அப்பா கண்ணதாசன் உங்களை சினிமாத் துறையில் ஈடுபடுத்த விரும்பினாரா?

- எஸ்.ரெஜினா, சென்னை-16


என்னது... எங்கப்பா அவருடைய பொண்ணுங்களை சினிமாவுல ஈடுபடுத்துறதா? வாய்ப்பே இல்லைங்க. அவருக்கு நாங்க வாசல்ல வந்து நின்னாலே பிடிக்காது; கண்ணுல பளிச்னு மை வெச்சா பிடிக்காது; தலை நிறைய பூ வெச்சா பிடிக்காது. இன்னொரு விஷயம் சொல்லட்டா... அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள்னு எப்பவும் அப்பாவைப் பார்க்க யாராவது வீட்டுக்கு வந்துட்டே இருப்பாங்க. அதனால, வீட்டுப் பொண்ணுங்க எங்களுக்கெல்லாம் பின்பக்கம் ஒரு வாசல் இருக்கும். நாங்க வெளிய போறது, வர்றது எல்லாம் அந்த வழியிலதான். இது மட்டுமல்ல, எங்களுக்குச் சினிமா பார்க்கிறதுக்கும் அனுமதி கிடையாது.

எங்கம்மா அதுக்கு மேல. ஒரு நடிகரைப் பிடிச்சிருக்குன்னு சொன்னா, ‘அதெப்படி ஓர் ஆம்பளையைப் பிடிச்சிருக்குன்னு சொல்லுவே’னு அடிச்சுடுவாங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 "அப்பா வாங்கித் தர்ற பிரியாணிக்காகவே டிராமா போடுவோம்!”

உங்களுக்காக, உங்கள் அப்பா பாடல் ஏதாவது எழுதியிருக்கிறாரா?

 - எம்.உமா, கோவை


அந்தக் கொடுப்பினையெல்லாம் எனக்குக் கிடைக்கலைங்க.

அப்பா உங்களுக்குத் தந்த பரிசுகளில் நீங்கள் பொக்கிஷமாக நினைப்பது?

- எஸ்.பிரியதர்ஷினி, வாலாஜாபாத்


நான்கு அமெரிக்கன் ஜார்ஜெட் புடவைகள். இன்றைக்கும் என் அப்பாவின் ஞாபகமா இந்தப் புடவைகளைத்தான் வெச்சிருக்கேன். 1973-ல் அப்பா வேலை விஷயமா சிங்கப்பூருக்குப் போனார். அப்ப நான் மாசமா இருந்தேன். அப்பா என்கிட்டே ‘உனக்கு சிங்கப்பூர்ல இருந்து என்ன வாங்கிட்டு வரணும்’னு கேட்டார். அப்போ அமெரிக்கன் ஜார்ஜெட் புடவைகள் ஃபேமஸ் என்பதால், அதையே கேட்டேன். எங்கம்மாகூட, ‘உங்கப்பா மறந்திடுவாரு பாரேன்’னுதான் சொன்னாங்க. ஆனா, மறக்காம வாங்கிட்டு வந்து கொடுத்தார். எங்கப்பாகூட சேர்ந்த மாதிரி எடுத்த ஃபேமிலி போட்டோகூட எங்ககிட்ட இல்லீங்க. அதனால, இந்தப் புடவைகளை நான் அப்பா ஞாபகார்த்தமா பொக்கிஷமா பாதுகாத்துட்டு வர்றேன்.

நீங்கள் கவிதைகள் எழுதியதுண்டா... வாசிப்பதுண்டா?

- சுஜாதா ஜோசப், திருச்சி


தமிழ்ப் பாடத்துல 98 மார்க் எடுக்கிற அளவுக்குத் தமிழ்மொழி மேல ஆர்வமிருந்தாலும் கவிதையெல்லாம் எழுதியதில்லை. அப்பாவின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ புத்தகத்தையே அவருடைய காலத்துக்குப் பிறகுதான் படிச்சேன். முன்னாடியே படிச்சிருந்தா அப்பாகிட்ட அதைப்பத்தியெல்லாம் பேசியிருக்கலாமேன்னு வருத்தப்பட்டிருக்கேன்.

எப்போதும் சமையல் பற்றியே யோசித்துக்கொண்டும், சமையல் செய்துகொண்டும் இருக்கிறீர்களே... போர் அடிக்கவில்லையா?

 - பானு ஆறுமுகம், பெரம்பூர்


ம்... எப்பவாவது அப்படியொரு சின்ன சலிப்பு வரும். யாராவது என் சமையலைப் பாராட்டும்போது அது மறைஞ்சு போயிடும்!

உங்களைத் தவிர உங்கள் சமையலறையைப் பயன்படுத்துபவர் யார்?

- எம்.கிருஷ்ணா, ஹைதராபாத்


வேற யார்? என் பொண்ணும் மருமகளும்தான். பொண்ணு வெரைட்டி ரைஸ் சூப்பரா பண்ணுவா. மருமகள் சமைக்கிற ‘தால்’ எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

சமையல் புத்தகம், ஒருவரைச் சமையலில் எக்ஸ்பெர்ட் ஆக்கிவிடுமா?

- கீதா கணேஷ், அருப்புக்கோட்டை


சமையல் புத்தகம் ஒரு துணை... அவ்வளவுதான். மத்தபடி, சமைச்சுப் பார்த்துப் பார்த்து, இவ்வளவு உப்புப் போடணும், இவ்வளவு காரம் போடணும்னு உங்களுக்கே ஓர் ஐடியா வரும் பாருங்க... அதுதான் சமையல். கல்யாணமான புதுசுல புக்கைப் பார்த்து நான் சமைச்ச சில ரெசிப்பிகள் வாயிலேயே வைக்க முடியாம இருக்கும். அதை யாருக்கும் தெரியாம குப்பையில் கொட்டிடுவேன்!

 உங்கள் குடும்பம்..?

- அ.மீனாட்சி, விருதுநகர்


கணவர் ரியல் எஸ்டேட், ஷேர் பிசினஸ் ரெண்டும் பண்றார். பொண்ணு கல்யாணமாகி துபாய்ல இருக்கா. பையன் கல்யாணமாகி இத்தாலியில் இருக்கான். பேரன், பேத்தி ரெண்டு பேருமே செம சுட்டி... படிப்பில் கெட்டி!

 "அப்பா வாங்கித் தர்ற பிரியாணிக்காகவே டிராமா போடுவோம்!”

உங்கள் அப்பாவுக்குப் பிடித்த உணவு?

- அனிதா பிரகாஷ்குமார், தஞ்சாவூர்


வருஷத்துல ஒரே ஒருநாள், பெரும் பொங்கல் நாளை தவிர்த்து எல்லா நாளும் அப்பாவுக்குச் சாப்பாட்டுல அசைவம் இருந்தே ஆகணும். அவருடைய தட்டுல கறி, மீன், முட்டைன்னு ஒரு சின்னத் துண்டாவது இருக்கணும். ஆனா, ஆன்மிகத்துல ஈடுபாடு வந்ததுக்கு அப்புறம் அசைவம் சாப்பிடறதைக் குறைச்சுக்கிட்டாரு. என் வருத்தம் என்னன்னா, அப்பாவுக்கு நான் தட்டு இட்லி மட்டும்தான் ஊத்திக்கொடுத்திருக்கேன். சட்னிகூட அரைச்சுக் கொடுத்ததில்லை. அப்பா என் சமையலை ருசித்ததே இல்லை.

வீட்டு உணவுகளுக்கும், ஹோட்டல் உணவுகளுக்கும் என்ன வித்தியாசம்?

- ஷோபி ராஜ், விஜயவாடா


வீட்டு உணவுகளில் ஆரோக்கியம் இருக்கும். ஹோட்டல் உணவுகளில் ருசி இருக்கும். மத்தபடி நாமதான் ஹோட்டலில் வீட்டுச் சாப்பாட்டையும், வீட்டில் ஹோட்டல் டேஸ்ட்டையும் எதிர்பார்க்கிற ஆட்களாச்சே!

உங்கள் பிள்ளைகள், ‘அம்மா சாப்பாடு மாதிரி வருமா’ என்று சொல்லியிருக் கிறார்களா?”

- கு.ரமேஷ், வளசரவாக்கம்


ம்ஹூம்... சொன்னதே இல்லை (சிரிக்கிறார்). என் பிள்ளைகளுக்கு அவங்க பெரியம்மா சமையல்தான் ரொம்பப் பிடிக்கும். ஆனா, என் பேரப் பிள்ளைகளுக்கு என் சமையல்தான் பிடிக்கும்.

பெண் கல்வி மற்றும் பெண்கள் வேலைக்குச் செல்வதைப் பற்றி உங்கள் அப்பாவின் அபிப்பிராயம் எப்படியிருந்தது?

- லலிதா மணிவண்ணன், அடையாறு


 `ஒரு பொண்ணுன்னா குடும்பத்தைப் பார்த்துக்கணும்; குழந்தைங்களை நல்லபடியா வளர்க்கணும்’கிற மைண்ட் செட்தான் அந்தக் காலத்தில அப்பாவுக்கு இருந்துச்சு. ஒருவேளை அப்பா இப்ப உயிரோடு இருந்திருந்தா, மனசு மாறியிருந்திருப்பாரோ என்னவோ?

அப்பா எழுதிய பாடல்களில் உங்களை மிகவும் பாதித்த பாடல் எது... ஏன்?

  - வி.பொன்னி, சுங்கச்சாவடி


நிறைய இருக்குங்க பொன்னி. கஷ்டங்களோடு, துயரங்களோடு இருக்கும்போதெல்லாம் எங்கிருந்தாவது ‘காலமகள் கண் திறப்பாள்’ பாட்டு என் காதுல விழுந்துடும். அப்பாவே எனக்கு ஆறுதல் சொல்றதா நினைச்சுப்பேன்.

நாங்க சின்னப் பிள்ளையா இருந்தப்போ ஒரு தீபாவளி நேரம். என் பெரியம்மா பசங்க, எங்கம்மா பசங்க என்று அப்பாவுக்கு 14 குழந்தைங்க. ஒருத்தருக்கும் புதுத்துணி எடுக்கலை. நாங்க எல்லாரும் அப்பாவைப் புதுத் துணி கேட்டு நச்சு பண்ணிக்கிட்டு இருந்தோம். அப்பா அவருடைய அண்ணன்கிட்ட பண உதவி கேட்க, அவர் மறுத்திட்டார். அப்போ மனசொடிந்து அப்பா எழுதினதுதான், ‘பழநி’ படத்தில் வர்ற ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா’ பாடல். இந்த மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கு அவரோட ஒவ்வொரு பாடலிலும்.

தி.நகரில் உள்ள உங்களது பாரம்பர்ய வீட்டின் நினைவுகள் சில..?

- அபிநயா முருகன், மதுரை


அந்த வீட்ல நாங்க வாழ்ந்த காலம் சொர்க்கம். ஒரு நாளைக்குக் குறைஞ்சது 30 பேராவது சாப்பிடுவாங்க. எந்நேரமும் உலை கொதிச்சுக்கிட்டே இருக்கும். அந்த வீட்ல நிறைய கல்யாணங்கள் நடந்திருக்கு. வீடே திருவிழா மாதிரி இருக்கும்.

பிள்ளைங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து அந்த வீட்ல நிறைய டிராமா போட்டிருக்கோம். அப்பாவின் வேட்டிதான் ஸ்க்ரீன். பார்வையாளர்கள் அப்பாவும் அம்மாவும் மட்டும்தான். நாங்க டிராமா போடுற அன்னிக்கெல்லாம் அப்பா எங்க எல்லோருக்கும் பிரியாணி வாங்கித் தருவாரு. அந்தப் பிரியாணிக்காகவே நாங்க அடிக்கடி டிராமா போடுவோம்கிறது சீக்ரெட்.

அந்த வீட்ல நாங்க எல்லோரும் வரிசையா ஒரு ரூம்ல தூங்குவோம். அப்பா வீட்டுக்கு லேட்டா வந்தார்னா, அம்மாவுக்குத் தெரியாம வரிசையா எங்களைக் காலால் தட்டி எழுப்பி விட்டுடுவாரு. அப்புறம் என்ன, நடுராத்திரி மொத்தப் பேரும் அப்பாவைக் கொஞ்சிட்டு, பேசிட்டு இருப்போம். அம்மாதான் பாவம், ‘பசங்க காலையில ஸ்கூலுக்குப் போகணும்’னு சத்தம் போட்டுக்கிட்டே இருப்பாங்க.

அப்பாவின் இறப்புக்குப் பிந்தைய வாழ்க்கையில், நீங்கள் மிகவும் துயரப்பட்ட தருணம்?

- லலிதா சொர்ணா, சென்னை


அப்பாவின் மறைவுக்கு அப்புறம் அம்மாதான் வீட்டின் தூணா நின்னாங்க. அப்பா இருக்கும்போது அம்மா துளித்துளியா சேர்த்து வெச்சதுதான் எங்களைக் காப்பாத்தினது. அம்மா, தான் இறக்கிறதுக்கு முன்னால, `நாலு நாள் உன்கூட இருக்கணும்'னு சொல்லிட்டு வந்து  என்னோடு தங்கியிருந்தாங்க. அப்போகூட எனக்குப் புரியலை. ஒரு வியாழக்கிழமை சுகர் அதிகமாயிடுச்சுன்னு ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆனவங்க, சனிக்கிழமை காலமாயிட்டாங்க. கண்ணைத் திறந்துட்டு இருக்கும்போதே கண்ணைப் பறிச்சுட்டுப்போன மாதிரி ஆயிடுச்சு.

உங்கள் சமையலைப் புகழ்ந்த மறக்கமுடியாத பிரபலங்கள்..?

 - ஏ.விசாலாட்சி, ஈரோடு


ஏவி.எம். சரவணன் அண்ணாவுக்கு என் சமையல் ரொம்பப் பிடிக்கும். சாப்பிட்ட கையோடு போன் பண்ணி குறைநிறைகளை கரெக்டா சொல்லிடுவார். அப்புறம் நடிகை லட்சுமி. ஒரு விழாவுல என்னைப் பார்த்துட்டு ‘நான் உன் பரம விசிறி. உன் சமையல் புத்தங்களைப் பார்த்துத்தான் சமைக்கிறேன்’னு சொன்னாங்க.

இவரை என்றாவது பார்க்க முடியுமா என்று நீங்கள் நினைக்கும் பிரபலம்..?

- ராஜேஸ்வரி.ம, திருத்துறைப்பூண்டி.


ஜெயலலிதா. இவங்களை நேரில் பார்க்கணும்னு ரொம்ப ஆசைப் பட்டேன். கடைசிவரைக்கும் முடியலை.

சோகத்தில் இருக்கும்போதும் சரி, கோபத்தில் இருக்கும் போதும் சரி... நன்றாகச் சாப்பிட்டாலே அத்தனையும் பறந்துபோகும் என்கிறார்களே... நீங்கள் எப்படி?

- ரிஸ்வானா, காயல்பட்டினம்


நான் இதுக்கு 100 பர்சன்ட் பொருந்துவேன். வீட்ல யாராவது என்னைத் திட்டியிருந்தாக்கூட கூலா சாப்பிடுவேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism