Published:Updated:

சத்தங்களை வரையும் ஓவியர்..! `உட்கட் பிரின்ட்’ விஜய் பிச்சுமணி

சத்தங்களை வரையும் ஓவியர்..! `உட்கட் பிரின்ட்’ விஜய் பிச்சுமணி
சத்தங்களை வரையும் ஓவியர்..! `உட்கட் பிரின்ட்’ விஜய் பிச்சுமணி

புகைப்படத் துறையின் வளர்ச்சி என்பது, ஓவியத் துறைக்கு மிகப்பெரிய சவாலான ஒன்று. நம் முன் இருக்கும் காட்சியை, புகைப்படம் துல்லியமாகத் தந்துவிடுகிறது. ஓர் ஓவியன், தன்னுடைய கற்பனையின் வழியே அந்தக் காட்சி தரக்கூடிய உணர்ச்சிகளைச் சொல்ல வேண்டும் அல்லது அந்தக் காட்சியை அப்படியே புதிய பாணியில் சொல்ல வேண்டும். இவ்வாறு இன்றைய அளவில் பிரெஷ், பெயின்ட், பென்சில் இவற்றைத் தாண்டி கோலப்பொடியைப் பயன்படுத்தி வரைவது, நெருப்பைப் பயன்படுத்தி வரைவது, அச்சுகளின் வழியே வரைவது என, வித்தியாசமான பல முறைகளை ஓவியப் பிரியர்கள் கையாள்வதை சமூக வலைதளங்களில் நாம் காணலாம். இதில் அச்சு ஓவியமுறையைப் பயன்படுத்தி சத்தங்களை வரையும் ஓர் ஓவியரைப் பற்றியும், அவரின் வித்தியாசமான உட்கட் ஓவியங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்..!

அச்சு ஓவியங்களில் லித்தோகிராஃபி, ஸ்க்ரீன் பிரின்டிங், ரிலீஃப் பிரின்டிங், இன்டேக்லியோ போன்ற வகைகள் உள்ளன. இவற்றில் ரிலீஃப் பிரின்டிங் வகையைச் சார்ந்ததுதான் ஆர்டிஸ்ட் விஜய் பிச்சுமணி வரையும் `உட்கட் பிரின்ட் ஓவியங்கள்’. அதாவது மரத்துண்டுகளில் செதுக்கப்பட்டு அதிலிருந்து கறுப்பு-வெள்ளையில் நகல் எடுக்கப்படும் ஓவியங்கள். 

முதலில் மரத்துண்டுகளில் ஓவியம் வரையப்படும். வரைந்த ஓவியத்தைத் தவிர மீதம் உள்ள இடங்கள் செதுக்கப்படும். அதன்மீது `மை’ இடப்படும். மையிட்ட பிறகு ஓவியத்தின் மீது பேப்பரை விரித்து மரத்தினால் ஆன ஸ்பூனைப் பயன்படுத்தித் தேய்க்கப்படும். இதை `மாஸ்டர் பீஸ்’ என்று கூறுவர். இந்த மாஸ்டர் பீஸிலிருந்து கறுப்பு-வெள்ளை நிறத்தில் ஓவியங்கள் கேன்வாஸ்களில் நகலெடுக்கப்படும். இதுதான் `உட்கட் பிரின்ட்’ ஓவியங்களுக்கான அடிப்படை வழிமுறை. புரிந்துகொள்ளவே நேரமெடுக்கும் இந்த `உட்கட் பிரின்ட்’ ஓவிய பாணியில் மனதில் அலைகளை ஏற்படுத்தும் ஓவியங்களைப் படைத்துக் காட்சிப்படுத்துகிறார் விஜய் பிச்சுமணி.

இவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர். தன் ஊரில் நடக்கும் காட்சிகளை, சிறுவயது முதலே கரித்துண்டுகளில் வரையும் விஜய், பள்ளியில் உள்ள பெஞ்ச், டெஸ்க் ஆகியவற்றிலும் வரைந்துகொண்டே இருப்பாராம். ஒருமுறை தன் ஆசிரியரின் ஓவியத்தை இவர் டெஸ்கில் வரைய, இவரது திறமையைக் கண்ட அந்த ஆசிரியர், விஜய்யை ஓவிய ஆசிரியரிடம் அறிமுகப்படுத்திவைத்தார். 

ஒருநாள், ஊரில் காகம் ஒன்று இறந்து கிடந்ததைப் பார்த்தாராம். அதை, தான் படித்ததுடன் ஒப்பிட்டுப்பார்த்து ரிலீஃப் முறையைப் பயன்படுத்தி `உட்கட் பிரின்ட்’ ஓவியங்களை வரையத் தொடங்கினார். இவர் வரைந்த ஓவியங்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆர்ட் ஹவுஸ் கேலரியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இவரது ஓவியங்கள், பெரும்பாலும் இவரின் அன்றாட வாழ்வில் சுற்றி நடந்த காட்சிகளாகவும், அவரை பாதித்த விஷயங்களின் வெளிப்பாடுகளாகவுமே உள்ளன. குறிப்பாக, அவர் கண்காட்சிக்கு வைத்திருந்த ஓவியங்களில் காகங்கள் நிறைந்த ஓவியங்கள் அதிகம் இருந்தன. இந்த ஓவியங்களைப் பற்றி விஜய் நம்மிடம் பேசும்போது ``ஊரில் காகம் இறந்து கிடந்த காட்சி என் மனதிலேயே இருந்தது. இதை கற்பனையாக வரைய நான் விரும்பவில்லை. எனவே, இறந்துபோன காகத்தினுடைய உடலை நான் தேட ஆரம்பித்தேன். ஒருமுறை ஸ்டுடியோ சென்றுவிட்டு வழக்கமாக டீ குடிக்கும் கடைக்குச் செல்லும்போது கிரீம்ஸ் ரோட்டில் இறந்த காகத்தின் உடல் கிடைத்தது. பாடி அனோடமி தெரிந்தது என்றால் கண், மூக்கு, வாய் இவற்றை வரையும்போது அதனுடைய அசைவுகளையும் வரைய முடியும். அதற்காக காகத்தின் உடல் அசைவுகளைப் பற்றி அனாடமிகலாகப் படித்தேன். இப்படிக் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கும் மேலாக ஆராய்ந்து மரத்தில் செதுக்கி, கறுப்பு மற்றும் வெள்ளை நிற பிரின்ட் ஓவியமாகக் கொண்டுவந்தேன்” என்றார்.

மரத்தின் மேற்பகுதி, பறவைகளுக்கான உலகம் என்றே சொல்லலாம். அதிக கிளைகள்கொண்ட மரங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அப்படி ஒரு மரத்தில் நிறைந்திருக்கும் காகக்கூட்டங்களை ஓர் ஓவியம் அழகாகப் பிரதிபலித்துக்கொண்டிருந்தது. கிரீம்ஸ் ரோட்டில் அவர் பார்த்த மரம்தான் அது. அந்த மரத்தில் ஒரு காகம் எங்கிருந்தோ எடுத்துவந்த மீனைக் கொத்திக்கொண்டிருந்தது. மற்றொரு காகம், தன்னுடைய குஞ்சுக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்தது. சில காகங்கள் காதலித்துக்கொண்டிருந்தன. சில காகங்கள் அமைதியாக மரங்களில் உட்கார்ந்திருந்தன. சில காகங்கள் மரங்களை நோக்கிப் பறந்து வந்துகொண்டிருக்க, சில காகங்கள் பறந்து சென்றுகொண்டிருந்தன. காகத்தின் பல அசைவுகளையும் எளிமையாகச் சொல்லும் அந்த ஓவியத்தை நீங்கள் உன்னிப்பாகக் கவனித்தால் சில நொடியில் உங்களுக்குக் காகம் கரையும் சத்தமும் கேட்கும். அவ்வளவு ஏன்... உங்களைச் சுற்றி சில காகங்கள்கூட பறக்கலாம்! காகத்தின் ஒலிகளுக்குக்கூட தன்னுடைய கற்பனையில் வடிவம்கொடுத்து சிறிய பாக்ஸ் போன்ற பேட்டர்னாக சில ஓவியத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கறுப்பு - வெள்ளை நிறங்களை எளிதாகக் கொண்டுவந்துவிட முடியும். ஆனால், இந்தக் கறுப்பு - வெள்ளை ஓவியங்களில் கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடைப்பட்ட கிரே சைட் நிறங்களைக் கொண்டுவருவது சவாலான விஷயம். இந்த கிரே சைடை அவர் கொண்டுவந்திருந்த விதம் மிகவும் பாராட்டப்படுகிறது.

ஒலிகளை வரைவதில் விஜய் சில முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். அதில் சில ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கிராமங்களில் நாட்டு நாய்கள் அதிகமாக எல்லாருடைய வீட்டிலும் வளர்க்கப்படும். தெரியாத நபர்களைப் பார்த்தால் அதிகமாகக் குரைக்கும். வீட்டில் இருப்பவர்களைப் பார்த்தால் கொஞ்சலுடன்கூடிய ஒரு சத்தத்தை எழுப்பும். வீட்டுக்கு அடிக்கடி வருபவர்களைப் பார்த்தால் ஒருவிதமாகக் குரைக்கும். இந்தச் சத்தங்களை ஓர் உடல் பல தலைகள் என வரைந்து அதன் வழியாக அந்த ஒலிகளை வேறுபடுத்திக்காட்டியிருந்தார். ஒலிகளை அவர் காட்சிப்படுத்தியிருந்த விதம் மிக அழகான முயற்சி. தூரத்தில் நிம்மதியாக உறங்கும் நாயின் சொந்தக்காரர், இரவைக் குறிக்க ஆந்தை எனச் சின்னச் சின்ன குறிப்புகள் மூலம் அற்புதப்படுத்தியிருந்தார் அந்த ஓவியத்தை. இந்த ஓவியத்துக்கு விஜய் 2016-ம் ஆண்டுக்கான தேசிய விருதைப் பெற்றார் என்பதும் கவனிக்கத்தக்கது.

ரப்பர் மரக் காடுகளின் ஓவியம், கல்லூரிக்கு ஷேர் ஆட்டோவில் செல்லும் பெண்கள், பனைமரத்தின் பூ, ஒரு விதைக்கு உள்ளிருக்கும் நுண்ணியக் குறிப்புகள், இரவுதான்... பார்த்து பயந்துபோன ஆந்தையை, அதே பயத்தைக்கொடுக்கும் விதத்தில் வரைந்த ஓவியம், இரண்டு மனிதர்கள் முடிவற்ற நிலையில் தண்ணீரின் ஆழத்துக்குச் செல்லும் ஓவியம், ஆணும் பெண்ணும் இரவில் சேர்ந்து நிலவை ரசிக்கும் ஓவியம் (இந்த ஓவியத்தில் மின்மினிப் பூச்சிகள் உண்மையாகவே மின்னிக்கொண்டிருந்தன) எனத் தன்னுடைய வாழ்வின் போக்கில் சந்தித்த சில காட்சிகளை வித்தியாசமான பாணியில் வித்தியாசமான ஓவியங்களாக வரைந்து காட்சிப்படுத்தியுள்ளார்.

இதுவரை ஜாதிக்காய் மரம், ரப்பர் மரம், பிளைவுட்ஸ் போன்றவற்றில் 50-க்கும் மேற்பட்ட உட்கட் பிரின்ட் ஓவியங்களை வரைந்துள்ளார். 20-க்கும் மேற்பட்ட கண்காட்சிகளை இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் நடத்தியுள்ளார்.

ஆரம்ப காலங்களில் `உன்னுடைய படங்கள் விற்காது; இதெல்லாம் என்ன முறை; ஏதாவது நல்ல வேலைக்குப் போகலாம்ல?’ போன்ற வசனங்களையெல்லாம் கேட்டும் தொடர்ந்து தன்னுடைய தேடல்களின் வழியாகவும், தன்னுடைய திறமையின் மீது தான்கொண்ட நம்பிக்கையாலும் பல ஓவியங்களை வரைந்துகொண்டிருக்கிறார்; பல ஆண்டுகள் கழிந்தாலும் வரைந்துகொண்டிருப்பார். ``நிச்சயம் மக்களால் இந்தக் கலை ஏற்றுக்கொள்ளப்படும். அதுவரை நான் எனது வேலையைச் செய்துகொண்டே இருப்பேன்'' என்று கூறும் விஜய்யின் ஓவியங்கள், காலம் கடந்து பேசப்படும்.

ஆர்ட் ஹவுஸ் கேலரியில் நடைபெற்றுவரும் இந்தக் கறுப்பு-வெள்ளை கண்காட்சி, அக்டோபர் 31-ம் தேதி முடிவடைகிறது. ஓவியப் பிரியர்கள் ஒரு விசிட் போயிட்டு வாங்க. சில ஓவியங்கள் உங்களை மெய்மறக்கச் செய்யும். சில ஓவியங்கள் கதை சொல்லும். சில ஓவியங்கள் உங்களுடன் உரையாடும். சில ஓவியங்களுடன் நீங்களும் உரையாடலாம். ஓவியங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.