Published:Updated:

`` 'அந்த' நேரத்துல என் மனைவி மட்டும் இல்லேன்னா..?’’ - மனம் திறக்கும் நடிகர் ஜெயப்பிரகாஷ் #LetsRelieveStress

`` 'அந்த' நேரத்துல என் மனைவி மட்டும் இல்லேன்னா..?’’ - மனம் திறக்கும் நடிகர் ஜெயப்பிரகாஷ் #LetsRelieveStress

`` 'அந்த' நேரத்துல என் மனைவி மட்டும் இல்லேன்னா..?’’ - மனம் திறக்கும் நடிகர் ஜெயப்பிரகாஷ் #LetsRelieveStress
`` 'அந்த' நேரத்துல என் மனைவி மட்டும் இல்லேன்னா..?’’ - மனம் திறக்கும் நடிகர் ஜெயப்பிரகாஷ் #LetsRelieveStress

`கோபாலா கோபாலா’, `பொற்காலம்’, `செல்லமே’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் ஜெயப்பிரகாஷ். `பசங்க' படத்தில் நடித்ததன் மூலம் குணச்சித்திர நடிகராக அறியப்பட்டவர். பிறகு, அந்த வேடத்துக்கு இப்போதுவரை அவரை விட்டால் வேறு ஆளில்லை என்கிற அளவுக்கு மளமளவென்று ஏராளமான பாத்திரங்களில் நடிக்கிறார். வாழ்க்கையில் தனக்கு மனஅழுத்தம் தந்த தருணங்களை எப்படி எதிர்கொண்டார் என்பதை இங்கே விளக்குகிறார். 

 ``நாம் எல்லோருமே இளம்வயதில் மனஅழுத்தம் என்றால் என்னவென்றே தெரியாமல்தான் வளர்கிறோம். நம்முடைய வீட்டில் பிரச்னைகள் இருந்திருக்கலாம். ஆனால், அது நமக்குத் தெரிந்திருக்காது. படிப்பு, விளையாட்டு என வேறொரு உலகத்தில் வாழ்ந்துகொண்டு இருப்போம். அப்படித்தான் நானும் இருந்தேன். `உனக்குச் செய்ய வேண்டிய சிலவற்றைச் செய்யாமலே விட்டுவிட்டேன்’ என்று என்னுடைய அம்மா ஒருமுறை சொன்னார். `எனக்கு எல்லாமே கிடைத்திருக்கிறது அம்மா’ என்று பதில் சொன்னேன். ஆனால், ஏதோ ஒன்று கிடைக்காமல் போயிருக்கிறது. அது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. என்னைப் பெற்றவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இதுதான் பலருடைய வாழ்க்கையின் பாடம்! 

குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு, நாம் நம்முடைய காலில் சுயமாக நிற்போம். நிறைய அனுபவங்களைப் பெறுவோம். இளம் வயதில் தோல்வி என்பது பெரியதாக இருக்காது. ஆனால், அதற்குப் பிறகு நீங்கள் வளர்ந்து அப்போது ஏற்படுகிற இழப்பு என்பது ஜீரணிக்க முடியாததாக இருக்கும். இளமைக்கும் முதுமைக்குமான இடைப்பட்ட வயதில் ஏற்படுகிற சறுக்கல் மிகவும் துயரமானது.  
சின்ன வயதில் கிராமத்தில் வளர்ந்திருப்போம். அப்போது, ஏ.சி. என்றால் என்னவென்றே அறிந்திருக்க மாட்டோம். ஆனால், நகரத்தை நோக்கி வந்தபிறகு, சொகுசாக வாழ்வதற்கான எல்லாவற்றையும் அடைந்துவிடுவோம். நம்முடைய பிள்ளைகளையும் அதை அனுபவிக்கச் செய்வோம். பிறகு, இக்கட்டான ஒரு காலகட்டத்தில் அவை எல்லாவற்றையும் கைவிட்டே ஆக வேண்டும் என்ற நெருக்கடி நிலை வரும். அப்போது ஏற்படும் வலி ரொம்ப பெரியதாக இருக்கும். அதைச் சொன்னால் புரியாது. அந்த மாதிரியான ஒரு வலியை என்னுடைய வாழ்க்கையில் அனுபவித்திருக்கிறேன்.

நமக்கு ஏற்படும் தோல்விகளுக்கு நாம்தான் காரணமாக இருந்திருப்போம். தோல்விக்கு மற்றொருவரைக் காரணம் காட்டலாம். அது ஒரு தற்காலிகத் தீர்வாக மட்டுமே இருக்கும். ஆனால், ஒருபோதும் உங்களிடமிருந்து நீங்கள் தப்பிக்கவே முடியாது. நீங்கள் தவறு செய்தால் அதனால் ஏற்படும் இழப்பையும் நீங்கள் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். அதை வேறொருவர் மீது தள்ளிவிட நினைத்தால் கடைசிவரை நீங்கள் வெற்றியைக் காணவேமுடியாது. 

தோல்வியை ஏற்றுக்கொள்ளும்போது, உங்களுக்கு அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்கிற தெளிவு பிறக்கும். `சரி, பிரச்னையில் சிக்கிக்கொண்டோம். இதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?’ என்று திட்டமிடுவீர்கள். அப்படிச் செய்யும்போது வெற்றி உங்களுக்கு அருகில் வந்துவிடும்.  

வாழ்க்கையில் புத்திசாலிகள் எவரும் சிரமப்படமாட்டார்கள். அவர்களுக்கும் நல்ல நேரம். கெட்ட நேரம் இரண்டுமே உண்டு. அவர்கள் கெட்ட நேரங்களை முன்கூட்டியே கணித்திருப்பார்கள். அவர்களுக்குச் சங்கடங்கள் கூடச் சங்கடங்களாக இருக்காது. கீழே விழுந்தாலும் பாதுகாப்பு கவசங்களோடுதான் விழுவார்கள். ஆனால், முட்டாள்கள் எப்போதும் மிக உயரத்தில் இருந்தே விழுவார்கள். அதனால் வலியும் அதிகமாகவே இருக்கும். அப்படிப் பார்த்தால், நான் இரண்டாவது வகை!

`எனக்கெல்லாம் எதுவுமே நடக்காது’ என்று வியாபாரத்தில் நினைத்துக்கொண்டிருந்தபோது கீழே விழுந்தேன். அப்போது, என்னைத் தாங்கிப் பிடித்துக்கொண்டது என்னுடைய குடும்பம்தான். என் மனைவிதான். யார் சங்கடப்படுவார்கள் என்று நினைத்தேனோ.. அவர் தைரியமாக இருந்தார், அதனால் எனக்கும் தைரியம் வந்துவிட்டது. `வாழ்க்கையில் இதையெல்லாம் அடைந்தோமே.. இப்போது அதை இழக்க வேண்டியிருக்கிறதே’ என்று நான் தவித்தபோது, `இவை எல்லாம் நீங்கள் கொண்டு வந்துதானே.. போனால் போகட்டும். காலப்போக்கில் திரும்பி வரப்போகிறது’ என்று சொல்லி, எனக்கு உந்துசக்தியாக இருந்தவர் என்னுடைய மனைவிதான். அவங்களுடைய ஆதரவு எனக்கிருந்த எல்லா வகையான மனஅழுத்தத்தையுமே விரட்டி அடித்துவிட்டது!

வெளியில் ஒருவருக்கு எவ்வளவு பிரச்னைகள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அவர் வீட்டுக்கு வந்தால், அங்கே அவருக்குச் சிறிது நிம்மதியாவது இருக்க வேண்டும். அப்படியான சூழல் கிடைக்காதவர்கள்தான் தவறான முடிவுகளை எடுத்துவிடுகின்றனர். உங்களுடைய குடும்பம் உங்களுக்கு எந்தளவுக்கு ஆதரவாக இருக்கிறதோ. அந்தளவுக்கு எத்தகைய மனஅழுத்தத்திலிருந்தும் நீங்கள் எளிதாக வெளியே வந்துவிடலாம்!

வியாபாரத்தில் தோல்வி ஏற்பட்டபோது, நானும் மனஅழுத்தத்தில் சிக்கியிருந்தேன். அப்போது, என்னுடைய சகோதரி, ``நீ தப்பான முறையில் வியாபாரம் பண்ணியிருக்க... அதனால பணத்தை இழந்திருக்க... பணத்தைத் திருப்பிச் சம்பாதிச்சுக்கலாம். ஆனா, உன் உடம்பு நல்லாத்தானே இருக்கு...’’ என்று சொன்னார். அவர் சொன்ன பிறகு, நானும் யோசித்தேன். ஆமாம். `நமக்கு உடல்நலம் நன்றாகத்தானே இருக்கிறது. அதுவும் மோசமாகி இருந்தால் வாழ்க்கை இன்னும் மோசமாக அல்லவா போயிருக்கும்?’ என்று எண்ணிக்கொண்டேன்! 
தங்களுடைய குடும்பத்தின் ஆதரவு கிடைக்காமல் அவதிப்படும் சிலரை பார்த்திருக்கிறேன். வியாபாரத்தில் தோல்வி வந்துவிட்டால், `என் நிம்மதியே போய்விட்டது. ஒரு பெக் போட்டால்தான் எனக்குத் தூக்கமே வரும்’ என்று சொல்வார்கள். சங்கடத்தில் இருக்கும்போது குடித்தால் சங்கடம் இரட்டிப்பாகுமே, தவிர சரியாகாது. காலையில் எழுந்திருக்கும்போது உடலும் உள்ளமும் இன்னும் மோசமான நிலைக்குப் போய்விடும். மூளை ஒழுங்காக வேலை செய்யாது. நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்த காரியத்தைக் கூட தள்ளிப்போட வேண்டியிருக்கும்.

ஆகவே, மனஅழுத்தத்தில் இருக்கும்போது குடிப்பதை தவிர்ப்பது நல்லது. அதேபோல, பத்து சிகரெட் புகைத்தால் பிரச்னை சரியாகிவிடும் என்று நினைப்பதும் தவறு. இவையெல்லாம் நம்முடைய தவற்றை நாம் ஏற்றுக்கொள்ளாதபோது வரும்!
ஒரு பிரச்னை வந்தால் அதைத் தள்ளிப்போடாதீர்கள். நீங்கள் எந்த அளவுக்குத் தள்ளிப்போடுகிறீர்களோ அந்தளவுக்குப் பிரச்னை பெரிதாகுமேதவிர சரியாகாது. `இன்று இந்தப் பிரச்னையை இவரோடு உட்கார்ந்து பேசி விட வேண்டும்’ என்று முடிவெடுத்துவிட்டால், அது நல்லதோ, கெட்டதோ அதில் ஒரு முடிவு வந்துவிடும். இல்லையென்றால், அது மூளைக்குள் உட்கார்ந்து அழுத்தத்தைதான் தரும். பிரச்னையை எதிர்கொள்வதுதான் சரியான அணுகுமுறை. தள்ளிப்போடுவது அல்ல. இது என்னுடைய வாழ்க்கையில் உணர்ந்த விஷயம். ஆனால், இன்றைக்கு இருக்கிற இளம்தலைமுறையினரிடம் மனஅழுத்தம் அதிகமாகவே இருக்கிறது. அவர்களோடு ஒப்பிட்டால் நாமெல்லாம் ஒன்றுமேயில்லை!” என்கிறார் ஜெயப்பிரகாஷ்.