பண வீக்கம் என்றால் என்ன?
மிடில் க்ளாஸ் மக்களை வாட்டிவதைக்கும் சொல் `பணவீக்கம்’. ஆங்கிலத்தில் இன்ஃப்ளேஷன் (inflation). ஒரு பொருளை, சென்ற ஆண்டு ஒரு விலைக்கு வாங்கியிருப்பீர்கள். அதே பொருளை, இந்த ஆண்டு அதிக விலை கொடுத்து வாங்கவேண்டியிருக்கும். சென்ற ஆண்டு நீங்கள் உங்கள் குழந்தைக்குப் பள்ளிக் கட்டணமாக 30,000 ரூபாய் கட்டியிருப்பீர்கள். இந்த ஆண்டு அதே பள்ளி 33,000 ரூபாயைக் கட்டணமாகக் கேட்கிறது என வைத்துக்கொள்வோம். அப்படியென்றால், 10 சதவிகிதம் அதிகமாகக் கேட்கிறது. ஆக, பள்ளிக் கட்டணத்தின் பணவீக்கம் 10 சதவிகிதம்.
இந்தப் பணவீக்கம், பள்ளிக் கட்டணத்தில் மட்டுமல்ல... பேருந்துக் கட்டணத்திலிருந்து பால், பருப்பு, அரிசி, டாக்டர் கட்டணம், வீட்டு வாடகை என அனைத்திலும் அடங்கும். மொத்தத்தில் நமது தினசரி வாழ்வில் நாம் விரும்பியோ அல்லது விரும்பாமலோ இந்தப் பணவீக்கம் நம்மைத் தாக்குகிறது.
ஏன் பணவீக்கம்?


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
எளிதாகச் சொல்ல வேண்டு மென்றால், வளரும் பொருளா தாரத்தில் உற்பத்தியைவிடத் தேவைகளே அதிகம் உள்ளன. அப்போது விலைவாசி உயர்கிறது. மேலும் மூலப்பொருள்களின் விலை உயரும்போது, அதன் தாக்கம் எல்லா இடங்களிலும் உண்டாகிறது. உதாரணத்துக்கு, டீசல்/பெட்ரோல் இன்றியமையாத மூலப்பொருள். சர்வதேசச் சந்தையில் அதன் விலை உயரும்போது, அவற்றைப் பெருவாரியாக இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாடுகளில் பலவற்றின் விலையும் உயர்கிறது. சில பொருள்களின் அல்லது சேவைகளின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. உதாரணத்துக்கு, மருத்துவச் சேவைகள் மற்றும் ரெஸ்டா ரன்ட்டுகளில் விற்கப்படும் உணவுகளின் விலை கடந்த பல வருடங்களாக ஏறிக்கொண்டேதான் இருக்கிறது.
பைக் மற்றும் எலெக்ட்ரானிக் பொருள்கள் தொழில்நுட்ப வளர்ச்சியால் விலை இறங்காவிட்டால்கூட, கடந்த பல வருடங்களாக ஏறாமல் இருக்கிறது. ஆக மொத்தத்தில், பெருவாரியான பொருள்களின் விலைகள் ஏறிக்கொண்டேதான் இருக்கின்றன. சில பொருள்களின் விலைகள் மட்டும் ஏறாமல் அல்லது இறங்கிக்கொண்டி ருக்கின்றன. இந்தியாவில் கடந்த பல வருடங்களாக பணவீக்கத்தின் சராசரி என ஒரு நம்பரை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால், அது 6 சதவிகிதம். அதாவது சராசரியாகப் பொருள்கள் மற்றும் சேவைகளின் விலை ஆண்டுக்கு 6 சதவிகிதம் உயர்கிறது.

பணவீக்கத்தின் மறுபக்கம் டீஃப்ளேஷன் (deflation). தமிழில் `பணவாட்டம்’ எனச் சொல்லலாம். ஜப்பான் போன்ற நாடுகள் டீஃப்ளேஷனை எதிர்கொள்கின்றன. இதுபோன்ற நாடுகளில் பொருள்களின் விலை, டிமாண்ட் குறைவால் குறைந்துகொண்டே செல்லும். ஒரு பொருளாதாரத்துக்குப் பணவாட்டத்தைவிட, பணவீக்கம் பெட்டர். சரியான அளவில் பணவீக்கம் இருக்கும்போது அது ஒரு பொருளாதாரத்தின் வளர்ச்சியைக் குறிக்கிறது.
தனிநபர்களையும் தொழில்களையும் இது எவ்விதம் பாதிக்கிறது, இதன் பாதிப்புகளிலிருந்து தப்புவது எப்படி?
உங்களின் சம்பளம், பணவீக்கத்தைவிட அதிகமாக ஒவ்வோர் ஆண்டும் உயர வேண்டும் அல்லது குறைந்த பட்சமாக பணவீக்கத்துக்குச் சமமாக உயர வேண்டும். அப்போதுதான் உங்களின் வாழ்க்கைத்தரம் குறையாமல் இருக்கும். அதுபோல தொழில் செய்பவர்களின் லாபம் ஒவ்வொரு வருடமும் பணவீக்கத்தைவிட அதிகமாக உயர வேண்டும். அப்போதுதான் அவர்கள் வளர்ச்சியில் இருக்கிறார்கள் என அர்த்தம்.
எல்லாவற்றுக்கும் மேலாக உங்களின் எதிர்காலத் தேவைகளுக்கான முதலீடுகள், பணவீக்கத்தைவிட அதிகமாக இருக்க வேண்டும். இந்தியர்கள் பெரும்பாலானோர் தங்கம் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் தங்கள் முதலீட்டை மேற்கொள்கின்றனர். இந்த இரண்டு முதலீடுகளும் சிறிதளவே பணவீக்கத்தைவிட அதிக வருமானத்தைத் தருபவை. பங்குசார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்தான் பணவீக்கத்தைப்போல் இரட்டிப்பு வருமானத்தைத் தரவல்லவை. ஆகவே, உங்களின் (5 வருடத்துக்குமேலான) நீண்டகாலத் தேவைகளுக்கான முதலீடுகளை, பணவீக்கத்தை பீட் செய்து வருமானம் தரக்கூடிய முதலீடுகளில் வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.
- வரவு வைப்போம்...