Published:Updated:

``ஊருக்கு உழைக்க உடம்பு சுணங்கல!’’

``ஊருக்கு உழைக்க உடம்பு சுணங்கல!’’
பிரீமியம் ஸ்டோரி
``ஊருக்கு உழைக்க உடம்பு சுணங்கல!’’

விஷ்ணுபுரம் சரவணன் - படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன்

``ஊருக்கு உழைக்க உடம்பு சுணங்கல!’’

விஷ்ணுபுரம் சரவணன் - படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன்

Published:Updated:
``ஊருக்கு உழைக்க உடம்பு சுணங்கல!’’
பிரீமியம் ஸ்டோரி
``ஊருக்கு உழைக்க உடம்பு சுணங்கல!’’

 “நல்லா, சத்தமா பாடு. நாம பாடுறது சினிமா பாட்டு மாதிரி இல்ல. ஒவ்வொரு வார்த்தையும் மக்கள் மனசுக்குள்ள போய் விழணும்” என்று அந்தச் சிறுமியிடம் அன்பும் கண்டிப்புமான குரலில் சொல்கிறார் சந்தனமேரி. பார்த்தவுடனேயே   பேசச்சொல்லி ஈர்க்கும் முகம். மூன்றாம் வகுப்பே படித்த சந்தனமேரியின் குரலில் ஒலிக்காத மக்கள் பிரச்னைகளே இல்லை. தினசரி வாழ்வே  போராட்டங்களுடன் பின்னப்பட்டிருந்தாலும் அவற்றைத் தாண்டி வந்து மக்களுக்கான போராட்டப் பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பவரைச் சந்தித்தேன்.

“1957ல், பர்மாவுல பிறந்தேன். அப்பா கோழி வித்தாரு. 12 வயசுல ஊதுபத்தி சுத்தப்போனப்ப, பொழுதுபோக்குக்கு அங்க நடக்குற பாட்டுப் போட்டியில நானும் பாடுவேன். நல்லா பாடுறேன்னு, பர்மா தமிழ் சங்கத்துலயெல்லாம் பாடவெச்சாங்க. அப்ப பிடிச்ச பாட்டுதான், இப்போவரை விடலை.

பர்மாவுலயிருந்து அகதியா கட்டின சீலையோட எங்க பூர்விகமான ராமநாதபுரம், சூராணம் கிராமத்துக்கு வந்தோம். வயல் வேலைதான். நாத்து நடறது, களை எடுக்கி றதுன்னு எந்த வேலையா இருந்தாலும் அங்கே என் பாட்டு இருக்கும்.

``ஊருக்கு உழைக்க உடம்பு சுணங்கல!’’

உழைச்சாலும், உலை வெச்சு பசியாத்திக்கிட்டா லும், நிம்மதியத்த பொழப்பு தான் மிஞ்சிச்சு. ஏன்னா, தாழ்த்தப்பட்ட பொண்ணுங்க அனுபவிச்ச பாலியல் அத்துமீறல்கள்.

ஓரிக்கோட்டையில என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்க. ஒரு பையன், ரெண்டு பெண்ணுங்க பொறந்தாங்க. அப்பதான் ஒரு என்ஜிஓ, ‘மகளிர் குழு’ அமைக்கச் சொல்லி, அதுக்கு என்னையே தலைவியா இருக்கச் சொன்னாங்க. நானும் ஒரு குழு அமைச்சேன். 41 பேருல படிச்ச ஆளு நான் மட்டும்தான். மூணாம் க்ளாஸு! சில எதிர்ப்புகள் இருந்தது.  நாங்க அதைக் காதுல வாங்காம தண்ணீர் வரல, ரோடு சரியில்லைன்னு போராடவெல்லாம் செஞ்சோம். அதுல பல குறைகளை அரசாங்கம் சரிபண்ணிக் கொடுத்துச்சு. அந்தத் தெம்புல, கிட்டத்தட்ட ரெண்டாயிரம் பொம்பளைங்க ஒண்ணா திரண்டோம். தொடர்ச்சியா போராட்டம்தான்.

ரெண்டு விஷயங்களைச் சொல்லணும். அப்பவெல்லாம் பிரசவம் வீட்டுலதானே நடக்கும்? ஆனா தாழ்த்தப்பட்டவங்க வீட்டுக்கு மருத்துவச்சிங்க சில பேரு வரமாட்டாங்க. அதனால, நான் ஆறுமாசம் ஒரு ஆஸ்பத்திரியில வேலைக்குச் சேர்ந்து பிரசவம் பார்க்கக் கத்துக்கிட்டு,  20 பேருக்குப்  பிரசவம் பார்த்தேன். என் கையில பொறந்த குழந்தைங்கயெல்லாம் இப்ப பெரிய ஆளுங்களா ஆயிடுச்சுங்க. 

அடுத்து, எங்களோட ‘ஊர்த்தொழில்’. கிராமத்துல யாராவது செத்துட்டா எரிக்கிறது, புதைக்கிறதுனு எங்களுக்கு அவ்வளவு வேலை இருக்கும். ஆனா அதுக்குக் கூலி இருக்காது. ‘சம்பளம் இல்லாத வேலைக்கு வரமாட்டோம்’னு என் வீட்டுக்காரரைச் சொல்லவெச்சேன். அதுக்கப்புறம்தான் அது பேசற விஷயமாச்சு. கொஞ்ச நாள்ல ‘ஊர்த்தொழில்’ செய்யறதே நின்னுபோச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``ஊருக்கு உழைக்க உடம்பு சுணங்கல!’’

போராட்டங்கள் காரணமா இடதுசாரி அமைப்புலேயிருந்து தேடி வந்தாங்க.  அவங்கதான் சமூக ஏற்றத்தாழ்வுல ஆரம்பிச்சு, பல விஷயங்களைக் கத்துக்கொடுத்தாங்க. மக்கள் பிரச்னைகளைப் பத்தி அவங்க எழுதிக்கொடுத்த பாட்டுகளையெல்லாம் பாடினேன்.  மேடையில பேசறது, பாடறது, பெண்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்துக்காக டெல்லிவரைப் போனதுனு, பரபரப்பா ஆகிடுச்சு வாழ்க்க. இப்படி 12 வருஷம் ஓடுச்சு. ஓரிக்கோட்டையில தோழர்கள் உதவியோட எங்களுக்குனு ஒரு வீட்டைக் கட்ட ஆரம்பிச்சோம். எங்களுக்குனு மட்டும் கட்ட மனசு ஒத்துக்கல. அதனால, பக்கத்துலேயே நூலகம் ஒண்ணைச் சேர்த்துக் கட்டினோம். அதை இன்னும் முடிக்க முடியல. இருந்தாலும் நூலகத்துக்குப் பசங்க வாராங்க. அவங்களுக்கு பாட்டு கத்துக்கொடுக்கிறேன், இந்தச் சமூகத்தைப் பத்திச் சொல்லிக்கொடுக்கிறேன். இப்போ எங்க போனாலும் பாட்டுதான் என் அடையாளமுனு ஆகிடுச்சு. 

கையில எதுவும் சேர்த்து வைக்கல, கடன்தான் இருக்கு. ஆனாலும் ஊருக்கு உழைக்க உடம்பு சுணங்கல. இந்த மாதிரி புள்ளைங்களோடதாம்ப்பா இனி என் வேலை. இதுங்கதானே நாளைக்கு வாழப்போகறதுங்க?! நிறையப் போராடியாச்சு, ஓய்வெடுக்கலாம்னு நினைச்சேன். ஆனா, சமூகம் முன்னையவிட இப்ப ரொம்ப மோசமாயிடுச்சு. வீட்டுப் புள்ளைங்களுக்கு நமக்குத் தெரிஞ்சதை சொல்லிக்கொடுக்க வேண்டியது ரொம்ப அவசியம்னு தோணுது. இப்படியே ஒரு பத்து வருஷம் வண்டி ஓடும்னு நெனைக்கிறேன்!”

பாடல் வகுப்புத் தொடர்ந்தது. அந்த எளிய மனுஷியின் சமூக அக்கறை குழந்தைகளின் குரலில் அதிர்ந்தது. மனதிலும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism